முட்டை

எடைகுறைப்பு உணவு முறை தொடங்கியபோது காலையுணவை முட்டை என ஆக்கிக் கொண்டேன். எடைகுறைப்புக்கு முயல்கையில் வலுவிழப்பை அடையாமலிருக்கச் சிறந்த வழி உணவில் மாவுப்பொருளை குறைத்து புரதத்தை கூட்டுவதுதான். அதற்குச் சிறந்த வழி முட்டை

காலையுணவுக்கு நான்கு முட்டைகள். தொடக்கத்தில் வெள்ளைக்கரு மட்டுமே. பின்னர் எடை மிகவேகமாக குறைவதைக் கண்டு உணவு நிபுணரின் ஆலோசனைப்படி மஞ்சள்கருவுடன் சாப்பிட ஆரம்பித்தேன். மதிய உணவு வழக்கம் போலசோறு கொஞ்சம் குறைவாக. இரவில் பழங்கள். இனிப்பை முழுக்கவே தவிர்த்துவிடுகிறேன். ஆக கார்போஹைட்ரேட் ஒருவேளை மட்டுமே. 

உணவுப்பழக்கம் பற்றிப் பேசினால் உடனே பல்லாயிரம் ஆலோசனைகள் வந்துசேரும், எதைச்செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என. எல்லாவற்றுக்கும் எவரோ ஒருவர் அய்யய்யோ ஆபத்து என்று கூவுவார். எது முடியுமோ அதைச் செய்வது, அதன் விளைவுகளை கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பது, தேவையென்றால் அத்துறையின் நிபுணரை கலந்தாலோசிப்பது மட்டுமே உகந்த வழி.

இந்த உணவுமுறை எனக்குக் கைகொடுக்கிறது. 12 கிலோ எடையை குறைத்தேன். 81ல் இருந்து 68 வரை. எனக்கு ஐரோப்பிய கணக்கின்படி 67 கிலோ எடை இருக்கவேண்டும். ஆனால் எனக்கு அது மிகக்குறைவு என எண்ணம் வந்தது. ஆகவே உணவை சற்று கூட்டி 2 கிலோ கூட்டி 70ல் நீடிக்கிறேன்

அறிந்த, பழகிய உணவுமுறையை முழுமையாக மாற்றிக்கொள்வதென்பது எளிது அல்ல. நாப்பழக்கம் விட்டுப்போகாது. விட்டுப்போன உணவுக்கான ஏக்கம் கூடிக்கூடி வரும். வாழ்க்கைமுறை என ஆகி, வாழ்நாள் முழுக்க நீடிக்காத ஓர் உணவுமுறையால் பெரிய பயன் ஏதுமில்லை. பலர் எடையை குறைத்து பின்னர் முந்தைய உணவுக்கு மீண்டு பழையநிலையிலும்  கூடிய எடையை அடைவதை காண்கிறேன் 

ஆகவே  சிறுதானிய உணவு, மறுதானிய உணவு, வெறும் மாமிச உணவு, பேலியோ எதுவும் எனக்குச் சரியாகாது என்று கண்டுபிடித்தேன். எனக்கு எது பழகியதோ, எது எனக்கு பிடித்ததோ அதை குறைவாகச் சாப்பிடுவதே நல்லது. மெய்யாகவே அது பயனும் அளிக்கிறது. அதிலொன்று முட்டை. (மீன் என்பது அதையும் தாண்டி புனிதமானது)

முட்டையை தினமும் உண்ணும்போது ஒரு சலிப்பு உருவாகும். தமிழகத்தில் முட்டைவாயுஎன ஒரு நம்பிக்கை உண்டு. ஆகவே இஷ்டத்துக்கு குருமிளகுப் பொடி தூவுவார்கள். சிலர் ஆம்லெட் அல்லது ஆஃப் பாயில் அல்லது, ஃபுல்பாயில் சாப்பிடுவார்கள். எனக்கு இவை எதுவும் சரியாகவில்லை. 

கேரளம் சென்றிருந்தபோது ஒரு நண்பர் சாப்பிடுவதை கண்டேன். துளி வற்றல்மிளகாய்ப்பொடி, துளி உப்பு ஆகியவற்றை தேங்காயெண்ணையில் குழைத்து முட்டைமேல் மென்மையாகப் பூசி அடுக்கி அவர் மனைவி கொண்டு வந்து வைத்தார். பார்க்க அழகாக இருந்தது. சாப்பிடவும் எனக்குப் பிடித்திருந்தது.

தமிழ் நாக்குக்கு உகக்குமா தெரியவில்லை. குமரியன்ஸின் தேங்காயெண்ணை பழகிய நாக்குக்கு சிறப்பாக இருக்கும். முட்டையில் வாயு என்பதெல்லாம் அபத்தம் என்பது என் எண்ணம். அப்படி வாயு இருந்தால் அது நல்லமிளகாயில் சரியாகவும் வாய்ப்பில்லைமிளகாய்க்கெல்லாம் அந்த பயன் இருப்பதாக ஆயுர்வேதம் சொல்லவில்லை.

அவித்த முட்டையை இரண்டாகப் பிளப்பது கடினம். கத்தியால் வெட்டினால் கத்தியில் ஒட்டும். சிறந்த வழி ஒரு நூலை வைத்து இரண்டாக ஆக்குவது. நெடுகப்போழ்ந்து மிளகாய்ப்பொடி பூசினால்தான் மஞ்சளிலும் வெள்ளையிலும் அது பரவ முடியும்

சிவப்பு பூசி காத்திருக்கும் முட்டைகளை என் மேஜையில் பார்க்கிறேன். ஒன்று நமக்குப் பிடித்திருந்தால் அழகாக ஆகிவிடுகிறது. ஆகவே அழகாக ஆக்கிக்கொள்வது ஒன்றை விரும்புவதற்கான நல்ல வழி

முந்தைய கட்டுரைவேதா கோபாலன்
அடுத்த கட்டுரைமுழுமைக் கல்வியின் இடம்