ஒவ்வொரு பருவத்தையும் அதனதன் சுவைகளுடன் ரசிக்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டாலும் அது எளிதல்ல. தமிழ்நாட்டில் கோடை மிகக் கடினமானது. மின்சாரமில்லாமல், சிறிய காற்றோட்டமில்லாத அறைகளில் வாழும் பல லட்சம் பேரிடம் சென்று கோடையின் சுவை பற்றி வகுப்பெடுக்க முடியாது. ஆனால் எனக்கே நான் சொல்லிக்கொள்வதுண்டு, கோடை இனிது. ஒரு வாழ்க்கையில் முழுதுணர்ந்து நாம் அனுபவிக்கத்தக்க கோடைகள் அதிகபட்சம் அறுபதுதான். அதிலொன்று இது. ஆகவே தவறவிடலாகாது.
கோடைக்குரிய இன்பங்கள் பல. கோடைக்கு என எங்களூரில் சில சிறப்பான மீன்களுண்டு.அதில் தலையாயது மத்திச்சாளை. எனக்கு மிகப்பிடித்த மீன் அது. பொரித்தால், குழம்பு வைத்தால் எந்நிலையிலும் சுவை மிகுவது. வெள்ளியிலைகள் போல குவித்து வைத்து விற்கப்படும் மத்தியைக் கண்டால் உணர்ச்சிவசப்பட்டு ஏகப்பட்ட ரூபாய்க்கு வாங்கிவிடுவேன். ‘எல்லாவற்றையும் கழுவுறதுக்குள்ள முதுகு வலிக்குது’ என அருண்மொழி சலித்துக் கொண்டாலும் அவளும் ஒரு நல்ல தீனிக்காரி ஆனதனால் முழுமனதுடன் சமைப்பாள்.
அடுத்தபடியாகப் பச்சை மாங்காய். என் வயதில் பார்வதிபுரம் வட்டாரத்திலேயே பச்சை மாங்காய் உப்புடன் சேர்த்துச் சாப்பிடுபவன் நான் ஒருவனாகவே இருப்பேன். என் வீட்டு முன் நிற்கும் பக்கத்துவீட்டுக்காரரின் மாமரத்தின் காய்கள் பச்சையாகத் தின்பதற்கு மிக உகந்தவை. மென்மையான புளிப்பு. பறித்து உடனே ‘சுனை’ மணம் மாறாமல் வெட்டி உப்புடன் சாப்பிடுவது ஒரு மோனநிலை. நான் மாலைநடை முடிந்து திரும்பும்போது என்னையறியாமலேயே கை ஓரிரு காய்களை பறித்துவிடும். பக்கத்துவீட்டுக்காரர் வேறுபக்கம் திரும்பிக்கொள்வார். அவருடைய கௌரவத்தை அவர் பார்த்தாகவேண்டுமே.
நுங்கு, பதநீர், இளநீர் என கோடைக்குரிய சுவைகள் பல. நெல்லிக்காய்ச் சாற்றை மோரில் கலந்து குடிப்பது நான் கடவுள் படப்பிடிப்பில் அறிமுகமாகியது. இன்று சினிமாவில் அது ஒரு தவிர்க்கமுடியாத சுவை. பழைய சோற்றில் மோர்விட்டு மாங்காய் ஊறுகாயுடன் சாப்பிட கோடைவெயில் வெளியே பற்றி எரிந்தாக வேண்டும். வெள்ளரிக்காய் கோடைக்கே உரிய சுவை. மார்ச் முதல் தெருமுனைகள் தோறும் விற்பார்கள். எனக்கு எப்போதுமே பிரியமான கொய்யாப்பழம் கோடையில்தான் மிகச்சிறப்பாக கிடைக்கும்.
கோடையின் பேரழகு என்பது உச்சிக்கோடையில் தளிர்விடும் மரங்கள்தான். மாமரங்கள் தளிக்கின்றன. ஈட்டி, புளி முதலிய பல காட்டுமரங்கள் கோடையில் தளிர்விடுகின்றன. அத்தி, ஆலமரம் வகையிலான எல்லா மரங்களும் கோடையில் இலையுதிர்த்து பசுந்தழல் பற்றிக்கொண்டதுபோல ஒரேயடியாக தளிராகிவிடுகின்றன. ஒளி ஊடுருவும் படிகப்பச்சை நிறத்தளிர்கள். அவை கோடையை சுடர்விடச் செய்கின்றன
ஆனால் கோடையின் முதன்மை அழகு என்பது வெயில்தான். மதிய வெயில். கண்கூசும்படி வெயில் பொழியவேண்டும். எல்லா பறவைகளும் நிழல்களுக்குள் ஒடுங்க ஓர் ஆழ்ந்த அமைதி நிலவு. மரநிழல் ஒன்றில் அமர்ந்தபடி வெயில் பரவிய வெளியை பார்த்தால் கண்கள் சொக்கி சரியும். இவ்வுலகம் எத்தனை அழகிய அமைதியான இனிய இடம் என்னும் எண்ணம் உருவாகும். கோடையின் தியானம் அதுதான்.