கிளம்புக!

மூளையை சாட்டையாலடியுங்கள்!

அன்புள்ள ஜெ,

நான் 2018ல் விருப்ப ஓய்வு பெற்றேன். என் நண்பர்கள் ஒரு நல்ல டீம் ஆக இருந்தோம். அடிக்கடிச் சந்திப்போம். பல விஷயங்களைப் பேசிக்கொள்வோம். தமிழ்மொழிக் கல்விக்காக சில பணிகளைச் செய்து வந்தோம்.

விருப்ப ஓய்வு பெற்றபின் அனைவரும் ஆங்காங்கே நின்றுவிட்டார்கள். பெரும்பாலானவர்கள் வீட்டைவிட்டு வெளிவருவதே இல்லை. ஆரம்பத்தில் அவர்கள் சாதாரணமான சில சாக்குகளைச் சொன்னார்கள். அவர்களின் மனைவிகளும் அவர்களை வீட்டைவிட்டு வெளிவர விடவில்லை. ஓடி ஓடி உழைத்தாயிற்று, இனி கொஞ்சநாள் வீட்டிலேயே இருங்கள் என்று சொல்லி உட்கார வைத்துவிட்டனர். மனைவிகளுக்கும் ஏற்கனவே சில சிறிய நோய்கள். இவர்கள் டிவி சீரியல் பார்க்க ஆரம்பித்தனர். அதன் பிறகு யூடியூப் பார்க்கத்தொடங்கினார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் அனைவருக்கும் பிரஷர் அல்லது சுகர் கொஞ்சம் இருப்பதாக டாக்டர் சொன்னார்கள். மாத்திரை போட்டுக்கொள்ள ஆரம்பித்தார்கள். பென்ஷனில் கால்வாசி மருந்துகளுக்கே செலவாகியது. எங்கேயும் வர மாட்டார்கள். கேட்டால் பிரஷர் இருக்கிறது, தலைசுற்றுகிறது என்பார்கள். அப்படியே காணாமலாகிவிட்டனர். ஒன்றுரெண்டல்ல, பன்னிரண்டுபேர்.

ஏன் இது நிகழ்கிறது என்பதை மண்டையில் அடித்ததுபோலச் சொல்லும் கட்டுரை நீங்கள் எழுதியது. ஆனால் என் பிரச்சினை என்னவென்றால் நான் தனிமையாக ஆகிவிட்டேன். என்னால் ஏதும் செய்ய முடியவில்லை. தினம் பிடிவாதமாகக் கோயிலுக்கு மட்டும் சென்று வருகிறேன். ஆனால் அதுவும் நின்றுவிடுமா என்ற சந்தேகமும் உள்ளது

எம்.கே.எஸ்.மகாதேவன்

*

அன்புள்ள மகாதேவன்,

இது சென்ற இருபதாண்டுகளாக பி.எஸ்.என்.எல் ஊழியர் நடுவே கண்டடையப்பட்ட சிக்கல். அவர்கள் தாங்களே ஒரு சிறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக்கொள்கிறார்கள். அவர்களே எண்ணாமல் அவர்கள் மீள முடியாது – உண்மையில் பெரும்பாலும் அவர்கள் மீள்வதில்லை.

நவீன மருத்துவம் அவர்களை எளிதில் சாக விடாது. ஏனென்றால் அவர்களின் பென்ஷனை முழுக்க மருத்துவத்துறை பெற்றாகவேண்டும். சாவில்லை, ஆனால் அவர்களுக்கு வாழ்க்கையும் இல்லை. வெறும் இருத்தல் மட்டுமே. தொடர்ச்சியாக நோய்கள், சிகிழ்ச்சைகள், புலம்பல்கள்.

நீங்கள் உங்களுக்கான வழிகளைக் கண்டடையலாம். முதல் நெறி, ஏற்கனவே எல்லாம் தெரிந்துகொண்டாயிற்று இனிமேல் என்ன என்னும் உளநிலையை உதறவேண்டும். இதுவரை தெரிந்துகொண்டவை வெறும் தொழிலுக்கான பயிற்சிகளே. அந்த காலம் முடிந்துவிட்டது. மேற்கொண்டு என்ன கற்கலாமென எண்ணுங்கள். அதற்காக என்ன வழி என பாருங்கள்.

கல்வி நீங்கள் சிரமப்பட்டு, உழைத்து கற்பதாக இருக்கவேண்டும்.அதற்காக நீங்கள் எதையாவது அளிக்கவேண்டும். பயணம் செய்யவேண்டும். அதற்கான இடங்களில் அதற்கான மனிதர்களுடன் தங்கவேண்டும். கல்விக்கு நீங்கள் அளிப்பதென்ன என்பதே முக்கியமானது. அதாவது கல்வியே ஒரு தீவிரச்செயல்பாடாக இருக்கவேண்டும்.

வீட்டுக்குள் இருந்துகொண்டே கற்கலாம் என்னும் மனநிலையை கட்டாயமாக உதறவேண்டும். வீட்டுக்குள் இருந்துகொண்டு கற்பவை ஏற்கனவே வீட்டுக்குள் இருந்துகொண்டு யூடியூப் பார்க்கும் சோம்பல் மனநிலையை மேலும் வளர்க்கும். இருக்கும் கொஞ்சநஞ்ச கற்கும் மனநிலையையும் இல்லாமலாக்கிவிடும்.

கல்வி படிப்படியாக ஒரு செயல்பாடாக ஆக வேண்டும். உதாரணமாக, நாங்கள் ஆலயக்கலைப் பயிற்சி அளிக்கிறோம். அதை கற்றவர்கள் ஆலயங்களுக்குச் சேர்ந்து பயணம் செய்கிறார்கள். தாங்களே ஆலயங்களுக்குச் செல்கிறார்கள். அதை முறைப்படுத்தி அவர்களுக்கு பயிற்சி அளித்து ஆலயங்களைப் பற்றி சிறிய நூல்களை அவர்களே எழுதச்செய்யும் அடுத்தகட்ட முயற்சியை தொடங்கலாமென்றிருக்கிறோம்.

சைவத் திருமுறை வகுப்புகள் நடத்துகிறோம். அதற்கு வரும் ஒருவர் ஒரு கட்டத்திற்கு மேல் அவரே அதை கற்பிப்பவரும் ஆகவேண்டும் என்பதே நோக்கம். அதற்காக அவர் ஒரு குழு பின்னாளில் அமைக்கலாம்.

எதுவானாலும் ஒன்றே அடிப்படை விதி. வீட்டைவிட்டு கிளம்பி ஏதாவது செய்யுங்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைதமிழைவிட ஆங்கிலம் கூர்மையான மொழியா?
அடுத்த கட்டுரைகொண்டாட்டங்கள், கடிதம்