ஆடுஜீவிதம்: அசல் மலையாள சினிமா

அண்மையில் திரையரங்கில் நான் தீவிரமான உணர்வெழுச்சியுடன் பார்த்தபடம் ஆடுஜீவிதம் (Goat Life) இதுதான் மெய்யான மலையாளப்படம். (தமிழில் மோசமான டப்பிங், ஆங்கிலத்தில் மோசமான சப்டைட்டில் என்று சொன்னார்கள். நான் பார்த்தது மலையாள மூலம்) 1954 ல் நீலக்குயில் என்னும் மலையாளப்படம் வெளிவந்தது. அதுதான் மெய்யான மலையாளப்பட இயக்கத்தின் தொடக்கப்புள்ளி. அந்தப்படத்தின் தாக்கத்தால் தமிழ் இலக்கியச் சூழலில் நீலக்குயில் என்னும் சிற்றிதழும் வெளிவந்தது.

அன்றிலிருந்து இன்று வரை மலையாள பொதுரசனைச் சினிமாவுக்கு ஒரு மரபு உள்ளது. பி.பாஸ்கரன், கே.எஸ்.சேதுமாதவன், ஏ.வின்செண்ட், பி.என் மேனன், எம்.டி.வாசுதேவன் நாயர், பரதன், பத்மராஜன், ஏ.கே.லோகிததாஸ், மோகன், ஐ.வி.சசி,சிபி மலையில் என ஒரு நீண்ட ஆளுமைநிரை அதிலுண்டு.

அவர்கள் உருவாக்கிய படங்கள் அனைத்துக்கும் பொதுவான ஒரு தன்மை உண்டு. அவை எளியவர்களின் வாழ்க்கையை நுணுக்கமாகச் சித்தரித்தவை. அன்றாடத்தின் இயல்புநிலையை மிகையில்லாமல் காட்டியவை. நாடகத்தனத்தை உதறி காட்சித்தன்மையை நோக்கிச் சென்றவை. மானுடவாழ்க்கையின் போராட்டம், அவலம், மானுடத்தின் உச்சநிலைகள், வெற்றிகள் ஆகியவற்றை பேசியவை அவை. அத்தகைய நூறு சிறந்தபடங்களை ஒரு நல்ல ரசிகன் சொல்லிவிடமுடியும் – நான் ஏற்கனவே ஒரு பட்டியல் இட்டிருக்கிறேன்.

கீழ்மையில் திளைத்து, கீழ்மையை கொண்டாடும் படங்களும் மலையாளத்தில் வந்ததுண்டு. அவை தமிழில் பெருவெற்றி பெற்றதுமுண்டு. ஆனால் அவை மலையாளப்படங்கள் அல்ல.  மலையாளப்படம் என்றால் அந்த நூறுதான்.

அந்த வரிசையில் வரும் படம் ஆடுஜீவிதம். அசலான படம். மகத்தான படம். இன்னும் பலதலைமுறைக்காலம் மலையாளச் சினிமாவின் செவ்வியல்படைப்புகளில் ஒன்றாக இது கருதப்படும். நான் முன்வைப்பது மலையாளத்துவம் என இப்படத்தில் நான் சுட்டிக்காட்டும் சில கூறுகள்தான். இதை உலக சினிமாப்பரப்பிலேயே மலையாளத்தின் அடையாளம் என்று முன்வைக்க முடியும்.

மலையாளத்துவம் என இந்தப்படத்தில் உள்ளவை எவை. மிக எளிமையாக மூன்று விஷயங்களைச் சுட்டிக்காட்டுவேன்.

அ.சமரசமற்ற யதார்த்தம்.

இன்று இந்திய சினிமாக்களில் மலையாளம் தவிர்த்து எதிலும் இந்தப் படம் காட்டுவதுபோல கலைரீதியான முழுமைகொண்ட  யதார்த்தத்தை எடுக்க முடியாது. முன்பு வங்கப்படங்களில் இந்த யதார்த்தம் இருந்தது. இன்று அந்த வங்கப்பட மரபு இந்தி ஆதிக்கத்தால் அழிந்துவிட்டது

இந்த யதார்த்தத்தை இன்று மலையாளம் தவிர பிறமொழிகளில் கொண்டுவர முயன்றால் ரசிகர்கள் ஏற்பார்களா என்ற ஐயம் விவாதநிலையிலேயே எழும். அந்த ஐயம் மிகமிக நியாயமானதும்கூட. எந்த யதார்த்தம் என்றாலும் அதில் கொஞ்சம் கேளிக்கையை கலந்தாகவேண்டும் என்னும் கட்டாயம் இங்கே உண்டு. சமநிலை அம்சம் (Balancing element) என்று அதை திரைக்கதை விவாதத்தில் சொல்வோம்.

அவ்வாறு இங்கே சேர்க்கப்படும் கேளிக்கை அம்சம் மூன்று. ஒன்று, காதல் அல்லது கிளுகிளுப்பு. அது நம் மெல்லுணர்வை சீண்டுவது. இரண்டு தீவிரமான நேரடியான சவால்விடும் காட்சியும் அதனுடன் இணைந்த வன்முறைமுறையும். அது நம் அட்ரினலை தூண்டுவது. மூன்று செயற்கையான சில திருப்பங்கள்.  அது நம் தர்க்கத்தை தூண்டிவிளையாடுவது. இவை ஏதும் இல்லாமல் கதையோட்டம் நிகழும் என்றால் ‘கதை ஒரே போல போய்க்கொண்டிருக்கிறது’ என நம் சாமானிய ரசிகன் நினைப்பான்.

இந்தப்படத்தை தமிழில் எடுத்திருந்தால், இரண்டாம் பகுதியின் இருபதாம் நிமிடத்தில் பார்வையாளன் எதிர்பாராத ஒன்று நிகழும். புதிய ஒரு கதாபாத்திரம் நுழையும். அது ஒரு முக்கியமான நடிகராகவும் இருந்தால் தமிழ் ரசிகன் இரண்டாம் பகுதி ‘பிக்கப் ஆகிவிட்டது’ என்று சொல்வான். ஆனால் கலைரீதியாக சினிமா அங்கே தோற்றுவிடும். படம் உணர்த்த முயல்வது எதுவோ அதிலிருந்து திசைதிரும்பிவிடும்.

ஆடுஜீவிதத்தை தமிழில் அல்லது தெலுங்கில் அல்லது எந்த இந்திய மொழிகளிலும் இப்படியே எடுக்கவே முடியாது. படம் சலிப்பூட்டுகிறது, ஒரே துக்கமாக இருக்கிறது, கதை பரபரப்பாக நகரவில்லை, இரண்டாம் பாதியில் புதியதாக ஒன்றும் நிகழவில்லை, பாலைவனத்தை மட்டுமே காட்டுகிறார்கள் என்றெல்லாம் தமிழ் ரசிகன் உடனே சொல்லிவிடுவான்.

ஒரு படத்தின் உண்மையான தொடர்புறுத்தல் என்பது கதைச்சம்பவங்கள் வழியாகவோ, திருப்பங்கள் வழியாகவோ நிகழ்வது அல்ல. காட்சிவழியாக, அதாவது பார்வையாளனின் கண்வழியாக நிகழ்வது. அவ்வாறு நிகழவேண்டுமென்றால் கதைச்சம்பவங்கள் பெரிதாக இருக்கலாகாது. திருப்பங்கள் நிகழக்கூடாது. அவை காட்சிகளில் இருந்து பார்வையாளனை வெளியே விலக்கிவிடும். ஆனால் கண்  வழியாக சினிமாவை உணரமுடியாத தொடக்கநிலை ரசிகன் காட்சிகளை நீண்டநேரம் பார்க்கமாட்டான், ஏதாவது நிகழவேண்டும் என எதிர்பார்ப்பான். ஏமாற்றத்தால் சலிப்புறுவான்

ஆனால் இந்த சமரசமே அற்ற யதார்த்தம்தான் உண்மையான மலையாள சினிமா.  இரண்டாம் பகுதியில் நம்மைச் சூழ்ந்துகொள்ளும் காட்சிகள் அளிக்கும் அழுத்தமும் அவை நம் கண் வழியாக கனவுக்குள் நுழைவதும்தான் மெய்யான சினிமா அனுபவம்.  நாம் உண்மையில் என்ன அனுபவத்தை அடைந்தோம் என்றே அப்போது உணரமாட்டோம், ஆனால் நீண்டநாள் நினைத்திருப்போம். 

ஆ. மானுடமேன்மை

இந்தப் படம் மானுடனின் வற்றாத அக ஆற்றலைச் சித்தரிப்பது. எத்தகைய சூழலிலும் தன்னுள் இருந்து உருவாகும் ஆற்றலால் மானுடன் வென்றெழுவதைக் காட்டுகிறது இது. நட்பினூடாக, தாக்குப்பிடிப்பதனூடாக உருவாகும் மகத்தான மானுடத்தருணங்களை சித்தரிக்கிறது. மலையாளப் பெரும்படைப்புகளில் அத்தகைய மகத்தான மானுடத் தருணங்கள் பல முன்னரும் வெளிவந்துள்ளன.

அந்த தருணத்தை நம்பி, அதையே உச்சகட்டமாக அமைத்து, அமைதியான முடிவுடன் படத்தை எடுப்பது இன்று மலையாளமன்றி இன்னொரு மொழியில் இயல்வதல்ல. எம்.டி வாசுதேவன் நாயர் மற்றும் லோகிததாஸின் கிளாஸிக்குகள் போல நிறைய மலையாளப்படங்கள் ஒரே வசனத்தில் படத்தின் உச்சம் நிகழ்பவை. இந்தப்படமும் அப்படித்தான். செயற்கையான இறுதிப் பரபரப்பு, மிகையான உணர்ச்சிவெளிப்பாடு ஆகியவை இல்லாத உச்சகட்டம் கொண்டது ஆடுஜீவிதம். மானுடம் வெளிப்படும் ஒரு மௌனத்தருணம், அவ்வளவுதான். அதுதான் படம்.

இ. தொழில்நுட்பம்

நம்மில் பலர் பெருஞ்செலவில் எடுக்கப்படும் பிற இந்தியத் திரைடங்களின் தொழில்நுட்ப நேர்த்தி குறைவான செலவுள்ள மலையாளப் படங்களில் இருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணம் கொண்டவர்கள். அது உன்மை அல்ல. அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன் போன்ற கலைப்பட இயக்குநர்களின் மிகக்குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படங்களில்தான் ஒளிப்பதிவின் அற்புதங்கள், படத்தொகுப்பின் புதிய பாய்ச்சல்கள் நிகழ்ந்துள்ளன.

அத்துடன் மலையாள நடிகர்களின் ஊதியம் மிகக்குறைவு என்பதனால் படத்திற்குச் செலவழிப்பது மிகுதி. ஆகவே பெரிய நிபுணர்கள் பணியாற்றமுடியும். அத்துடன் அந்த தொழில்நுட்பத்தை ஆடம்பரத்தைக் காட்டுவதற்குப் பதிலாக யதார்த்தத்தை உருவாக்க பயன்படுத்துவார்கள்.

மலையாளப்படங்களில்  பணியாற்றிய ஒளிப்பதிவு மேதைகள், படத்தொகுப்பு மேதைகள், மகத்தான இசையமைப்பாளர்கள் பலர் உண்டு. (மார்க்கஸ் பட்லே, மெல்லி இரானி, பாலு மகேந்திரா, அசோக் குமார் முதல் சந்தோஷ் சிவன் வரையிலான ஒளிப்பதிவாளர்கள், ரிஷிகேஷ் முகர்ஜி முதலான படத்தொகுப்பாளர்கள்;  சலீல் சௌதுரி, பாம்பே ரவி போன்ற இசையமைப்பாளர்கள் ; தேவதாஸ், ரசூல் பூக்குற்றி போன்ற ஒலித்தொகுப்பாளர்கள், கிருஷ்ணமூர்த்தி போன்ற கலை இயக்குநர்கள்) மலையாளப்படம் இந்திய திரையுலகின் உச்சகட்ட தொழில்நுட்ப சாத்தியங்களை நிகழ்த்தியது என்பதே உண்மை.

ஆடுஜீவிதமும் அப்படிப்பட்ட படம்தான். ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, கலையமைப்பு என எல்லா தளத்திலும் இது ஒரு சாதனை. பிசிறற்ற தொழில்நுட்பம் துருத்திநிற்காமல் கதையுடன் இணைவதே சிறந்த சினிமாவை ஆக்குகிறது.

இதுதான் மெய்யான மலையாளப்படம். மலையாளிகளுக்கென ஓர் ஆளுமை உண்டு.  great explorers and survivers அவர்களைச் சொல்லலாம். அந்த உளநிலையை காட்டியமையால் ஒரு மகத்தான மலையாளப்படமாக திகழ்கிறது ஆடுஜீவிதம்.

முந்தைய கட்டுரைசினிமா, இரட்டை நிலைபாடுகள்
அடுத்த கட்டுரைகதைவெளி