ஊழ்நிகழ் நிலம்

  1. மானஸாவின் காலடியிலிருந்து…
  2. மழைப்பாடகர்கள்
  3. எஞ்சும் நிலங்கள்
  4. தெய்வத்தளிர்
  5. பெண்பேராற்றல்
  6. முகிலில் எழுதல்!
  7. எண்முக அருமணி
  8. வில்துணை வழிகள்
  9. அளித்துத் தீராதவன்
  10. களம் அமைதல்

  11. படைக்கலமேந்திய மெய்ஞானம்
  12. காட்டின் இருள்
  13. முடிவிலி விரியும் மலர்
  14. மயங்கியறியும் மெய்மை
  15. தளிர் எழுகை
  16. அன்னைவிழிநீர்
  17. அறிகணம் 

செந்நா வேங்கை மகாபாரதப்போர் தொடங்கும் தருணத்தில் இரு தரப்பினரும் படை திரண்டு முகத்தோடு முகம் நோக்கி நின்றிருக்கும் உச்சகட்டம் திரண்டு வருவதைச் சித்தரிக்கும் நாவல். இந்நாவலை எழுதுவது வரை என்னுள் இருந்த எண்ணங்கள், உருவகங்கள் அனைத்தும் இந்தப்புள்ளியில் முற்றிலுமாக என்னிடமிருந்து அகன்றுவிட்டன. முழுமையான வெறுமையில் நின்று இதை எப்படி எழுதுவதென்று திகைத்திருந்தேன். 

வழக்கம்போல பதினைந்து நாட்கள் இடைவெளி விட்டு, எழுதவேண்டியதென்ன  என்று யோசித்து, எதுவும் அமையாமல் அவ்வெண்ணத்தை அப்படியே அகற்றி வைத்து, என்னுள் நோக்கி நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தேன். 

என்னுள்ளிருந்து ஒரு சொற்றொடர் அல்லது ஒரு படிமம் எழுந்து வருவதே பெரும்பாலும் நாவலின் தொடக்கமாக அமைகிறது. அது அந்தத் தலைப்பில் பெரும்பாலும் அமைந்திருக்கும். மிக அரிதாகவே என்னவென்று அறியாமல் ஒரு தலைப்பை அறிவித்திருக்கிறேன். 

இந்நாட்களில் பொருளில்லாமல் காணொளித்துணுக்குகளை பார்த்துக்கொண்டிருப்பது என் வழக்கம். அதிலிருந்து என்னுள் நுழைந்திருக்கலாம். நான் வாய் நிறையக் குருதியுடன் உறுமும் ஒரு வேங்கையின் முகத்தை மிகஅண்மையில் என கனவில் கண்டேன். காளிதாசனின் ஒரு வர்ணனை மங்கலாக நினைவில் வந்தது. யானை மத்தகத்தை அடித்து உடைத்து உண்டு குருதி சொட்டும் வாயுடனும் கால்தடத்துடனும் மலை ஏறிச்சென்று நின்று காட்டை நோக்கி உறுமும் ஒரு சிம்மத்தின் தோற்றம். அது வீரம் எனில் ,அன்றி வெற்றி எனில், அன்றி  இரக்கமின்மை எனில் அது மானுடருக்குரியதல்ல. ஊழொன்றே அந்த விவரிப்பிற்கு உரியதாக இருக்க முடியும். 

கானியலாளர்கள் காட்டின் மையமுடிச்சு வேங்கை என்று சொல்வதுண்டு. வேங்கை நலமாக இருந்தால் காடு நலமாக இருக்கும். ஏனெனில் வேங்கை அக்காட்டை தன் பசியினூடாக, அதன்பொருட்டு செய்யும் கொலையினூடாக சமநிலைப்படுத்துகிறது. அவ்வண்ணம் ஊழும் இங்கொரு பெரும்பணியாற்றிக் கொண்டிருக்கின்றதா என்ன? 

வேங்கை நாவெனச் சிவந்து கிடந்த குருக்ஷேத்திரத்தை ஒவ்வொரு நாளும் என் கனவில் விரித்துக்கொண்டேன். எங்கோ அதைத் தொடங்கினேன். அது எழுத எழுத விரியலாயிற்று. அதற்கான வடிவத்தை சென்றடைந்தது.

ஒருவன் நிகரற்ற குரூரத்தை தன்னுள்ளிருந்து எடுக்கமுடியும். காந்தியைப் போன்று வன்முறையின்மையின் உச்சத்தைக்கண்டவரேனும் கூட. ஏனெனில் இங்கு வாழ்வெனும் அப்பெருங்கொலைக்களத்தில் விலங்குகளெனவே பிறந்திருக்கிறோம். எவ்வண்ணமோ வேட்டையாடிக் கொண்டிருக்கிறோம். கொன்று உண்டு கொண்டும் இருக்கிறோம். 

தன்னிலிருந்து எழும் குரூரத்தை எழுத்தாளன் தொடர்ந்து கண்டுகொண்டிருக்கிறான். முதலில் அது அவனுக்கு திகைப்பளிக்கிறது. தன்னை அஞ்சவும் வெறுக்கவும் செய்கிறது. பின்னர் அவன் கண்டுகொள்கிறான், அது உயிராற்றலின் வெளிப்பாடு என்று. பெருங்கருணையும் பேரழகும் போலவே அதுவும் இங்குள்ள இயற்கையின் நெசவிழைகளில் ஒன்று. அது ஆற்றலற்றிருக்குமென்றால் பிற இரண்டும் அவ்வாறே ஆற்றலற்றுத்தான் இருக்கும். 

இப்போது எண்ணிப் பார்க்கிறேன், போரும் அமைதியும் போல மிகக்கொடூரமான சித்திரங்களை அளித்த புனைவுகள் பிறிதுண்டா என. குரூரத்தை காட்டுவதற்கென்றே அமர்ந்து எழுதப்பட்ட மீயதார்த்தப் (சர்ரியலிச)  டைப்புகள் கூட டால்ஸ்டாயின் குரூரத்தை எட்ட முடியவில்லை என்றுதான் தோன்றுகிறது. நிகராகவே அறத்தாலும் கருணையாலும் அதைத் தாங்கி நிறுத்தியிருப்பதிலிருந்து டால்ஸ்டாய் தன் முழுமைச்சித்திரத்தை சென்றடைகிறார். செந்நா வேங்கையைத்தான் வெண்முரசு நிரையின் டால்ஸ்டாய்த்தன்மை தொடங்கும் நாவல் என்று சொல்வேன். தொடர்ந்து வரும் படைப்புகள் அவ்வியல்பை மீட்டி மீட்டி முன்செல்கின்றன. 

நான் எனது முதிரா இளமையில் இருந்தே கீதையைப் பயின்று வருபவன். ஆனால் இந்தக் கொலைக்களத்தின் முதல் குருதியை எழுதிய பிறகுதான் கீதைக்கு அணுக்கமானவன் ஆனேன். அதன் முதல் சொற்றொடரையே புரிந்துகொள்ளலானேன். ’தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே’ என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று செந்நா வேங்கை எனக்குக் காட்டியது. ஊழ் திகழ் நிலம்  அது. அறம் என, நெறி என அங்கு திகழ்வது  ஊழ்தான்.  

தர்மக்ஷேத்ரே என்ற சொல்லுக்கு அறம் திகழ்தல் என்று வழக்கமாகப் பொருள்கொள்வதுண்டு. தர்மம் என்பதற்கு வடமொழியில் நெறி என்றும் முறைமை என்றும் இயல்பு என்றும் பொருள் உண்டு. அவ்வண்ணம் பொருள் கொள்ளலானால் ‘ஊழ்நிலமாகிய குருக்ஷேத்ரத்தில்’ என்று கீதையின் முதல் வரியைப்படிக்கலாகும். செந்நா வேங்கை அதைப்பயில்பவர்களுக்கு கீதையை அனுகித்தொட உதவும் ஒரு வழி. கண்ணீரும் குருதியும் விழுந்த வழி. எல்லாப்பேருண்மைகளையும் அவ்வாறுதான் சென்றடைய முடியும்.

இந்நூலை முதலில் வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்திற்கும் இப்போது வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் என்னுடைய நன்றி

ஜெ

26.03.2024

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் செந்நாவேங்கை நாவலின் மறுபதிப்புக்கான முன்னுரை)

விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.

தொடர்புக்கு : [email protected] 
Phone 9080283887 (WA)

‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை  

செந்நா வேங்கை -கடிதம்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்: மயிலன் சின்னப்பன்
அடுத்த கட்டுரைஇந்து மதம் – தத்துவமும் வளர்ச்சியும்