காந்தி, காந்தியம் குறித்து பல புரிதல்களை உங்கள் எழுத்தின் மூலம் பெற்றுள்ளேன். காந்தி காந்தியம் குறித்து உங்கள் தளத்தில் பேசபட்ட பல புத்தகங்களை தேடி வாசித்துள்ளேன். குறிப்பாக தற்காலத்தில் நம்மிடையே வாழும் பல காந்தியர்கள் குறித்தும் அவர்களின் செயல்கள் நீங்கள் எழுதியுள்ளீர்கள் அறிமுகபடுத்தியுள்ளீர்கள். அவ்வாறு “இன்றைய காந்திகள்” புத்தகத்தின் மூலம் எனக்கு அறிமுகமானவர் தான் சோனம் வாங்ச்சுக். லடாக்கில் கல்வி,சுற்றுசூமல்,காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல் என பல தளங்களில் இயங்கிகொண்டிருப்பவர். “பனி ஸ்தூபிகள்” மூலம் வறட்சி வெள்ளம் இரண்டையும் எதிர்கொள்ள வழி வகை செய்தவர்.
இவர் கடந்த 16 நாட்களாக -8 டீகிரியில் உண்ணாவிரதத்தில் இருக்கிறார்.இவருடன் பல நூறு மக்கள் இந்த உண்ணாவிரதத்தில் இருக்கின்றனர். லடாக்கின் அரசியல் உரிமைகள் குறித்தும் , அது தொடர்பாக அங்கு கட்டற்று அனுமதிக்கபடும் வளங்களின் சூரையாடல்,சுற்றுசூழல் அழிவு குறித்தும் கோரிக்கைகளை முன்னிறித்து இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
தற்போதய அரசு எத்தனை உயிர்கள் உண்ணாவிரதத்தில் இறந்தாலும் கண்டுகொள்ளாத ஒரு நிலையில் உள்ளது.அதுவும் நாட்டின் ஒரு மூலையில் நடைபெறும் இந்த நிகழ்வு பெரிதாக கவனம் பெறாத நிலையில் அரசு செவி சாயக்குமா என்பது சந்தேகமே . குறைந்தைபட்டசம் பேச்சு வார்த்தையை துவங்கி உயிரிழப்பில்லாமல் முடிய வேண்டும் அல்லது உண்ணாவிரத போராட்டம் 21 நாள் சுழற்சி முறையில் நடைபேற வேண்டும் என்று விழைகிறேன்.
இந்த நிகழ்வு மீண்டும் என்னை நம் சமகாலத்தில் கங்கைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த சாதுக்கள் நிகமானந்தா[2009] ,ஜி.டி அகர்வால்[2018] ,
மற்றும் 2019ம் ஆண்டு 194 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ஆத்மபோதானந்தர் ஆகியோரை நினைத்து கலங்க வைத்தது.
காந்தியம்,அறவழி போராட்டம், உண்ணாவிரதம் இருந்து உயிர்துறத்தல் ஆகியன தற்போதைய அரசு,அரசியல்வாதிகளிடம் எடுபடுமா என்ற கேள்வியுடனே மீண்டும் தளத்தில் வந்த “நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு” [https://www.jeyamohan.in/120989/] மற்றும் அது சம்மந்தப்பட்ட கட்டுரைகளை படித்தேன். ஸ்டாலின் பாலுச்சாமி ஆத்ம்போனந்திடம், “இவ்வளவு பெரிய அரசதிகாரத்தை எதிர்த்து நின்று போராடினாலும்கூட, இறுதியில் இது தோற்றுப்போகும் என உறுதியாகத் தெரிந்த பின்பும், எப்படி உங்களால் இத்தனை எளிமையாக உயிரைத்தர முடிகிறது?” எனக் கேட்டான். அதற்கு அவர் சிறுபுன்னகையுடன், “இந்த உடல் எப்படியானலும் அழியக்கூடியதுதான். ஆனால் இந்த ஆத்ம மனமும், அது சுமந்திருக்கும் நோக்கங்களும் ஒருநாளும் அழியாது. நம்மைச் சுற்றிய காற்றில் அது பெளதீகமாகக் கலந்திருக்கும். என்றாவதொரு நாள் யாராவதொரு மனிதன் அந்த ஆன்மாவைப் பற்றிக்கொண்டு எழுவான். நிகமானந்தாவின் ஆத்மாவை ஜி.டி.அகர்வால் பற்றிக்கொண்டு போராடினார். நான் அவ்விருவரின் ஆத்மாவையும் பற்றிக்கொண்டு போராடுகிறேன். எனக்குப்பின் யாரோ ஒருவரில் இதே நோக்கத்தை ஏந்தி என் ஆத்மா எழும். என்றாவதொருநாள் இந்த கங்கை தூய்மையாகும்; குழந்தைகளுக்காகச் சுரக்கும் தாய்ப்பால் போல இத்தண்ணீரும் மாறும்” [https://www.jeyamohan.in/164183/].
ஆம், அறவழி போராட்டங்கள் ஒரு தொடர் ஓட்டம் போல. ஆரம்பித்தவரும் இறுதியில் ஓடி முடிப்பவரும் வேறு நபர்கள். ஆனால் அந்த வெற்றி ஓடிய,ஓடாத,வேடிக்கை பார்த்த, எள்ளல் செய்த,கால்களை இடறிவிட்ட அனைவருக்குமானது.
நன்றி
பிரதீப்