டி.எம்.கிருஷ்ணா, இசை விவாதம்

அன்புள்ள ஜெ

ஒரு கேள்வி. ஏற்கனவே டி.எம்.கிருஷ்ணா பற்றி நீங்கள் கடுமையாகக் கருத்து சொல்லியிருந்தமையால் இதைக் கேட்கிறேன். இப்போதைய விமர்சனங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

ஜெயராம் ஸ்ரீகாந்த்

 

அன்புள்ள ஜெயராம்,

இந்த விவாதத்தில் என் தரப்பைச் சுருக்கமாக கீழ்கண்ட வரிகளாகச் சொல்ல விரும்புகிறேன்

அ. டி.எம்.கிருஷ்ணா மிகுந்த தனித்தன்மை கொண்ட பாடகரரோ, இன்றைய பாடகர்களில் முதன்மையானவரோ அல்ல என நினைக்கிறேன். அவருடையது ஒரு சம்பிரதாயமான பாட்டுமுறைதான். கணக்குவழக்குகள் கொண்ட சென்னை சபா சார்ந்த மரபிசை அது. இசையனுபவத்திற்காக பாட்டு கேட்பவர்களுக்கு ஓரிரு ஆண்டுகளுக்குள் சலிப்பூட்டுவது.

ஆனால் இன்றைய சூழலில் அவர் முக்கியமான பாடகர்தான். அவருக்கு மியூசிக் அக்காதமி விருது அளிக்கப்படுவது எல்லா வகையிலும் சிறப்புதான். அவர் அதற்கு தகுதியானவர்தான்.

ஆ. ஆனால் அவருக்கு மகசேஸே விருது போன்ற விருதுகள் இசைக்காக அளிக்கப்படவில்லை. இசையை ’சேரிக்கு’ கொண்டுசென்றது, ‘மக்களிடம்’ கொண்டுசென்றது போன்ற காரணங்களைச் சொல்லி அவை அளிக்கப்பட்டன. அவை அவர் நடத்திய தரம்தாழ்ந்த உத்திகள். தற்காலிகமான நாடகங்கள். அதையே நான் கண்டித்தேன். இப்போதும் கண்டிக்கிறேன். ஒரு கலைஞர் அத்தகைய செயல்கள் வழியாக கீழ்மையை ஈட்டிக்கொள்கிறார்.

இ. கர்நாடக இசையின் அடிப்படை என்பது தமிழகத்தின் தொன்மையான பண்ணிசை. அதை தமிழிசை எனச் சொல்வதுமுண்டு. அந்த அடிப்படையை மறுத்து அதை சாமவேதத்திலும், வடநாட்டு இசையிலுமெல்லாம் கொண்டு சேர்க்கும் போலி முயற்சிகள் பல ஆண்டுகளாக இங்கே நிகழ்ந்து வருகின்றன. அந்த மோசடிகளை மறுத்தோ தமிழிசையின் வேர்களை அடையாளம் கண்டோ டி.எம்.கிருஷ்ணா இதுவரை ஒன்றும் சொன்னதில்லை.

ஈ. டி.எம்.கிருஷ்ணாவின் பெரியார் ஈடுபாடு என்பது நேர்மையானது என்றே எடுத்துக்கொள்கிறேன் அது அவரது அரசியல். கலைஞன் தங்களுக்குப் பிடித்தமானபடி இருந்தால்தான் கலையை ரசிப்போம் என்பவர்களுக்கு கலைமேல் மதிப்பில்லை. ஒரு கர்நாடக இசைக்கலைஞர் பிராமணர்களுக்கு ஆதரவாக இருந்தாகவேண்டும் என்பதில்லை. அதை இசைக்கு நிபந்தனையாக வைப்பது என்பது அப்படிப் பேசுபவர்களுக்கு இசைமேல் நம்பிக்கையோ மரியாதையோ இல்லை என்பதையே காட்டுகிறது.

ஈ. ஒரு கர்நாடக இசைப்பாடகர் ஆத்திகராக, பக்தராக இருந்தாகவேண்டும் என்பதெல்லாம் இல்லை. உண்மையில் மணி ஐயர் கூட அப்படியெல்லாம் இல்லை என்றுதான் நான் அவருக்கு அணுக்கமாக இருந்தவர்கள் சொல்லி அறிந்தது. (அதை ஒருமுறை சொல்லப்போக ஒருகூட்டம் வந்து சாமியாடியது) இசைக்கு அதெல்லாம் நிபந்தனையும் அல்ல. இன்றைய கர்நாடக இசை இன்று ஒருவகை பஜனையாகவே ஒலிக்கிறது. மிக முக்கியமான கச்சேரியில்கூட ஐம்பதுபேர் சேர்ந்து கைதட்டி கூடவே பாடும் அவலமெல்லாம் இங்கே உண்டு. பக்தியை கடந்துசென்று ஒருவர் கர்நாடக இசையைப் பாடினால் அந்த சலிப்பூட்டும் பஜனை ஒலி இல்லாமலாகும், புதிய உணர்வுகள் உருவாகும் என்று தோன்றுகிறது

உ. பக்தி இல்லாமல் கீர்த்தனைகளை பாட முடியுமா? நகுமோ மோ கனலே என்னும் கீர்த்தனை ராமனைப் பற்றிய பக்தியால் உருவானது. நகை திகழும் உன் முகத்தை பார்க்க முடியாத என் துயரை நீ உணர்ந்துகொள்ள மாட்டாயா? அந்த வரியை பக்தியுடன் மட்டுமே பாடவேண்டும் என்பதில்லை. அந்த உணர்வுநிலை அமைந்தாலே போதுமானது. அது காதல் கூட ஆகலாம். பக்தியை விட்டுவிட்டு அந்த உணர்வுநிலையை அளித்தால் இன்னும்கூட பாட்டு மேம்படவே வாய்ப்பு என்று தோன்றுகிறது.

ஊ. இந்த விவாதத்தை ஒட்டி உருவாகும் இரண்டு தரப்புகளுமே சலிப்பூட்டுகின்றன. ஒருபக்கம் கர்நாடக இசை என்பது தங்களால் உருவாக்கப்பட்டது, தங்களுக்குரியது, பிறர் அணுகமுடியாதது என்ற பாவனையில் இசையுலக அறிவிலிகளின் உளறல்களும் தோரணைகளும். அவர்களுக்கு எந்த வரலாறும் எந்த அடிப்படையும் தெரியாது. அவர்களிடமிருப்பது மிக எளிய சாதிய மேட்டிமைவாதம். அதேசமயம் முதல்வரின் ஒரு வரி வாழ்த்து டி.எம்.கிருஷ்ணாவுக்கு வந்ததுமே முகநூல் பதிவுகளை அழித்துவிட்டு ஓடும் இந்த எளிய உயிர்களை பெரிய அளவில் பொருட்படுத்தத் தேவை இல்லை.

இன்னொரு பக்கம் இசையை பிராமணர்கள் பிறருக்கு அளிக்காமல் புதைத்து வைத்துள்ளனர், பிறரை புறக்கணிக்கின்றனர் என்று இடைநிலைச் சாதிக்காழ்ப்பு ஆசாமிகளின் கூற்று. அவர்கள் தங்களுடைய எந்த குறைபாடுக்கும்  பொறுப்பை இன்னொருவர் மேல் சுமத்த விழைகின்றனர். அது வழக்கமான ஃபாசிசம்.

இங்கே பிராமணரல்லாத பிற சாதியினர் இசையை மதிக்கவில்லை, இசையைக் கற்கவோ கேட்கவோ தயாராக இல்லை. உலகியல் கல்விக்கும் தொழிலுக்கும் மட்டுமே அவர்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர் என்பது நடைமுறை உண்மை. உலகியல் சார்ந்த எல்லாவற்றையும் கைப்பற்றியுமுள்ளனர். இசையை அவர்கள் பொருட்டாக நினைக்கவில்லை.

இங்கே உருவான தமிழிசை இயக்கம்  இந்த பிராமணரல்லா சாதியினரால் முழுமையாகக் கைவிடப்பட்டது. அங்கும் பிராமணர்கள் பாடினால்தான் உண்டு என்னும் நிலையே உருவாகியுள்ளது. பெரியசாமித் தூரன் பெயரையே அறியாமல் ஒருவன் இருந்தால் அது அவன் பிழையா இல்லை பிராமணர்களின் பிழையா? சஞ்சய் சுப்ரமணியம் பாடினால்தான் பெரியசாமித் தூரன் இன்று மேடையில் ஒலிக்கமுடியும் என்பதுதானே நிலைமை?

இசையை உலகியலுக்கு உதவாது என துறந்த இவர்கள் அதற்கும் பிராமணர்களே காரணம் என இனக்காழ்ப்பு பேசுவது நிகழ்காலச் சிறுமைகளில் ஒன்று.

ஜெ

தமிழிசை- காழ்ப்பே வரலாறாக

தமிழிசையா? 

ஆபிரகாம் பண்டிதர்

து.ஆ.தனபாண்டியன்

முந்தைய கட்டுரைகுறும்பனை பெர்லின்
அடுத்த கட்டுரைசைவத் திருமுறைப் பயிற்சி