தீயின் தொடக்கம்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

தூங்குவதற்கு முன் பாட்டியிடம் கதைகளாக கேட்ட மகாபாரதத்தை நான் முழுவதுமாக படித்ததில்லை.. கற்பனைகளுக்கும் நிகழ்விற்கும் விவரம் தெரியாத வயதில் நான் கேட்ட கேள்விகளுக்கு கதை சொன்ன பாட்டியிடமும் பதிலில்லை..

கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் சமயம் இக்குழு வாசிப்பு பற்றி அன்பு அக்கா என்னிடம் இணைந்து கொள்ளுமாறு சொன்னார்… இணைந்து 50 நாட்கள் முடிவில் ‘முதற்கனல்’ பற்றி திரும்பி பார்க்கும்பொழுது பதில்களை விட கேள்விகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது… கூடவே அடுத்து வரப்போகும் பகுதியை பற்றிய ஆர்வமும்..

எப்பொழுதும் பாரதத்தை சந்தனுவில் தொடங்கி பழக்கப்பட்ட எனக்கு நாகர் குலத்தின் வழி சொல்லப்பட்டிருப்பது வியப்பும் கூடவே இப்படி ஒரு அணுகுமுறை எப்படி என்ற கேள்வியும்…

ஜனமேஜயனின் வேள்வியில் இருந்து கதைத் தொடக்கம்… கதையின் தொடக்கத்தில் இருந்த எங்கெங்கோ எப்படியோ சிக்கி முடிச்சுகளாகி இருக்கும் ஒரு சிறு நூலை, கதைப்போகும் இடமெல்லாம் மெல்ல மெல்ல அவிழ்த்து விடுவதைப்போல ஓட்டம்.. அடுத்து என்ன நிகழப்போகிறது?? எந்த முடிச்சு அவிழப் போகிறது என்ற ஆர்வம் குறைந்ததாகத் தெரியவில்லை எனக்கு…

ஒவ்வொரு குலப் பின்னணிகளையும் அவர்கள் வாழும் இடத்திற்கான வர்ணனைகளைப் படிக்கும்பொழுது அவர்களுடனே இருந்து பார்ப்பது போன்ற பிம்பம் இல்லாமலே இல்லை..

பீஷ்மரும், அம்பையும், சிகண்டியும், விசித்திரவீரியனும், வியாசரும் தங்களைப் பற்றி தாங்கள் இதுதாதென அறியும் நிகழ்வுகளுடன் நாகங்களின் விளையாட்டும் சிலிர்ப்பூட்டுபவையாகத் தான் இருக்கின்றன…

‘முதற்கனல்’ கேள்விகளுக்கான பதிலாக அல்லாமல் மேலும் மூட்டப்பட்ட தீயாக இருக்கிறது.. பதில்களை அடுத்தடுத்த பகுதிகளில் தேடவேண்டும்…

-கனிமொழி

வாசிப்பை நேசிப்போம் 

வெண்முரசுபதிவுகள்_முதற்கனல்

முந்தைய கட்டுரைபக்திப்பெருக்கு
அடுத்த கட்டுரைவரலாறுகள், கடிதம்