தருநிழல்

வைக்கம் முகமது பஷீர் ஒரு மங்கோஸ்டைன் மரத்தின் அடியில் பகலில் பெரும்பாலான நேரம் அமர்ந்திருப்பார். அங்கேயே நாற்காலி, டீபாய், பிளாஸ்கில் சுலைமானி, ரேடியோகிராம், புத்தகங்கள் எல்லாம் இருக்கும். அவருடைய வரவேற்பறை அதுதான்.

நான் சந்திக்கும்போது கே.ஜி.சங்கரப்பிள்ளை அவருடைய மனைவிவழியாக கிடைத்த பாரம்பரிய வீட்டின் முகப்பில் நின்றிருந்த பெரிய மரமல்லி மரத்தின் அடியில்தான் இருப்பார். இரவிலும் அங்கேதான். அதில் விளக்குகள் அமைத்திருந்தார். கீழே அவருக்கான எல்லாமே இருக்கும். பிரம்பு நாற்காலிகள், பிரம்பு டீபாய், நாளிதழ்கள்…

கேரளத்தில் மரநிழல் மேல் அந்த மோகம் உருவாவதற்கு ஒரு காரணம் உண்டு, அங்கே அப்படி மரநிழலில் இருப்பதற்கான வாய்ப்பு ஆண்டில் நூறுநாட்கள்தான். மிச்சநாட்களெல்லாம் நசநசவென மழை பெய்துகொண்டிருக்கும். தமிழகத்தில் பழையகாலத்தில் ஆண்டில் முந்நூறுநாட்கள் மரநிழலில் வாழ்பவர்களே மிகுதி. ஆனால் இன்று எல்லாருமே வீடுகளுக்குள்தான். காரணம் தொலைகாட்சி.

ஒரு மரநிழல் எனக்கும் இருக்கவேண்டும் என்னும் ஆசை இருந்தது. என் இளமையில் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு மரம் இருந்தது. பெரிய வேப்பமரம். அதனடியில் ஒரு குளிர்ந்த பெரிய கல். அதிலமர்ந்து வாசிப்பேன். என்னைச்சுற்றி காகங்கள் கூச்சலிட்டுக்கொண்டிருக்கும். அதன் பின் எங்கும் ஒரு மரம் அமையவில்லை. இப்போது என் இல்லத்தில் உள்ள மஞ்சள்மலர் மரம் எனக்கு இனியது. ஆனால் அதன்கீழ் அமர்வதற்கான வசதி இல்லை

எங்கள் மலைத்தங்குமிடத்தில் உள்ள இந்த மரம் அதை நான் பார்த்த முதற்கணமே என் மரமாக ஆகிவிட்டது. தோதகத்தி மரம். ஈட்டியின் ஒரு காட்டுவகை. மிகப்பெரிய மரம், அதை வெட்டிய அடிமரத்தில் இருந்து முளைத்து செறிந்து அழகிய பசுங்குடை என ஆகியிருக்கிறது. அதன் கீழே இரண்டு குளிர்ந்த பாறைகள். எந்நிலையிலும் அங்கே வெயில் படுவதில்லை. மலைப்பிளவை நோக்கிய இடம் என்பதனால் காற்று எப்போதுமே பெருகிச்சென்றபடி இருக்கும்.

எனக்கான மரம், ஞானவிருட்சம் என்று வேண்டுமென்றால் சொல்லிக்கொள்ளலாம். என் உளம்கவர்ந்த பல நூல்களை அங்கே அமர்ந்து வாசித்திருக்கிறேன். பிரியமானவர்களுடன் அங்கே அமர்ந்து உரையாடியிருக்கிறேன். நானும் ஒரு நாயும் நாள் முழுக்க தன்னந்தனியாக அங்கே இருந்திருக்கிறோம். அங்குவைத்து மிகநுட்பமான தத்துவக்குறிப்புகளை எடுத்திருக்கிறேன். 

ஒரு மரத்தின் அடியில் வழக்கமாகச் சென்றமரத் தொடங்கினால் அந்த மரம் நமக்கு அணுக்கமாக ஆகிவிடுகிறது. தனியாக இருக்கையில் அந்த மரத்தின் இருப்பை நாம் உணர்கிறோம். உடலிருப்பை மட்டுமல்ல ஆன்மாவின் இருப்பையும்கூட. அந்த மரத்துடன் ஆழமான ஓர் உரையாடல் தொடங்கிவிடுகிறது. நான் மிக அணுக்கமாக உரையாடும் மரம் இது. என் கனவில் அடிக்கடி வருவதும்கூட – எந்த மனிதர்களை விடவும் கூடுதலாக.

தட்சிணாமூர்த்தி சிலைகளில் பின்பக்கம் இருக்கும் மரம் செறிந்த இலைகிளைகளுடன் ஒரு குடை போல செதுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கையில் அது ஓர் அலங்காரவடிவம் என்றே எண்ணியிருக்கிறேன். இந்த மரம் மெய்யாகவே அப்படிப்பட்டது. மிக அழகிய ஒரு குடை.

மரத்தடியில் அமர்கையில் நாம் வான்கீழும் அமர்கிறோம். எந்தக் கூரையின்கீழும் அந்த அமைவு நமக்கு கிடைப்பதில்லை. மரம் கூரையை அளிப்பதில்லை. வானைத்தான் அளிக்கிறது.

முந்தைய கட்டுரைஆ.வே. இராமசாமியார்
அடுத்த கட்டுரைஆலயங்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?