படுகளம் – 4 (நாவல்)

4

என் வாழ்க்கை முற்றிலுமாக மாறிக்கொண்டிருந்தது, ஆனால் நான் அதை அறியவில்லை. இத்தனைக்கும் மெல்ல மெல்ல மாறவில்லை. முழுவீச்சில், புயலடிப்பது போன்ற நிகழ்வுகளுடன் அது உருமாறியது. ஆனால் அத்தனை தொடர்நிகழ்வுகளானமையால் என்னால் அவற்றிலேயே மூழ்கி, வேறொரு நினைப்பும் இல்லாமல் திகழவே முடிந்தது. எங்கே செல்கிறோம், ஒட்டுமொத்தமாக என்ன நிகழ்கிறது என்று சிந்திக்கவே முடியவில்லை.

அன்று மாலையே ஏழரை லட்சம் கைக்கு வந்துவிட்டது.  என் வீட்டுக்குள் ஒரு பேய் நுழைந்துவிட்ட உணர்வே எனக்கு ஏற்பட்டது. எந்நேரமும் பதற்றமாக இருந்தது. கைவிரல்களை கோத்து பிரித்துக்கொண்டும், செல்போனில் உதிரிக் காணொளிகளைப் பார்த்துக்கொண்டும் இருந்தேன். அமர்ந்திருக்க முடியவில்லை. நெடுநேரம் அமர்ந்திருப்பதாகத் தோன்றி எழுந்து நின்று நேரம் பார்த்தால் அரைமணியே ஆகியிருக்கும்.

என் உடலை இறுக்கமாக்கி, தோள்களை தூக்கிக்கொண்டு அமர்ந்திருப்பதனால்தான் அப்படி தோன்றுகிறது என அறிந்தேன். உடலை இலகுவாக்கிக் கொண்டேன். கால்களை நீட்டி தோள்களை தளரச்செய்தேன். ஆனால் அதிகம்போனால் ஐந்து நிமிடம், மீண்டும் உடல் இறுக்கமாக ஆகிவிடும். உள்ளம் விசைகொண்டிருக்கையில் உடலைத் தளர்வாக ஆக்கிக்கொள்ள முடியாது. ஆனால் ஆச்சரியம் ஒன்று உண்டு, உடலை இலகுவாக்கிக் கொண்டால் உள்ளமும் கொஞ்சம் தளர்வுற்றது.

அதைத் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன். அமைதியாக அமர்ந்து கைகால்கள், தோள்கள் என என் உடலை மெல்ல மெல்ல தளர்த்திக் கொண்டேன். அமைதியடைந்த மனம் முதலில் ஓசைகளைத்தான் பற்றிக்கொண்டது. நாம் நமக்குத் தேவையான ஒலிகளை மட்டுமே சாதாரணமாகக் கேட்கிறோம். மனம் எதையும் செய்யாமலிருந்தால் எல்லா ஒலிகளும் கேட்க ஆரம்பிக்கின்றன. மிகமிகத் தொலைவிலுள்ள ஓசைகள் கூட. அப்போதுதான் நம் சூழலில் நாய்களும் காகங்களும் இடைவிடாமல் ஓசையிட்டுக் கொண்டிருப்பது நமக்குக் கேட்கிறது.

நான் கற்றுக்கொண்டேன், அத்தனை ஓசைகளையும் நான் கேட்கிறேன் என்றால் என் உள்ளம் அமைதியாக இருக்கிறது. ஆகவே, அத்தனை ஓசைகளையும் கேட்பேன் என்றால் நான் அமைதியாகிவிட முடியும். என் தியானம் அது. பின்னர் எட்டாண்டுகள் கழித்து நான் ராமச்சந்திரா மிஷன் நடத்திய ஒரு தியான வகுப்புக்குச் சிலநாட்கள் சென்றேன். நான் ஏற்கனவே தியானம்தான் செய்துகொண்டிருக்கிறேன் என அப்போது உணர்ந்தேன்.

அமைதியடைந்ததுமே நான் என் நிலைமையை ஒருவாறாகத் தொகுத்துக் கொண்டேன். என்ன செய்யவேண்டும் என்பதை திட்டமிடலானேன். என் திட்டமிடலின் வழி ஒன்றுண்டு. முதலில் உடனடியாகச் செய்யவேண்டியதை மட்டுமே யோசிப்பது. அவ்வாறு யோசிப்பதற்கான பொழுதையும் மனநிலையையும் உருவாக்கிக் கொள்வது. எனக்கான ஒரு சிறிய இடத்தை உருவாக்கிக்கொள்வதுதான் அது. ஒரு குறிப்பிட்ட காலம் நான் எந்த நெருக்கடியும் இல்லாமல் இருக்க முடியும் என்னும் எண்ணம் போல சிந்தனைக்கு வாய்ப்பளிக்கும் இன்னொன்று இல்லை.

முதலில் அந்த பதினைந்து லட்சத்தில் முதல் மாத வட்டியை எடுத்துத் தனியாக வைத்துக்கொண்டேன். ஆக, ஒருமாத காலம் எனக்குக் கிடைக்கிறது. ஒரு மாதம், முப்பது நாட்கள் நான் நிம்மதியாக இருக்க முடியும். என்ன செய்யலாம்? அந்தப் பணத்தை நான் கையிலேயே வைத்திருந்தேன். என் அப்பாவின் வங்கிக் கணக்குகள் ஒவ்வொன்றாக எனக்கு மாறிவர அவற்றில் அந்தப் பணத்தை போட்டுவைத்தேன்.

ஏன் இப்படி யோசிக்கலாகாது? இப்போது என்னிடம் ஏறத்தாழ பத்துலட்சம் இருக்கிறது. அதை நான்  ஓராண்டில் இருபது லட்சமாக ஆக்கமுடிந்தால் அதிலிருந்து  எட்டு லட்சத்தை இவர்களுக்கு வட்டியாகக் கொடுக்கமுடியும். இரண்டு லட்சம் லாபம். நான் முப்பது லட்சம் ஈட்டினேன் என்றால் பன்னிரண்டு லட்சத்தை எனக்கே வைத்துக்கொள்ள முடியும். இதையே ஏன் வாய்ப்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது?

நான் உணர்ந்த ஒன்று உண்டு. எந்தச் சூழலிலும் புதியவராக நாம் இருக்கையில் நிறைய கவனிக்கிறோம். நிறைய நினைவில் வைத்துக் கொள்கிறோம். ஆனால் அது பயனற்ற கல்வி. நாம் அங்கே இருக்க ஆரம்பிக்க வேண்டும். வாழத் தொடங்க வேண்டும். மெல்ல மெல்ல நாம் எதையும் கவனிக்காமலாவோம். அங்கே நமக்குரிய வேலைகளை மட்டுமே செய்ய ஆரம்பிப்போம். ஆனால் அதன் வழியாக நாம் அங்கே நம்மைப் பொருத்திக்கொள்ள ஆரம்பிப்போம். அதற்காக நம்மை நாமே மாற்றிக்கொள்ள ஆரம்பிப்போம். அதன் வழியாக நாம் அந்த இடத்திற்குரியவராக மாறிவிடுவோம். உண்மையில் அதுதான் முறையான கல்வி.

நான் ஒருமாதம் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. ஒவ்வொரு நாளும் கடைக்கு வந்தேன். கடையிலும் வெளியிலுமாக இருந்தேன். இரவு வரை.   சுடலைப்பாண்டி மாமாவுடனும், வடிவேலு செட்டியாருடனும் பேசினேன். மாரி என்னிடம் பேசிக்கொண்டே இருந்தான். ஏதேதோ காதில் விழுந்தன. வணிக உறவுகள், துரோகங்கள், திடீர் வெற்றிகள், எதிர்பாராத சரிவுகள், திருமணங்கள், கள்ள உறவுகள், சாவுகள்…

கடைவீதியில் உள்ளவர்கள் வெளியே எவரையும் பெரிதாகக் கவனிப்பதில்லை. அங்கே அரசியல் இல்லை. சினிமாவும் இல்லை. தாணுலிங்க பிள்ளை ஒருவர்தான் தினமும் ஏதேனும் சினிமா பார்ப்பவர். ஆனால் அதை ஒரு சலிப்புடன் “இப்பல்லாம் ஆரு சினிமா எடுக்கா? பாவமன்னிப்பு மாதிரி ஒரு படம் உண்டா?” என்பார். மற்றவர்கள் காலைமுதல் இரவுவரை கடையில் இருப்பவர்கள். வீட்டுக்குச் சென்றால் சாப்பிட்டுவிட்டு படுக்கத்தான் நேரமிருக்கும். கடையில் இருக்கையில் உதிரியாக ஏதாவது பார்ப்பதோடு சரி, எதுவும் மனதில் படிவதில்லை. கடைவீதியின் செய்திகளிலும் வம்புகளிலும் மூழ்கித் திளைப்பார்கள்.

கடைப்பையன்களின் உலகம் இன்னொன்று. அவர்களுக்குச் சினிமா தவிர ஆர்வமே இல்லை. சினிமா பார்த்து அதைப்போல கிராப்பு வெட்டிக்கொள்வது தாடி வைத்துக்கொள்வது. விடுமுறைநாட்களில் மலிவான ஜீன்ஸ், டி ஷர்ட் அணிந்து சினிமா பார்ப்பது. காசிருந்தால் நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது. ஒரு பைக் வாங்கிவிடவேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் கனவு. உள்ளூர் மாரியம்மன், சுடலைமாடன் கோயில் திருவிழாவில் வைக்கும் பெரிய பேனரில் கறுப்புக் கண்ணாடியுடன் தன் படம் இடம்பெறுவதே சமூக மரியாதை.

ஆனால் கடையில் இந்த முகம் தெரியவே கூடாது. கிராப் மட்டுமே மன்னிக்கப்படும். கடையில் இருக்கையில் செல்போன் பார்ப்பது கடுமையாக தடைசெய்யப்பட்டிருந்தது. பார்ப்பதாகத் தெரிந்தால் மறுகணமே கல்தாதான். அவர்களில் சிலர் வந்த ஓராண்டுக்குள் கடைத்தெருவின் உலகுக்குள் முழுமையாகப் புகுந்துகொள்வார்கள். சினிமா எல்லாம் மறந்துவிடும். அவர்கள் மெல்ல மெல்ல வியாபாரிகளாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். மாரி முழுமையாகவே கடைத்தெருவுக்குள் வாழ்பவன்.

வணிகர்களில் பலர் திடீரென்று மாரடைப்பால் இறந்தனர். குறைவான உடலுழைப்பும் உச்சகட்ட உள அழுத்தமும் கலந்த வாழ்க்கை அவர்களுடையது. அது தெரிந்தாலும் என்னாலும் அந்த வாழ்க்கைக்குள் செல்லாமலிருக்க முடியவில்லை. கடைபூட்டியபின் மாகாளியப்பன் கடையில் எட்டு பரோட்டாவும் சிக்கனும் சாப்பிட்டுவிட்டு பாக்கு போட்டு குதப்பியபடி வீடு திரும்பினேன். மதியச் சாப்பாடு வீட்டில் இருந்து வந்துவிடும். இரவுணவு வயிற்றில் புளிப்பதனால் காலையில் ஒன்றும் சாப்பிடுவதில்லை. ஆனால் மதியத்திற்குள் எட்டுபத்து டீ ஆகிவிடும். கடைத்தெருவில் டீ குடிப்பதென்பது நடந்துகொண்டே இருக்கும். பஸ்ஸில் போகும்போது கம்பியை பிடித்துக்கொள்வதுபோலத்தான் கடைத்தெருவில் ஒரு டீ டம்ளரை பிடித்திருப்பது.

என் கடையை நான் உயிர்ப்பித்தாலொழிய அதை நல்ல விலைக்கு கைமாற்றமுடியாது என்று புரிந்துகொண்டேன். வியாபாரம் தெரியாத சண்முகம் மாமா சொன்னது பிழை. ஓர் இடத்தின் மதிப்பு அந்த விலையை தீர்மானிப்பதில்லை. அதன் கிராக்கிதான் விலை. எந்தப் பொருளுக்கும் அப்படித்தான். வியாபாரம் நடக்காத ஓர் இடம், அதன் உரிமையாளன் அதை கைமாற்றிவிடும் மனநிலையிலும் நெருக்கடியிலும் இருக்கிறான் என்றால், சில்லறைக்காசுக்குக்  கிடைக்குமா என்றுதான் பார்ப்பார்கள். அவனை மேலும் சோர்வுறச் செய்து, முட்டுச்சந்து வரை நெருக்கி சும்மாவே வாங்கிவிட முயல்வார்கள்.

ஒரு மாதத்தில் இருபதுபேர் வரை என் கடைக்காக வந்து என்னிடம் பேசினார்கள். எல்லாருக்குமே நான் வட்டிக்கு கடன் வாங்கியிருப்பது, அதன் நெருக்கடி தெரிந்திருந்தது. எல்லாருமே என்மேல் பெரிய அக்கறை கொண்டிருப்பவர்களாகவும், அந்த இடத்தின்மேல் பெரிய அக்கறை இல்லாதவர்களாகவும், வியாபாரத்தில் பெரிய லாபம் இல்லாமல் சலிப்புற்றிருப்பவர்களாகவும் பாவனை செய்தார்கள்.

“அப்பா நமக்கு வேண்டியவராக்கும்… நாப்பதாண்டு ஒண்ணுமண்ணா இருந்திருக்கோம். அதனாலே செரி, ரெண்டு லெச்சம்னா ரெண்டுன்னு பேசுதேன் கேட்டுக்கோ. இந்தக் காலத்திலே இந்தப் பளைய கடைக்கு அது ரொம்ப ஜாஸ்தி. இங்க வியாவாரம் பெரிசா வெளங்காது. அதான் உங்க அப்பாவும் உக்காந்துட்டாரு… செரி எடுத்துப்போட்டு வைப்போம். கடை இல்லேன்னா குடோன்… என்ன? ரெண்டுக்கு முடிச்சிருவோமா?”

நடராஜ நாடார் என் தோள் மேல் பிரியமாகக் கைபோட்டு பேசிக்கொண்டே போனார். பெரிய தொப்பை. தொங்கிய மோவாய். ஒரு கண் சற்று இறங்கியிருந்தது. கண்களுக்குக் கீழே கருவளையங்கள். பீடிபிடித்து கருமையான உதடுகள். நீர்ப்படலம் பரவிய வெண்விழிகள். நான் அவருடைய பாவனையை என்னையறியாமலேயே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். சலிப்பை நடித்து நடித்து முகத்தில் அந்த உணர்வு தசைவடிவமாகவே நிலைபெற்றுவிட்டிருந்தது. சலிப்புதான் வியாபாரிக்குரிய முகம். வாடிக்கையாளரைப் பார்க்கும்போது மட்டும் மொத்தப்பல்லும் வெளித்தெரியும் சிரிப்பு.

குறைந்தது இருபத்தைந்து லட்சம் நான் எதிர்பார்த்தது, அவர் இரண்டில் தொடங்குகிறார். ஆனால் நான் புன்னகையுடன் “நல்ல கணக்குதான் மாமா, நான் ஒரு வார்த்தை அம்மைகிட்ட கேட்டுட்டுச் சொல்லுதேன். மாமா நம்ம நல்லதுக்குத்தான் சொல்லுவீக… தெரியும்” என்றேன்.

அவர் கண்களில் வந்து சென்ற ஒரு நிழலசைவை கவனித்தேன். ‘பய தேறிட்டானே’ என நினைத்திருப்பார். “ஆமாமா, கேக்கணுமில்லா… நான் துட்டி விசாரிக்கக்கூட வரலை. எனக்க சின்ன மகளுக்கு பிரசவம்… ஒருநாள் அம்மைய பாக்க வீட்டுக்கு வாறேன்… நீ யோசிச்சுச் சொல்லுடே… வரட்டா…”

உண்மையை நான் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்துகொண்டேன். ஒன்று, நான் ஒரு வியாபாரத்தைத் தொடங்கியாக வேண்டும். இரண்டு, அதில் ஏற்கனவே வேரூன்றிய ஆட்களை சேர்க்கக்கூடாது. அவர்கள் பணம் தரவே மாட்டார்கள். கையில் பணத்துடன் வியாபாரம் செய்யும் ஆசையுடன் உள்ளே வரும் ஒருவனைத்தான் கண்டுபிடிக்கவேண்டும். அவனிடம்தான் இடத்தையும் வியாபாரத்தையும் கைமாற்றிவிடமுடியும். அல்லது அப்படி ஒருவனை நான் கண்டுபிடித்துவிட்டேன் என்னும் பாவனையாவது மேற்கொள்ளவேண்டும். இதே நடராஜ நாடாரிடம் நான் முப்பது லட்சம் வாங்க முடியும்.

சுடலைப்பாண்டி மாமா என்னிடம் அப்பாவின் ஏஜென்ஸியையே எடுத்து நடத்தச் சொன்னார். மருதப்பக் கோனார் என்னிடம் பாண்ட்ஸ் உட்பட நாலைந்து பிராண்டுகளின் சப்ஏஜெண்டாக  இருக்கும்படிச் சொன்னார். முடிவெடுப்பதற்கு முன் யோசிக்கவேண்டும் என மேலுமொரு மாதம் எடுத்துக்கொண்டேன். பொருட்களின் ஏஜென்ஸி எடுத்து எப்படி வியாபாரம் செய்கிறார்கள் என்று பார்ப்பதற்காக வெவ்வேறு ஏஜெண்டுகளைச் சென்று பார்த்து பேரம்பேசிக்கொண்டே இருந்தேன். உள்ளே செல்லச் செல்ல நிறைய கற்கவேண்டியிருக்கிறது என்று புரிந்தது.

ஆனால் மாதங்கள் சென்றுகொண்டிருந்தன. ஒரு பக்கம் வட்டி ஏறிக்கொண்டே இருந்தது. மேலும் ஆறுமாதம், என் கையில் இருக்கும் ஏழரை லட்சமும் வட்டியாக அவர்களுக்கே திரும்பச் சென்றுவிடும். ஆனால் அந்த நெருக்குதலுக்கு என் மனதில் கவனம் அளிக்கக்கூடாது. அவசரப்பட்டுவிடுவேன். அவசரப்படாதே அவசரப்படாதே என எனக்கே சொல்லிக்கொண்டேன். ஒவ்வொரு நாளும் டைரியில் அதை திரும்பத் திரும்ப எழுதினேன். ஒரு கட்டத்தில் என் அம்மாவே “என்னல செய்யுதே? இப்டியே வெட்டியா உக்காந்து தின்னா தெருவோட போகவேண்டியதுதான் கேட்டுக்கோ” என்றாள். நான் வெறுமே தலையசைத்தேன். அவசரமில்லை என்று எனக்கே சொல்லிக்கொண்டேன்.

என்னை மற்ற வியாபாரிகளிடமிருந்து பிரித்து நிறுத்திய ஒன்று இருந்தது. நான் படித்த பொறியியல்தான் அது. அது எனக்கு பொறியியலில் எதையுமே கற்றுத்தரவில்லை, ஆனால் அது ஒரு நவீனக்கல்வி. அந்தக் கல்வியில் இருந்து நான் அடைந்த ஒன்று எதையும் சீராக எழுதிக்கொள்ளும் வழக்கம். ஒரு பிராஜக்ட் ஆக என் திட்டங்களை காகிதத்தில் தொகுக்க முடிந்தது. காகிதத்தில் ஒன்றை எழுதும்போது ஒன்று தெரியும், நாம் மனதிலிருக்கையில் சோப்பு நுரை போல பெருகிக்கொண்டே இருப்பது எழுதியதுமே திரும்பவும் சோப்பாக ஆகிவிடுகிறது. இவ்வளவுதானா என்று தோன்றிவிடுகிறது. அதன்பின் புதுப்புது நுட்பமான கேள்விகள் எழுகின்றன. புதிய வழிகள் கண்ணுக்குப் படுகின்றன.

நான் என் பலம் என்ன என்று பார்த்தேன். ஒன்றே ஒன்றுதான், என் கடை அமைந்திருக்கும் இடம். அது சாலை ஒடிந்து திரும்பும் இடம். நாற்சந்தியின் மையம். வேறெந்த பலமும் எனக்கில்லை. அனுபவம், முதலீடு, கூட்டாளிகள், குடும்பத்தொடர்புகள், பழைய வியாபாரத் தொடர்ச்சி எதுவுமே இல்லை.  வியாபாரத்தில் அவையெல்லாம் மிக முக்கியமானவை. என் பலத்தை மட்டுமே நான் பயன்படுத்த முடியும். அதை மிக அதிகமாக பயன்படுத்தினாலொழிய நான் வெல்லமுடியாது.

அந்த இடத்தில் எழுபதாண்டுகளுக்கு முன் என் தாத்தா ஏஜென்ஸி தொடங்கியது இயல்பானது. ஏனென்றால் அப்பொருட்களுக்கு அன்று அவர் தன் கடைமுன் வைத்திருந்த வினோலியம் பெயர்ப்பலகை மட்டும்தான் ஒரே விளம்பரம். நீலத்தில் வெள்ளை நிறமான பழையபாணி எழுத்துக்களுடன் அந்த போர்டு அப்படியே இருந்தது. எஸ்.ஆறுமுகச்சாமி நாடார் அண்ட் கோ. அதைப் பார்த்தாலே ஒரு காலப்பயணம் செய்ய முடியும். பழைய சினிமாக்களின் போஸ்டர்களைப் பார்ப்பதுபோல.

முன்பு மற்ற கடைக்காரர்கள் அங்கே வந்து தாத்தாவிடம் பொருட்களை வாங்கிச் சென்றனர். அதற்கு அந்த மைய இடம் உதவியது. அன்றெல்லாம் காலை எட்டு மணிக்கு அவர் கடையைத் திறக்கும்போதே வாசலில் கூட்டமாக சில்லறை வியாபாரிகள் காத்து நிற்பார்களாம். நேரடியாகவே பொருட்களை வாங்கிக் கொண்டுசெல்வார்கள். அவர்கள் பொருட்களை வாங்கிக்கொண்டு செல்லும்பொருட்டு கொண்டுவந்த மாட்டுவண்டிகளும் குதிரைவண்டிகளும் அப்பால் நின்றிருக்கும்.

ஆனால் இன்று ஏஜென்ஸிக்களுக்கு அப்படி ஒரு மைய இடம் தேவையில்லை. விளம்பரம் செய்து பொருளை அறிமுகம் செய்யவேண்டியது மைய வினியோகஸ்தர்கள் செய்யவேண்டிய வேலை. அதை மும்பையிலும் சென்னையிலும் இருந்தே செய்தார்கள். ஏஜென்ஸி எடுப்பவர்களுக்கு தேவை பெரிய கொடவுன். அது ஊருக்கு வெளியே இருக்கலாம். ஊருக்கு வெளியே எளிதில் லாரிகள் சென்றுவரும் இடத்தில் இருப்பதே நல்லது. அடையாளமாக ஒரு கடையை நகரத்துக் கடைவீதியில் வைத்திருக்கலாம், அதுகூட அண்மைக்கால ஏஜென்ஸிகள் வைத்திருப்பதில்லை.

அந்த இடத்தை நான் பயன்படுத்தவேண்டும் என்றால் சில்லறை வணிகம்தான் செய்யவேண்டும். எழுபதாண்டுகளுக்கு முன் இந்தியாவில் கத்துக்குட்டி சோஷலிசம் இருந்தது. உற்பத்தியே இல்லை. ஆகவே பொருட்கள் கிடைப்பதில்லை. வினியோகஸ்தரின் அதிகாரமே செல்லுபடியாகும். பொருட்களுக்காக வணிகர்கள் கெஞ்சுவார்கள். வினோலியா சோப்புக்காக சில்லறை வணிகர்கள் என் தாத்தாவின் கடைமுன் கட்டிப்புரண்டிருக்கிறார்கள். இன்று உற்பத்தி பெருகி பொருட்களின் பல்வேறு வகைமாதிரிகள் சந்தையில் குவிந்துக் கிடக்கின்றன. இன்று சில்லறை வணிகன் தன் கடையை விட்டு நகரவேண்டியதில்லை. அவன் விரும்பியது தேடி வரும். விரும்பாததையும் அவன் தலையில் கட்ட கெஞ்சிக்கொண்டே இருப்பார்கள்.

நான் அங்கே பெண்கள் வாங்கும் உபயோகப்பொருட்கள்,  மற்றும் அழகுப்பொருட்களுக்கான ஒரு கடையை தொடங்கினேன். அப்படி ஒரு முடிவை எடுத்ததைப் பற்றி சுடலைப்பாண்டி மாமாவிடம் மட்டுமே சொன்னேன். அவர் அங்கே அவருடைய அப்பா காலத்தில் இருந்தே ஒரு சிறிய துணிக்கடையை நடத்தி வந்தார். பெரும்பாலும் உள்ளாடைகள்தான் அங்கே விற்கும். பழையபாணிக் கடை. தேக்குமர மேஜைகளும் மரத்தாலான ரேக்குகளும் கொண்டது.

என் கடையை நான் நவீனப்படுத்த வேண்டியிருந்தது.  உண்மையிலேயே நன்றாக விற்கும் பொருட்களுக்கு கனத்த முன்பணம் கட்டவேண்டும். அந்தப் பொருட்கள் கடையில் இருந்தால் முன்பணம் கட்டத்தேவையில்லாத பொருட்களையும் வாங்கி வைக்கலாம். புகழ்பெற்ற பொருட்களில் பெரிய லாபம் இல்லை. ஆனால்  வாடிக்கையாளர்கள் அவற்றிலொன்று வாங்கினால் புகழ்பெறாத பொருட்களில் ஒன்றையும் வாங்க வைத்துவிடலாம். அதுவே லாபமானது. என் கடை இருக்குமிடம் அத்தகையது, அது ஏற்கனவே முடிவுசெய்த பொருளை வாங்கும் வாடிக்கையாளர்கள் வரும் இடம் அல்ல. கண்ணுக்கு ஒரு பொருள் பட்டதுமே உள்ளே நுழைபவர்களுக்கான இடம். பெரும்பாலும் பெண்கள். அவர்கள் ஒன்றை வாங்க வந்தால் பத்துப் பொருட்களைக் கண்ணுக்குக் காட்டவேண்டும்.

எனக்கு முதலீடு தேவையாக இருந்தது. குறைந்தது இருபது லட்சம். வீடு சொத்து எதையும் அடமானம் வைக்க முடியாது, எல்லாமே ஏற்கனவே அடகில் இருந்தன. மீட்டு எடுத்து விற்றால் பணம் கிடைக்கும். ஆனால் வீடு என ஒன்று இருப்பதே முதலாளி என்னும் அடையாளத்தை அளிக்கிறது. அதை விற்றுவிட்டால் அது ஒரு செய்தியாகிவிடும். அதுவே என்னை கீழே தள்ளிவிடும். எங்கோ என்னிடம் பணமிருக்கிறது என்ற தோற்றம்தான் எனக்கு இப்போது தேவை.  நான் செவத்தபெருமாளிடம் மீண்டும் பணம் வாங்க முடிவெடுத்தேன்.

அந்த எண்ணம் எனக்கு முதலில் வந்தபோது மின்னதிர்வு போல ஒன்று உருவானது. நடுக்கம், பதற்றம். ஆனால் மறுகணம் ஒரு கிளர்ச்சி தோன்றியது. ஒரு ஆழமான மலைவிளிம்பில் ஒற்றைக்காலில் நிற்பதுபோன்ற உணர்வு. என் வாழ்க்கையில் அதுவரை அப்படியொரு உச்சநிலையை நான் அறிந்ததே இல்லை. இரண்டு நாட்கள் அந்த எண்ணத்தையே மீட்டிக்கொண்டு நிலைகொள்ளாமல் அலைந்தேன். எப்போதும் வயிறு அதிர்ந்துகொண்டிருந்தது. தொண்டை அடைத்ததுபோல் இருந்தது. அதன் ஆபத்துகள் எல்லாவற்றையும் நான் முழுமையாக யோசித்துவிட்டேன். நான் அழியநேரிடலாம். குடும்பத்துடன் சாகநேரிடலாம். ஆனால் என்னால் வேறொரு திசைக்கு இனிமேல் நகர முடியாது. சில முடிவுகளை நாம் எடுப்பதில்லை. அந்த முடிவுகளை நோக்கி நாம் விழுகிறோம்.

(மேலும்)

முந்தைய கட்டுரைஅம்மன்கிளி
அடுத்த கட்டுரைகோடை