1980 ல் நான் 18 வயது பையனாக, பிகாம் முதலாண்டு படிக்கையில் நாகர்கோயில் பயோனியர் சரஸ்வதி அரங்கில் இந்த படத்தை பார்த்தேன். ஒத்தையடிப் பாதையிலே.
நகரில் அன்று ஓடிக்கொண்டிருந்த எல்லா படத்தையும் பார்த்துவிட்டதனால் செல்ல நேர்ந்த படம். அன்று பெரிய தோல்விப்படம் அது. குமுதம், விகடன் எல்லாம் படத்தை அடித்துத் துவைத்திருந்தனர். அவர்கள் அன்று கொண்டாடிய படங்களை எல்லாம் இன்று நினைத்தால் ரத்தவாந்தி வரும்.
நான் படம் அறுவை எனும் நம்பிக்கையுடன் அமர்ந்திருந்தேன்.ஆனால் படம் எனக்கு பிடித்திருந்தது. அந்தக்கால நடிப்புப் பாணி. ஆனால் பேராசிரியர். ஏ.எஸ்.பிரகாசம் எழுதி இயக்கிய படம். அவர் நல்ல பல கதைகளை சினிமாவுக்காக எழுதியவர். எதுவுமே முழுமையாக நல்ல படமாக அமையவுமில்லை. ஏதோ ஒரு குறை இருக்கும்.
அவர் இயக்கியவற்றில் எச்சில் இரவுகள் ஒரு விசித்திரமான படம், பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டது. யதார்த்தமான படம் அல்லதான், ஆனால் ஒரு நல்ல சோதனை முயற்சி.
பிரகாசம் இந்தப்படத்தில் ஒரு காட்சியில் மாவட்ட ஆட்சியராக வருகிறார். பாவம் நடிப்பே வரவில்லை. ஒப்பிக்கிறார். கல்லூரிப்பேராசிரியராக வேலைபார்த்தவர். அவரை சித்ரா லட்சுமணன் எடுத்த பேட்டி ஒன்று யூ டியூபில் இருக்கிறது (ஏ.எஸ்.பிரகாசம் பேட்டி)
ஒத்தையடிப் பாதையிலே ஒரு நல்ல சிறுகதையின் கட்டமைப்பு உடையது. ஒற்றையடிப்பாதையில் தனியாக வாரம் ஒருமுறை ஓடியே ஒரு சிற்றூருக்கு வரும் தபால்காரன் கதைநாயகன். அவனுக்குக் காதல். ஊரில் ஒரு வில்லனின் எதிர்ப்பு. பல பிரச்சினைகள். உச்சகட்டத்தில் கால்களை இழந்து ஊரைக் காப்பாற்றும் அவன் இறுதியில் நொண்டி நொண்டி அதேபோல ஓடி வருவான். அவனுடைய தோற்காத உள்ளம்தான் உண்மையான கிளைமாக்ஸ். (யூடியூபில் இருக்கிறது)
ஈட்டியுடன் தபால்காரர்கள் சிற்றூர்களுக்கு ஓடியே சென்றுகொண்டிருந்த காலகட்டத்தில் நிகழ்வதாக எடுக்கப்பட்ட படம். ஒரு காடும் பொட்டலுமான ஒரு வடமாவட்டக் கிராமம். அந்த ஊரின் நிலவுடைமை ஆதிக்கச் சூழலையும் படம் ஓரளவு சரியாகவே சொன்னது.
அதில் நடித்தவர் இசையமைப்பாளர் சங்கர் கணேஷில் கணேஷ் என பத்தாண்டு கழித்தே தெரியவந்தது. அந்த கதாபாத்திரத்துக்கு நன்றாகவே பொருந்தினார். அந்தக் கால வழக்கத்திலேயே இல்லாதபடி படிப்புக்களை கொண்ட கதைநாயகி (பௌர்ணமி) இயல்பாக நடித்திருந்தார்.
இனிய அதிர்ச்சி, எல்லா பாடல்களும் நன்றாக இருந்தன. (பாடல்கள்). இசை சங்கர் கணேஷ். அன்று என் மனதைக் கவர்ந்து நெடுங்காலம் நான் நினைவில் வைத்திருந்த இந்தப் பாடலை இன்று கேட்டேன். அந்தச்சிறுவனாக சிலநிமிடங்கள் இருந்தேன்.