படுகளம் -6 (நாவல்)

நான் அந்த விசித்திரமான சிக்கலைப் புரிந்துகொள்ளவே உண்மையில் மதியம் வரை ஆகியது. முதலில் அது ஏதோ ஒரு வேடிக்கை என்றுதான் தோன்றிக்கொண்டிருந்தது. அது எப்படி ஒரு கடையை முழுமையாக மறைத்து ஒரு விளம்பரத்தட்டியை வைக்க முடியும்? ஏதோ முட்டாள் எதையும் யோசிக்காமல் செய்துவிட்டிருக்கிறான். சென்று ஒரு சத்தம் போட்டால் முடிந்துவிடும்.

நான் கடைவாசலுக்குச் சென்றபோது மாரி வந்துவிட்டான் “என்ன மொதலாளி இது? கடையயே கண்டுபிடிக்க முடியல்ல?”

“ஏய் இருடா” என்றேன். சுடலைப்பாண்டி மாமா வர நேரமாகும் என தோன்றியது. “முதல்ல கடைய திற… யோசிப்போம்.”

கடையை திறந்து அமர்ந்தோம். எவரிடம் பேசுவது, எங்கே சொல்வது என்று தெரியவில்லை. வெளியே வந்து அந்த போர்டை பார்த்தேன். தற்காலிகமான விளம்பரப்பலகை அல்ல. சாக்கடைக்குள் இரும்பு கால்கள் கான்கிரீட் போட்டு உறுதியாக நிறுத்தப்பட்டிருந்தன. உறுதியான இரும்புச்சட்டகம் மீது மிகப்பெரிதாக அந்த விளம்பரம் அமைந்திருந்தது. முன்பக்கம் சென்று பார்த்தேன். அதன் மேல் முழுப்பரப்பிலும் சீராக வெளிச்சம் தெரியும்படி விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. எங்கள் கட்டிடத்தில் இருந்து மின்சாரமும் எடுக்கப்பட்டிருந்தது.

எங்கள் கடைக்கு வியாழன் விடுமுறை. புதன் இரவே வேலையை தொடங்கியிருக்கிறார்கள். நேற்று விடியலில்தான் வேலை முடிந்திருக்கும். சுடலைப்பாண்டி மாமாவுக்கு சனிக்கிழமைதான் விடுமுறை. அவர் இருந்திருக்கிறார். மற்ற அத்தனை கடைக்காரர்களும் இருந்திருக்கிறார்கள். எவரும் எந்த தகவலும் எனக்குச் சொல்லவில்லை. அத்தனை பேரும் சேர்ந்து செய்ததுபோலத்தான் அது.

அப்போதுதான் எனக்கு வயிற்றைப் பிசையத் தொடங்கியது. எனக்கெதிராக பெரிய ஒரு சதி நடக்கிறது என்று தோன்றியது. எவரிடம் எதைக் கேட்பது?

அந்த இடம் நகராட்சிக்குச் சொந்தமானது. அல்லது சாலைத்துறைக்குச் சொந்தமானதா? அவர்களிடம் முறையாக அனுமதி பெற்றிருக்கிறார்களா?

மீண்டும் சென்று அந்த விளம்பரத்தைப் பார்த்தேன். பூர்ணமங்கல்யா பட்டுமாளிகை எங்கள் கடைத்தெருவின் மறுஎல்லையில் இருந்தது. ஐம்பதாண்டுகளாக இருக்கும் துணிக்கடை அது. அதை நடத்திவந்த கும்பலிங்கம் பிள்ளை மறைவுக்குப் பின் அவர் மகன் காசிலிங்கம் பொறுப்பேற்று அதை பெரிய துணிக்கடையாக மாற்றினார்.

காசி ஒரு பத்தாண்டுகள் கிடைக்கும் லாபத்தை முழுக்க விளம்பரத்துக்கே செலவிட்டார் என்பார்கள். நெல்லையில் அவ்வளவு பெரிதாக விளம்பரம் செய்த முதல் கடை அதுதான். மையமான இடம், அம்மனை தரிசனம் செய்து வெளியே வந்தால் கண்ணுக்கு முன் ஓங்கி நின்றிருக்கும் நாலடுக்குக் கட்டிடம். சரசரவென்று கடை வளர்ந்து மிகப்பெரிய நிறுவனம் ஆகிவிட்டது. சென்னையில்கூட கிளை திறந்துவிட்டார்கள்.

நூறுக்கும் மேல் ஊழியர்கள் வேலைபார்க்கிறார்கள். ஒருநாள் குறைந்தபட்ச வியாபாரமே முப்பது லட்சம் தாண்டும். நெல்லையின் முக்கியமான நபர்களில் ஒருவர் காசி. அத்தனை அரசியல்கட்சிகளுக்கும் அள்ளிக்கொடுப்பவர். தேர்த்திருவிழாவில் ஒருநாள் அவருடைய செலவுதான் என்பார்கள்.

உண்மையில் அவரை நினைக்க நினைக்க என் மனம் ஆறுதலடைந்துகொண்டே இருந்தது. அவரை நான் பார்த்திருக்கிறேன். அவர் பழைய பென்ஸ் கார் வைத்திருந்தார். தூய வெண்ணிற டர்க்கி டவல் விரிக்கப்பட்ட கார் மதியம் இரண்டு மணிக்குத்தான் கடைமுன் வந்து நிற்கும். மெல்ல இறங்கி உள்ளே செல்வார். கடைமேலாளர் வெளியே வந்து வணங்கி கூட்டிச்செல்வார். வெள்ளை கதர் சட்டை, வெள்ளை வேட்டி. கதர்ச்சட்டையில் காலர் மிக உயரமாக, விடைப்பாக இருக்கும். வெள்ளை வாட்ச், வெள்ளை செருப்பு. அவரும் நல்ல வெண்ணிறமாக இருப்பார். சாந்தமான நடை. எவரையும் பார்க்காமல், பொதுவாக முன்னால் பார்த்தபடி செல்வார். பலமுறை நான் அங்கே நின்று அவரைப் பார்த்ததுண்டு. அவரிடம் பேசமுடியும். ஏதோ பிழை நடந்துவிட்டது. அவ்வளவுதான்.

மதியத்துக்குள் நான் மிக இயல்பாக ஆகிவிட்டேன். முதலில் இதை அவர் வரைக்கும் கொண்டுசெல்ல வேண்டுமா என யோசித்தேன். அந்த விளம்பரத்தை வைத்த நிறுவனத்திடமே பேசிப்பார்க்கலாம். அதன் கீழேயே அவர்களின் பெயரும் எண்ணும் இருந்தது. கிருபா ஆர்ட்.

ஆனால் அந்த எண்ணை அழைத்தபோது யாரோ ஒருபெண் “முதலாளி இல்லியே இங்க” என்று சொன்னாள்.

அவர்களின் அலுவலகம் பாளையங்கோட்டை புதிய பேருந்துநிலையம் அருகே இருந்தது. நான் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிச் சென்றேன். அலுவலகத்தில் அதன் முதலாளி ரஃபீக் பாபு இல்லை. நான்கு வேலைக்காரர்கள் மட்டும்தான். ஒருவர் மானேஜர் போலிருந்தார். நீண்ட கழுத்தும் மெல்லிய கண்ணாடியும் கொண்ட ஆவுடையப்ப பிள்ளை.

நான் என்னை அறிமுகம் செய்துகொண்டேன். அவர் நான் பேனர் ஆணை கொடுக்க வந்தவனல்ல என்றபோதே ஆர்வமிழந்து ஒரு பேரேட்டை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

“சன்னிதி தெருவிலே போர்டு வைச்சது நீங்கதானா? அதிலே நம்பர் பாத்து கூப்பிட்டேன். மொதலாளியப் பாக்கணும்… அதான் நேரே வந்தேன்” என்றேன்.

“நாங்க பேனர் செய்யுறதில்ல. நட்டு பராமரிக்கிறது மட்டும்தான் எங்க வேலை… அதுக்குண்டான பர்மிசன் வாங்கியிருக்கோம். வேண்டியத வேண்டியவங்களுக்கு பாத்துச் செய்வோம்… சிட்டி முளுக்க ரெண்டாயிரம் பேனர் எங்க பராமரிப்பிலே இருக்கு” என்று ஆவுடையப்ப பிள்ளை சொன்னார்.

“நம்ம கடைமுன்னாடி ஒரு பெரிய பேனர் கொண்டுவந்து வச்சிட்டாங்க பாத்துக்கிடுங்க. கடைய பாக்க முடியாது… கடை முளுசா மறைஞ்சிட்டுது.”

“ஓ” என்றார். “ஆனாக்க ஒரு வாரமா எடம் பாத்து முடிவு செஞ்சுதான் வைப்பாக… ஏன்னா அதை நட்டு வைக்கிறது சாமானிய வேலை இல்ல. ஒரு மூணுமாடி கெட்டிடம் அளவுக்கு ஹைட்டு. கெட்டிடம் மாதிரி சன்னலும் கெடையாது. அதனாலே மொத்தக் காத்தையும் வாங்கிட்டிருக்கும். நல்லா ஆழமா அஸ்திவாரம் போட்டு கான்கிரீட்டு ஊத்தி நடலேன்னா விளுந்திரும். கெட்டிடம் மேலே விளுந்தா நஷ்டஈடு குடுக்கணும். ஆளுமேலே விளுந்தா சொல்லவே வேண்டாம்… கோர்ட்டு கேஸுன்னு வாழ்க்கை வீணாயிடும். அதனாலே நல்லா யோசிச்சு கணக்கு போட்டுத்தான் நடுவாங்க… “

“நான் ஒருநாள் இல்ல. கடை மூடியிருந்தது. இண்ணைக்கு காலம்பற வந்து பாத்தா இப்டி நட்டு வைச்சிருக்கு.”

“அதெப்டி? எடம் பாக்க போனவாரமே வந்திருப்பாகள்லா?”

எனக்கு என்ன நடந்தது என்று புரிந்தது. என் அண்டைக்கடைக்காரர்கள் என் கடைமுன் இடம்பார்க்க ஒத்துழைத்திருக்கிறார்கள். அவர்களே இடம் காட்டிக் கொடுத்திருந்தால்கூட ஆச்சரியமில்லை. அவர்களின் கடையை பாதுகாக்க அப்படிச் செய்திருப்பார்கள்.

“அத கொஞ்சம் நீக்கி வைக்கணும்” என்றேன். “அதச்சொல்லத்தான் வந்தேன்.”

“அதெல்லாம் முதலாளிகிட்ட பேசிக்கிடுங்க… நான் வேலைக்கு இருக்கப்பட்டவன்.”

நான் அங்கேயே இரண்டு மணிநேரம் காத்திருந்தேன். அவர் கூப்பிட்டுச் சொல்லியிருப்பார் போல. ரஃபீக் வந்ததுமே என்னிடம் “என்ன சார்?” என்று கொஞ்சம் விரோதமாகக் கேட்டார். ஏஸி கண்ணாடி அறைக்குள் மின்விசிறியைப் போட்டுக்கொண்டு அமர்ந்தபடி “வண்ணாரப்பேட்டையிலே நாலு பேனருக்கு எடம் பாக்கப்போயிருந்தேன்… சொல்லுங்க.”

நான் சொல்வதை என்னை பார்க்காமல் ஒரு பென்சிலை சுழற்றியபடி கேட்டுக்கொண்டிருந்தார். பிறகு “நான் இப்ப ஒண்ணும் செய்ய முடியாதே” என்றார்.

“அதெப்டி? இது என் வாழ்க்கையில்லா? கடையை மொத்தமா மூடியிருக்கீங்க.”

“சார், அங்க ஒரு பேனர் வைக்கணும்னு காசி சார் உத்தரவு. அது அப்டி ஒரு எடம்… திருளாவுக்கு முன்னாடி வைச்சுப்போடணும்னு கூப்பிட்டு சொல்லிட்டே இருந்தாரு. அதான் வைச்சது… ஒரு பேனருக்க செலவு என்னன்னு நினைக்கிறீக? ஒரு கட்டிடத்தோட செலவுக்கு பாதி வரும்னு வைங்க… அப்டி நினைச்சா எடுத்து மாத்த முடியாது.”

“அதெப்டி…?” என்று நான் சீற்றத்துடன் கத்த, அவர் கையமர்த்தி என்னை தடுத்தார்.

“மெரட்டுறதுக்கு வந்தீகன்னா மெரட்டிக்கிட்டு போய்ட்டே இருங்க… அதெல்லாம் இங்க நடக்காது.”

நான் தளர்ந்தேன். “சார், என் நெலைமையை நினைச்சுப்பாருங்க. இப்பதான் ஒருமாதிரி கடையிலே ஏவாரம் நடக்க ஆரம்பிச்சிருக்கு… லச்சக்கணக்கிலே வட்டிக்கு கடன் வாங்கியிருக்கேன். இப்ப இப்டி நடந்தா நான் அளிஞ்சிருவேன்.”

“அதெல்லாம் எல்லாரும் சொல்லுததுதான்… செரி, அங்க வைக்கல்ல. அந்த ஏரியாவிலே அந்த ஆங்கிளிலே வேற எங்க பேனர் வைக்குதது… நீங்க ஒரு எடம் கண்டுபிடிச்சு சொல்லுங்க.”

“நானா?”

“ஆமா, ஏன்னா நாங்க அங்க ஒரு வாரம் அலைஞ்சோம். அங்க ஏற்கனவே நாப்பது பேனர் இருக்கு. கடைகளுக்க பேனரே எட்டு இருக்கு. வேற எடமே இல்ல. இந்த பேனர எங்க வைச்சாலும் யாராவது ஒருத்தன் கடைய மூடணும்… சரவணபவன மூடிருவோமா? இல்ல ஆனையப்ப பிள்ளை கடைய மூடிருவோமா? வேற வளி? நீங்களே கண்டுபிடிச்சுச் சொல்லுங்க.”

அங்கே வேறு இடமே இருக்காது என என் மனக்கண்ணிலேயே தெரிந்தது. நான் சற்றுத் தழைந்து “அந்த பேனர நீங்க எடுத்திருங்க… அதுக்குண்டான நஷ்டத்தை குடுத்திருதேன்” என்றேன்.

“நஷ்ட ஈடா? ஒரு நாலுகோடி ஆவும், குடுப்பேரா?”

நான் என்னுள் எழுந்த ஆவேசத்தை அடக்க நாற்காலியின் கைப்பிடியை இறுகப் பிடித்துக் கொண்டேன்.

“காசி சாரு நமக்கு ஆண்டுக்கு நாலுகோடி ரூவாய்க்கு பிஸினஸ் தாறார். மேலே சங்கர் நகர் முதல் இந்தப்பக்கம் வள்ளியூர் வரை நாங்கதான் பேனர் வைக்கிறது. இப்ப பேனரை வைக்க முடியல்லேன்னா பிஸினஸ் கைவிட்டு போயிரும். இந்த தொளில் அரசியல்வாதிங்களோட ஏரியா. அவனுங்களோட பினாமிங்கதான் செய்ய முடியும், எங்க அண்ணன் முனிசிப்பாலிட்டியிலே இருந்தப்ப எனக்கு செட் பண்ணி தந்தது. ஒருமாதிரி உருட்டிக்கிட்டு போய்ட்டிருக்கேன். நான் சொல்லுதது புரியுதுல்லா?”

என்ன சொல்வதென்று தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“நான் இந்த பேனரை எடுத்தா உடனே நான் வைச்சுத்தாறேன்னு எட்டு பேரு அங்க போயி நிப்பான். அப்ப அவன் சாமர்த்தியசாலி, நான் மொக்கைன்னு ஆயிரும். பிசினஸை அந்தப் பக்கம் குடுத்திருவாரு… ஒரு பெரிய முதலாளி தொளிலை கைமாத்தினா சட்டுசட்டுன்னு அப்டியே மொத்தத் தொளிலும் கைய விட்டுப்போயிரும்… இந்த தொளிலிலே மெயிண்டனன்ஸ்தான் பெரிய ரிஸ்கு… கட்சிக்காரன் போஸ்டர ஒட்டிருவான். போறவாறவன்லாம் மாமூல் கேப்பான். லச்சக்கணக்கான ரூபா பொருள முச்சந்தியிலே நிக்க வைச்சிருக்கோம். கொளுத்திருவேன்னு சொல்லி நாலு ரவுடி காசு கேப்பானா மாட்டானா? அவன சமாளிக்கணுமானா போலீஸுக்கு காசு போகணும். நம்ம கிட்டயும் ஆளிருக்கணும்… இது மொரட்டுத்தனமான தொளிலு… அப்டித்தான் நடத்த முடியும்…”

சட்டென்று நான் உடைந்துவிட்டேன். “ப்ளீஸ்… எனக்கு இரக்கம் காட்டுங்க. நான் தொளிலுக்குப் புதிசு. இப்பதான் உள்ள வந்திருக்கேன்… அளிஞ்சிருவேன்… தங்கச்சிக இருக்கு… அப்பா செத்த பிறகு ஆதரவுக்கு ஆளில்ல.”

“புரியுது. ஆனா உங்களுக்கு இரக்கம் பாத்தா நான் அளிஞ்சிருவேன்.”

நான் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். கைக்குட்டையை எடுத்து கண்களையும் மூக்கையும் அழுத்தி துடைத்தேன். வெளியே அந்த அலுவலகமே என்னை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

“நான் இப்ப என்ன செய்யணும்?” என்று இடறிய குரலில் கேட்டேன்.

“எனக்குத் தெரியல்ல. நான் ஒண்ணுமே செய்ய முடியாது… நீங்க முடிஞ்சத செய்யுங்க.”

நான் சட்டென்று வெறிகொண்டு எழுந்தேன். “பாத்துக்கிடுதேன்ல… ஏல, நான் பாத்துக்கிடுதேன். என்னல நெனைச்சே? ஏய், வெட்டிப்போட்டுட்டு செயிலுக்கு போகத் தயங்கமாட்டேன்… இப்பவே இண்ணைக்கே அந்த பேனர தூக்கல்லேன்னா நீ இல்லலே. ஏலே, நீ இல்ல. செத்தேன்னு வைச்சுக்கோ. என்னைய அளிச்சுட்டு நீ வாள்ந்திருவியா? புள்ளக்குட்டியோட வாள்ந்திருவியாலே? அளிச்சிருவேன்… வேரோட அளிச்சிருவேன்ல…” என்று உடைந்த குரலில் கூச்சலிட்டேன்.

“ஆறதைச் செய்யும்வே, போவும்” என்று அவர் சொன்னார்.

இரண்டு சிப்பந்திகள் என் அருகே வந்தனர். நெட்டையானவன் என் தோளைப்பிடித்து “சார், இங்க சத்தம் போடக்கூடாது. வெளியே போங்க… போங்க வெளியே” என்றான்.

“கைய எடுலே…” என்று நான் அவனை தட்டிவிட்டேன்.

“என் ஆபீஸ்ல நுளைஞ்சு கலாட்டா பண்ணுதே… சாட்சிங்க இருக்கு… சிசிடிவி இருக்கு… உள்ள தள்ளிப்போடுவேன்… பேசாம போ” என்று ரஃபீக் கூச்சலிட்டார்.

நான் ஒருகணம் செயலற்று நின்றபின் தலையை அசைத்து “பாத்துக்கிடுதேன்ல… அளிச்சிருவேன்ல” என்று சொன்னபின் திரும்பி வெளியே சென்று பைக்கை எடுத்தேன்.

எப்படி நான் விபத்தில் சிக்காமல் திரும்பினேன் என்றே தெரியவில்லை. வெயில் கொதித்துக்கொண்டிருந்தது. எதிரே பேருந்துகள் சீறியபடி வந்தன. என் உடல் நடுநடுங்கியது. எங்கே செல்கிறேன் என்றே தெரியவில்லை. மனம் போன போக்கில் வீட்டுக்கு வந்துவிட்டேன்.

அம்மா “ஏம்லே?” என்றாள்.

“ஒண்ணுமில்லை” என்று படுக்கையறைக்குள் சென்று படுத்துக்கொண்டேன்.

“மண்டையிடியாலே? சுக்குவெந்நி குடிக்குதியா?”

“வேண்டாம், பேசாம போறியா?” என்று கத்தினேன்.

“அப்பனுக்கு அப்டியே ஒரு பிள்ளை” என்று முணுமுணுத்தபடி அவள் சென்றாள்.

பெருமூச்சு விட்டபடி புரண்டு புரண்டு படுத்தேன். உடல் கொதித்துக் கொண்டிருந்தது. அப்போது எனக்குள் கொந்தளித்த வன்முறையை எண்ணி எண்ணி நானே வியந்திருக்கிறேன். என்னிடம் ஏதேனும் அதிகாரம் இருந்திருந்தால் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்திருப்பேன். ஈவிரக்கமே இல்லாத கொலைவெறியனாகியிருப்பேன். ஆனால் அது கையாலாகாதவனின் கொந்தளிப்பு.

சற்று தூங்கியிருப்பேன். அந்த உச்சநிலையில் நெடுநேரம் நீடிக்க முடியாதென்பதனால்தான் அந்த தூக்கம். முறுகி முறுகி மூளை செயலற்று அப்படியே உதிரிச் சிந்தனைகளாக ஆகி என்னை மறந்து என் குறட்டையை நானே கேட்டு விழித்துக் கொண்டேன். இருபது நிமிடம்தான் தூங்கியிருப்பேன். அதற்குள் ஒரு கனவு. இனிய கனவு. என் படத்தின் எடிட்டிங் நடந்துகொண்டிருந்தது. அப்போது டைரக்டர் வருவதாக செய்தி வந்தது. நான் என் உதவியாளர்களுடன் பாய்ந்து அவரை வரவேற்க வெளியே வந்தேன்…

எழுந்தபோது என் மனம் அமைதி அடைந்திருந்தது. அந்தக் கனவே அதன்பொருட்டு என் ஆழ்மனதால் உருவாக்கப்பட்டதுதான். அம்மாவை அழைத்து ஒரு டீ போடச்சொன்னேன். அதை உறிஞ்சியபடி அமர்ந்திருந்தேன். மணி மூன்றுதான் ஆகியிருந்தது. அந்த பேனர் சட்டவிரோதமானது என்பதில் ஐயமில்லை. அதை நகராட்சி மையத்திற்குச் சென்று முறையாக விசாரித்துக்கொள்ள வேண்டும். அதுதான் முதலில் செய்யவேண்டியது.

ஒரு குளியலைப் போட்டுவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு நகராட்சி அலுவலகம் சென்றேன். முதல்முறையாக அப்படி ஓர் அலுவலகத்திற்கு வருகிறேன். பழைய கட்டிடம். வெளியே ஏராளமான கூட்டம். யார் யாரோ என்னென்னவோ செய்துகொண்டிருந்தனர். மனு எழுதுபவர்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்தார்கள். அவர்களைச் சுற்றி சிறு சிறு குழுக்களாகக் கூடியிருந்தனர்.

வராந்தாவில் ஏறி அறைகளைப் பார்த்தபடி சுற்றி வந்தேன். ஒவ்வொரு மேஜைமுன்னாலும் நாலைந்துபேர் நின்றிருந்தனர். பெரிய பழைய மின்விசிறிகள் கறக் கறக் என சுழன்றுகொண்டிருந்தன. இரும்பு ரேக்குகளில் நுனி சுருண்ட பழைய தாள்கள் கொண்ட கோப்புகள் அடுக்கடுக்காக. முதுகுத்தண்டில் ஓட்டை கொண்டபெரிய ஃபோல்டர்கள் செங்குத்தாக நிறுத்தப்பட்டிருந்தன. உள்ளே நுழைந்து வெளிவருவதற்கு ஒரு பாதைகூட இல்லை என்று தோன்றும்படி எப்படி எப்படியோ நாற்காலிகளும் மரபீரோக்களும் போடப்பட்டிருந்தன.

அங்கே எவரிடம் கேட்பது என்று தெரியவில்லை. முதற்பார்வையில் அங்கிருந்த குழப்பங்களை கடக்கவேண்டும் என்றால் அமைதியாக சற்றுநேரம் நிற்பதுதான் வழி.

மனு எழுதும் ஒருவர் என்னிடம் “என்ன சார்? வீட்டுவரி குடிநீர்வரியா?” என்றார். நான் இல்லை என்று தலையசைத்ததும் “பிளாட் அப்ரூவல்னாக்க…” என்றார்.

அதற்குள் நான் ஒருவரை தெரிவுசெய்துவிட்டேன். அவர் உள்ளே மேஜையில் இருந்து வேலை செய்துகொண்டிருந்தவர். முன்வழுக்கையும் காதில் நீளமான முடியும் கொண்டவர். தடித்த பெரிய கண்ணாடி. வெள்ளை வேட்டி, சட்டை. வெளியே வந்து அவர் ஒரு பொடிமட்டையை எடுத்ததும் நான் அவர் அருகே சென்றேன்.

அவர் என்னை ஆர்வத்துடன் பார்த்தார். என் தோற்றமே வியாபாரிக்குரியதாக இருந்தது. எடுத்த எடுப்பிலேயே “எனக்கொரு சகாயம் செய்யணும்… வேண்டியத செஞ்சிருவேன்” என்றேன்.

“சட்டத்த மீறி நான் ஒண்ணும் செய்ய முடியாது. நான் வெறும் கிளார்க்கு… ஆபீசர பாருங்க.”

“எனக்கு சில தகவல்கள்தான் தேவை… அது என்ன ஏதுன்னு சொன்னா போறும்.”

“சொல்லுங்க”

“ஒரு டீ சாப்பிடுவோமே…”

அருகே இருந்த தள்ளுவண்டி டீக்கடையில் ஒரு டீயை வாங்கிக்கொண்டு வாதா மரத்தடி நிழலில் சென்று நின்றோம். நான் நடந்தவற்றைச் சொன்னேன்.

அவர் ஒரு பீடியைப் பற்றவைத்து ஆழ இழுத்தார். பிறகு “நான் சொல்லுறத கவனமா கேட்டுக்கிடுங்க. இதுன்னு இல்ல, இங்க ரோட்ல நிக்குத பேனர்களிலே பெரும்பாலும் எதுக்கும் சட்டபூர்வமா அங்கீகாரம் கிடையாது. பெரும்பாலும் பொது எடத்திலேதான் நின்னுட்டிருக்கும். பெர்மிசன் இருக்குன்னு பேப்பர் எல்லாம் வச்சிருப்பானுக. அதுக்கெல்லாம் ஆதண்டிசிட்டி கெடையாது. பெர்மிசன் குடுக்குதவனுக்கு பெர்மிசன் குடுக்க அதிகாரம் இருக்காது. அஞ்சோ பத்தோ ரூபா பணத்த டிரசரியிலே கட்டிட்டு அனுமதி வாங்கியிருப்பான். ஒரு கம்ப்ளெயிண்டுக்கு நிக்காது ஒண்ணும்… ஆனா…”

நான் “சொல்லுங்க” என்றேன்.

“அப்டி பொது எடத்திலே ஆயிரம் ரெண்டாயிரம்னு பேனர் வைக்குதான்னா அவனுக்கு அதுக்குண்டான பேக்ரவுண்டு இருக்கும். எல்லா எடத்துக்கும் வேண்டியத செஞ்சிருப்பான். இங்கயும் மெட்ராசிலேயும் கோயம்புத்தூரிலேயுமெல்லாம் பேனர் முறிஞ்சு விளுந்து ஆளு செத்திருக்கு. என்ன ஆச்சு? ஒண்ணுமே ஆகாது. நாலுநாளு ஜனங்க சத்தம் போடுவானுக. அரசியல்கட்சிக்காரன் எவனும் சப்போட்டுக்கு வரமாட்டானுக. அதாக்கும் நாட்டு நடப்பு.”

“அப்ப இந்த இடத்திலே இல்லீகலாத்தான் நட்டிருக்கானுக.”

“ஆமா, சந்தேகமே இல்ல. கேட்டுப் பாத்தா ஏதாவது பேப்பர் வச்சிருப்பான். சிலசமயம் பேப்பர்ல காணுத எடம் பத்தடி தள்ளி இருக்கும்… ஆனா ஒண்ணும் செய்ய முடியாது.”

“ஏன்?”

“கம்ப்ளெயிண்டு செய்யலாம், கம்ப்ளெயிண்டு வாங்குதவனுக்கு தெரியாமலா இதெல்லாம் நடக்கும்?”

“கோர்ட்டுலே…”

“சின்னப்பையனாட்டுல்ல இருக்கீக? கோர்ட்டுக்கு போயி எப்ப தீர்ப்ப வாங்கப் போறீக? பத்து வருசமாகும் முதல் ஹியரிங்கு வாறதுக்கு… பேனர நீக்கணும்னு தீர்ப்பு வரணுமானா இருவத்தஞ்சு வருசமாவும்… ஒரு இருவது லச்ச ரூவா வக்கீல்ஃபீஸு ஆவும்… செய்யுதீகளா?”

நான் பெருமூச்சு விட்டேன்.

“அங்க சமாதானமா போகமுடியுமான்னு பாருங்க. உங்களுக்கு ஏவாரி அசோசியேசன் இருக்கும்லா, அங்க சொல்லுங்க. அப்டி ஏதாவது வளி இருக்குமான்னு பாருங்க. என்னையக் கேட்டா சாச்சிக்காரன் காலிலே விளுதத காட்டிலும் சண்டக்காரன் காலிலே விளலாம்…”

நான் அவருக்கு ஐநூறு ரூபாய் பணம் கொடுத்தேன். திரும்ப என் கடைக்கு வரும்போது பல கிலோமீட்டர் வெயிலில் நடந்தது போல அவ்வளவு களைப்படைந்திருந்தேன்.

கடையில் மாரியும் பையன்களும் இருந்தனர். நான் கல்லாவில் அமர்ந்ததும் மாரி என்னிடம் “முதலாளி இன்னிக்கு இது வரை ஒரு போணிகூட ஆகல்லே” என்றான்.

என் நெஞ்சில் அறை விழுந்ததுபோல் இருந்தது. அந்த அளவுக்கு நான் எதிர்பார்க்கவில்லை “ஒரு ரூபாய்க்குக்கூடவா?” என்றேன்.

“ஒரு ஆளு இது வரை உள்ள வரல்ல முதலாளி… பெரிய பேனர் பின்பக்கமா ஆரும் நடக்கிறதில்ல. கம்பி கால தடுக்கும்லா? அப்டியே அந்தப்பக்கமா போயிடுதாங்க”

நான் சரி என தலையை அசைத்தேன். நாற்காலியில் பிணம் போல இருட்டுவது வரை அமர்ந்திருந்தேன். அன்று மாலை ஒரு ரூபாய்கூட கல்லாப்பெட்டியில் விழாமல் கடையை மூடினோம்.

(மேலும்)

முந்தைய கட்டுரைஷேக் சின்ன மௌலா
அடுத்த கட்டுரைவம்சம்