முதல்கதவம்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

 

வெண்முரசு வாசிப்புக்கான அறிவிப்பை அட்மின் வெளியிட்டபோது, தயங்கி, பின்வாங்கி, விலகி நின்றேன். பிறிதொரு நாளில், முதற்கனல் எனும் முழு நூலையும் படித்து விட்டுப் பதிவுகளால் குழு நிறைந்திருந்த அன்றும், அவற்றைப் படித்துப் பின்னூட்டங்கள் இட்டு நகர்ந்து சென்றேன். மீண்டும் மீண்டும் குழுவில் இதைப்பற்றிய பேச்சுக்கள் நேரடியாகவே வந்து கொண்டிருந்த ஒரு பின்னிரவு நேரம், இதற்கு மேலும் என்னால் விலகி நிற்க முடியாமல் வந்து சேர்ந்து விட்டேன். வெண்முரசு என்ற முழுத் தொகுப்பும், மொத்தப் பக்கங்களின் எண்ணிக்கையுமே போதும், அதன் பிரமிப்பை நமக்குள் கடத்திவிட.

நமது நாட்டின் இரு பெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தை தமது கற்பனை வளத்தாலும், கூரிய சொறபிரயோகத்தாலும், தனது நடையில் பிரம்மாண்டமாகச் செதுக்கி இருக்கிறார், எழுத்தாளர் ஜெயமோகன். இந்த மகாபாரத இதிகாசம் என்ற மரத்தின் மீதுள்ள கிளைகளாகப் பல்வேறு கிளைக்கதைகளை எத்தனையோ பேர், எத்தனையோ வகையில் எழுதிப் பார்த்து இருந்தாலும், அந்த மரத்தின் அடிவேரைப் பற்றி, அதன் அடியாழத்தில் உள்ள கிளை வேர்களைத் தேடிச் சென்று இருக்கிறார், ஆசிரியர். அவ்வாறு அவர் சென்ற ஆழம் பாதாளம் வரை நீள்கிறது. அங்கிருக்கும் நாகங்கள், அந்த நாகர் குலத்தின் தோற்றம் முதல் தொட்டுத் தொடங்கியிருக்கிறார். அதற்குச் சான்று: “அந்த முதல்நாகத்துக்கு பெயர் இருக்கவில்லை. ஏனென்றால் அதை அழைக்க எவரும் இருக்கவில்லை” எனும் பதமே.!!

இவ்வாறு தொடங்கிய முதற்கனல் என்ற முதல் நூலை, குழு நண்பர்கள் ஒருநாளைக்கு ஒரு அத்தியாயமாக வாசித்திருந்த போது, இந்தக் குழுவில் கடைசியாக வந்து சேரும் நான், தொடர்ந்து ஒரே மூச்சில் வாசிக்க வேண்டிய நிர்பந்தம் கொண்டவனானேன். இதனால், இந்தக் கிளைக்கதைகளின் சரடுகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய் கையில் பிடித்துக் கொண்டு, ஓட்டமும் நடையுமாக பயணிக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு அத்தியாயமும் நிறைவடையும் போது, அதனை மனதிற்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டே வேகமெடுத்தேன்.

தட்ச பிரஜாபதிக்கு பிறந்த அறுபது மகள்களில் ஒருத்தியான, கஸ்யபன் மணந்த கத்ருவே நாகர்குலத்தின் ஆதியன்னை என்று நாகங்களின் தொடக்கதைத் தன் மகன் ஆஸ்திகனுக்குச் சொல்லும் மானசாதேவி, அந்த ஆதியன்னை தனது பிள்ளைகளுக்கு அழிவில்லாமல் இருந்து கொண்டிருக்கும் இச்சையை குணமாகக் கொடுக்குமாறு வேண்டுவதையும் சொல்கிறாள்.

அவ்வாறே, காமமும் அகங்காரமும் ஆகிய ஆதி இச்சைகளின் வடிவங்களாக மாறிய நாகங்கள் உருவாக, இந்த இச்சைகளை வென்றவனை நாகங்கள் நெருங்க முடியாது என்று வைசம்பாயணர் சொல்லும்போது, அவற்றின் வரம்புகளையும் நினைவுபடுத்துகிறார். ஆனால், நாகங்களின் சாபத்திற்கு இரையாகக் குருவம்சமே மாண்டுகொண்டு இருக்கும் போது, மன்னன் ஜனமேஜயன் நடத்தும் சர்ப்பசத்ர வேள்வியினைத் தடுக்கச் செல்கிறான், சிறுவனான ஆஸ்திகன்.

இவ்வாறு தொடங்கப்பட்ட இந்தக் கதை, தொடர்ந்து மனிதர்கள் மட்டுமின்றி, ஊர்கள், நதிகள், பறவைகள், விலங்குகள், ஊர்வன, என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு புதிய பெயர் கொண்டு, (அதிலும் ஒரே உயிரின் முன் ஜென்ம பெயர் “சித்ரகன்”, இந்த ஜென்மப் பெயர் “சித்ரகர்ணி” என அவற்றிலும் வெவ்வேறு பெயர்கள்) எனப் பெயர்களுக்கே எவ்வளவு உழைப்பைக் கொடுத்திருக்க வேண்டும் என எண்ணி மலைத்து நிற்கிறோம்.

சாபமும் விமோசனமும் நிறைந்த வாழ்வை, இந்தக் கதைகள் திரும்பத் திரும்பப் பேசி வந்திருக்கின்றன. அது நாகங்களின், கன்னிகளின், குலங்களின், குருக்களின், அன்னையரின், பிள்ளைகளின் சாபங்களாக கதை முழுதும் தனது கைகளை விரித்து, அதன் மாந்தர்களை பகடையாக்குகிறது. ஆசிரியரோ, மகாபாரதத்தை இயற்றிய வேத வியாசரையே ஒரு கதாபாத்திரமாக்கி, குருக்ஷேத்ரத்தில் இருந்து விலகி விலகிச் செல்லவும், பீஷ்மருடன் உணர்வுப்பூர்வமாக உரையாடவும் வைக்கிறார். தனக்குத் தனையனாக மகாவியாசரை வணங்கி நிற்கும் பீஷ்மரிடம், “ஞானம் என்பது அடைவதல்ல, ஒவ்வொன்றாய் இழந்தபின்பு எஞ்சுவது….பொறு நீ சேர்த்துக்கொண்டவை எல்லாம் உன்னைவிட்டு ஒழுகிமறையும் நாள் ஒன்று வரும்” என்று சொல்லும் நேரம், தனது ஞானத்தைப் பற்றி எண்ணும் பீஷ்மரை, நம்மாளும் உணர்ந்து கொள்ள முடிகிறது.

மனிதர்கள், மன்னர்கள், பறவைகள், விலங்குகள், நாகங்கள் என ஒவ்வொருவரின் புகழையும் சூதர்களின் பாடல்கள் வழியே உணர்த்திச் செல்லும் உத்தி மூலம் அந்த நினைவுகளில் நம்மையும் அழைத்துச் சென்று கதை சொல்கிறார். சூதர்கள் தவிர, குகர்களும் தங்கள் பங்கிற்குப் பாடல்கள் மூலம் பழங்தைகளை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கின்றனர்.

தட்சனின் சர்ப்பசத்ர யாகம் அத்தியாயம், நாம் காஞ்சியில் பார்த்த கட்டைக் கூத்தில் நடந்த தட்சயாகத்தை நினைவு படுத்தியது. பீமசேனன் தனது மகள்களின் சுயம்வரத்தில் தான் நினைத்தது போல சுயம்வரம் நடக்குமா என்று சிற்பியிடம் கேட்கும்போது, சூதர்கள் தட்சாயணியின் கதையைப் பாடியதைப் பற்றி சொல்லி விட்டு சென்று விடுவதை, நமக்கும் குறிப்பால் உணர்த்தி விட்டுச் செல்கிறார், ஆசிரியர்.

அம்பையின் கோபமும், பீஷ்மரின் வருத்தமும், கங்கை நதியில் கலந்துவிட்ட நேரம், அவர்கள் படகினைப் போலவே, நமது மனதும் சற்று அலையடித்து ஆடியது. ராட்சச முறைப்படி பெண்ணைக் கவர்வது என்ற புதிய காட்சியை பீஷ்மர் முன்னெடுக்கும் போது, அவரைத் துரத்திச் சென்ற ஒரே மன்னன் என்ற புகழை, சூதார்களின் பாடல்கள் வழியே அடைய நினைக்கிறான், சால்வன். அந்நேரம், அம்பை அவனைப் பார்த்து “சூதர்களின் பாடலில் ஓடும் சிரிப்பைக் கூட புரிந்து கொள்ளாத நீ, என்னை எப்படி புரிந்து கொள்வாய்” என்று கேட்கும் கோபக் கேள்வி, ஏமாற்றத்தையும், ஏளனத்தையும் ஒன்றாகக் காட்டுகிறது. அதே போல, “சூதர்களின் பாடல்களில் இடம்பிடிக்க உங்களையே பலிகொடுக்கிறீர்கள்” என்று பீஷ்மரிடம் பொங்கும் நேரம் அவள், வேறொரு அம்பையாகி நிற்கிறாள்.

“அரச விளையாட்டுகளின் அர்த்தங்கள் சிக்கலானவை இளவரசி” என்று சால்வனின் அமைச்சர் சொல்லும் போது, அதன் முழு அர்த்தமும் தாங்கி நிற்கிறது இதன் பிறகான கதை நகர்வுகள். அம்பையின் கனவிலும் கனலிலும் கூட நாகங்கள் நிறைந்து இருக்கின்றன.. நாகத்தையும் அதன் விஷத்தையும், காமத்திற்கும் இச்சைக்கும் உவமைப்படுத்தும் ஆசிரியர், “நாகங்கள் இல்லாத தோட்டம் காமம் இல்லாத மனம்போல” என்று பொருள் தருகிறார். இந்த நாகங்கள் மீது இந்தக் கதைகளுக்கு என்னதான் ஆர்வமோ, நாகம் இல்லாத ஒரு அத்தியாயம் கூட இல்லை, எனலாம். நாகத்தில் தொடங்கி, நாகத்திலேயே முடிக்கிறார், இந்த முதற்கனலை. கதைகளின் சரடுகளில், முத்துக்களைக் கோர்த்துக் கொண்டே வருகிறது, ஓவியர் ஷண்முகவேலின் ஆர்ப்பரிக்கும் ஓவியங்கள். குறிப்பாக, பீஷ்மரின் சிறப்பான உருவத்தையும், அம்பையின் நெருப்பான கோபத்தையும் ஒற்றைக் களிற்றின் முன் நிற்கச் செய்த அந்த ஓவியம் ஒன்றே போதும்.

அரசுகள் நெறிகளால் ஆளப்படுகின்றன. உணர்ச்சிகளால் அல்ல என்று அம்பைக்கு அறிவுரை கூறும் அமைச்சன், அவளது தந்தை பீமசேனன் தன் மக்களுக்காவே இதைச் செய்கிறான் என்பதை, அவளால் துளியளவும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தனித்து நிற்கும் அம்பையுடன் மூன்று தேவதைகளான சுவர்ணை – குழந்தைப் பருவத்திலும், சோபை – கன்னிப் பருவத்திலும், விருஷ்டி – தாய்மைப் பருவத்திலும் கூட இருப்பதாகச் சொல்லும் கற்பனைகள் உன்னதமானவை, உயிர்ப்பானவை, இரசிக்கத்தக்கவை..!!! அம்பையின் பெருங்கோபம் அவளுக்கு ஒரு வகையான விடுதலையை அளித்தது என்றால், அதன் பிறகான அவளது தாய் புராவதியின் துறவறம் அவளுக்கு வேறொரு வகையான விடுதலையை அளித்தது. இவ்வாறு, ஒவ்வொரு பெண்ணும் தனக்காகத் தேடிச் செல்லும் விடுதலையை, கதைமுடிச்சுக்களின் ஒவ்வொரு அவிழ்ப்பிலும் உணர முடிகின்றது. அதற்காகவே, அவள் மனம் ஏங்குகிறது.

அஸ்தினபுரியின் ஒவ்வொரு இளவரசனும் தேர்ந்தெடுக்கப் பட்ட முறை அசாதாரணமாகவே இருந்து வந்தது. இது, சந்தனுவின் முறையிலும் அப்படியே..!! அன்னையின் அண்மையை இளமையில் அறிந்திராத சந்தனு, பின்னாளில், தன் பிள்ளையின் கைகளில் குழந்தையெனத் தவழ்ந்து, அன்னையின் அரவனைப்பைப் பெறுகிறான் என்பது, அவன் வாழ்வின் மிகச் சிறந்த தருணமாக மாறுகிறது. அதுவே, அவர் அடுத்தக் காதல் கொள்ளத் தேவையான உறுதியைத் தருகிறது. மீண்டும் ஒரு காதல் சத்தியவதியுடன், மீண்டும் நிபந்தனை அவள் தந்தை தசராஜனிடம் இருந்து, மீண்டும் பிரிவு நிபந்தனையை ஏற்காததால், மீண்டும் நோய் சத்தியவதியுடனான காதலைப் பிரிந்ததால்..!!! அரசர்கள் தங்கள் வாழ்க்கையை இப்படித்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.

ஒரு அரசன் தான் எடுக்கும் ஒவ்வொரு காரியத்திற்கும் எதோ ஒரு காரணம் இருப்பதாகவும், அதற்குப் பின்னால் ஒரு கதை இருப்பதாகவும், அந்தக் கதையிலும் ஒரு சாபமே இருந்து வந்தது என்றும், இந்தப் பின்னல்கள் சிக்கலின்றி, நூல் முழுதும் ஆழமான வேர்களெனப் பின்னப்பட்டுள்ளது.

இத்தகைய மகாபாரதக் கதையின் பழமையையும், அது சென்றடைந்த நீட்சிகளையும் அறிந்த பின்பும், ஏற்கனவே பரிட்சயமான இப்பெருங்கதையை, ஆசிரியர் மீண்டும் எழுதிப் பார்த்து ரசிப்பது என்பது சுவாரசியமான சவால். அதன் ஒரு பகுதியான இந்தக் கூட்டு வாசிப்பில், நானும் இணைந்து பயணிக்கிறேன் என்பது, இன்னமும் பிரமிப்பாகவே இருக்கிறது.

சங்கர் டி.ஏ.பி

வாசிப்பை நேசிப்போம் 

முந்தைய கட்டுரைஒரு தனித்த புரவி
அடுத்த கட்டுரைகாட்டை வென்றவன் – கடிதம்