அசோகமித்திரனின் எழுத்தாளர்கள் – கடலூர் சீனு

இனிய ஜெயம்

இரா. நாகசாமி, குடவாயில் பாலசுப்ரமணியம் ஐராவதம் மகாதேவன் என்றெல்லாம் மீண்டும் ஒரு மறுவாசிப்பு சுற்றில் இருக்கிறேன். இடையில் ஓய்வு நாடி வேறு தளம் வாசிக்க கையில் சிக்கிய பழைய கலைஞன் பதிப்பக வெளியீடான அசோகமித்திரன் எழுதிய _சில எழுத்தாளர்கள்_, _படைப்பாளிகள் உலகம்_, நூல்களை சும்மா புரட்டி கை போன போக்கில் வந்த கட்டுரைகளை வாசித்தேன்.

இயான் பிளமிங் உலக போரில் பிரிட்டன் கப்பல் படை உட் பிரிவு ஒன்றில் பணி செய்திருக்கிறார். ரஷ்யன் மொழி கற்றவர் என்பதால் ரஷ்யாவில் உளவாளிகள் என முத்திரை குத்தப்பட்டு மரண தண்டனைக்கு சிபாரிசில் இருந்த 9 பிரிட்டன் வீரர்கள் குறித்த வழக்கை பற்றி விரிவான தகவலை தர பிரிட்டன் தரப்பில் அங்கே தங்குகிறார். இந்த சூழல் பின்புலமே பிளமிங்கின் நாவல்களின் பின்புலத்தை வடிவமைக்கிறது.

நிகர் வாழ்வில், நாஜி படை வீரர்கள் சிலர் வசம் சீட்டாட்டத்தில் வல்லவரான பிளமிங் அவர்களின் சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழல். நன்றாகவே மண்ணை கவ்வுகிறார் பிளமிங். அதனால்தான் அவரது நாவலான கேசினோ ராயலில் நாயகன் ஜேம்ஸ் பாண்ட்ஐ சீட்டாட்டத்தில் ஜெயிக்கவே முடியாது. இப்படித்தான் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் தோன்றி அதிரடி உளவாளியாகி உலகமெலாம் சுற்றி ரஷ்ய சதியை முறியடித்து சாதனைகள் பல புரிகிறார்.

இந்த பாத்திர உருவாக்க பின்னணியில் எத்தனையோ நகைச்சுவைகள். அதில் ஒன்று. ஒரு முறை ஜேம்ஸ்பாண்ட் குடிப்பதாக தான் எழுதிய வினோத காக்டெயில் ஐ பிளமிங் நிஜமாகவே உருவாக்கி குடித்துப் பார்க்கிறார். அதேதான்… சகிக்க இயலவில்லை. வாந்தி எடுத்து விடுகிறார்.

பிளமிங் இறந்த போது ஜேம்ஸ் பாண்ட் அவருக்கு சம்பாதித்து கொடுத்திருந்த தொகை நான்கு பில்லியன் பவுண்ட்கள். அன்றைய பிரிட்டிஷ் மகாராணி ஆட்சியின் வினோத சட்டம் காரணமாக அதில் சரி பாதி, சாவுவரி யாக பிரிட்டன் அரசுக்கு போய்விடுகிறது.

செக்காவ் பற்றிய கட்டுரை, 44 வயதில் அதுவரையிலும் தொடர்ந்த காச நோயால் ரத்த வாந்தி எடுத்து இறக்கும் செக்காவ் படிப்பால் ஒரு மருத்துவர்.  (அவரது தந்தைக்கு வயலின் வாசிக்க தெரியும், ஓவியம் வரைய தெரியும், பிள்ளைகளை போட்டு அடித்து வெளுக்க தெரியும் என்று எழுதுகிறார் அமி) இந்த உடலுடன் அவர் சில காலம் வம்படியாக சைபீரியா சென்று பணி புரிந்திருக்கிறார். இந்த சுய வதைக்கு லிடியா என்ற திருமணம் ஆன பெண் மீது அவர் கொண்ட ஒருதலை காதலே காரணம் என்று சொல்லப்படுகிறது. தன் வாழ்நாளில் பாதியை சிறுகதைகளை எழுதுவதில் செலவிட்ட செக்காவ், அவர் முதல் தொகுப்பு துவங்கி இறுதி நாடகம் வரை பிரபலமானவராகவே இருந்திருக்கிறார்.

அவர் பூத உடல் ரயிலில் வந்து இறங்க, ராணுவ மரியாதையுடன் செல்லும் அவர் சவப்பெட்டி பின்னால் மக்கள் வாசகர்கள் ஊர்வலம். அங்குதான் தெரிய வருகிறது அது அப்போது நடந்து கொண்டிருக்கும் போரில் உயிர் நீத்த கெல்லர் எனும் தளபதியின் உடல். அதே ரயிலில் நிர்வாக பிழையால் செக்காவ் உடல் மீன் இறைச்சி உறைய வைக்க படும் பெட்டியில் இருப்பது பின்னர் தெரிய வர, இது உலகு முன்னிலையில் இந்த தேசத்துக்கே இழிவு என்று எழுதுகிறார் மாக்சிம் கார்க்கி.

கார்க்கி குறித்த கட்டுரை ஒரு எழுத்தாளனாக அவர் பின்தங்கி போகலாம் ஆனால் மனிதனாக அவர் என்றும் உயர்ந்தவர் என்று கூறுகிறது. என்றும் ‘மக்கள் கலைஞன்’ என்றே வாழ்ந்திருக்கிறார் கார்க்கி. சுற்று பயணம் ஒன்றுக்காக அமெரிக்கா வந்த கார்கியை உளவாளி என அஞ்சி அமெரிக்க ஊடகங்கள் அவரை அவமதித்து அதன் வழியே அமெரிக்காவை விட்டு அவரை வெளியேற்றுகிறது. ரஷ்யாவோ தனக்கு எதிராக எழப்போகும் கார்கியின் குரலை எண்ணி அஞ்சுகிறது. அதன்படியே அவரது மகனை தொடர்ந்து ஒரே வருடத்தில் அவரும் மர்மமான முறையில் இறந்து போகிறார்.

கிரகாம் க்ரீன் ( தி தர்ட் மேன் படத்தின் கதாசிரியர்) ஒரு முக்கிய எழுத்தாளர். Rk நாயாயணனின் நண்பர். Rkn உலகு முழுக்க அறியபட கிரகாம் க்ரீன் ஒரு முக்கிய காரணம். இவருமே உளவாளி என சந்தேகிக்க படுகிறார். சந்தேகப்பட்டு சாப்ளினை அமெரிக்காவை விட்டு துரத்திய சேனட்டரை எதிர்த்து க்ரீன் எழுதுகிறார். ரஷ்யாவில் அத்துமீறி அரசு தண்டனை பெற்ற எழுத்தாளர்கள் சார்பாக எழுதுகிறார். அவர்கள் குடும்பங்களுக்கு பண உதவி திரட்டி அளிக்கிறார். இறுதி காலம் வரை ரஷ்யா பிரிட்டன் அமெரிக்கா என மூன்று தரப்பாலும் துரத்தப்படும் வாழ்வே வாழ்ந்து முடிகிறார் க்ரீன்.

ஜார்ஜ் ஆர்வெலும் அப்படித்தான் இந்தியாவில் பிறந்த ஆர்வெல், பிரிட்டன் போய் கல்வி கற்கிறார். பர்மாவில் காவல் துறையில் சில காலம் பணி செய்து விலகுகிறார். பாசிசத்தில் இருந்து ஸ்பெயின் விடுதலை பெறும் பொருட்டு தன்னார்வலர் படையுடன் இணைந்து பணி செய்கிரார். ஜெர்மனியுடனேயே ஒப்பந்தம் செய்து கொண்டு ரஷ்ய அரசு செய்யும் எல்லா கீழ்மைகளையும் அங்கே உள்ளிருந்து பார்க்கிறார். தனது படை வேட்டையாடப்படுமுன் தப்பி ஓடுகிறார். இதன் பிறகே விலங்கு பண்ணை, 1984 போன்ற முக்கிய நாவல்களை அவர் எழுத, அவை உலகப் புகழ் அடைகின்றன.

போரிஸ் பாஸ்டார்நாக் கின் நட்பு வட்டம் (எல்லோருமே தத்தமது துறையில் மேதைகள்) முழுமையாகவே ரஷ்ய அரசால் கொன்றொழிக்க படுகிறார்கள். சிலர் நிரந்தரமாக காணாமல் போகிறார்கள். சிலர் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். இத்தகு சூழலில்தான் 70 வயது வரை போரிஸ் வாழ்கிறார் எழுதுகிறார். ரஷ்யாவில் முடக்கப்பட்ட டாக்டர் ஷிவாகோ நாவல், போரிஸ் கை மீறி இத்தாலி வழியே வெளியாகி தொடர்ந்து ஆங்கிலம் வழியே புகழ் பெற்று உயர்ந்த இலக்கியப் பரிசும் பெற, போரிஸ் முழுக்க முழுக்க ரஷ்ய அதிகார மையத்தின் கண்காணிப்பில் விழுகிறார். என்னை நாடுகடத்தி விடாதீர்கள். ரஷ்யா என் ஆன்மா. அதை நீங்கினால் நான் வெறும் பிணம் என்று உயரதிகாரிகளுக்கு எழுதுகிறார் போரிஸ்.  (இதே உணர்வுடன் தார்க்கோவ்ஸ்கி நேர்காணல் ஒன்று கண்டிருக்கிறேன்) இறுதிவரை புறக்கணிக்கப்பட்டு ஊரால் ஒதுக்கப்பட்ட மனிதராக அரசின் சந்தேக கண்களில் மட்டுமே வாழ்ந்து முடிகிறார் போரிஸ்.

சிறுகதை போலவே ஒரு உணர்வுக் கட்டமைப்பை வழங்கும் இந்த கட்டுரைகளுள் அமியின் ஸ்பெஷலான மெல்லிய புன்னகை வரவழைக்கும் வாழ்க்கை தருணங்களும் உண்டு உதாரணமாக வில்லியம் பாக்னர் வாழ்க்கையில் ஒரு தருணம். ஹலிவூட் இன் எம் ஜி எம் நிறுவனத்திடம் இருந்து பாக்னருக்கு மாதா மாதம் சம்பளம் வர துவங்குகிறது. அவர் அந்த ஸ்டுடியோவுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. எனவே அவருக்கு குழப்பம். கொஞ்சம் பண முடை இருந்ததால் அவரும் நல்லது என விட்டு விடுகிறார். இப்படியே ஒரு ஏழு எட்டு மாதம் தவறாமல் அவர் பெயரில் அவர் முகவரிக்கு சம்பளம் வருகிறது. ஒன்பதாம் மாதம் எம் ஜி எம் மில் இருந்து பாக்னரை உடனடியாக விமானம் பிடித்து அலுவலகம் வரும்படி தந்தி வருகிறது. தான் இருக்கும் ஊரில் இருந்து ரயில் ஏறினால் அந்த அலுவலகம் போய் சேர ஒரு நாள் ஆகும் எனவே, அவர் நிறுவன உத்தரவை மதித்து 4 நாட்கள் கழித்து கிடைத்த விமானத்தை பிடித்து விரைந்து அங்கே செல்கிறார். அலுவலகம் போனால் அங்கே அவருக்கு காத்திருக்கிறது மற்றொரு அதிர்ச்சி. அந்த நிறுவனத்தில் இருந்து அவரை வேலையை விட்டு நீக்கிய ஆர்டரை அவருக்கு தருகிறார்கள். ஏன் எதற்கு எப்படி என்றே தெரியாத இப்படி ஒரு மர்மம் பாக்னர் வாழ்வில்.

இடையே அழைப்பு வர தொலைபேசி எடுத்தேன். பேசி முடித்து கண்ட நிலைத் தகவலில் இன்று அசோகமித்திரன் நினைவு தினம் என்று கண்டிருந்தது. ஒரு கணம் மெல்லிய வியப்பு எழுந்தது. அது ஏன் சும்மா புரட்டி பார்க்க நான் அசோகமித்திரனை எடுத்தேன்?

பின்குறிப்பு:

இந்த கட்டுரைகளை இப்போது, _படைப்புக்கலை_ சில ஆசிரியர்கள் சில நூல்கள்_ என்ற தலைப்புகள் கொண்ட புத்தகங்களாக புதிய பதிப்பாக காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருப்பதாக அறிகிறேன்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைமருத்துவப் பயிற்சி, கடிதம்
அடுத்த கட்டுரைகொல்லிப்பாவை