«

»


Print this Post

அஞ்சலி, ஜான்சன்


நான் கல்லூரியில் காலடி எடுத்துவைத்த காலகட்டத்தில் மலையாள திரையுலகில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. மிகப்புகழ்பெற்றிருந்த அடிதடி கதாநாயகனாகிய ஜயன் விபத்தில் மறைந்தார். அது ஒரு நிமித்தம்போல, ஒரு அடையாளம் போல தோன்றியது. மிக விரைவிலேயே மலையாள அடிதடிப்படங்கள் மறைய ஆரம்பித்தன. யதார்த்தமான கலையம்சம் கொண்ட படங்கள் வர ஆரம்பித்தன. இன்று மலையாளத்தை உலகசினிமாவின் வரைபடத்தில் நிறுத்திய முக்கியமான இயக்குநர்கள் ஓர் அலைபோல மலையாளத்தில் நிகழ்ந்தனர்.

ஒருபக்கம் அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன் போன்றவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கலைப்பட இயக்கம். மறுபக்கம் பரதன், பத்மராஜன், மோகன் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட வணிக அம்சம் கொண்ட கலைப்படங்கள். அந்தப்படங்களின் வணிக வெற்றி பொது ரசனையை மாற்றியமைத்தது. செயற்கையான காட்சியமைப்புகளும் நாடகத்தருணங்களும் மறைந்தன. மிகப்பெரிய வணிக இயக்குநர்களாக இருந்த ஐ.வி.சசி, ஜோஷி,ஹரிஹரன் போன்றவர்களும் கலைநடுத்தரப் படங்களை நோக்கி வந்தனர். மலையாள சினிமாவின் பொற்காலம் எண்பதுகளில் தொடங்கி தொடர்ச்சியாக இருபதாண்டுக்காலம் நீடித்தது. அனேகமாக இந்தியாவில் எந்த மொழியிலும் அப்படி ஒரு நீண்ட மலர்ச்சிக்காலம் இருந்ததில்லை.

1978ல் ஆரவம் என்றபடம் வெளிவந்தது. விசித்திரமான படம். ஒரு சின்ன கிராமத்தின் வேறுபட்ட மனிதர்களின் சித்திரம் மட்டும் கொண்டது. அங்கே ஒரு சின்ன சர்க்கஸ் கம்பெனி வந்து சேர்ந்து பண்பாட்டை மாற்றியமைத்துவிட்டு அது பாட்டுக்கு கிளம்பிச்செல்கிறது. மலையாள திரையின் பிற்கால நாயகர்கள் பலர் அறிமுகமான படம். படத்தை எழுதியவர் ’நட்சத்திரங்களே காவல்’ என்ற நாவல் வழியாக உச்சபுகழுடன் இருந்த பி.பத்மராஜன். இயக்கியவர் கலை இயக்குநராக இருந்த பரதன். காவாலம் நாராயணப்பணிக்கரின் நவீனநாடகத்தில் நடித்த நெடுமுடி வேணு, பிரதாப் போத்தன் ஆகியோர் நடிகர்கள்.

அந்தப்படத்தில் ஓர் இசை இயக்குநரும் அறிமுகமானார், ஜான்ஸன் அன்றுமுதல் மலையாள நவீன திரைப்படங்களின் முக்கியமான ஒரு அடையாளமாக இருபத்தைந்தாண்டுக்காலம் இருந்தவர் ஜான்ஸன். முதல் படத்தில் ’முக்குற்றீ திருதாளீ’ என ஆரம்பிக்கும் நாட்டுப்புறப்பாடல் கவனத்தைக் கவர்ந்ததென்றாலும் அடுத்து வந்த பரதன் படமான ’தகரா’ மூலம் ஜான்ஸன் கேரளத்தை கவனிக்கச்செய்தார்.

தகரா பலவகையிலும் முக்கியமான படம். ஒருவகையில் ஒரு பாலியல்கிளர்ச்சிப்படம் அது. அன்று வரை சினிமாவில் இருந்துவந்த எந்த பாவனைகளும் இல்லாமல் காமத்தைக் காட்டியது. நாயகிக்குரிய அழகற்ற, ஆனால் மிகக்கவர்ச்சியான கிராமத்து கதாநாயகி. சப்பையான கதாநாயகன். சர்வசாதாரணமான சம்பவங்கள், இயல்பான உரையாடல். அதன் காட்சியமைப்புகளும் சரி ஒளிப்பதிவும் சரி அன்று ஒரு பேரனுபவமாக இருந்தன. இன்றும், இத்தனை தொழில்நுட்ப வளர்ச்சிக்குப்பின்னரும் அந்தப்படத்தின் அழகும் நேர்த்தியும் மனதைக் கவர்கிறது. ஒருமேதையின் அறிமுகம் உண்மையில் நிகழ்ந்த படம்.

தகரா அன்று அது இளைஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக இருந்தது அன்று. அது அடைந்த வெற்றி தொடர்ச்சியாக அத்தகைய படங்களை உருவாக்கியது. நடுத்தரக் கலைப்படங்களுக்கான சந்தையும் அதற்கான நடிகர்களும் தொழில்நுட்பக்கலைஞர்களும் உருவாகி வந்தார்கள். அனைவருமே பெரும்புகழ்பெற்றார்கள். ஜான்ஸனும். மலையாளத்தில் எப்போதுமே இன்னிசைமெட்டுகளே பெரும்புகழ்பெறும். அன்று சலீல் சௌதுரியும் தேவராஜனும் உச்சத்தில்தான் இருந்தார்கள். ஆனால் புதிய படங்களுக்கான புதிய இசையுடன் வந்தார் ஜான்ஸன்.

1953ல் திரிச்சூர் அருகே நெல்லிக்குந்நு என்ற ஊரில் இசைப்பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தார் ஜான்ஸன். அவரது தந்தை ஒரு வங்கி ஊழியர். ஜான்ஸன் சர்ச்சில் புகழ்பெற்ற பாடகராக இருந்தார். பெண்குரலில் பாடுவதில் இருந்த திறமையால் மெல்லிசை நிகழ்ச்சிகளில் பாடும் வாய்ப்புகள் வந்தன. 1968ல் ஜான்ஸனும் அவரது நண்பர்களும் சேர்ந்து வாய்ஸ் ஆஃப் திரிச்சூர் என்ற இசைக்குழுவை உருவாக்கினார்கள். ஜான்ஸன் சிறந்த ஆர்மோனிய கலைஞர். புல்லாங்குழல், டிரம்ஸ், வயலின் போன்றவற்றையும் அவர் இசைப்பார்

விரைவிலேயே மெல்லிசைக்குழு மிகவும் புகழ்பெற்றது. ஒருகட்டத்தில் அதில் ஐம்பது உறுப்பினர்கள்கூட இருந்தார்கள். அவர்களின் குழுவின் நிகழ்ச்சிகளில் பாடகர் ஜெயச்சந்திரன் வந்து பாடுவதுண்டு. ஜெயச்சந்திரன் அவரை இசையமைப்பாளர் ஜி தேவராஜனுக்கு அறிமுகம் செய்தார். 1974ல் தேவராஜன் தன்னுடன் சேர்ந்து பணியாற்ற ஜான்ஸனை சென்னைக்கு கூட்டிவந்தார். ஜான்ஸன் தேவராஜனின் இசைக்குழுவில் அக்கார்டின் வாசிக்க ஆரம்பித்தார்.நான்குவருடங்களில் ஆரவம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்

ஜான்சன் இசையமைத்தபிரேமகீதங்கள் என்றபடத்தின்’ஸ்வப்னம் வெறுமொரு ஸ்வப்னம்’ போன்றபாடல்கள் கேரளத்தில் இன்றுவரை பெரும் புகழுடன் இருப்பவை. ஜான்ஸன் பத்மராஜனிடமும் நெருக்கமானவராக இருந்தார். யதார்த்தச்சித்தரிப்பும் நுட்பமான மெல்லுணர்வுகளும் கொண்ட பத்மராஜன் படங்களில் அவரது இசை உணர்ச்சிகரமான ஒரு அம்சமாக இருந்தது. பத்மராஜனின் கடைசிப்படமான ஞான் கந்தர்வன் வரை அவரது 17 படங்களில் ஜான்ஸன் பணியாற்றியிருக்கிறார். இயக்குநர் சத்யன் அந்திகாடும் ஜான்ஸனுக்கு மிக நெருக்கமானவர். அவரது 25 படங்களில் ஜான்ஸன் பணியாற்றியிருக்கிறார். கணிசமான பரதன் படங்களுக்கும் இசையமைத்தவர் அவரே

ஜான்சன் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை 1994ல் பொந்தன்மாட என்ற படத்துக்காக பெற்றார். அடுத்த வருடம் சுகிர்தம் படத்துக்காக மீண்டும் தேசியவிருது பெற்றார். சிறந்த இசையமைப்புக்காக ஓர்மைக்காய் [1982] வடக்கு நோக்கி யந்திரம் , மழவில் காவடி [1989] அங்கினெ ஓரு அவதிக்காலத்து [1999] ஆகிய படங்களுக்காக மூன்றுமுறை கேரள அரசு விருது பெற்றார். பின்னணி இசைக்காக சதயம் [1992] சல்லாபம் [1996] ஆகியபடங்களுக்காக கேரள அரசு விருது கிடைத்தது. 2006ல் மாத்ருபூமி விருது போட்டோகிராபர் படத்துக்காக கொடுக்கப்பட்டது

ஆனால் 1995களுக்குப் பின் அவரது இசையில் தளர்ச்சி ஏற்பட்டது. அவர் மெல்லமெல்ல ஒதுங்கிக் கொண்டார் என்றே சொல்லவேண்டும். 2000த்துக்குப் பின்னர் அவர் ஆறுவருடம் இசையமைக்கவேயில்லை. 2006ல் ஃபோட்டோகிராஃபர் என்ற படத்துக்கு இசையமைத்தார். அந்தப்படத்தின் பாடல்கள் அதே தரத்தில் இருந்தன, வெற்றியும் அடைந்தன. ஆனாலும் அவருடைய இசை வேகம் கொள்ளவில்லை

மேற்கண்ட தகவல்களை விக்கிபீடியாவில் இருந்து எடுத்திருக்கிறேன். ஜான்ஸன் ஒரே ஒரு பாடல் பாடியிருக்கிறார், தமிழில். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கண்களால் கைது செய் படத்துக்காக தீக்குருவி என்றபாடல் என விக்கிபிடியா சொல்கிறது.

ஜான்ஸன் சென்ற ஆகஸ்ட் 18 அன்று சென்னையில் மாரடைப்பால் இறந்தார். அவர்ருக்கு ஷான் , ரென் என இரு பிள்ளைகள். மனைவி ராணி.

ஜான்சன் லோகியின் நெருக்கமான நண்பர். லோகி எழுதிய பல படங்களுக்கு ஜான்ஸன் தன் இசையால் உயிரூட்டியிருக்கிறார். நான் சென்னையில் ஒரே ஒருமுறை குமரகம் உணவகத்தில் ஜான்ஸனைப் பார்த்திருக்கிறேன். அவரது இசை என்னை என் இளமையில் கனவில் ஆழ்த்தியதைப்பற்றிச் சொன்னேன். [ஆனால் அவர் புகழுடன் இருந்த காலகட்டத்தில் அவரது பேரையெல்லாம் நான் கவனித்ததில்லை] அதிகம் பேசாதவரான ஜான்ஸன் புன்னகை செய்தார். செல்லும்போது என் கைகளை பற்றி மெல்ல அழுத்திவிட்டு சென்றார்.

ஜான்ஸனின் முக்கியமான பங்களிப்பு பின்னணி இசைக்கோர்ப்பிலேயே என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள். மலையாளத்தில் உருவாகிவந்த புதிய அலை திரைப்படங்களுக்கு பொருத்தமான மென்மையான, மௌனம் நிறைந்த இசையை அவர் அளித்தார். படத்தை விளக்கவோ மிகையாக்கவோ முயலாமல் மெல்லிய உணர்ச்சிகர இணைப்பை மட்டுமே அளிக்கக்கூடியது அவரது பின்னணி இசை.

ஜான்ஸனின் பல மெட்டுகள் என் இளமையின் நினைவுகளாக நெஞ்சில் தேங்கிக்கிடக்கின்றன. ஆடிவா காற்றே பாடிவா காற்றே ஆயிரம் பூக்கள் நுள்ளி வா , மெல்லெ மெல்லெ முகபடம் தெல்லொதுக்கி அல்லியாம்பல் பூவினே தொட்டுணர்த்தி , கோபிகே நின் விரல் தும்புரு மீட்டி , ஸ்வர்ணமுகிலே ஸ்வர்ண முகிலே ஸ்வப்னம் காணாறுண்டோ? , தங்கத்தோணி தென் மலயோரம் கண்டே’ ’ஸ்யாமாம்பரம்’ எல்லாமே இனிய வேதனையை மனதில் ஊறச்செய்யும் மென்மையான பாடல்கள்.

ஜான்ஸனுக்கு அஞ்சலி

சியாமாம்பரம்

ஸ்வப்னம் வெறுமொரு ஸ்வப்னம்

மெல்லெ மெல்லே முகபடம்

கோபிகே நின் விரல்

சுவர்ண முகிலே

அஞ்சலிகள்

ஹனீஃபாக்கா

லோகித் தாஸ் லோகி 2

முரளி

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/19873/