முடிவிலா முகங்கள்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

வெண்முரசு ஜெயமோகன் எழுதத்துவங்கிய ஆரம்பத்தில் சில அத்தியாயங்கள் வாசித்துவிட்டு இடை நின்ற பிறகு இப்போது வாசிப்பைத்தொடர

இந்த குழுவாசிப்பைத்தொடங்கி இயக்கி வரும் Kathiravan Rathinavel , priyadharshini gopal மற்றும் குழுவின் மூத்த வழிகாட்டிகளான கோமதி சார் ,பிரசன்னா சார் அனைவருக்கும் முதற்கண் நன்றிகள்.

மகாபாரத கதையை மூலமாக படித்தறியாமல் தொலைக்காட்சித்தொடராகவும் ,கர்ணன் போன்ற திரைப்படத்தின் மூலமாகவும் மட்டுமே சில முக்கிய கதாப்பாத்திரங்களை மட்டுமே அறிந்திருந்தேன்.மற்றபடி வெண்முரசின் சிறு நூலான செம்மணிக்கவசம் அதன் யதார்த்த கதை சொல்லலுக்காக பிடித்திருந்தது.

முதற்கனல்

நாகர்குலத்தலைவி ஓர் இரவு நேரத்தில் தன் மகன் ஆஸ்திகனிடம் இப்பிரபஞ்ச உருவாக்கத்திலிருந்து அவன் வரையிலான கதை சொல்வதிலிருந்து தொடங்குகிறது.ஆஸ்திகன் அஸ்தினாபுரம் சென்று ஜனமேஜயன் நடத்தும் சர்ப்பசதர வேள்வியை தர்க்கம் புரிந்து நிறுத்துகிறான் இந்த முடிவில் தெளிய வியாசர் வரவழைக்கப்பட்டு ஆஸ்திகன் சொல்வதுபோல் இச்சையே இவ்வுலகை உயிர்ப்போடு வைத்திருக்கக்கூடியதென்று கூறி தட்சகனை வாழ்த்தியனுப்பி தன் காவியத்தை பாடச்சொல்கிறார்….

பரீட்சித்தின் பிறப்பும் அதன் பிறகான சிப்பிக்குள் வைத்து காப்பதும் வர்ணனைகள் பிரம்மிக்க வைத்தன.

ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் தூரத்திலிருந்து பார்ப்பதைப்போன்று பிரம்மித்த வர்ணனையில் தொடங்கி சற்று நேரத்திலேயே அருகில் காண்பது போன்றதான அவர்களின் அகநிலையை காட்டுவதாக அமைந்துள்ளது .

கதைகள் காட்டாறுகளாக பொழிகின்றன சித்ரகர்ணி,சிபியிடம் வாதாடும் கருடன்,தன் குஞ்சுகளுக்கு உணவுதேடிச்செல்லும் பறவை ,பேசும் கிளிகள் ,இறந்த சித்ரகர்ணியை புசிக்கும் நரிகள் அனைவரிடமும் கதைகளிருக்கின்றன.

வெண்முரசின் கதாப்பாத்திரங்கள் சோர்வுறும்போதும் ,குழம்பி நிற்கும்போதும் கதைசொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது…

குறைந்த பகுதிகளே வந்தாலும் தேவாபி மற்றும் பால்ஹினர் மனதிலிருந்து அகலமுடியாத பாத்திரங்கள்,மனிதர்களில் குழந்தையாக இருக்கும்போது அனைவரும் தேவாபியைப்போன்றவர்களே ஆனால் குழந்தை தோளிலிருந்து தாவியிறங்கி விலகியோட ஒவ்வொரு கணமும் எத்தனிக்கிறது அது தேவாபியால் முடியாமலாகிறது அவனது நீடித்த நோயால்

விசித்திரவீரியன் அவன் சார்ந்து நாவலில் எழும் தர்க்கம் அது சார்ந்த நிகழ்வுகளோடு தொடர்புப்படுத்தும்போது ஒரு மனத்தெளிவை உண்டுபண்ணியது கிட்டத்தட்ட தேவாபி-பால்ஹினர்

வி.வீ-பீஷ்மரையொத்த தொடர்ச்சி எனலாம்.

பிறந்தவீடு,காதலன்,கவர்ந்துசெல்லப்பட்டவரனைவராலும் கைவிடப்பட்ட அம்பையின் சினம் கொற்றவையாக அவள் சிதையேறும் வரை பற்றியெரிந்தபடியே இருக்கிறது.அந்த சினத்தை சிகண்டியிடம் பற்றவைத்து அதன் நீட்சியின் மூலம் பீஷ்மரின் முடிவை நிகழ்த்த அன்னையாக கையளிக்கிறாள்..

பீஷ்மரிடம் மதுபோதையிலிருக்கும் சூதர் தன்புனைவில் பீஷ்மரின் கதையை எள்ளல் தொனியோடு சொல்லிச்செல்வது ரசிக்கத்தக்கதாக இருந்தது…

பீஷ்மர் ,பால்ஹினரின் தனிமை ஒரு விதியாகவே தொடர்கிறது.

அதே போன்று இன்றுள்ள சமூக பழக்கங்கள் அன்றுள்ளவையாக புனையப்பட்டவை அதை எவ்வாறு தொடர்புபடுத்திக்கொள்வது மரபின் தொடர்ச்சியாக அது இன்றும் உள்ளதா இல்லை இன்றிலிருந்து அன்றைய காலத்திற்கு ஆசிரியர் ஏற்றி உள்ளாரா என்ற குழப்பம் தென்படுகிறது இந்த வகையில் இன்னும் ஆழ்ந்து வாசிக்கவேண்டியுள்ளது..

இன்னும் எழுத நிறைய இருக்கன்றன இருந்தாலும் இப்போது இருக்கக்கூடிய குழப்ப மனநிலையில்(அம்மாவின் உடல்நல குறைபாடு காரணமாக)முடியவில்லை .மீள் வாசித்துவிட்டு விரிவாக மீண்டும் எழுத விழைகிறேன்.

தமிழரசன்

வாசிப்பை நேசிப்போம் 

வெண்முரசுபதிவுகள்_முதற்கனல்

முந்தைய கட்டுரைபழைய கசப்பு, வளர்ந்த ஒளி
அடுத்த கட்டுரைகண்ணனை அறிதல் – கடிதம்