அண்ணா ஹசாரே- பிரச்சினை நாம்

வணக்கம்,

உங்களது ப்ளாக் சிறிது நாட்களாக படித்துவருகிறேன். எனது தாய் மொழி தமிழ் ஆகினும், படித்தது K .V இல். இதை பெருமைக்காக சொல்ல வில்லை. பிழை இருந்தால் மன்னிக்க கோரி சொல்கிறேன். உங்களது தெள்ள தெளிவான சிந்தனை அற்புதம். அதை தமிழில் படிக்கையில் ஒரு படி மேலே.

விஷயத்துக்கு வருக்கிறேன். அண்ணா ஹஜாரே பற்றிய உங்களது சமீபத்திய கடிதம் ஒரு நெத்தியடி. எனக்கு. பல நாட்களாக யோசித்தும் அண்ணாவின் இந்த போராட்டத்தை முழுமையாக சப்போர்ட் செய்ய என்னால் முடியவில்லை. காரணம் சிலவற்றை நீங்களே சொல்லி விட்டீர்கள். நம் முன்னோர்கள் நம்மை ஒரு முறைக்கு பல முறை யோசி என்று சொல்லியதை தவறாக எடுத்துகொண்டு கோடி முறை யோசிக்கின்றோம். Thoughts without actions . Arm Chair /Tea Shop critics – தேசத்திலேயே நம் ஊரில் தான் அதிகம். இன்று எனது நிலை மாறியிருக்கின்றது. இது நாள் வரை இருந்த கேள்விகளை பற்றி விவாதிக்கையில், இந்த போராட்டத்தில் ஓரளவு கலந்து கொள்ள முயல்வேன்.

கேள்விக்கு வருகிறேன். எனக்கு ஒரு நாளும் அண்ணா மீது சந்தேகம் இல்லை. ஏனெனில் இவ்வளவு நாட்களாக அரசாங்கம் கறையை தேடி தேடி நொந்து விட்டார்கள். அவர் நல்லவரே. அடுத்தது கோக்கு மாக்காக கேள்வி என்னுள் எழவில்லை. இந்த போராட்டம் இந்த அரசுக்கு எதிராக அவசியமே. சில ஊழல் பேர்வழிகள்(யார் யார் என்று அனைவருக்கும் தெரியும் ) நரகத்துக்கு சென்று பஜ்ஜி சொஜ்ஜி ஆக வேண்டும் என்பது என் ஆசை. இருப்பினும் எதனால் நான் யோசித்தேன் ? குற்ற உணர்ச்சி. நான் பெங்களூர்-இல் வசிப்பவன். என்னால் ஒரு நாள் கூட டிராபிக் ரூல்ஸ் -ஐ முழுமையாக கடை பிடிப்பது சாத்தியமே இல்லை. சத்தியமாக சொல்கிறேன். அடித்தது tax

நான் tax சரியாக கட்டுவதற்கு ஒரே காரணம், அது என் கம்பெனி யே பிடித்து கொண்டு கொடுப்பதால். நான் பிசினஸ் செய்து இருந்தால் கட்டிருப்பேனா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இதே போல் தான் நான் காணும் அனைத்துப் பேர்வழிகளும். இத்தனை அய்யோக்ய தனத்துடன் என்னால் பாசாங்கு செய்ய முடிய வில்லை. பாதி கோடி முறை யோசித்து விட்டேன். இன்னும் பாதி மிச்சம்.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் “தான் ஒரு உண்மையான குடிமகனாக வாழ்வேன்; நான் காணும் சின்ன சின்ன ஊழல்களையும் தட்டி கேட்பேன்” என்ற சத்தியத்தை செய்ய முனைந்தாலே 2 விஷயங்கள் சரிஆகிவிடும்: 1 ) moral right to question உண்டாகும் 2 ) சமுதாயம் உருப்படியாகும்.

இது அனைத்தும் எழுத காரணம், இன்று ஒரு வேடிக்கையான நிகழ்வை கண்டது தான். ஒரு இடத்தில ஐ.டி மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக கோஷம் எழுப்பி கொண்டிருந்தார்கள். இன்னும் ஒரு 100 அடி தாண்டி ஒரு U – turn பக்கத்தில் சில ஆசாமிகள் டிராபிக் constable க்கு லஞ்சம் கொடுத்து கொண்டிருந்தார்கள். அந்த கோஷத்தை 100 அடி தாண்டி நடத்தி இருந்தால் சிறிதளவு உபயோகமாக இருந்திருக்கும். என்னை பொறுத்த வரை நமது நாடே குட்டி சுவராக போய் விட்டது. இந்த போராட்டம், ஷங்கர் படத்தை போல ஒரு நல்ல முடிவு கொடுத்தால் அற்புதமாக இருக்கும்.

-ரவி

அன்புள்ள நண்பருக்கு

நான் சற்றே தீவிரமான மொழியில் எழுதுவது எந்த கோபத்தாலும் அல்ல. தொடர்ச்சியாக இந்த வகையான வாதங்களை எழுப்பிக்கொள்பவர்கள் தங்களை ஒருகணம் கூட பார்த்துக்கொள்வதில்லை என்பதன் மீதான விமர்சனம்தான் அது. உங்கள் கடிதத்தின் தொனி எனக்கு நிறைவளித்தது.

முதலில் அண்ணா ஹசாரேயின் நேர்மை பற்றிய ஐயம். இதைச்சொல்பவர்கள் சில கணங்கள் திரும்பி தங்களைப்பார்த்துக்கொள்ள முடிந்தால் அந்த ஐயம் வருமா என்ன? முப்பதாண்டுக்காலமாக பொதுவாழ்க்கையில் இருப்பவர் , சர்வதேச புகழ்பெற்றவர், இன்றும் ஒரு கீழ்நடுத்தர வாழ்க்கையில் இருக்கிறார். அவரது குடும்பமும் அப்படியே. அவர் திடமாக பொதுமேடைக்கு வந்து நின்று ‘நான் குற்றம்சாட்டுகிறேன்’ என்று சொல்வதிலேயே அந்த நேர்மை உள்ளது. மடியில் கனத்துடன் அதைச் சொல்லமுடியாது.

அவர் பதினைந்தாண்டுகளாக அவரது சொந்த மாநிலத்தில் ஊழலுக்கு எதிராக போராடியவர். பல அமைச்சர்களை வீட்டுக்கனுப்பியவர். அவரிடம் பிழை இருந்தால் இதற்குள் சந்தி சிரிக்க வைத்திருப்பார்கள் அரசை கையில் வைத்திருக்கும் நம் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும். அவர் மேல் களங்கம் காண விடாப்பிடியாக முயன்று இரவுபகலாக ஆராய்ந்து ஒரு விழாவில் இரண்டு லட்சம் செலவுசெய்யப்பட்டிருக்கலாம் என ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து விசாரிக்க கமிஷன் போடுகிறார்கள். அதை ஏதோ ஸ்பெக்ட்ரம் ஊழல் கமிஷனும் அதுவும் சமம் என்பதுபோல ஊடகங்களில் பிரச்சாரம் செய்கிறார்கள். [விஷ்ணுபுரம் அமைப்பு நடத்தும் ஒரு கூட்டத்துக்கே சாதாரணமாக ஐம்பதாயிரம் செலவாகிறது]

அதை அலசி பகுத்து ஆராயும் நம் இதழாளர்கள் நட்சத்திர ஓட்டல்களின் வரவேற்பறைகளில் வாழும் அரசியல் தரகர்கள். அதை இம்மிகூட பகுத்தறியாமல் நம்மவர்கள் பேச ஆரம்பிக்கிறார்கள். காரணம் நம்முடைய அடிப்படையான நேர்மையின்மை. நாம் நேர்மையற்றவர்களை எளிதில் நம்புகிறோம். பிறரது நேர்மையை நம்ப மறுக்கிறோம்.

இரண்டாவதாக , அவரை ஏதோ அப்பாவி என்பது போல சித்தரிப்பவர்கள். இவர்கள் மெத்தப்படித்தவர்கள். அண்ணா இந்தி மட்டும் வாசிக்கிறார் என்பதனாலேயே அவருக்கு அறிவு கிடையாது என ஒரு ஆசாமி தொலைக்காட்சியிலே சொல்கிறார். என்ன ஒரு கேவலம்! இந்தியாவில் பல்லாயிரம் மணிநேரம் பேசுவதும் ஆயிரம் பக்கம் எழுதுவதும் மிக எளிது. இந்த மக்களிடையே சென்று ஒரு சின்ன விஷயத்தைச் செய்து பாருங்கள் தெரியும். செய்து காட்டிய ஒரு செயல்வீரரை விட எந்த அறிவுஜீவியும் பெரியவரல்ல. செய்துகாட்டுபவர் மட்டுமே உண்மையான காந்தியவாதி. நம்மால் பேசமட்டுமே முடியும், எதையுமே செய்யமுடியாதென்பதனால் நாம் அண்ணாவை மட்டம் தட்டும் வாய்ச்சொல் வீணர்கள் பக்கம் எளிதில் சேர்கிறோம்.

இதெல்லாம் நடக்குமா, இதற்கெல்லாம் என்ன பயன், இதை வேறுமாதிரி செய்யலாமே என்றெல்லாம் நாம் பேசிக்கொண்டிருப்பது ஒரே காரணத்தால்தான். நம்முடைய செயலின்மையை, கையாலாகாத்தனத்தை நம்மிடமிருந்து மறைப்பதற்காக.

நண்பர் கிருஷ்ணன் சொன்னார். அவர் ஈரோட்டில் ஒருவரை பார்த்தார். பேச்சுவாக்கில் ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்றார். ‘சிந்தனையாளரா இருக்கேன்’ என்றாராம். இவர் அரண்டு போய்விட்டார். அப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவே இல்லை ‘அப்டீன்னா?’ என்றார். ‘அதாங்க சிந்திக்கிறது, அதான் செய்றேன்’ கிருஷ்ணன் புரிந்துகொண்டு ‘ஓ, எழுதறீங்களா?’ என்றார். ‘இல்லீங்க’ குழப்பத்துடன் ‘அப்ப மேடையிலே பேசுவீங்க இல்ல?’ என்று கிருஷ்ணன் ஆர்வமாக கேட்டார். ’ அதெல்லாம் நமக்கு சரிப்படாதுங்க’ என்றார் கிழவர். ‘சும்மா பேசிட்டிருப்பீங்களோ’ என்றார் கிருஷ்ணன். ‘எங்கங்க…அதுக்கெல்லாம் ஒண்ணும் ஆவுறதில்லீங்க’ என்றார் பெரியவர். ‘ வாசிப்பீங்களோ?’ என்றார் கிருஷ்ணன். அவர் ‘ திருக்குறள் அப்பப்ப வாசிக்கிறதுங்க…கண்ணு சரியில்லே அதனால அதிகமா ஒண்ணும் வாசிக்கிறதில்ல’ என்றார். ’அப்ப?’ என்றார் கிருஷ்ணன் மனம் உடைந்து. ‘அதாங்க சிந்திக்கிறதோட சரி’

பிரச்சினை அண்ணாவிடம்தான் ஏன் உறுதியாக இருக்கிறீர்கள்? ஏன் உங்களை நீங்கள் பார்க்கக்கூடாது? ஏன் இப்படி யோசிக்கிறீர்கள்? ஏன் இப்படி ஆவேசமாக எதிர்த்து வாதிடுகிறீர்கள்? உங்களுக்கு இயல்பாக அந்த ஐயங்களும் கசப்பும் தோன்ற என்ன காரணம்?

நம்மில் பலர் சிந்தனையாளர்கள். மிச்சபேர் நிந்தனையாளர்கள். அதுதான் சிக்கலே

ஜெ

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2

அண்ணா ஹசாரே கடிதங்கள்..

அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…

அண்ணா ஹசாரே,வசைகள்

அண்ணா ஹசாரே-2

அண்ணா ஹசாரே-1

முந்தைய கட்டுரைஅயோத்திதாசர், கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅண்ணா ஹசாரே, ஞாநி, சோ