- மானஸாவின் காலடியிலிருந்து…
- மழைப்பாடகர்கள்
- எஞ்சும் நிலங்கள்
- தெய்வத்தளிர்
- பெண்பேராற்றல்
- முகிலில் எழுதல்!
- எண்முக அருமணி
- வில்துணை வழிகள்
- அளித்துத் தீராதவன்
- படைக்கலமேந்திய மெய்ஞானம்
- காட்டின் இருள்
- முடிவிலி விரியும் மலர்
- மயங்கியறியும் மெய்மை
- தளிர் எழுகை
- அன்னைவிழிநீர்
- அறிகணம்
- ஊழ்நிகழ் நிலம்
வெண்முரசு நாவல் நிரையில் மகாபாரதப்பெரும்போர் தொடங்கும் நாவல் செந்நா வேங்கை. அதை எழுதுகையில் இரண்டு நாவல்களாக அப்பெரும்போரை எழுதி முடிப்பேன் என்ற எண்ணமிருந்தது. ஈராயிரம் பக்கங்கள். ஆனால் பலநாவல்களாக அது விரிந்து தன் வழியை தானே கண்டடைந்தது. செந்நா வேங்கைக்கு அடுத்த நாவலுக்காக நான் எந்த எண்ணமுமின்றி கண்டடைந்தது திசைதேர் வெள்ளம்.
அத்தலைப்பு திசைதேர் வெள்ளம் என்றிருப்பது வியப்பளிக்கவில்லை. வெள்ளம் தன் திசையை தானே கண்டடைகிறது. தன் ஆற்றலால் எல்லாத் திசைகளை நோக்கியும் தன்னை அது உச்ச விசையுடன் செலுதிக்கொண்டே இருக்கிறது. தேங்கி நின்றிருக்கும் தண்ணீர் போல என்னை அச்சுறுத்துவது பிறிதில்லை. அதில் பெருவெள்ளமென எழுந்து நகரங்களை அறைந்துடைத்து அள்ளிச்செல்லும் முடிவிலா ஆற்றல் அசைவின்மையாக நின்றிருக்கிறதென்று தோன்றும்.
இளமையில் ஆற்றின் வெள்ளப்பெருக்கையே கண்டு வளர்ந்தவன். சற்றுப்பிந்திதான் அந்த ஆறு அசைவற்ற நீல நீர்நிலையாக நின்றிருக்கும் பேச்சிப்பாறை அணைக்கட்டின் நீர்ப்பிடிப்பை நேரில் கண்டேன். அது தன் திசையை முடிவெடுக்காமல் இருக்கும் ஆற்றல் என்று தோன்றியது. அல்லது அம்முடிவை தன்னுள் மறைத்துவைத்திருக்கும் ஒன்று. வெள்ளத்தின் திசையை முன்னர் முடிவெடுக்க இயலாது. ஒரு சிறுநண்டு வளை ஏறி உடைப்பை திசைதிருப்ப முடியும். ஒரு சிறு பாறை அதை வேறொருவகையில் செலுத்தக்கூடும்.
மகாபாரதப்போரை எழுதுகையில் வெள்ளம் என்ற சொல்லே திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தது. வெள்ளம் என்பது என்ன? இயற்பியல் நெறிகளின்படி பார்த்தால் அது முடிவிலாக் கோடி மூலக்கூறுகளால் ஆனது. ஒரு மூலக்கூறு இன்னொன்றுடன் உறுதியாகப் பொருந்தாமலிருப்பதே அதைத் திரவமென்று ஆக்குகிறது. ஒவ்வொரு மூலக்கூறுக்கும் தனக்கென திசையும் எண்ணமும் கொண்டிருத்தலே திரவத்தின் இயல்பு. அலையென, துமியென, பெருக்கென தேக்கமென அந்த மூலக்கூறுகள் இணைந்து அந்தந்தத் தருணத்திற்கேற்ப முடிவெடுக்கின்றன.
பெரும்போர்களும் அவ்வாறுதான். அதிலுள்ள ஒவ்வொரு வீரனுக்கும் அவனுக்கான விழைவும், தயக்கமும், அச்சமும், சீற்றமும் உள்ளது. அவை அவனுக்குள் முட்டி மோதி நிகர்நிலை அடைந்து அவனுடைய திசையை வகுக்கின்றன. அவ்வண்ணம் ஒவ்வொரு வீரனுக்கும் இருக்கும் திசைகளின் பெருந்தொகுப்பாக போர் தனக்கான ஒரு திசையை தேர்ந்தெடுக்கிறது.
போர்களைப்போல வரலாற்றை காட்சி வடிவமாகக் காட்டும் பிறிதொன்றில்லை. நான் போரை பார்த்ததில்லை. ஆனால் நினைவறிந்த நாள் முதல் வரலாற்றில் ஆர்வம் கொண்டிருக்கிறேன். அண்மைய வரலாற்றை தொடர்ந்து என்னுள் தொகுத்துக்கொண்டும் இருக்கிறேன். வரலாற்றிலிருந்து போரின் சித்தரிப்பை நான் உருவாக்கிக்கொண்டேன். டால்ஸ்டாய் போரிலிருந்து வரலாற்றின் சித்தரிப்பை உருவாக்கிக்கொண்டவர்.
இந்நாவலில் இருக்கும் மகாபாரதப்பெரும்போர் இன்று திரட்டப்பட்டிருக்கும் உலகவரலாற்றுச் சித்தரிப்பிலிருந்து எடுக்கப்பட்டது. டால்ஸ்டாய்க்குப்பி றகு இரு பெரும்போர்கள் நிகழ்ந்து முடிந்துவிட்டன. அவை முழுமையாகவே ஆவணப்படுத்தப்படடுள்ளன. ஆகவே ஒருவகையில் டால்ஸ்டாய்க்குத் தெரியாத போர்நுட்பங்களை, போரின் உளநிலைகளை நான் கூறிவிட முடியும். அதிலிருந்து டால்ஸ்டாய் எழுதியதைவிட விரிவாகவும் நுட்பமாகவும் என்னால் போரை எழுதிவிட முடியும். அவ்வாறுதான் இந்தப்போர் எழுதப்பட்டது.
அதற்கப்பால் இது இரு தத்துவங்களின் மோதல். ஒன்று வேம். இன்னொன்று வேதாந்தம். ஒன்று உலகியல், பிறிதொன்று உலகியல் கடந்த மெய்யியல். அவற்றின் போரிலிருந்து இங்கு வேதாந்தம் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. தத்துவங்கள் மனிதர்களினூடாகப் போரிடுகின்றன. முடியாட்சிக்கும் குடியாட்சிக்குமான போர் என்று முதல் உலகப்போரை சொல்லலாம். அனைத்ததிகாரத்திற்கும் குடியாட்சிக்குமான போர் என்று இரண்டாம் உலகப்போரை சொல்லலாம். வெல்ல வேண்டியவை எவை என்று வரலாற்றின் உள்விசைகள் முடிவெடுக்கின்றன.
குடியாட்சி, அதன் விளைவான அனைத்து நலன்களும், உலகெங்கும் மானுடர் அடைந்த விடுதலையும் உரிமையும் இரு பெரும்போர்களினூடாகவும் அதில் நிகழ்ந்த அழிவினூடாகவும் அடையப்பெற்றவை என்பது இப்புவியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சிந்தனைக்கு அப்பாற்பட்ட முரணியக்கத்தின் சித்திரத்தை அளிப்பது. அதைக்காட்டும் களமே போர். குருக்ஷேத்திரம் அத்தகைய போர்க்களம்.
பல கோடித்துளிகளினூடாக தன்னை நிகழ்த்தும் வரலாறென்னும் முரணியக்கத்தை ஒரு போர்க்களமென உருவகிக்க, அப்போர்க்களத்தின் விசைகளை அதிலுள்ள ஒவ்வொரு மானுடரினூடாக வெளிப்படுத்த, ஒவ்வொருமானுடர் உள்ளத்துக்குள்ளும் அப்பெருநாடகம் எவ்வகையிலோ நிகழ்ந்துகொண்டிருக்கிறதென்று சித்தரிக்க இந்நாவலில் முயன்றுள்ளேன். எழுதி முடித்தபின் மீண்டும் படித்தே பார்க்கவில்லை. இனி படிப்பேனா என்று சொல்ல முடியாது. ஆனால் இந்நாவலின் இறுதி வரியை எழுதும்போது ‘இதை எண்ணினேன் எய்தினேன்’ என்ற நிறைவு எனக்கு உருவாயிற்று.
இந்நாவலை முதலில் வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்திற்கும் இப்போது வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் என்னுடைய நன்றிகள்
ஜெ
26.03.2024
விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : [email protected]
Phone 9080283887)
‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன்