அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். நலம் நலமே விளைக என்று பிராத்திக்கின்றேன்.
முன்பொரு புத்தக கண்காட்சியில் தன்னறம் அரங்கில் கலந்துக்கொண்டேன் தும்பி புத்தகத்தின் மிதான விருப்பத்தால் அங்கு சற்று நேரம் இருந்து அங்கு பார்வையிட வந்த பெற்றோர்களிடமும் குழந்தைகளிடமும் விபரங்கள் சொல்லிக்கொண்டு இருந்தேன். அன்றையநாளை நிறைவு செய்து சிவராஜ் அண்ணனையும் யாதும் பழனியப்பனையும் பார்த்து சொல்லிவிட்டு செல்கையில் ஐந்தாறு புத்தகங்கள் கொடுத்தார்கள். அப்படி கிடைத்ததுதான் “சுதந்திரத்தின் நிறம் – கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு” புத்தகம்.
புத்தகம் பெற்றது பெற்றபடி அப்படியேருக்க, காந்தி கல்வி நிலையம் புதன் வாசகர்கள் வட்டத்தில் பேசுபவர்களின் நீண்ட பட்டியலில் இரண்டு முறை பேசும் வாய்ப்பு கிடைத்தது.’உரையாடும் காந்தி’ மற்றும் ’ஆத்மாவின் இராகங்கள்’ புத்தகங்களை பற்றி பேசியிருந்தேன்.
சமீபத்தில் நண்பர் குமார் சண்முகம் ஒரு காணோளி அனுப்பிய இருந்தார். காந்தியின் சத்தியாகிரக போராட்டத்தை பற்றி தென்னாப்பிரிக்காவில் அவர் ஆற்றிய முதல் அறிமுக உரை, சுமட் சட்டம் எதிர்ப்பு குறித்து ஒரு அரங்கில் அவர் ஆற்றும் உரை, அட்டன்போரோவின் காந்தி திரைபடத்தில் பேன் கின்ஸ்லே அவர்கள் நடிப்பில் காட்சி. இதே காணோளியை ஜாஜா ஒரு பயிற்சி வகுப்பில் எங்களுக்கு திரையிட்டு அதில் ஒரு ஆளுமைக்கான பல அம்சங்கள் இருக்கிறது கவணியுங்கள் என்று சொல்லியும் எடுத்துரைக்கவும் செய்தார். அன்று வீட்டிற்கு வந்ததும் ஒரு வேகத்தில் “சுதந்திரத்தின் நிறம்” வாசிக்க தொடங்கி அடுத்த இரண்டொரு நாட்களில் வாசித்து முடித்தேன்.
காந்தி பற்றி பெற்றோர்களுக்கும் வீட்டுபெரியோர்களுக்கும் பெரும் மதிப்பு இருந்தாலும், அவர்கள் வாழ்க்கை முறையில் எளிமையும் காந்திய பண்புகளும் கலந்திருந்ததால் தனியாக எங்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை. பள்ளி கல்வி அந்த பொறுப்பை ஏற்று ஏட்டுகல்வியாகவும், கல்வி சூழலுக்கு பிறகு அரசியல் கலந்த காந்தியை மட்டுமே அறிமுகம் கொடுக்க முடிந்திருக்கிறது. ஆக, நேர்முகத்தொடும் முழுமனதொடும் முறையாக காந்தியை பால்யத்திலும் இளமையில் அறிமுகம் செய்துக்கொள்ளமுடியாதது ஒரு பேரிழப்பு தான்.
இலட்சியம் என்பதற்கான அடையாள மனிதர்களை தெரிந்துக்கொள்ளும் போதும் அவர்களை பற்றி வாசிக்கியிலும் பலமுறை நம்மை நாமே புரிந்துக்கொள்வதற்கும் ஒருமுறையேனும் நம்மை கடந்து நாம் சிந்திக்க வேண்டும் என்பதை புரிய வைத்துவிடுகிறார்கள். இதற்கு முன்பாக ’தமிழ்நாட்டில் காந்தி’ வாசித்ததும் மக்கள் மகாத்மாவை கடவுளின் அவதாரமாக கண்டு பரவசம் கொண்டிருந்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தை கொடுத்தது. மாபெரும் கூட்டத்தில் மகாத்மாவை பார்ப்பதற்காக மட்டுமே கூடியிருந்தமக்களும் உண்டு. வாசிப்பின் அந்த கனத்தில் வரலாற்றின் அந்த காலத்தில் அந்த கூட்டத்தில் நானும் எங்கோ நின்றிருந்தேன்.
“சுதந்திரத்தின் நிறம்” வாசித்து முடித்ததும் மகன் இராம், மகள் கோதை இருவருக்கும் காந்தியை நேர்முகமாகஅறிமுகபடுத்த கிருஷ்ணம்மாள் பாட்டியை சென்று சந்திப்போம் என்று மனைவியிடம் பேசியிருந்தேன். கடந்த காலத்தில் நானும் காந்தியை தரிசிக்க கூட்டதில் எங்கோ நின்றிருந்தேன் இப்பொது இன்னும் சற்று நேருக்கத்தில் உணர முடியும் என்று தொன்றியது. ஒரு ஏக்கத்தை நிறைவு செய்துக்கொள்ள நல்ல வாய்ப்பாக இருக்கும்.
பிப் 11 ஆம் தேதி சர்வோதய தின நிகழ்ச்சி பற்றி எதார்த்தமாக தெரிய வந்தது அதனை ஒரு அழைப்பாக எண்ணிக்கொண்டேன். சென்னையில் இருந்து காரைக்குடிக்கு சென்று மனைவி மக்கள் அனைவருமாக அங்கிருந்து சர்வோதய தினத்திற்கு கிளம்பி சென்றோம். எங்கு செல்கிறோம் என்று பிள்ளைகளிடம் சொல்லவில்லை அவர்கள் பாணியிலே ஒரு ஆவலை ஏற்படுத்தி பின் அறிமுகப்படுத்துவோம் என்பதற்காக. காரில் தூங்கி எழுந்தவர்கள் எங்க போரோம் யார பாக்க என்று கேட்டுக்கொண்டே இருந்தனர். திண்டுக்கலுக்கு சற்று முன் காலை உணவை முடித்துக்கொண்டு புறப்பட்டோம் அப்போது இருந்து அரைமணி நேரம் காந்திகிராமம் வரும் வரை “கொஞ்ச காலத்து முன்னாடிஒரு அக்கா.. ஒரு அண்ணண்.. காந்தி.. சுதந்திர போராட்டம்.. வினோ பாவே பூதான இயக்கம்..” என்று சுந்திரத்தின் நிறம் புத்தகத்தை ஒரு கதையாக சொல்லி முடித்திருந்தேன்.
அடுத்த சில நிமிடங்களிலியே காந்தி கிராம வளாகம் வந்தடைந்தோம். சௌந்திரம் நினைவு மணிமண்டபத்தில் நிகழ்ச்சி தொடங்கி விருந்தினர் உரையாற்றிக்கொண்டிருந்தார். உள்ளே அமர்ந்துகொண்ட சில வினாடிகளிலேயே இராம் அந்த பாட்டி தான் அந்த அக்காவா என்று கேட்டுக்கொண்டான் பிறகு சில நிமிடங்களில் கோதை என் அருகே நகர்ந்து வந்து “அப்பா பாட்டி தானே அந்த அக்கா..” என்று கேட்டாள். அந்த நிமிடம் இருவர் முகத்திலும் மகிழ்ச்சியும் பெருமையும் பாட்டியை கண்டுக்கொண்டதில்.
விருந்தினர் உரையை திரு தண்டபானி கண்ணண் அவர்கள் தமிழில் மொழியாக்கம் செய்தார். விருந்தினர்கள் உரை மனதில் சில செய்திகளை ஆழமாக பதிய செய்தது. அவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்ந்த தருணங்களை அழகாக எடுத்து உரைத்தனர். “சில சமயங்களில் மனது நிறைவாகநிரம்பியிருக்கும், சில சமயங்களில் காலியாகவும் விரக்தியாகவும் இருக்கும். இந்த சமயங்கள் தான் உங்களை அடையாளம் காணவும் உங்களுக்கு நிறைவானதை கண்டுக்கொள்ள உதவும் நேரம். பிறருக்கான சேவையில் தங்களை இணைத்துக்கொள்வதும் அதற்கு ஒரு நல்ல வழி”. அடுத்ததாக இந்த சேவை பணியை விளையாட்டாக எடுத்து இன்று முழு மனதோடு பணியாற்றிவரும் திருமதி ஹீதர் பேசினார் “இன்று மகிழ்ச்சியாகவும் நிறைவாக இருக்கிறேன். இந்த பணியில் இல்லை என்றால் வசதிகள் நிறைந்த குடும்ப பிண்ணனியில் இருந்தும் இதனைவிட சிறந்த இடத்திலும் இத்தனை நிறைவாகவும் இருந்திருக்கமாட்டேன்”.
அவர்கள் ஆற்றிய உரைகளில் போதுவான சாராம்சமாக இருந்தது எளிமையான வாழ்க்கை முறையும் அது அளிக்கும் நிறைவும் பெரியது. இந்த முறையில் பிறருக்கு உதவுவதும் சேவையாற்றுவதும் இயல்பாகவே இருக்க முடியும்.
காலை நிகழ்ச்சி முடிந்ததும், குழந்தைகள் இருவரோடும் சென்று கிருஷ்ணம்மாள் பாட்டி அவர்களிடம் ’சுதந்திரத்தின் நிறம்’ புத்தகத்தில் கையெழுத்து வாங்கினோம்.
கண்ணணும் அவர்கள் மனைவிஇருவரையும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம் அப்போது அவர் கேட்ட கேள்வி, அருகில் இருந்து கொண்டும் இங்கு வர உங்களுக்கு இத்தனை ஆண்டுகள் எடுத்துக்கொண்டது என்று. ஆம், என் அறியாமையின் கால அளவு அது இனி அதனை களைந்திட வேண்டும்.
அனைவரும் ஊழியரகம் சென்றனர். குக்கூ நண்பர்கள் நூற்பு ஆடையும் தன்னறம் புத்தகங்களும் விற்பனைக்கு வைத்திருந்தனர். நண்பர் விஜயபாரதி மற்றும் வேலாயுதம் பெரியசாமி இருவரையும் அவர்கள் குடும்பத்தினரோடு அங்கே சந்தித்ததில் மகிழ்ச்சி.
இராம் கோதை இருவரும் வளாகத்தின் வெளியே உலாவிக்கொண்டிருந்தனர் அவர்களைகூட்டிக்கொண்டு ஊழியரகம் சென்றோம். மதிய உணவிற்காக பந்திக்கு காத்திருந்தோம், இதற்கு இடையில் இரண்டு பந்திக்கு பறிமார சென்ற இராம் திரும்ப வந்துவிட்டான் குழந்தைகளை சும்மா வைத்துக்கொள்வது பெறும் சவால் தான். கண்ணண் ஊழியரகம் உள்ளே இருக்கும் படங்களை பார்ப்போம் என்று அழைத்து சென்றார், மேலே இருந்த படங்களை உள்வாங்கிக்கொள்ள உதவியாக இருக்கும் என்று நான் சில கேள்விகள் கேட்ட வண்ணம் இருந்தேன் ‘ஜெகன்னாந்தன் அண்ணாவோட இரண்டு பெரு இருக்காங்கேளே அது யாரு?.. அவங்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் அவர்கள் யாரு?.. இது யாரு அது யாரு..’ என்று பேசிக்கொண்டே படங்களை பார்த்து முடித்தோம். அவர்களுக்கு சரியான உச்சரிப்புடன் சொல்லமுடியவில்லை என்றாலும் பதில் சொன்னதும் அந்த படங்களை பற்றிய விபரம் தெரிந்ததாலும் மகிழ்ச்சிகூடி இருந்தது.
மதிய உணவுக்கு பின், ஊழியரகத்தில் கிருஷ்ணம்மாள் பாட்டியின் அருகில் அமர்ந்துக்கொண்டு விஜய்பாரதி பேசிக்கொண்டிருந்தார் நாங்களும் சேர்ந்துக்கொண்டோம் அடுந்த சில நிமிடங்களில் குழுந்தைகள் பலர் கூடி சபை பெரிதானது, கேள்விகளும் பதில்களுமாக போனது, நான் அவர்கள் காந்தியை பார்த்த அனுபவத்தை கேட்டேன். மதுரையில் காந்தியுடன் பயண்ம் மேற்க்கொண்ட பெண்களுக்கான தேவைகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பில் சௌந்திரம் அம்மாள் அவர்களால் அமர்த்தப்பட்ட போது காந்தியை சந்திக்க வாய்த்த அனுபவத்தை சொன்னார்கள். திரு கேய்தான் அவர்களை பற்றி பேச்சு வந்த போது சுதந்திரம் வந்ததும் அவர்கள் நாட்டிற்கு வர அழைப்பு வந்த போதிலும் ’திஸ் இஸ் மை ஹேவன்’(இதுவே எனது சொர்க்கம்) என்று சொல்லி இங்கே தங்கிவிட்டார் என்ற பதில் மெய்சிலிர்க்க செய்தது. இராம் இறால் பண்ணை போராட்டங்கள் பற்றி கேட்டான், அது தான் ஜெகன்னாதன் அவர்கள் கலந்துக்கொண்ட கடைசி போராட்டம் என்றும், அன்று ஊழியரகம் திரும்பி கட்டிலை தட்டிவிட்டு படுத்த சிறிது நேரத்தில் உயிர் பிரிந்தது என்றார்கள். அனைவரிடத்திலும் சற்று மௌனம். பின், தனிப்பட்ட போராட்டங்கள் பற்றி பேசுகையில் அவர்கள் எப்படி எல்லாம் கைதை தவர்க்க வேண்டியிது இருந்தது அதற்காக தினம் ஆற்றங்கரை ஓடை பக்கமாக இருக்கும் விடுகளில் இரவில் தஞ்சம் கொள்வது அவர்கள் கொடுக்கும் வடிகஞ்சி ஒரு குடுவையிலும் நான்கு பழங்கள் மட்டுமே கொண்டு நாட்களை கடத்தி பின் போராட்டத்தின் அன்று வெளியே வரவது என்று இப்படி ஓடிய காலங்கள் பற்றி பேசினார்கள். இவர்கள் யாருக்காக இப்படியான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள், எது அவர்களை அப்படி உந்தி செலுத்தியது என்று பற்பல கேள்விகள் மனதில் எழுந்தபடியே இருக்கிறது.
இத்தாலியை சேர்ந்த திருமதி அன்னி, மிகவும் உடல் தளவுற்ற நிலையிலும் விடாது சர்வோதய தினத்தன்று அங்கிருந்து வரும் அவர்கள் கிருஷ்ணம்மாள் பாட்டி அருகில் அமர்ந்துக்கொண்டார் இருவரும் கைகளை இணைத்துக்கொண்டனர் ஒரு அர்த்தம் பொதிந்த நிறைவான புன்னகை இருவரிடத்தும். பேச்சு இல்லை. நாங்கள் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தோம், கிருஷ்ணம்மாள் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் நேரம் திரு அன்னி அவர்கள் சோர்வில் தூங்கிவிடுவார் அவர்களது மகள் கூடவே இருந்து எழுப்பி எழுப்பி தண்ணீர் கொடுத்து அவர்களை சிரத்தையுடன் கவனித்துக்கொண்டார்கள். கிருஷ்ணம்மாள் பாட்டி சத்யா அக்கா பார்த்துக்கொள்வது போல்.
அமெரிக்காவில் இருந்து திரு டேவிட் மற்றும் சில விருந்தினர்கள் என்று இந்த தினத்தன்று சந்திக்கிறார்கள் இப்படியான சந்திப்பு 40 வருடங்களுக்கும் மேலாக தொடர்கிறது. ஊழியரகத்தில் பல சர்வோதய பணிகளில் இடுபடுபவர்களும் காந்தி கிராம பல்கலைக்கழக மாணவர்களும் அருகாமையில் இருக்கும் பள்ளி மாணவிகளும் என்று நிறைந்த இடமாக இருந்தது.
அடுத்து நிகழவேண்டிய சர்வோதய விருது விழா குறித்து நினைவுபடுத்தி எங்கள் சபையை முடித்துக்கொள்ள பூமி அண்ணா கேட்டுக்கொண்டார்கள். விருது விழா தொடங்கியது, கிராம நிர்வாகத்தில் இருந்து கொண்டு தங்களது பகுதிகளில் சாத்விக முறையில் மாற்றத்தை கொண்டுவந்திருக்கும் திருமதி ரம்யா (திருச்சி அருகில்) மற்றும் திரு சக்திவேல் என்ற இரண்டு இளம் தலைமுறை பஞ்சாயத்து தலைவர்களுக்கு விருது வழங்கி பாராட்டப்பட்டனர், சர்வோதய பணியில் வாழ்நாள் சாதனைக்காக திரு மா வன்னிக்காளை அவர்களுக்கும் (திண்டுக்கல்) மற்றும் திரு வி கே கே சம்பத் (தேனி) அவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.
திரு வன்னிக்காளை மற்றும் சம்பத் இருவரும் ஊழியரகத்துடன் சர்வோதய சேவை பயிற்சி தொடங்கிய காலம் முதல் தங்கள் தொடர்பு பற்றியும் திரு ஜெகன்னாதன் அவர்களுடன் தங்கள் அனுபவத்தை பற்றியும் பேசினார்கள்.
மதிய நிகழ்ச்சிகளில் திரு கண்ணண் மற்றும் அவரது மனைவியும் முன்னின்று செயலாற்றினர். விருது விழா முடிந்ததும் ஜெகன்னாதன் அவர்கள் நினைவிடத்தில் சமத்துவ பிராத்தனை நடந்தது. அதன் பின் இந்த வருடத்திற்கான நினைவு புகைப்படம்.
சத்யா அக்கா இங்க இருக்காங்க பூமி அண்ணா எங்க என்று இராம் கேட்க, பூமி அண்ணாவிடம் அறிமுகம் செய்துகொண்டோம். குழந்தைகளிடம் மிக இயல்பாக பழகினார் இராம் அங்கு சுற்றி திரிந்து பார்த்த பறவைகள் பற்றியும் பின் ஒரு கள்ளி செடியை கையில் வைத்திருந்ததை கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள் அதனை எப்படி கூலாங்கள் போட்டு அழகு படுத்தி குறைவான தண்ணீர் கொண்டு பூக்க வைக்க முடியும் என்று சொன்னதை கேட்டுக்கொண்டான்.
நிறைவாக நண்பர்களிடமும் அங்கே அறிமுகமானவர்கள் என்றும் அனைவரிடமும் பரஸ்பரம் மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்ட பின் கிளம்பினோம்.
இராமும் கோதையும் ஊழியரகத்தில் படங்களை பார்த்துக்கொண்டிருக்கையில் அவர்கள் கேட்ட கேள்விகள் ‘இது நேரு தானே?.. யாரு காமராஜர்?.. இந்த வீட்ட இவங்க தான் கட்டுனாங்களா?.. அந்த மலையில இருந்து எப்படி கல்லு எடுத்தாங்க.. கையாளேவா..? எப்படி தூகிட்டு வந்தாங்? 11 நாள் எதும் சாப்பிடலையா.? (இது தான் இராமை இறால் பண்ணை குறித்து கேட்க வைத்திருக்கும் என்று தொன்றுகிறது) இந்த அக்கா எங்க அந்த அண்ணா எங்க..’ கிருஷ்ணம்மாள் அவர்களிடம் பேசும் போது இந்த அறையில தான் கேய்தான் இருப்பார், இங்க தான் நேரு, பாவே, எல்லாம் பேசினாங்க, காமராஜர் வந்தா இங்க தான் இருப்பார் என்று இடங்களை காட்டி பேசினார் வரலாற்றையும் நிகழ் காலத்தை இணைத்தது குழந்தைகளிடம் இந்த அனுபவம் பற்றிய சிந்தனைகளை ஆழ விதைத்திருக்கும் என்று தொன்றுகிறது.
’இன்றைய காந்தி’ மற்றும் ‘சுதந்திரத்தின் நிறம்’ புத்தகத்தை என்றும் நினைத்துக்கொள்வேன். செயலின் விளைவாக உருவகமான காந்தியை அங்கு வந்திருந்த குழந்தைகள் தெரிந்துக்கொண்டிருப்பார்கள். ஒரே பிராத்தனை தான் ‘கன்றுகள் காடாக வேண்டும்’. இந்த பயணம் எங்களுக்கு மிக முக்கியமான ஒன்று.
திருமதி அன்னி அவர்களும் கிருஷ்ணம்மாள் அவர்களும் கைகளை இணைத்துக்கொண்டு எந்த பேச்சும் இல்லாமல் புன்னகை பூத்துக்கொண்ட தருணம், நயம் மிக்க கவிதைக்கு இணையான தருணமாக மனதில் இன்று தங்கியிருக்கிறது. தனக்கென்று பலன் கருதாது பல செயல்கள் செய்து பெற்ற நிறைவு.
சுகுமாரனின் இந்த வரிகள் நினைவில் எழுகிறது ’….வாழ்ந்து தீர்வதில்லையா பிறவியின் மொத்த ஆயுள்?’
நாராயணன் மெய்யப்பன்