இந்துமதத்திற்கு பாடத்திட்டம் உண்டா?

சுடலைமாடன் கதைப்பாட்டு கேட்டிருப்போம். அதில் தென்திசை வலம் செல்லும்போது சுடலை ஆறுசாஸ்திரமும் படித்து தேர்ந்ததாக வரும். பெரும்பாலான நாட்டுப்புறக் கதைகளில் இந்த ஆறுசாஸ்திரமும் படித்தல் என்ற சொல்லாட்சி வந்துகொண்டே இருக்கும். சென்ற தலைமுறை வில்லுப்பாட்டில் அந்த ஆறுசாஸ்திரமும் ஆறுமதமும் என்னென்ன என்றும் சொல்வார்கள்.

கவனியுங்கள், இதெல்லாம் ஏதோ பெரிய கோயிலில் நடக்கும் தத்துவப்பேச்சில் சொல்லப்படுபவை அல்ல. மிகச்சிறிய சிற்றூரில், ஒரு காவல்தெய்வத்தின் முன்னால் நடக்கும் கொடைவிழாவில் சொல்லப்படுபவை. கதைசொல்லும் புலவர் பலசமயம் செவிவழியாக கேட்டுப் படித்தவராக இருப்பார். கதை கேட்பவர்களும் படிப்பறிவில்லாதவர்களாக இருப்பார்கள்.

ஆனால் அவர்கள் வரை வந்து சேர்ந்திருக்கிறது இந்து மதத்தின் ஆறு சாஸ்திரங்கள் பற்றிய தகவல்கள். பழையகால தெருக்கூத்துகளிலும் ஸ்பெஷல்நாடகங்களிலும் முருகன் கிழட்டுவேடனாக வந்து வள்ளியை மணம் முடிக்கும் பகுதியில் ஓர் உரையாடல் நடக்கும். அதற்கு வேலன்விருத்தன் தர்க்கம் என்று பெயர். அதில் இதெல்லாமே சொல்லப்படும்.

படிப்பறிவில்லாத நம் முன்னோருக்கு தெரிந்திருந்தது. ஆனால் படிப்பு உண்டு என நம்பிக்கொண்டிருக்கும் நம்மிடம் எவராவது உங்கள் மதத்தில் என்னென்ன தத்துவங்கள் உண்டு என்று கேட்டால் விழிப்போம். இந்து விரோதி ஒருவர் ‘இந்துமதத்திலே தத்துவங்கள் இல்லை, ஆசாரம் மட்டும்தான் உண்டு’ என்று சொன்னால் நாமும் அதை ஆமோதித்து வைப்போம்.

எந்த மதத்திற்கும் அதன் தத்துவக் கொள்கைகள் சார்ந்து ஒரு பாடத்திட்டம் இருக்கும். கிறிஸ்தவ மதத்திற்கு பைபிள் முதல்நூல், ஆனால் செயின்ட் தாமஸ் அக்வினாஸ், செயின்ட் அகஸ்டின் என ஆரம்பித்து ஒரு பாடத்திட்டம் உண்டு. இஸ்லாமுக்கு குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் உண்டு. பௌத்த மரபுக்கு உரிய பாடத்திட்டம் தெளிவாக வகுக்கப்பட்டு சுத்தபிடகம், வினயபிடகம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சுத்தபிடகம் தத்துவத்தைப் பற்றியும் வினயபிடகம் அதன் நடைமுறை பற்றியும் பேசுகிறது.

இந்து மதத்திற்கு அப்படி ஒரு பாடத்திட்டம் உண்டா? இந்துமதம் இயற்கை மதம். ஒற்றை மையம் உடையது அல்ல. பல்வேறு தரப்புகள் இதற்குள் உண்டு. அவை தனித்தனியாகவும், ஒன்றோடொன்று விவாதித்தும் வளர்கின்றன. இதை கட்டுப்படுத்தும் பொதுவான அமைப்பு என்பது இல்லை. ஆகவே இதுதான் ஒட்டுமொத்தமான பாடத்திட்டம் என்று ஒன்றை எவரும் வரையறை செய்ய முடியாது.

ஆனால், நீண்டகாலமாக இந்து ஞான மரபுக்குள் நடைபெறும் விவாதங்களால் தானாகவே ஒரு பாடத்திட்டம் திரண்டு வந்துள்ளது. ஒரு வட்டம் சுற்றும்போது மையம் உருவாகும் அல்லவா அதைப்போல. அது உருவாகி வந்து எப்படியும் இரண்டாயிரம் ஆண்டு ஆகியிருக்கும். அப்படிப் பார்த்தால் உலகிலேயே பழைய மதப்பாடத்திட்டங்களில் ஒன்று இது.

இந்துமதத்தின் எல்லா பிரிவுக்கும் பொதுவாக இருக்கும் சிந்தனை வேதாந்தம். எல்லா பிரிவுகளுடனும் அது விவாதித்தது. ஆகவே வேதாந்தத்தில்தான் இந்த பாடத்திட்டம் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. வேதாந்த குருமரபுகளில்தான் அதை முறையாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள். மற்ற மரபுகளில் மொத்தமரபும் படிக்கவேண்டுமென்ற தேவை இல்லை.

அந்த பாடத்திட்டம் என்ன? இன்று அது இப்படி இருக்கிறது. வேதங்கள், ஆறு மதங்கள், ஆறு தரிசனங்கள், மூன்று தத்துவங்கள், இரண்டு இதிஹாசங்கள், ஆறு பிற்கால தத்துவங்கள். அவ்வளவுதான்.

வேதங்களை முழுமையாக படிப்பது அன்றும் இன்றும் தத்துவமரபில் வழக்கமில்லை. ஏனென்றால் வேதங்கள் மிகப்பெரும்பாலும் வேண்டுதல் பாடல்கள்தான். அவற்றை அவற்றுக்குரிய இசைத்தன்மையுடன் படிக்கவேண்டும். ஒவ்வொரு சொல்லும் ஒரே போல பல ஆயிரம் ஆண்டுகளாக உச்சரிக்கப்படுகிறது. அதை உச்சரிக்கும் முறைக்கு சந்தஸ் சாஸ்திரம் என்று பெயர்.

அவ்வாறு வேதங்களை படிப்பதற்கு அதை முழுநேரக் கல்வியாகவும், முழு வாழ்க்கையாகவும் கொண்டவர்களால்தான் இயலும். அவர்கள் வேதங்களின் பொருளை கற்பதில்லை. ஓத மட்டுமே கற்பார்கள். பிற்காலநூல்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள வேதப்பகுதிகளை மட்டுமே படிப்பதுதான் தத்துவத்தில் வழக்கம். அவர்கள் உச்சரிப்புமுறையை கற்கவேண்டியதில்லை. அர்த்தம் மட்டும் கற்றால்போதும்.

ஆறு மதங்கள் என்பவை சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம், சௌரம். இந்த ஆறுமதங்களுக்கும் அவற்றுக்குரிய மூலநூல்கள் உள்ளன. அவை புராணவடிவில் இருக்கும். ஆறு மதங்களுக்கும் உரியவையாக மொத்தம் 18 முக்கியமான புராணங்கள் உள்ளன.

அந்த 18 புராணங்களும் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டு பிற இந்திய மொழிகளில் திரும்ப எழுதப்பட்டிருக்கும். உதாரணமாக ஸ்காந்தம் என்னும் புராணம் தமிழில் கந்தபுராணம் என கச்சியப்ப சிவாச்சாரியாரால் எழுதப்பட்டது. இந்த ஆறு மதங்களுக்கும் எல்லா மொழிகளிலும் மேலும் புராணங்கள் உண்டு. உதாரணம் திருவிளையாடல் புராணம் தமிழில் மூலவடிவில் இயற்றப்பட்டது.

ஆறு தரிசனங்கள் என்பவை சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் ஆகியவை. இவை தூய தத்துவ தரிசனங்கள். இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாகியது, எப்படி செயல்படுகிறது, இதில் மனித வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன ஆகியவற்றை மட்டுமே பேசுபவை. இவற்றுக்கு தத்துவநூல்களே மூலமாக உள்ளன. அவை சூத்திரங்கள் எனப்படும் சுருக்கமான ஒற்றைவரி அல்லது இரட்டைவரிகளால் அமைந்தவை (திருக்குறள் போல)

இவை எவராலும் புதியதாக உருவாக்கப்பட்ட கொள்கைகள் அல்ல. நினைப்புக்கெட்டாத பழங்காலத்தில் இருந்தே இருந்துகொண்டிருப்பவை. அவற்றை பிறகு சில ஆசிரியர்கள் சுருக்கமாக தொகுத்தனர். அவர்களே அதைச் சொல்கின்றனர். அவர்களின் பெயர்கள் இவை. சாங்கியம் – கபிலர். யோகம் – பதஞ்சலி. வைசேஷிகம் – கணாதர். நியாயம் – கௌதமர். பூர்வமீமாம்சம் – ஜைமினி. உத்தர மீமாம்டம் – பாதராயணர்.

இரண்டு இதிகாசங்கள், ராமாயணமும் மகாபாரதமும். மூன்று தத்துவங்கள் எனப்படுபவை உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், கீதை. இந்நூல்கள் பிரம்மம், ஆத்மா, முக்தி ஆகிய மூன்று அடிப்படைகளைப் பற்றிப் பேசுவதனால் இவை மூன்று தத்துவங்கள் (பிரஸ்தானத் த்ரயம்) எனப்பட்டன.

அதன்பின் ஆறு பிற்காலத் தத்துவங்கள் உருவாயின. அவை முன்னாலிருந்த கொள்கைகளை மேலும் விளக்கிய ஞானிகளால் உருவாக்கப்பட்டவை. அவை இவ்வாறு. சங்கரர் அத்வைதம். ராமானுஜர் – விசிஷ்டாத்வைதம். மத்வர் – துவைதம். நிம்பார்க்கர் – துவைதாத்வைதம். வல்லபர் – சுத்தாத்வைதம். ஆறாவதாகச் சொல்லப்படுவது சைவசித்தாந்தம். தமிழகத்திலுள்ள அதன் முதன்மை ஆசிரியர்கள் இருவர். மெய்கண்டார், திருமூலர்.

இதுதான் பாடத்திட்டம். இன்று முன்பு போலில்லை. எல்லாமே நூல்களாகக் கிடைக்கின்றன. ஓர் அறிமுகத்தை ஆர்வம் கொண்ட எவரும் அடைய முடியும்.

ஆனால் எல்லா இந்துக்களுக்கும் இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டுமா? இப்படி ஒரு பாடத்திட்டம் உண்டு என தெரிந்திருக்கவேண்டும். அவை என்னென்ன என்று தெரிந்திருக்கவேண்டும். ஆனால் எளிமையான பக்திக்கு இவற்றை ஆழமாக கற்றிருப்பது அவசியம் அல்ல.

இந்து மரபு வீடுபேறுக்கான வழிகளை இரண்டாகப் பிரிக்கிறது. கர்மம், ஞானம். கர்மம் என்றால் செயல். வழிபாடுகள், பக்தி ஆகியவை இதில் அடங்கும். ஞானம் என்றால் அறிந்து அறிந்து விடுபடுவது. ஞான மார்க்கத்தை தேர்வுசெய்பவர்களுக்குரியது இந்த பாடத்திட்டம்.

இது மிகப்பிரம்மாண்டமானது. இன்று உலகில் இந்த அளவுக்கு பிரம்மாண்டமான பாடத்திட்டம் வேறெந்த மதங்களிலும் இல்லை. இன்று மேலைநாட்டு பல்கலைக் கழகங்களில்தான் இவற்றைப் பற்றிய விரிவான ஆய்வுகள் நடைபெறுகின்றன.

ஓர் இந்து அவர் நம்பி ஏற்கும் பிரிவைச் சேர்ந்த ஞானநூல்களை ஆழ்ந்து கற்கவேண்டும். மற்ற நூல்கள் என்னென்ன, அவை சொல்வது என்ன என்று தெரிந்திருக்கவேண்டும். அவ்வளவுதான் சாத்தியம். முழுக்க கற்கவேண்டுமென்றால் சுடலைமாடனால்தான் முடியும்.

முந்தைய கட்டுரைஎஸ்.ராமகிருஷ்ணன்
அடுத்த கட்டுரைஅஞ்சலி: மருத்துவர் மகாதேவன்