தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -4
தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -3
தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -2
தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -1
அன்புள்ள ஜெ
அண்மையில் நான் வாசித்த ஒரு நல்ல நீள்கட்டுரை தொல்வரலாறு பற்றி நீங்கள் எழுதியது. வரலாற்றையே இரண்டாகத்தான் பார்க்கவேண்டும் என்பதும் சரி, நவீன வரலாறு என்பது இருநூறாண்டுகளாகத்தான் உருவாகி வந்துள்ளது என்பதும் என்னை திகைக்கவைத்த கருத்துக்கள். ஆனால் இன்றைய அரசியலில் வரலாறு பயன்படுத்தப்படுவது, அதிலுள்ள உணர்வுகள் எல்லாவற்றையும் திட்டவட்டமாக புரிந்துகொள்ள இது அளிக்கும் வெளிச்சம் மகத்தானது. நவீன வரலாறும் வரலாற்றுப்புனைவும் ஒரே சமயம் தோன்றின என்பதே ஒரு கிளர்ச்சியளிக்கும் அறிதல்தான்.
நான் கேட்க வருவது இன்னொன்று. இந்த ஆழமான கட்டுரையைப் பற்றி எங்கும் எவரும் பேசுவதில்லை. சினிமா பற்றி ஒரு கருத்து சொன்னீர்கள் என்றால் பல்லாயிரம்பேர் அதைப் பற்றிப் பேசுகிறார்கள். ஏதோ அதி தீவிரமாக அறிவுச்செயல்பாட்டில் இருப்பதாகக் காட்டிக்கொள்கிறார்கள். நிலைபாடுகளை எடுக்கிறார்கள். ஆய்வுகளைச் செய்கிறார்கள். உங்கள்மேல் தீர்ப்புகளைச் சொல்கிறார்கள். ஆனால் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு கமர்ஷியல் சினிமா தவிர எதைப்பற்றியும் அக்கறை இல்லை. வேறு எதையும் கவனிப்பதில்லை. ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை. இப்படி ஒரு கட்டுரையை கண்டால் முதல் பத்தியைக்கூட வாசிப்பதில்லை.
நான் சாமானியர்களைச் சொல்லவில்லை. இங்கே பத்தி எழுதுபவர்கள், அரசியல் பேசுபவர்கள், எழுத்தாளர்போல பாவனை செய்பவர்கள் பலர் உள்ளனர். அவர்களும் அவ்வாறுதான் உள்ளனர். சினிமாச்சர்ச்சை, சாதியரசியல் சர்ச்சை. வேறு எதையுமே கவனிப்பதில்லை. உண்மையிலேயே இங்கே ஓர் அறிவியக்கம் உண்டா என்ன?
எம்.ஆர்.முருகானந்தம்
அன்புள்ள முருகானந்தம்,
சினிமாச் சர்ச்சை அன்றி வேறேதுமறியா அந்த கும்பலை எனக்குத் தெரியும் – முப்பதாண்டுகளாக அதை கையாண்டுகொண்டிருக்கிறேன். எனக்குச் சாதகமாக. அவர்கள் எனக்கு ஆள்கொண்டு வந்து சேர்ப்பவர்கள். ஆகவே அவர்கள்மேல் விரோதமில்லை.
இவர்கள் எளிய உள்ளங்கள். எந்த அறிவுச்செயல்பாட்டுக்கும் மண்டைக்குள் இடமில்லை. ஆனால் ’சீரியஸாக’ அரசியலும் சமூகவியலும் பேசுவதாக ஒரு பாவனையும் தேவையாகிறது. ஆகவே வணிகசினிமாவை முன்வைத்து எதையாவது பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் பெரும் எண்ணிக்கை என்பதனால் அவர்களால் சூழலை நிறைத்துவிட முடிகிறது. ஓர் ஆற்றலாக திகழவும் முடிகிறது.
இன்னொரு சிறு வட்டம் உண்டு. அவர்கள் இளைஞர்கள். அந்த சினிமா -அரசியல் சர்ச்சைகளில் சலிப்புற்றவர்கள். மேற்கொண்டு அறிவார்ந்த தேடல் கொண்டவர்கள். ஆனால் இயல்பாக அறிவியக்கம் அவர்களுக்கு அறிமுகமாவதில்லை. ஏனென்றால் இங்கே எந்த ஊடகமும் சினிமாவுக்கு அப்பால் கவனிப்பதில்லை. என் பெயரை ஓரு வணிக ஊடகம் எழுதவேண்டும் என்றால் சினிமா சார்ந்த ஒரு சர்ச்சை தேவை. அதை வாசித்து இக்கும்பல் போடும் கூச்சல் வழியாக அந்த சலிப்புற்று தேடுபவர்களில் சிலர் இங்கே வருகிறார்கள்.
அண்மையில் நிகழ்ந்த சினிமாச்சர்ச்சை வழியாக ஒரு லட்சம்பேர் வரை உள்ளே வந்தனர். அவர்களில் சிலநூறு பேர் அறிவியக்க ஆர்வத்தால் நீடிப்பார்கள். அவர்கள் மேற்கொண்டு படிப்பார்கள். கொஞ்சம் யோசிப்பாகள். மேலே செல்ல விருப்பமிருந்தால் அவர்களுக்காக முறையான பயிற்சிவகுப்புகள் நடத்துகிறோம். அவர்கள் மட்டுமே என் அக்கறைக்குரியவர்கள்.
அவர்கள் மிகச்சிறுபான்மையினர். அவர்கள் அந்த சினிமாச்சர்ச்சைக் கும்பலுடன் விவாதிக்கவும் மாட்டார்கள். ஆனால் அவர்கள் இல்லை என பொருளில்லை. அவர்களே நம் அரங்குகளை நிரப்புபவர்கள். அவர்களே அறிவுச்செயல்பாட்டின் மையத்தில் இருப்பவர்கள். அவர்கள் வருக!
ஜெ