அண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

திரும்ப திரும்ப அன்னாவைப் பற்றி உங்களிடம் கேள்விகள் வருவதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை. அநேகமாக உங்களுக்கும்? :). இப்போதைக்கு காந்தியை பற்றி தெரிந்து கொள்ள, இருக்கும் வெகு சிலரில் நீங்களும் ஒருவர் என்ற எண்ணம பரவலாக இருப்பது ஒரு முக்கியமான காரணம் என்றே நினைக்கிறன். ஆகவே கோபப்படாமல் மேலும் ஒரு சில கேள்விகளுக்கு உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். (உண்மையிலேயே உங்கள் கோபம மட்டும்தான் என்னை பயமுறுத்துகிறது அதுவும் எழுத்து மூலமாக மட்டும்!! நேரில் எப்படியோ :)..)

அன்னாவின் போராட்டத்தை எதிர்ப்பவர்கள் ஆதரிப்பவர்களை அறிவுஜீவிகள் என்றும், இவர்கள் அவர்கள் அறிவு ஜீவிகள் என்றும் குறிப்பிடுவதை நானும் படித்து தெளிவாக நான் அறிவு ஜீவி இல்லை என்ற முடிவுக்கே எப்போதோ வந்து விட்டேன். எனவே தொனியில் ஏதும் பிழை இருந்தால பொறுத்துக் கொள்ளவும்..!

எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் எப்போதும் உண்டு. அன்னாவின் போராட்டத்திற்கு இப்போது ஆதரவளிக்கும் அத்தனை பேரும் இது வரை குறைந்த பட்சம் பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதற்காகவாது லஞ்சம் கொடுக்காமல் இருந்திருக்கிறார்களா?. மிகவும் முரண்பாடான ஒரு நடுத்தர சமூகம் நமது.

“அவன் திறமைசாலி அரசு வேலையில் சேர்ந்த உடனே புடிக்க வேண்டிய ஆளை பிடிச்சு..மேல போய் அஞ்சு வருசத்தில கார், பங்களா ன்னு செட்டில் ஆயிட்டான்”,

“கஷ்டப்பட்டு(?) லஞ்சம் கொடுத்து இந்த சீட் வாங்கிக் குடுத்திருக்கேன்..ஒழுங்காப் படி”..

“திடீர்னு ஆபீஸ்-ல பாரின் போக சொல்லிட்டாங்க. அதுதான் அவசர அவசரமா ஆளை புடிச்சு பத்து நாளில் பாஸ்போர்ட் வாங்கிட்டேன்..எட்டாயிரம் ஆச்சு”..

இதெல்லாம் ரொம்ப சாதாரணமாகக் கடந்து செல்லும்..நடுத்தர கூட்டம்தான்..”ஆமாம் ஆமாம் ஊழல் ஒழிக!” என்று கூச்சல் போடுகிறது.

இவர்களில் யாருக்காவது குப்பை அள்ளுகிற அரசு ஊழியனுக்குக் காசு கொடுக்க முடியாது என்று சொல்லும் தைரியம் உண்டா?.. ஆனால் தார்மீக ஆதரவு தரலாம்..காசா பணமா?.. கழுதையைத் தந்துட்டா போகுது..அப்படிப்பட்ட பொறுப்புள்ள சமூகம்தான் இது??..

பேங்கில் வரிசையில் நிற்கும்போது..வேலையைப் பார்க்காமல் பேசிக்கொண்டிருந்த ஊழியரை கண்டித்த ஒருவரை..மக்கள் எல்லாரும் சேர்ந்து திட்டியதைப் பார்த்திருக்கிறேன்.. “பாருங்க உங்களால சார் கோவிச்சிக்கிட்டார். எங்க எல்லாருக்கும் வேலை லேட். ஒரு பத்து நிமிசம் பேசிட்டு வந்து அவர் பாட்டுக்கு வேலை பார்த்திருப்பார்..” என்று கூறி அவரை மன்னிப்பு கேட்க வைத்த கூட்டம்தான் நமது சமூகம்.. ..! தனிப்பட்ட வாழ்கையில் எனக்கு இதை போல நிறைய அனுபவங்கள்..!

“அட விடுங்கப்பா..டிவி-ல பாக்கும்போது..ஆமா..ஆமா ஊழல் ஒழியனும்னு சொன்னா போதும்”.. தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மை தேவை இல்லை..என்ற எண்ணம உடையது தானே நம் சிறந்த ஊழல் எதிர்ப்பு சமூகம்?..இதுதான் காந்தி எதிர்பார்த்த மக்கள் எழுச்சியா?..

இவ்வளவு ஏன்.. (இதை எழுதும்போது தான் எனக்கு ரொம்ப பயமா இருக்கு… வேறு ஏதும் காரணம் இருந்து..நீங்கள் என்னை திட்டி விடுவீர்கள் என்று..)
நீங்களே கூட கொஞ்ச நாளுக்கு முன் நாகர்கோவிலில் ஒரு போராட்டம் இருந்தவரை “கோட்டி” என்று குறிப்பிடவில்லை?. (தவறு இருந்தால மன்னிக்கவும்).

அரசியல்வாதிகள் திருந்துவது என்பது..அவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளால் ஏற்படாது என்பதே என் எண்ணம. ஊழல் செய்வதில் என்ன தவறு செய்ததால் மாட்டிக் கொண்டோம் என்றுதான் யோசிப்பார்களே தவிர ஊழல் தவறு என்று ஒருபோதும் யோசிக்க மாட்டார்கள்.

உண்மையிலே வருத்தமாக இருக்கிறது. ‘எனக்கு வேலை ஆகணும்..அதற்காக லஞ்சம் கொடுப்பேன். ஆனா லஞ்சதை ஒழிக்க நானும் குரல் கொடுப்பேன்” என்னவிதமான பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் பாங்கு இது?. இவர்களுக்காகப் போராட ஒரு காந்தி வேண்டும், அன்னா வேண்டும்..ஆனால் இவர்கள் அப்படியேதான் இருப்பார்கள்.

எனக்கு தெரிந்தவரையில் (சிறு அறிவுக்கு எட்டிய வரையில்)..இருக்கும் சட்டங்கள் போதும்..எந்த சட்டமும் ஊழலுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஏற்பட வேண்டிய மாற்றம் மக்களிடம்தான்..ஒரு குறைந்த பட்ச நேர்மை ஒவ்வொருவரிடமும் இருப்பது..அஸ்திவாரத்தை ஆட்டும். அது எல்லா மாற்றங்களையும் கொண்டு வரும். அன்னா இதே எழுச்சியை..’லஞ்சம் கொடுக்க மாட்டோம்’ என்று மக்களை உறுதி எடுக்க வைத்தால் அதன் மூலம் வரும் மாற்றம் நிரந்தரமாகவும், ஒட்டு மொத்தமாகவும் இருக்கும் இல்லையா?’. அப்படி வாங்குபவர்களைப் பற்றிப் புகார் கூற தைரியம் மட்டும் அல்ல..நேர்மையும் வேண்டும்.. கொடுக்காதவர்கள்தானே வாங்கக்கூடாது என்று சொல்ல முடியும்?..

லஞ்சம் கொடுக்க மாட்டோம் என்ற உணர்வுதான் காந்தியின் அந்நிய துணி பகிஷ்கரிப்பு போன்றது..! “நீங்க அந்நியத் துணியைப் போடுவீர்களோ மாட்டீர்களோ எனக்கு கவலை இல்லை..! ஆனால் அந்நியத் துணியை விக்கிறவன் எல்லாத்துக்கும் தண்டனை வாங்கி தர்றதுக்கு புது சட்டம் வரணும்”..இப்படியா காந்தி போராடினார். மாற்றம் ஏற்பட வேண்டியது யாரிடம் என்பது அவருக்குத் தெளிவாகவே தெரிந்திருக்கிறது..! இன்றும் அந்த மாதிரியான மாற்றம்தான் தேவைப் படுகிறது.

அந்த மாற்றத்தைக் கொண்டு வர அண்ணாவைப் போன்ற காந்தியக் கொள்கை உடையவரால் முடியும் என்பதே என் எண்ணம.

மற்றபடி அன்னாவின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி வாழ்பவர்கள்..மிகக் கீழ்த்தரமான அரசியல்வாதிகள் கூட்டம்தான்… ஒரு கூட்டம்..அவரை காந்தியின் நீட்சியாக பார்த்து..அவருக்கு எதிராக இருந்த அதே அடிப்படைவாத மனநிலையைக் கொண்டுள்ளது..இன்னொன்று..அவர் அருகில் அமர்ந்திருக்கும் காவி நிறத்தைப் பார்த்து பயப்படுகிறது…அவ்வளவுதான். !

எதுவும் தவறு இருந்தால் மன்னிக்கவும்!!


Thanks & Regards,
Kaliraj G

அன்புள்ள காளிராஜ்,

உங்கள் கேள்வியில் உள்ளவை சில எளிமையான முன்முடிவுகள் மட்டுமே. வரலாற்றுநோக்குடன் விரிவாகப் பிரச்சினையைப்பார்க்காமல் உடனடி எண்ணங்களை உருவாக்கிக் கொள்கிறீர்கள்.

இன்று இந்திய மக்களிடம் குடிமையுணர்ச்சி இல்லை, பொதுவாழ்க்கையில் நேர்மை தேவை என்ற எண்ணம் இல்லை, அவர்களும் அன்றாடவாழ்க்கையில் எல்லா சமரசங்களுக்கும் தயாராக இருக்கிறார்கள் என்பது உண்மை.

ஆகவே அதற்குத் தீர்வு ‘ஒவ்வொருவரும் மனம்மாறுவதே’ என்று சொல்வதைப்போல அப்பாவித்தனமான பேச்சு ஒன்று உண்டா என்ன? அப்படியானால் அரசியலியக்கமே தேவை இல்லையே.

சரி, ஒவ்வொருவரும் எப்படி மாறுவார்கள்? லஞ்சம் தப்பு என்று நம் மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் இல்லையா? அவர்கள் அதையெல்லாம் தெரியாத அப்பாவிக் கூட்டம், சொல்லிப் புரியவைத்தால் உடனே மாறிவிடுவார்கள் இல்லையா?

எந்த சமூகப்பழக்கமும், சமூகக் கருத்தும் ஒரு வாழ்க்கை முறையாக மாறித்தான் நீடிக்கிறது. அந்த வாழ்க்கைமுறை நிலவும்போது ஒரு தனிமனிதர் அதிலிருந்து வெளியே செல்ல முடியாது. தங்கள் இலட்சியத்துக்காக எதையும் இழக்கத் தயாரானவர்கள் அதைச் செய்வார்கள். சாமானியர் செய்ய முடியாது. அவர்கள் தாங்கள் பிறந்து விழுந்த, தங்களைச்சூழ்ந்துள்ள, வாழ்க்கையையே வாழ்வார்கள்.

அப்படியானால் ஒரு சமூகப்பழக்கம், ஒரு சமூகக் கருத்து எப்படி மாறுதலடைகிறது? ஒட்டுமொத்தமாக சமூகத்தையே பாதிக்கும் கருத்துக்கள்மூலம்தான். அவ்வாறு ஒரு சமூகம் முழுக்கக் கருத்துக்களைக் கொண்டு செல்வதற்கு சிறந்த வழி என்ன? ஒட்டுமொத்தமாக சமூகத்தையே கவனிக்கச்செய்யும் பிரம்மாண்டமான சமூகப்போராட்டங்கள் மட்டுமே.

அதைத்தான் காந்தி சொன்னார். இந்தியசமூகத்தின் மனத்தில் ஆழ வேரூன்றியது தீண்டாமை. அதை எதிர்க்க ஆலயப்பிரவேசப் போராட்டத்தை அவர் நிகழ்த்தினார். அது முதலில் அதிர்ச்சியை,பின் குழப்பத்தை,பின்னர் மெல்லிய கிளர்ச்சியை உருவாக்கியது. இந்திய சமூகத்தில் அதில் ஈடுபட்டவர்கள் மிகச்சிறுபான்மையினர். அதை வெளிப்படையாக ஆதரித்தவர்கள் சிறுபான்மையினர்.

1923 ல் வைக்கத்தில் கோயில் நுழைவு போராட்டத்தை காந்தி ஆரம்பித்து 1935 வரை இந்தியா முழுக்க விரிவாக்கம்செய்து நடத்தியபோது அன்றைய சமூகம் ஆற்றிய எதிர்வினைகளை இன்று வாசித்தால் ஆச்சரியமாகவே இருக்கும். மதகுருக்களும் அறிவுஜீவிகளும் எல்லாம் காந்தியை இகழ்ந்திருக்கிறார்கள். ஐயப்பட்டிருக்கிறார்கள். ஒதுங்கி நின்று இலவச ஆலோசனைகளைப் பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார்கள்.

அன்று சொல்லப்பட்ட எல்லாமே இன்று அண்ணா பற்றி சொல்லப்படும் வரிகளே. காந்தி அவசரப்பட்டு விட்டார் என்றுதான் மீண்டும் மீண்டும் எழுதியிருக்கிறார்கள். இந்தியாவை மன அளவில் தயாரிக்காமல் காந்தி களத்தில் இறங்கி அதிரடியாக செயல்படுகிறார் என்றார்கள். ‘ஒவ்வொரு மனிதனும் தீண்டாமை தவறு என்று உணர்ந்தாலே போதும் தானாகவே கோயில் நுழைவு நடக்கும்’ என்று காந்திக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள்.சில தலித்துக்கள் கோயிலில் நுழைந்தால் என்ன பெரிதாக நிகழ்ந்துவிடப்போகிறது என எழுதியிருக்கிறார்கள்.

ஆனால் அந்தப் போராட்டம் இந்திய சமூகமனத்தில் ஆழத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கியது. சராசரி இந்துவின் சாதிசார்ந்த இறுக்கங்கள் தளர்ந்து இங்கே ஒரு ஜனநாயகக் குடிமைச்சமூக அமைப்பு உருவாக அதுவே காரணம். வெறும் இருபதாண்டுகாலம் கழித்து 1947ல் இந்தியாவின் சுதந்திர அரசு அதிகாரபூர்வமாக தலித்துக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தபோது அன்றைய இந்திய சமூகம் அதை இயல்பாக ஏற்றுக்கொண்டமைக்கு பின்னால் உள்ள கருத்தியல்அங்கீகாரம் அந்த ஆலயப்போராட்ட காலத்தால் காந்தியால் உருவாக்கப்பட்டதுதான்.

எந்த சமூகமாற்றமும் இத்தகைய ஒட்டுமொத்தமான சமூகப்போராட்டங்கள் மூலம் உருவாகும் தீவிரமான கருத்துப்பிரச்சாரம் வழியாகவே நிகழும். அன்னியத்துணி போராட்டமும் அப்படித்தான். அன்னியத்துணிகளைப் போடக்கூடாது என்று காந்தி சொன்னால் போதுமே, எதற்காக வீடு வீடாகச் சென்று பேசி வற்புறுத்தி முச்சந்தியில் போட்டு எரிக்கும் போராட்டத்தை நடத்த வேண்டும்?

மேலும், அது அன்னியத் துணிகளுக்கு எதிரான போராட்டம் அல்ல. நாம் நம் தேவையை நாமே நிறைவேற்றிக்கொள்ளவேண்டுமெனக் கோரும் போராட்டம். நாம் பொருளியல் ரீதியாகச் சுரண்டப்படுகிறோம் என நம் மக்களே உணரவைக்கும் போராட்டம். அந்த உணர்ச்சியை அந்த அன்னியத்துணி புறக்கணிப்புப் போராட்டம் மூலம் உருவாக்கியமையாலேயே இந்திய மக்களுக்கு பிரிட்டிஷார்மேல் இருந்த மயக்கம் கலைந்தது. தேசிய இயக்கம் மக்களியக்கமாக மலர்ந்தது.

இப்போது அண்ணா ஹசாரே உருவாக்கும் போராட்டமும் அப்படித்தான். அதன் நிகர விளைவு என்பது நம் சமூக மனத்தில், கோடிக்கணக்கான இளைஞர்களில், பொதுவாழ்க்கையின் ஊழலுக்கு எதிராக உருவாகும் நகர்வுதான். அப்படித்தான் இங்கே ஒரு சமூக மாற்றம் வரமுடியும். ஒரு போராட்டத்தால், ஒரு கோரிக்கை வெற்றி பெறுவதால் அது நிகழாது. அத்தகைய பல போராட்டங்கள் வழியாக மெதுவாக சமூக மனத்தில் அது உருவாகி வரும்.

எல்லா குடிமையுணர்ச்சிகளும் அப்படித்தான் உருவாகி வருகின்றன. பெருந்திரள் போராட்டங்கள் மூலம் உருவாகும் மறைமுகமான ஒட்டுமொத்தமான கருத்தியல் மாற்றமே சமூகத்தை மாற்றியமைக்கிறது. சட்டங்களை செய்வதும், எதிர்ப்பதும் எல்லாம் அந்த மாற்றத்தை நிகழ்த்துவதற்கான மேல்தள முயற்சிகளே.

சென்ற கால்நூற்றாண்டை நீங்கள் பார்க்கமுடிந்தால் அப்படி எவ்வளவு மகத்தான மனமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என எளிதில் உணரலாம். ஏன் 2002 ல் நாகர்கோயிலில் ஒரு தொண்டு நிறுவனம் மூன்றாம்பாலினத்தவர்களுக்கு ரேஷன் கார்டு கொடுக்கவேண்டும் என்று ஒரு போராட்டத்தை நடத்தியபோது செய்திகள் கிண்டலான தொனியிலேயே வெளியிடப்பட்டன. மக்கள் கூடி நின்று சிரித்தார்கள். இன்று பத்து வருடம் கழித்து அவர்கள் தங்களுக்கான சட்டங்களுக்காகப் போராடும்போது ‘அவுங்களுக்கும் ரைட் இருக்கில்லாடே’ என மக்கள் சொல்வதைக் கேட்கிறேன்.

இப்படித்தான் மக்களியக்கங்கள் நிகழ முடியும். இப்படித்தான் காந்திய யுகத்தில் நிகழ்ந்தது. உலகமெங்கும் காந்தியப்போராட்டங்கள் இப்படித்தான் நிகழ்கின்றன. நாளையும் இப்படியே நிகழும். வேறு வழியே இல்லை.

ஜெ


வைக்கமும் காந்தியும் 1

வைக்கமும் காந்தியும் 2

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2

அண்ணா ஹசாரே கடிதங்கள்..

அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…

அண்ணா ஹசாரே,வசைகள்

அண்ணா ஹசாரே-2

அண்ணா ஹசாரே-1

முந்தைய கட்டுரைபஷீர் காணொளி
அடுத்த கட்டுரைஅண்ணா ஹசாரேவின் அரசியல்