அன்பு ஜெ
ஈழத்தில் கவிதை இல்லை என்ற மட்டில் நீங்கள் சொன்னதாக ஒரு பேச்சு அவ்வப்போது காதில் விழும். மறைந்த ஆசிரியர் ஒருவரைப் பற்றிய கவிதை இது. என்ன குறை கண்டீர்? சொற்குற்றமா? பொருட்குற்றமா? சொல்லும், சொல்லும், சொல்லிப்பாரும்…
தயா
*
தாவரவியலை தான் படிப்பிப்பான்
ஆனால் எம் விலங்கியல் அனைத்தும் விலங்கிட்டுகொள்ளும்
இவன் வகுப்பிற்கு எந்த காவலாளியும் நிற்பதில்லை
ஏனெனில் இவன் தான் காவலாளி
அடுத்த தெருவில் கிளைமோர் வெடித்திருக்கும்
ஆனால் இவன் கிளாஸ் நடந்துகொண்டிருக்கும்
பங்கர்களுக்குள் இருந்துகொண்டு
பல்கலை செல்லும் யுத்திகள் சொல்வான்
செல்லடிகளுக்குள்ளும் இவன்
சொல்லடிகள் தான் காதில் விழும்
குண்டடிகளுக்குள்ளேயும்
குண்டியில் இவன் பிரம்படி விழும்
தலையிடியோ காய்ச்சலோ
இவன் வகுபென்றால் அவை செல்லாது
அடுத்த தெருவில் வெடி விழும்போது
இவன் பிரம்பால் இன்னொருவனுக்கு அடி விழுந்திருக்கும்
போட்டோ கொப்பி இல்லை
பாஸ்பேப்பர் எல்லோரிடமும் இருக்காது
நல்ல கொப்பிகள் எவரிடமுமே இருந்திருக்காது
மின்சாரம் இல்லை
சிமிலி லாம்புகள் தான்
ஒன்லைன் இல்லை
சூம் இல்லை
ஆனால் அனைவரும் பாசாகினார்கள்
சாப்பிட கூட வழியிருக்காது
ஆனால்
சாதிக்கும் வெறியை ஊட்டிவிடுவான்
காகக்கூட்டமாய் கரைந்து போகும் மாணவர் கூட்டம்
இவன் கொட்டிலின் வாசல் தொட்டதும் பிரபஞ்ச அமைதியில் உறையும்
சுற்றுவட்டார வகுப்புக்களும்
நிசப்தமடையும்
இந்த பிரபஞ்ச ரகசியம் அவனுக்கு மட்டுமே தெரியும்
இவன் பதிவுக் கார்ட்டை கையில் எடுக்கும் போது
எம் கார்ட்டின் துடிப்புகள்
விலங்கியலில் சொன்ன தியரிகளை பொய்யாக்கி துடிக்கும்
இவன் வகுப்பறைக்குள் இருக்கும் போது
எம் அத்தனை ஓமோன்களும் நிசப்தம் கொள்ளும்
ஆனால் அதிரினல் மட்டும் அணைதாண்டி ஊற்றெடுக்கும்
எத்தனை முறை மனப்பாடம் செய்திருந்தாலும்
நீ மேடைக்கு அழைக்கும் போது
அத்தனையும் எப்படி மறந்து போகின்றதோ மாயம் யாமறியோம்
விடை தெரிந்தும் உன் பார்வையில் அது மறந்திருக்கும்
உன் கையால் அடி வாங்க அது சந்தர்பமாய் போனதும் இன்றும்
நினைக்கையின் இனிக்கும்
இவன் வகுப்பில் முதல் முறை அமர்ந்த போது
என்ன மண்ணாங்கட்டிக்கு பயோ எடுத்தோம்
என எண்ணத் தோன்றும்
எம் மண்டையின் மண்ணாங்கட்டிகளை நல்ல மண்ணாக்கி வளப்பபடுத்தியவன் அவன் தான் என்று போக போக புரியும்
கரும்பலகை பக்கம் திரும்பி நின்று எழுதினாலும்
எந்தபக்கமும் யாரும் திரும்பிடா மாயை
இவன் வகுப்பில் மட்டும் தான் நடக்கும்!
தாவரவியல் தான் படிப்பிப்பான்
ஆனால் ஒட்டுமொத்த வாழ்வியலையும் கற்பிப்பான்
தாவரத்தின் அத்தனை வாழ்க்கை வட்டங்களையும் சொல்லித் தந்தாய்
அதோடு எம் வாழ்க்கைக்கான கட்டங்களையும் சொல்லி தந்தாய்
சிங்கத்தின் கர்சிப்பு
சிவனின் நெற்றிக்கண் பார்வை
கம்பீர நடை
அதுதான் இவனின் தனித்துவ படை
இன்னும் கூர்ந்து பார்
இனத்துக்காக படை கட்டி போரிட்ட
தலைவனின் பார்வையும் சாயலும்
இவனிடமுமிருக்கும்.
ஒரு சிறந்த ஆசிரியனிடம் கைகளில் இருக்க வேண்டியவை இரண்டு
ஒன்று வெண்கட்டி
இரண்டு பிரம்பு
இரண்டுமே இவனிடம் இருந்தது
அதனால் இப்போது எல்லாமுமே எம்மிடம் இருக்கிறது
எப்போது சிறந்த ஆசானிடம் இருந்து பிரம்பு அகற்றப்படுகிறதோ அதோடு சேர்ந்து
தலைமுறைகளின் தலையெழுத்தும் அகற்றப்படும்
ஒரு ஆசிரியன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குரிய ஆகச்சிறந்த ஆக பிந்திய முன்னுதாரணம் இவன்
இல்லை இல்லை
ஆசிரியனுக்கு வரைவிலக்கணம் கேட்டால் இவன் பெயரை மட்டும் எழுதினால் போதும்!
இவன் வகுப்பில் இருந்த எவனும்
சீரழிந்து போனதாய் சரித்திரம் இல்லை
அப்படி இல்லையாயின் இவன் பெயரழிந்து போகும்
விரல்களை புடுங்கி எடுக்க இவன் ஒன்றும் துரோணச்சாரியன் இல்லை
பல ஏகலைவன்களை ஏவிவிட்ட
பெரும் ஆசிரியன் இவன்
இவனுக்கு வைத்தியம் தெரியாது ஆனால்
வைத்தியர்களை உருவாக்கும்
வித்தைகள் தெரியும்
வடக்கின் அத்தனை வைத்தியர் கழுத்தில் தொங்கும் அத்தனை தெலஸ்கோப்புக்களும்
இவன் கழுத்துக்கான மாலைகள்
இன்று வடக்கின் வைத்திய துறையே உன்னை கெளரவித்துள்ளது.
உனக்கான விருது இதுவல்ல
உனக்கான நன்றிக்கடன் இது
இவர் என்று விளிக்க “ஆசிரியர்”இல்லை எனக்கு
இவன் என்று விளிக்கும் அளவு என்னுள் உறைந்திருக்கும் “ஆசிரியன்” இவன்
தந்தை கண்டிப்பதும் கற்பிப்பதும் எம்மை கட்டியெழுப்பவே
அதில் எமக்கு இவன்
இன்னொரு தந்தை தான்!
மதுசுதன்
Mathusuthan Kumarasamy
ஐயா
நீர் புலவர், நீரே புலவர். நான்லாம் ஒண்ணுமே இல்லை…நான் இல்லை…
அதிலும் அந்த
குண்டடிகளுக்குள்ளேயும்
குண்டியில் இவன் பிரம்படி விழும்
எதுகை இருக்கிறதே, அது திவ்யம், மதுரம்…
(இது கம்பன் சொல்லாத வர்ணனை. உன் காதோடு யார் சொன்னது?)
ஜெ
பிகு: மு. பொன்னம்பலத்தாரின் புகழ்பெற்ற ஈழக்கவிஞர் நெடும்பட்டியலில் மதுசுதனும் இருப்பார்தானே?