பித்தன் வருகை

புதுமைப்பித்தனின் மார்பளவுச் சிலை ஒன்று அஜிதனுக்கு திருமணப்பரிசாக வந்தது. அதை அவனுக்குத் தர மறுத்து என்னுடைய புத்தக அடுக்கில் வைத்துக் கொண்டேன். அடிக்கடி பார்க்கக்கூடியதாக. ஏற்கனவே அங்கே அசோகமித்திரன் படம். நேர் எதிரில் நித்ய சைதன்ய யதி படம். மேஜைமேல் அருண்மொழி படம்.

எல்லாம் ஒரு மனநிலைக்காகத்தான். பிடித்தமான விஷயங்கள் சுற்றிலும் இருக்கட்டுமே. கையருகே சூடான கறுப்புக் காபி வெப்பக்குடுவையில் காத்திருப்பதுபோலத்தான்.

உண்மையில் எழுதும் இடத்தைப் பற்றி நான் நிறையவே எழுதியிருக்கிறேன். பத்மநாபபுரத்தில் என் எழுத்தறை ஒரு சிறிய ஆறடிக்கு ஆறடி சதுரம். எனக்கு முதல்முறையாக ஓர் எழுத்தறை அமைந்தது அப்போதுதான். உள்ளே என் சிறிய நூலகம், ஒரு மேஜை, நாற்காலி. இருபுறமும் சன்னல்கள். ஒரு சன்னல் வழியாக சமையலறை தெரியும். இன்னொன்று வழியாக முற்றத்தின் மாமரம்.

அதன்பின் இந்த வீட்டின் கீழிருக்கும் சிறிய அறை. அங்கே பழைய கணிப்பொறியுடன் அமர்ந்திருப்பேன். அருகே படுக்கை. அருண்மொழிக்கும் குழந்தைகளுக்கும் இன்னொரு படுக்கையறை. 2006ல் இந்த மாடியை கட்டினேன். இங்கே ஓர் எழுத்தறை, ஒரு படுக்கையறை. இது என் உலகமாக இருக்கிறது இப்போது.

எழுதும் இடத்தை  இனிதாக்கிக் கொள்வது என் வழக்கம். எனக்கு பிரியமானவற்றை கொண்டு வந்து வைப்பேன். ஜன்னல் வழியாக தெரியும் மரத்தை, அறைக்குள் வரும் பல்லியை,சரிந்து உள்ளே வரும் வெயிலை எல்லாவற்றையும் ‘திட்டமிட்டு’ ரசிப்பேன். அதை நானே சொல்லிக்கொள்வேன். நாம் சொல்வதை நம் அகம் நம்பும். வேறெவரை விடவும் நாம் கவனிப்பதும் ஏற்றுக்கொள்வதும் நம்மைத்தானே?

மெல்ல மெல்ல அந்த இடம் மிகமிக அணுக்கமானதாக ஆகிவிடும். அந்த இடத்துக்காக என் அகம் ஏங்கும். அங்கே செல்ல தவிக்கும். அங்கே அமர்ந்ததுமே ஒரு நிம்மதியும் பரவசமும் எதையாவது எழுதவேண்டும், வாசிக்கவேண்டும் என்னும் எண்ணமும் உருவாகும். அமர்ந்தாலே எழுதமுடியும்.

இங்கே அமர்ந்தபடி தொலைபேசியில் பேசமாட்டேன். மின்னஞ்சல்களைப் பார்ப்பதுமில்லை. மின்னஞ்சல்களை செல்பேசியில் பார்ப்பேன். ஏனென்றால் உளச்சோர்வு அளிக்கும் எதிர்மறைச் செய்திகளுடன் இந்த இடத்தை நான் தொடர்புபடுத்திக் கொள்வதில்லை. இது தித்திக்கும் ஓர் இடம்.

நான் வழக்கமாகத் தங்கும் விடுதியறைகளையும் இப்படி ‘தன்வய’ப்படுத்திக் கொள்வதுண்டு. அந்த அறைக்கு நானே சொல்வேன் ‘நீ ஓர் இனிய இடம். உன் அனைத்துமே இனியவை. உன்னை நான் விரும்புகிறேன். நீ எனக்கு அருள்க’ சொல்லி எழுதி அதை இனிதாக்கிக் கொண்டால் அறை மலரத்தொடங்கிவிடுகிறது.

இந்த அறையில் புதுமைப்பித்தனின் வரவு ஓர் இனிய நிகழ்வு. அவர் முகத்தில் ஓர் அப்பாவித்தனமும் குசும்பும் உண்டு. அவர் வளராமலேயே நின்றுவிட்ட சிறுவன் என்று தோன்றும். கூர்மையானவர், ஆனால் உலகியலை அறியாமலேயே சென்றுவிட்டவர். சற்றே சலிப்புகொண்ட அசோகமித்திரனின் முதிய முகத்திற்கு இப்படி ஓர் எதிர்முனை தேவைதான்.நேர்முனையும் எதிர்முனையும்.

நேர் எதிரில் நித்ய சைதன்ய யதி. அது நியூட்ரல் முனை. எர்த். மண்ணுடன் விண்ணின் முடிவிலா ஆற்றலை இணைக்கிறது.

புதிய வாசிப்பறை 2009

படிப்பறைப் படங்கள்
இன்றைய வாசிப்பு 2020

அழகும் ஆடம்பரமும்

அடவியும் அறைகளும்

 

முந்தைய கட்டுரைநவவேதாந்தம்
அடுத்த கட்டுரைஅழைப்பு, கடிதம்