கடற்கொள்ளையர், வைரங்கள், தீவுகள்

இன்றைய வாசிப்பு

ஐரோப்பிய இலக்கியத்தில் ‘கடற்சாகச எழுத்து’ என ஒரு வகைமை உண்டு. நான் முதலில் வாசித்த அத்தகைய நாவல் Westward Ho!. அது ஒரு கடற்சாகச நாவல். நான் முட்டிமோதி அதை வாசிக்கையில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். முழுக்கோடு ஒய்.எம்.சி.ஏ நூலகத்தில் கிடைத்த தோல் அட்டைபோட்ட கிளாஸிக் பதிப்பு. 1930 வாக்கில் லண்டனில் அச்சிடப்பட்டது. ஏதோ வெள்ளைக்காரரின் நன்கொடையாக அந்நூலகத்திற்கு வந்தது.

பழைய ஆங்கிலம். ஆகவே சொற்றொடர் சொற்றொடராக வாசிக்க வேண்டியிருந்தது. ஒருமாதம் இரவும் பகலுமாக வாசித்தேன், என் அப்பாவின் சேம்பர்ஸ் அகராதி துணையுடன். அதை வாசிக்கச் செய்தது அந்த சாகசம் மட்டுமே. அதை வாசித்த நாட்களில் நான் ஐந்து வரிகளில் ஐம்பது பக்கங்கள் அளவுக்கு கற்பனை செய்தேன். நான் வாசித்த நாவலை என்னிடமிருந்து கேட்டிருந்தால் சார்ல்ஸ் கிங்ஸ்லி திகைத்திருப்பார்.

அந்த வேகத்தை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நான் அன்றிருந்த உலகம் எவ்வளவு சிறிது என அறியவேண்டும். ஒரு கிராமம், அதைப்போன்ற இருபது கிராமங்கள், காடு. ’உலகம்’ என நான் கற்பனைசெய்தது வேறெங்கோ இருந்தது. பனிமலைகள், எரிமலைகள், பாலைவெளிகள், பெருங்கடல்கள்… அவற்றை காண எந்த வழியும் இல்லை.

நாகர்கோயில் சென்றால், அதிர்ஷ்டம் இருந்தால் அரிதாக வரும் ஆங்கிலப்படங்களைப் பார்க்கலாம். ஸ்பான், சோவியத் நாடு இதழ்களின் வண்ணப்படங்களில் வெளிநாட்டு நிலக்காட்சிகளை பார்க்க பத்து கிலோமீட்டர் நடந்து செல்வோம். தொலைக்காட்சி வந்து உலகமெனும் விந்தையை இல்லாமலாக்கிவிட்டது என்றுகூட படுகிறது

அன்றுமுதல் இன்றுவரை சில ஈர்ப்புகள் தொடர்கின்றன. ‘கௌபாய்’ படங்கள். படக்கதைகள். படங்கள் இவ்வளவு கொட்டிக்கிடக்கையில் ஏன் படக்கதைகள்? படத்தில் எல்லாவற்றையும் காட்டிவிடுகிறார்கள். என் கனவில் நான் பலமடங்காக விரித்துக்கொள்ள இடமில்லை. படக்கதைகள் என் கற்பனைக்கான தொடக்கங்களை அளிக்கின்றன, எனக்கு அவ்வளவு போதும்.

முத்து காமிக்ஸின் பராகுடா பதினேழாம் நூற்றாண்டில் நிகழ்கிறது. கடலாதிக்கத்தில் ஸ்பெயின் ஓங்கியிருக்கும் காலம். ஆழ்கடல்களுக்கு அப்பாலுள்ள நிலங்கள், ஆளில்லா தீவுகள், புதையல்கள், துரதிருஷ்டம் கவ்விய வைரங்கள், கடற்கொள்ளையர்கள், வீரசாகச இளைஞர்கள், சீமாட்டிகள் என ஐரோப்பிய மாலுமிக் கதைகளில் காணக்கிடைக்கும் எல்லாம் அடங்கியது பராகுடா என்னும் காமிக்ஸ் கதைத்தொடர்

ஸ்பெயினில் இருந்து கிளம்பும் டோனா எமிலியோ சான்ஸே டெல் ஸ்கியூபோ என்னும் சீமாட்டியிடமிருந்து கஷார் என்னும் வைரம் இருக்கும் இடத்திற்கான வரைபடம் பராகுடா என்னும் மர்மமான கொள்ளைக் கப்பலை நடத்தும் கொள்ளையனான பிளாக் டாக்குக்கு கிடைக்கிறது. ப்யூர்ட்டோ பிளாங்கோ என்னும் தீவுக்குச் செல்கிறது அக்கப்பல். கடற்கொள்ளையர்கள், அடிமைவணிகர்கள் ஆளும் தீவு அது. அங்கிருந்து அந்த வைரத்தைச் சுற்றிச்சுற்றி செல்கிறது கதை.

ஐரோப்பிய படக்கதைகளில் மட்டும் சாத்தியமான அபாரமான படங்கள். மிகமிக நுணுக்கமான தரவுகளுடன், விரிவாக வரையப்பட்ட முழுமையான ஓவியங்கள் கொண்டது ஒவ்வொரு கட்டமும். ஆடைகள், அணிகலன்கள், கட்டிடங்கள், நில அமைப்புகள் எல்லாமே திகைப்பூட்டுமளவுக்கு அசலானவை. அதேசமயம் சினிமாவில் சாத்தியமே இல்லாத காட்சிக் கோணங்கள்.

படக்கதை சினிமாவை விட வேகமானது. சினிமாவின் ஒரு ‘ஷாட்’ குறைந்தது முப்பது செகண்ட் நீளலாம். ஒரு காட்சி இரண்டு நிமிடங்கள். ஆனால் இரண்டே படச்சட்டகத்தில் அந்த காட்சியை முழுமையாக நம் கற்பனைக்குள் செலுத்திவிடுகிறது படக்கதை.

ஜீன் டூஃபா

பெல்ஜியச் சித்திரக்காரர் Jean Dufaux வரைந்து உருவாக்கிய காமிக்ஸ் இது. சமகாலத்தின் மிகச்சிறந்த படக்கதை வல்லுநராக அவர் கருதப்படுகிறார். படக்கதைகள் எல்லா அகவையினருக்கும் கற்பனைகளை தூண்டவேண்டும். ஒரு வரலாற்றாய்வளனுக்கும் அவற்றில் ஆர்வமூட்டும் சில இருக்கவேண்டும். அத்தகையவை ஜீன் டுவா வரையும் படக்கதைகள்.

அசோகமித்திரனை அவர் வாழ்க்கையின் இறுதியில் சந்தித்தபோது அப்போது வாசித்துக் கொண்டிருப்பது அலக்ஸாண்டர் டூமாவின் ‘‘The Count of Monte Cristo’ என்னும் சாகசநாவல் என்று சொன்னார். ”நீ வாசிச்சிருக்கியோ?” என்றார். நான் அதிகம் வாசிக்கப்படாத பிளாக் டியூலிப் உள்ளிட்ட நாவல்களை வாசித்திருக்கிறேன் என்றதும் பரவசமானார். நாங்கள் ஒரே மனநிலையில் இருந்து அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

இன்றிருந்திருந்தால் பராகுடாவை அசோகமித்திரனுக்கு அனுப்பி வைத்திருப்பேன்.

முந்தைய கட்டுரைசந்திரிகா ஹாஸை விலாசம்
அடுத்த கட்டுரைஆன்மிகக் கல்வியில் இலக்கியத்தின் இடமென்ன?