எழுத்தாளனாக விரும்பும் இளைஞனுக்கு…
வணக்கம்!
சென்ற மாதம் வெளிவந்த’எழுத்தாளனாக விரும்பும் இளைஞனுக்கு’ என்ற கட்டுரை உங்களின் பல முக்கியமான கட்டுரைகளுள் ஒன்று என்று கருதுகிறேன்
‘செயல் எனில் விளைவும் உண்டு. நாம் செய்வது நன்று. அந்த நம்பிக்கை நமக்கு வேண்டும்.அந்த நம்பிக்கை இருந்தால் எழுத்தாளன் என்பது ஒரு சிம்மாசனம். அதில் அமர்வது ஒரு பிறவிநற்கொடை. காலத்தின் மேல் நமக்கொரு இருக்கை அமர்கிறது. நம் காலடியில் வரலாறு ஒழுகி மறைவதை நாம் காண்போம். நம் சூழலில் கொண்டாடப்படும் பல மனிதர்கள் அதில் கணக்குமிழிகளென மறைய நாம் விண்மீன்களென இருப்போம் என அறிவோம்’ – இதனை மீண்டும் மீண்டும் வாசித்து கொள்கிறேன்.
மேலும், அக்கட்டுரையில், ‘Letters to a Young Poet’ (ரில்கேயின் கடிதங்கள்) என்ற புத்தகத்தை பற்றி கூறியிருந்தீர்கள். அப்புத்தகத்தை வாசித்தேன். மலை முகட்டின் பின்னிருந்து உங்கள் குரல் அசரீரியாய் கேட்க, காலம் என் கையில் இட்ட ஒன்றாய் தான் அதை பார்க்க தோன்றுகிறது.(Letters to a Young Poet, ரில்கேயின் கடிதங்கள்)
ஒன்பதாம், பத்தாம் வகுப்புகளில் தமிழ் தேர்வுகளில், ‘கட்டுரை வரைக’ என்ற மூன்று தலைப்புகளை கொடுத்து, ஏதேனும் ஒன்றை எழுத சொல்வார்கள். அதற்காக உள்ளம் துள்ளி கொண்டு காத்திருக்கும். ஆறு தன் வரலாறு கூறுதல், மரம் தன் வரலாறு கூறுதல், சுதந்திர போராட்டம் போன்ற தலைப்புகளில், எழுதி முடித்து கடைசியில் இரு வரிகள் அல்லது நான்கு வரிகளில் எதுகை மோனையோடு ஏதேனும் கிறுக்குவேன் (அதை கவிதை என்றும் நினைத்துக் கொள்வேன்). அதை எழுதுவதற்காகவே, வேக வேகமாக மற்ற வினாக்களுக்கு விடையளித்து விட்டு வருவேன்.
தேர்வுத்தாள்கள் திருத்தி வரும்போது, பெரும்பாலும் கட்டுரை பக்கத்தில், எனது ஆசிரியர் மரிய சுந்தரம் மிஸ், நான் எழுதியதை பாராட்டி ‘மிக நன்று’ என்று எழுதி, பத்துக்கு ஒன்பது மதிப்பெண்கள் போட்டிருப்பார். இப்படி என் எழுத்து ஆர்வத்தை, தமிழ் ஆர்வத்தை வளர்த்தவர் பலர்.
உங்கள் பதிவை படித்த அந்த வார இறுதியில், Fort Wayne Community Library சென்றிருந்தேன். அங்குதான் முதலில் அப்புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். முன்னுரை முடித்து, முதல் கடிதம் வாசித்து முடித்ததும், நான் மேற்கூறியது போல், காலத்தின் கணக்கு என்று தோன்றியது.
பின், என்னுடைய நடை பயிற்சியின் போது, ஒலி வடிவில் கேட்டு முடித்தேன். இருப்பினும், அது போதவில்லை. அடுத்து, University of Notre Dame சென்று அங்குள்ள நூலகத்தில், புத்தகங்களை எல்லாம் பார்த்துவிட்டு, சிறிது நேரம் வாசித்துவிட்டு வரலாம் என்று சென்றிருந்தோம். அங்கு மீண்டும் இரண்டாம் முறையாக புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். எனக்கு சிறு வயது முதல் எழுத பிடிக்கும். பள்ளியில் தமிழ் வகுப்பு என்றால் ஒரு உற்சாகம் வெளி குதித்து, கால் மடித்து, மேஜைமேல், என் தோள் கட்டி உட்கார்ந்து கொள்ளும்.
ரில்கே தனது முதல் கடிதத்திலேயே, You ask me if your verses are good? You ask me that? என்று கேட்டு, அதற்கு கூறிய பதிலே, பெரும் திறப்பாய் இருந்தது.நீ எழுதுவதற்கு காரணத்தை அகவயமாக தேடு, மற்றவர்களின் ஆமோதிப்பை எதிர்பார்த்து நிற்காதே என்று அவர் கூறியிருந்தது, எனக்குப் பிடித்திருந்தது. முக்கியமாக கவிதைகளுக்கான தலைப்பை எங்கிருந்து எடுக்கலாம் என்பதையும், ஒவ்வொரு மனிதனின் சிறு வயது நினைவுகளும், அனுபவங்களும் மாபெரும் கதை களஞ்சியங்கள் என்று அவர் கூறியதும் எவ்வளவு உண்மை என்று தோன்றின . ரில்கே எழுத்தாளனுக்கு தோன்றும் முரண்கள், ஒரு கட்டத்தில் அந்த முரண்கள் எவ்வாறு எழுதுவதற்கு ஊக்கிகளாய் மாறும் என்று கூறியதும், அபாரம்.
சமீப காலமாக தீவிர இலக்கியத்தில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள ஒவ்வொரு நாளும் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றிலும் ஒரு தெளிவும், அதனுடன் சேர்ந்து ஒரு குழப்பமும் பின் தொடர்ந்து கொண்டே இருப்பதாய் உணர்கிறேன். பல சமயங்களில் ‘உனக்கு என்னத்த தெரியும்னு எழுத வந்துட்ட’, என்று என் மூளை என்னிடம் கேள்வி கேட்கும். அதற்குப் பயந்தே எழுதுவதை தள்ளிப் போடுவேன். ஆனால், மனதுக்குள் ஆயிரம் கதைகள் ஓடிக்கொண்டே இருக்கும். சரி எழுதுவோம், எழுதி பார்ப்போம் என்று எனக்கு தோன்றும் முரண்களை மீறி எழுத அமர்வேன். ஒரு கட்டத்தில், அந்த முரண் கலைந்து, எழுதுவதே நானென்று ஆகியிருப்பதை உணர்ந்திருக்கிறேன். உங்களுக்கு நான் எழுதிய, முதல் கட்டுரையும் அப்படியான ஒரு அனுபவம்தான் எனக்கு.
இதில் என்னை மிகவும் கவர்ந்த அவரின் ஒரு சிந்தனை, ‘The Future is Fixed, We move around in Infinite space’ என்பது. அது என்னுள் பல சிந்தனைகளை கண நேரத்தில் தோற்றுவித்தது. எதிர்காலம் காரண காரியம் அல்லது விதி போன்றகாரணிகளால்முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகத் தோன்றினாலும், நமது இருப்பு, சாத்தியக்கூறுகளின் பரந்த எல்லைக்குள் வெளிப்படுகிறது.நமது அனுபவங்களின் வழி, வாழ்க்கையின் நிச்சயமற்ற நிலைகளை நோக்கத்துடன் வழிசெலுத்த வலியுறுத்துகிறது.
விதியின் கட்டுப்பாடுகள் மற்றும் நமது ஆற்றலின் வரம்பற்ற எல்லைகள் இரண்டையும் தழுவி, நமது பாதைகளை எண்ணம் மற்றும் நெகிழ்ச்சியுடன் வடிவமைக்க ஊக்குவிப்பதாகவே எண்ணுகிறேன். காப்பஸிற்கு ஒர ரில்கே போல், என்னை மாதிரி பல பேர்களுக்கு நீங்கள்குறிப்பாக எனக்கு, தமிழ் இலக்கியத்தை நான் கண்டறிய உதவிடும் ஒரு மாபெரும் கோட்டை வாயில்!
நன்றி!
- ரம்யா மனோகரன்