ஜிக்கி பாடிய இந்தப்பாட்டு நாற்பதாண்டுகளுக்கு முன்பு அடிக்கடி சிலோன் ரேடியோவில் வரும். அவர்களின் பைலோ பாட்டுக்கு அணுக்கமானது என்பதனால் பொதுவாக விரும்பியிருந்திருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க ஆங்கிலப்பாட்டு போன்றது. அந்தக்காலத்தில் இருந்த மற்றப்பாடல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஒலித்தது அது. ஆகவே உடனடியாகச் செவியை கவர்ந்துவிடும். அப்படியே ஏதோ ஆங்கிலப்பாட்டில் இருந்து தூக்கிய மெட்டாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். இந்தி மெட்டு என்று தெரிகிறது
இந்தி வடிவம் யூடியூபில் இருக்கிறது.Bhai Bhai என்ற படத்தில் உள்ள Aye Dil Mujhe Bata De என்ற பாடல். இசையமைத்தவர் தர்ஷன் என்று இருக்கிறது. அந்த ஊர் வேதா என நினைக்கிறேன். அப்படியென்றால் ஆங்கில மெட்டுதான்.
கீதா தத் பாடியிருக்கிறார். கீதா தத் குரல் எப்போதும் குரு தத் நினைவை எழுப்புகிறது. குரு தத் ஒரு சோகநாயகன். அவருடன் இணைந்தமையால் அழகியும் இனியகுரல் பாடகியுமான கீதாவும் சோகத்தில் உழல நேர்ந்தது.
பாடி ஆடும் ஷ்யாமா அந்தக்காலத்தில் மிகப்பெரிய நடிகை. அழகாக இருக்கிறார், மிக இயல்பான அசைவுகளுடன் ஆடுகிறார். குர்ஷித் என்று இயற்பெயர் கொண்டவர். இஸ்லாமியர், பார்ஸியை திருமணம் செய்துகொண்டார். படத்தின் இயக்குநர் எம்.வி.ராமன் தமிழர். தமிழ்ப்படங்கள் செய்திருக்கிறார்.
எண்ணம் இனிக்கிறதா தவிக்கிறதா என்று தெரியவில்லை.