தமிழகத்தில் இரும்பு

இனிய ஜெயம்

சுதந்திர இந்தியாவில் 1980 இல் துவங்கப்பட்ட அன்றைய தமிழ் நிலத்தின் ஒரே இரும்பு உருக்கு ஆலையான சேலம் இரும்பு உருக்கு ஆலையையும் 1995 இல் உலகம் தழுவி 20 நாடுகளுக்கும் மேலாக பல்லாயிரம் டன் தரமான இரும்பு ஏற்றுமதி செய்த அதன் சாதனைகளையும் அறிவோம்.

அதற்கு முன்பாக1870 இல் பிரிட்டனில் இரும்பு உருக்குவது சார்ந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம் ஆகும்வரை கம்பனி ஆட்சி செய்த இந்தியாவில் இரும்பின் தேவை மிக அதிகமாக இருந்தது. இரண்டு முக்கிய காரணங்களில் முதல் காரணம் பிரிட்டன் எப்போதும் உலகில் எங்கேனும் ஏதேனும் போரில் ஈடுபட்டு கொண்டே இருந்தது. எனவே ஆயுதங்கள் சார்ந்து, இயந்திரமாக்கல் போன்றவற்றின் அறிமுகம் சார்ந்து தரமான இரும்பின் தேவை அதிகரித்து கொண்டே போனது.

இரண்டாவது இந்தியாவிலிருந்து பருத்தி போன்ற முக்கிய சரக்குகள் இறக்குமதியை கிட்டத்தட்ட நிறுத்தி விட்டு, தான் தயாரித்த துணிகளின் சந்தையாக இந்தியாவை மாற்ற முயன்றது பிரிட்டன். இப்படி பல்வேறு அடிப்படைகளில் இந்திய கஜானா காலியாகி கொண்டே போக, பிரிட்டனுக்கு ஏதெனும் ஏற்றுமதி செய்யலாம் எனில் இந்தியாவுக்கு எஞ்சி இருந்த வழிகளில் ஒன்று இரும்பு.

18 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் இரும்பு தொழில்நுட்பம் சார்ந்து, அப்போதைய உருக்கு ஆலைகள் அதன் ஒட்டு மொத்த உற்பத்தி எல்லை சார்ந்து  பிரிட்டிஷ் அதிகாரிகளின் ஆவணங்களை தரம்பால் ஆவணம் செய்திருக்கிறார்.  ஜெ எம் ஹீத் என்பவர் இங்கிலாந்து சென்று தொழில் நுட்பம் பயின்று 1833 இல் கடலூர் பரங்கிப்பேட்டையில் இரும்பு உருக்கு ஆலை துவங்கி இருக்கிறார். இரும்பு தாது மற்றும் மரங்கள் கல்வாராயன் மலையில் இருந்து மணிமுத்தா அறு வழியே கொண்டு வர பட்டிருக்கிறது. 1870 இல் பிரிட்டனில் புதிய தொழில் நுட்பம் வரும் வரையில் இந்த ஆலை வெற்றிகரமான உருக்கு இரும்பு ஏற்றுமதி ஆலையாக இருந்திருக்கிறது.

நாயக்கர் கலைகளை காணும்போது அந்த கலைகளுக்கு காரணமான நுட்பமான உறுதியான இரும்பு தொழில் நுட்பம் அதன் பின்னணியில் உண்டு என்பது புரியும். சோழர் போர் தளவாடங்கள் குறித்து வாசிக்க வியப்பு மெலிடும். அரசனை அம்பு மழை வந்து தொடாமல் கம்பி வலை செய்து அதை தடுக்கும் தொழில் நுட்பம் வைத்திருந்திருக்கிறார்கள்.

மன்னர் காலங்களில் படைவீரர் அளவே இரும்பு கருமார் முதல்மரியாதை கொண்டிருப்பார்கள் என்பதையும், இரும்பு தொழில்நுட்பம் பெரும்பாலும் ரகசியம் என்றே பேணப்பட்டிருக்கும் என்பதையும் ஊகிக்கலாம்.

சங்க இலக்கியங்களிலும் தொல் அகழ்வு தளங்களிலும் இரும்பின் பயன்பாடு விரிவாகவே காண கிடைக்கிறது. ஒரு பண்பாட்டின் எழுச்சிக்கு இரும்பு எந்த அளவு துணை செய்யும் என்பதை ஜாரட் டைமண்ட் இன் துப்பாக்கிகள் கிருமிகள் மற்றும் எஃகு நூல் கூறும். எந்த பண்டைய நாகரீகத்தையும் அளவிட அதன் இரும்பு பயன்பாடு முக்கிய அளவு கோலாக அமைகிறது. இரும்புக்கு முன்பே தாமிரம் கண்டுபிடிக்கபட்டிருந்தாலும் தாமிரம் கொண்டு காடு திருத்த சாத்தியம் இல்லை. இரும்பு கொண்டே காடு திருத்துதல் சாத்தியம். மேலும் தாமிரத்தை விட இரும்பை உருக்கும் சூடு தாங்கும் உலைகளை அமைக்கும் தொழில் நுட்பமும் வேறுபடும். எனவே இரும்பின் பயன்பாடு என்பது அந்த பண்டைய நாகரீகத்தின் வளர்ச்சி நிலையில் முக்கிய அலகு என தொல்லியல் கொள்கிறது.

அந்த வகையில் தமிழ் நிலத்தின் இரும்பு காலம் சார்ந்த வரையறையை அண்மையில் கிருஷ்ணகிரி மயிலாடும் பாறை தொல்லியல் களத்தில் கிடைத்த இரும்புகளின் மீதான தொல்லியல் ஆய்வின் கார்பன் டேட்டிங் கால கணிப்பு மாற்றி அமைதிருக்கிறது. (முன்பே வெளியான இந்த செய்தியை நான் இப்போதுதான் பார்க்கிறேன்)  அந்த இரும்புகள் இன்றிலிருந்து 4200 ஆண்டுகள் முற்பட்டது. அதாவது இந்தியாவில் கிடைத்த இரும்பு கால வரிசையில் மிக மிக பழமையானது இதுவே.

ஆம் இந்தியாவின் இரும்பு காலம் என்பது தமிழ் நிலத்திலிருந்து துவங்குகிறது என்பதே அந்த ஆய்வின் முடிவு. இதில் (சீமானியர்கள் தவிர)  பெருமிதம் கொள்ள ஏதும் இல்லை ஆனால், இதுவரை கிடைத்த சான்றுகள் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு வரலாற்று மொழிபு எவ்விதம் சகல துறை ஆய்வாளர்களால் மீண்டும் திருத்தி எழுதப்படும் என்பதைக் காண ஒரு வாய்ப்பு மீண்டும் எழுந்திருக்கிறது என்ற வகையில் எந்த வரலாற்று மாணவருக்கும் இது சுவாரஸ்யமான தருணமாகவே இருக்கும்.

பின்னிணைப்புகள்;

  1. தமிழக முதலமைச்சர் வெளியிட்ட செய்தி.
  2. வெளியான இந்தியாவின் இருப்பு கால வரிசை சார்ந்த புதிய அட்டவணை.

கடலூர் சீனு

அன்புள்ள சீனு,

தமிழகத்தில் வரலாற்றுத் தொடக்கமான ஆதிச்சநல்லூர் காலம் முதல் நயமான இரும்புப்பொருட்கள் கிடைப்பது ஏற்கனவே ஆய்வாளர்களை ஆர்வமூட்டிய விஷயம்தான். இங்கே உறையடுப்புகள் தொடர்ச்சியாகக் கண்டடையப்படுகின்றன. இங்குள்ள இரும்பின் காலம் குறித்த நம் பார்வைகள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டும் இருக்கின்றன.

அண்மைக்கால ஆய்வுகளின்படி தமிழகத்தில் உள்ள இரும்பு உறையுலைகள் நாலாயிரமாண்டு தொன்மை கொண்டவையாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவ்வாறென்றால் உலகின் மிகத்தொன்மையான இரும்புலைகள் இங்குள்ளவை.

அதற்கான நிலவியல் வாய்ப்பும் இங்குண்டு. தென்னகத்து நிலம் தொன்மையான எரிமலைப்பாறைகளால் ஆனது. ஆகவே இரும்பு இயல்பாக பூமிமட்டத்திலேயே கிடைத்திருக்க வாய்ப்புண்டு. இரும்பின் பயன்பாடு தென்னகத்தில், தமிழ்நிலத்தில் இருந்தேகூட, சர்வதேச அளவுக்குச் சென்றிருக்கக்கூடுமா என்றால் வாய்ப்புண்டு என்றே தோன்றுகிறது. அதை ஆய்வாளர்கள் நிறுவவேண்டும்.

இந்த ஆய்வுகள் சர்வதேச அளவில் எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன, ஏற்கப்படுகின்றன என்பதையே அடுத்த நிலையில் நாம் கவனிக்கவேண்டும். நவீன வரலாறு என்பது உலகவரலாறுதான், எந்த வரலாறும் உலகப் பெருவரலாற்றின் ஒட்டுமொத்தத்தின் ஒரு பகுதியாகப் பொருந்தவேண்டும். தமிழகத்தில் இதைப்பற்றிப் பேசும் ஆய்வாளர்கள் சர்வதேச அளவில் இதை நிறுவவேண்டும். அவ்வாறு நிறுவப்படுவது புறவயமான அறிவியல் ஆதாரங்கள் மற்றும் தொடர்விவாதங்கள் வழியாகவே நிகழும். அதை கவனித்துக்கொண்டிருக்கிறேன்.

இந்த வரலாற்று விவாதத்தில் ஆய்வாளர்களே கருத்து சொல்லவேண்டும். அரசியல்வாதிகள் கருத்து சொல்லும்போது அது வரலாற்றாய்வல்ல, அரசியல் என்னும் நிலை வந்துவிடுகிறது. ஓர் ஆய்வாளர் அரசியல்வாதிகள் சொல்லும் கருத்தை மறுப்பார் என்றால் அவர் மேல் அரசியல் வசைகள் வந்து குவியத் தொடங்கும். அதிலும் முதல்வர் சொல்லும்போது அது அதிகாரபூர்வ அறிக்கை ஆகிவிடுகிறது. ’தமிழ்நாட்டின் நிலைபாடு’ ஆகிவிடுகிறது. வரலாற்றாய்வாளர்கள் பெரும்பாலும் அரசூழியர்கள். அவர்கள் அதன்பின் பேசமுடியாது.

வரலாற்றில் எந்தக் கருத்தும் வலுவாக எதிர்த்து வாதிடப்படவேண்டும். எல்லாவகை மறுப்புகளும் அதன்மேல் முன்வைக்கப்படவேண்டும். நம்பிக்கை வழியாக அல்ல அவநம்பிக்கை வழியாகவே நவீன வரலாற்றாய்வு செயல்படுகிறது. பொய்ப்பித்தலுக்கான அறைகூவலாகவே ஒரு புதிய கருத்து முன்வைக்கப்படுகிறது. அதற்குமேல் எல்லா எதிர்ப்புகளும் வந்து, அந்த எதிர்ப்புகள் எல்லாவற்றையும் அறிவியல்பூர்வமாக அந்த தரப்பு வென்றுவிட்டதென்றால்தான் அது உண்மை. அறிவியல்வழி அதுவே.

மதவாதிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், அமைச்சர்கள், அரசு ஆகியவை வரலாற்று அறிக்கைகளை விடுவதென்பது மெய்யான வரலாற்றாய்வுக்கே எதிரான மனநிலையை உருவாக்கும். இதுவே மைய அரசாலும் செய்யப்படுகிறது.  இந்தியாவின் பொதுப்போக்காக நிலைபெற்றுள்ளது. இவ்வாறு அரசியல்வாதிகளால், அரசால் சொல்லப்படுவதனாலேயே உடனடியாக அது அரசியலாகி எதிர்நிலைபாடும் உருவாகிவிடக்கூடாது. இது ஆய்வாளர்களால் சர்வதேச ஆய்வுக்களத்தில் முன்னெடுக்கப்படவேண்டும்

ஜெ

தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -4

தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -3

தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -2

தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -1

வரலாறுகள், கடிதம்

முந்தைய கட்டுரைகே.எம்.ஆதிமூலம்
அடுத்த கட்டுரைநவீன மருத்துவம், கடிதம்