மூளையின் தளைகள்

மூளையை சாட்டையாலடியுங்கள்!

அன்புள்ள ஜெ

அண்மையில் வாசித்த தீவிரமான கட்டுரைகளில் ஒன்று மூளையை சாட்டலையாலடியுங்கள். தலைப்பே ஒரு சாட்டையடிபோன்று இருந்தது. இன்று பரவலாக உள்ள ஓர் எண்ணம் ‘அல்லல் இல்லாத அமைதியான வாழ்க்கை’ உடல்நலத்துக்குத் தேவை என்பதுதான். ஆனால் அது சோம்பலான வாழ்க்கை. அதனால் உடலும் உள்ளமும் நோய் அடைகின்றன. அதை அழுத்திச் சொல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. சாட்டையாலடித்துச் சொல்லியிருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக இருப்பது என்பது சோம்பி இருப்பது அல்ல. ஓய்வின்போது நமக்குக் கிடைப்பது மகிழ்ச்சி அல்ல. செயலாற்றும்போதே மகிழ்ச்சி கிடைக்கிறது. வழக்கம்போல உங்கள் கட்டுரை எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி எல்லா வாசல்களையும் திறந்துவிடுகின்றது

செல்வசுப்ரமணியம்

அன்புள்ள செல்வசுப்ரமணியம்,

இந்த வகையான கட்டுரைகள் ஏற்கனவே இந்நிலையை கொஞ்சம் உணர்ந்து, ஆனால் தெளிவில்லாத நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே உதவிகரமானவை. அந்த தேக்கநிலையில் மூழ்கி, அதை உணராமல் இருப்பவர்கள் உடனடியாக சாக்குகளை, எதிர்வாதங்களை கட்டமைத்துக் கொள்வார்கள். ஆகவே நான் வாதிடுவதில்லை. இவை ஒவ்வொருவரும் தானாக உணரவேண்டியவை. வாதிட்டு எவரையும் ஏற்கச்செய்ய முடியாது.

இத்தகைய கட்டுரைகள், உரைகளுக்குப் பின்னரும் வரும் எதிர்வினைகளில் 90 சதவீதம் ‘வீட்டுக்குப் பக்கத்திலே கிடைக்குமா?’ ‘வீட்டுக்குள்ளே கிடைக்குமா?’ ‘நேரமே இல்லை’ வகையானவை. அந்த மனநிலை சமகால இரும்புத்தளை. அதை உடைப்பவர் மிகச்சிலர். அவர்களுக்கான இடம் என ஒன்று வேண்டும், அவ்வளவே உத்தேசிக்கிறேன்

ஜெ

கிளம்புக!

முந்தைய கட்டுரைபிரயாகை, நிலைபேறும் பறந்தலைதலும் – கலைச்செல்வி
அடுத்த கட்டுரைமருத்துவாழ்மலை,நாராயணகுரு