கல்வி, கடிதங்கள்

கல்விச்சூறையாடல்

கல்வி, ஆசிரியர்- விவாதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

கல்விச் சூறையாடல் கட்டுரை குறித்தும், அவற்றிற்கு லோகமாதேவி அவர்களின் கருத்து முன்வைப்பும் கல்வியின் சிக்கலை கண்முன் காட்டுகிறது. கடந்த பதினாறு பதினேழு வருடங்களாக இதே சூழல்தான் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நிகழ்கிறது. அதை அக்கல்வி நிறுவனங்கள் ஒருபோதும் பெரிதாக எடுத்துக் கொண்டது இல்லை. 

ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஊதியம், மாணவர்கள் கற்றல் நிலை இவையெல்லாம் தாண்டி, கல்வி நிறுவனங்கள்  ஆவணங்களைத் தயார் செய்து, தரவரிசைப் பட்டியலில்  தங்கள் நிறுவனங்களை முதலிடத்தில் தக்கவைப்பதைதான் தலையாய கடமையாக கருதுகிறார்கள். நான் வகுப்பறையில் மாணவர்களிடம் அடிக்கடிகல்விஇந்த ஒற்றைச் சொல் முன்னெடுக்கும் விசயம்தான் என்ன என்ற கேள்வியை எழுப்பும் போதெல்லாம் அவர்களின் மனக் குமுறல்கள் வெளிப்படுவதை ஒற்றைவரியில் சொல்லிவிட முடியாது. 

கல்வியும், பட்டங்களும் இருக்கின்றன. படித்தவர்கள்? அனுபவங்களையும், கண்டுபிடிப்புகளையும், சாதனைகளையும் ஆராய்ச்சிகளையும் எடுத்துச் செல்லும் பாங்கும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. இந்தக் கேள்விக்கான ஆழத்தை நோக்கும் போதுமொழிஅங்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. அவற்றிற்கான முடிச்சுக்கள் அகற்றப்படாமல் இருப்பின் தொடர்ந்து இந்தச் சூறையாடல் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். 

நன்றி 

ஜெயந்தி கார்த்திக் 

*

அன்புள்ள ஜெ

 கல்வி எத்தனை அவசியம் என்பதை நன்கு அறிந்த எவரும் தற்போது ஆசிரியர் பணிக்கு வருவதில்லை போலும்.

என் வீட்டின் அருகில் வசிக்கும் 10க்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்வியை நாளும் பார்க்கிறேன். 2ம் வகுப்பில் இருந்து 11ம் வகுப்பு வரை பயில்பவர்கள். ஒருவருக்கு கூட எழுத்துக் கூட்டி வாசிக்கத் தெரியவில்லை தமிழும் சரி, ஆங்கிலமும் சரி. பிழை இல்லாமல் எழுதவும் தெரியவில்லை.

என்னவென்று இந்த கல்வியை சொல்வது. நடுத்தர கல்வி அளிக்கும் பள்ளி முதல் உயர் கல்வி அளிக்கும் பள்ளி வரை இதே நிலை தான்.

 ( நடுத்தர பள்ளி என்பது ஆயிரக்கணக்கில் கட்டணம் வாங்குவது, உயர் பள்ளி என்பது லட்சக்கணக்கில் கட்டணம் வாங்குவது)

ஒரு வகுப்பில் குறைந்தது முதல் 5 ரேங்க் மாணவர்கள் தவிர அனைவரும் இருக்கும் நிலை இது தான் ஆசானே

மொழி பாடம் தவிர்த்து கணிதம், அறிவியல் என்றால் மிக மோசமான நிலையிலேயே அனைவரும் உள்ளனர்.

இதையெல்லாம் விடுத்து பள்ளியில் உகந்த ஆளுமை என ஆசிரியர் யாரேனும் உள்ளனரா என்றால் அதுவும் இல்லை. ஒவ்வொரு ஆசிரியர் பற்றியும் குறைகளும், வசைகளுமே உள்ளன.

படிப்பு, விளையாட்டு, நண்பர்கள், ஆசிரியர்கள் என சூழலில் உயிரே இல்லாத பள்ளி குழந்தைகளை பார்த்துக் கொண்டே இருக்கிறேன் ஆசானே

தற்போது என் மகனுக்காக LKG சேர்க்க பள்ளி தேடினேன். மாநில கல்வி தரும் நடுத்தர பள்ளி போதும் என என் எண்ணம்.

உயர் பள்ளிகள் அனைத்தும் மத்தியதர படிப்பு (CBSE) அல்லது உலகத்தர படிப்பு (IGCSE) தருபவை. நடுத்தர பள்ளிகளில் மாநில படிப்பில் சேர்க்கலாம் என்றால் அவையும் CBSE ஆக இந்த வருடம் முதல் முன்னேற்றம் அடைந்துள்ளனவாம்.

CBSE ன் துவக்க வயது 4. அதாவது 31.03.2020 முதல் 30.09.2020 வரை பிறந்த பிள்ளைகளை மட்டுமே LKG சேர்க்க வேண்டும் என்பது சட்டமாம்.

என் பள்ளி தொடங்கும் கனவு இப்போது வரைவு வடிவிலேயே உள்ளது. செயல் தொடங்க இன்னும் ஈராண்டு அவகாசம் தேவை ஆசானே. அப்படி ஒரு பள்ளியை என் மகனுக்கு கொடுக்க முடியாத வருத்தம் எனக்குள் நிரம்பி கிடக்கிறது.

என்ன செய்து எந்த கல்வியை அவனுக்கு அளிக்க இயலும்.

அடிப்படைகள் மட்டுமே கற்க வேண்டிய வயதில் அனைத்தையும் திணிக்கும் கல்வி சட்டமிடமிருந்து யார் காக்க இந்த பிள்ளைகளை

கல்வி சூறையாடல் மட்டுமல்ல ஆசானே.. கல்வியே போதிக்கப்படுவதில்லை.. வெறும் மொட்டை மனனம் தான்.. மனனம் செய்ய தெரியாதவன் அடி முட்டாள்..

கற்பனை இருப்பவன் பள்ளிக்கே தேவை அற்றவன்..

சரண்யா 

முந்தைய கட்டுரைஇரு பலியாடுகளின் கதை – கடிதங்கள்
அடுத்த கட்டுரைசுகதகுமாரி