இமைக்கணக் காட்சி

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

அன்புள்ள ஜெ,

சில தினங்களுக்கு முன் நீங்கள் தளத்தில் வெளியிட்டிருந்த காணொளியில் இமைக்கணக் காட்சியை பேசி நடித்திருந்தது நான்தான்.

நான் உங்கள் நெடுநாள் வாசகன். புறப்பாட்டிலிருந்து தொடங்கி பதிமூன்று வருடங்களாக பின்தொடர்ந்து வருகிறேன். விழாக்கள் முகாம்களில் கலந்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கு முன்னர் சில கடிதங்கள் எழுதியுள்ளேன். ஹைதராபாத் பல்கலையில் Translation Studies துறையில் இலக்கியத்தில் வெண்முரசின் ஒட்டுமொத்த கட்டமைப்பு, மீள எழுதும்தன்மை சார்ந்து ஆய்வு செய்து வருகிறேன்.

உங்களுக்கு எழுதுதல்தொடர்ந்து எழுதுதல், மனதில் இருக்கும் அனைத்தையும் எழுதுதல் என்பது நீண்ட நாட்களாக எண்ணப்படும் ஒத்திப்போடப்படும் செயல்களில் ஒன்று. நீங்கள் எனக்கு யார் என்பது உங்களுக்கும் கூட என்னால் கூறஇயலும் எனத் தோன்றவில்லை. ஆனால் மறுபுறம் அதை நானே உண்மை என உணரும் ஈட்டிக்கொள்ளும் இடத்தில் இருந்துகொண்டிருக்கிறேனா என்பதும் கேள்வி. சில வாழ்க்கைச் சூழல்கள் அரதி தனிமை அச்சம் ஆகியவை வழியாக வேறுசில திசைகளில் இருளில் சிலதூரம் வந்துவிட்டதாக உணர்கிறேன். இலக்கியத்திற்குள் நுழைந்தபோது இருந்த கனவுகள் விழைவுகள் சில உருமாறியிருக்கின்றன.  அனைத்தையும் சொல்ல இயலுமா என்றும் சொல்ல வேண்டுமா என்றும் தோன்றுகிறது. கையில் ஒளி என்றும் சிலவற்றை சேகரித்திருக்கிறேன். இந்தக் கடிதம் உங்களுடனான உரையாடலின் ஒரு தொடக்கமாக அமைய வேண்டும், என்னிடம் நானே வேண்டிக்கொள்வது இப்போதைக்கு அது மட்டுமே

*

நாடகாந்தம் கவித்வம்என்ற வரி எனக்கு மிகப்பிடித்த, அடிக்கடி நினைத்துப் பார்க்கும் வரிகளில் ஒன்று. நாடக உச்சமே கவிதை என்பது பலவகைகளிலும் நினைக்க நினைக்க பரவசம் கொள்ளச் செய்வது. முழுதுமாக விளங்கிக்கொள்ள முடியாததும். விசை என ஒன்று உருத்திரள்கையிலேயே அந்தப் பரவசம் தொடங்கிவிடுகிறது. விசைகள் பல நேரெதிர் வருகையில் அவைகொள்ளும் முயக்கம், அதன் படிநிலைகளின் உருமாற்றம்உச்சத்தில் துலங்கிவரும் மலர், குருதித்துளி, அல்லது மணி. அரிதாக மூன்றும்.

மேலும் துலக்கமாக கம்பன் வாசிப்பிற்கு பிறகு அடிப்படையில் கதைகளின் நாடகங்களின் வாசகன் என்றே என்னை உணர்கிறேன். இலக்கியம் என்பதே அடிப்படையில் பொருளுள்ள நாடகமாக வெளிப்படும் கதை என்றும். ஒருவகையில் நவீன, தற்கால இலக்கியங்கள் சிலவற்றிலிருந்து ஒரு தொலைவை இது உருவாக்குகிறது என்பதும் மறுப்பதற்கில்லை. கதையோ நாடகமோ இன்றி வெறும் தகவல்களும் பேசுபொருள் சார்ந்த அவதானங்களும் கொண்டு நல்ல மொழிவழியாக மீட்டப்படும் உலகை அளிக்கும் எழுத்துக்களும் சிறந்த இலக்கிய அனுபவங்களாகின்றன. உங்களின் நாகர்கோயில் இயற்கைக் குறிப்புகள்லோகமாதேவியின் கட்டுரைகள் போல. ஆசிரியனும் பாடுபொருளும் மட்டுமன்றி பிறிதேதும் இல்லாத ஒரு வெளியை அவை அளிக்கின்றன. சமயங்களில் ஆசிரியன் கரைந்து பாடுபொருள் மட்டும் அங்கிருக்கும் அனுபூதியையும்நுரைச்சிரிப்பு, செவ்வல்லியின் நாள் போன்ற கட்டுரைகளை அவ்வப்போது மொழிக்காகவே வெறுமனே பிரதி எடுப்பதும் மனனம் செய்வதும் உண்டு.

ஆனால் நாடக வடிவம் தொன்மையானது. இலக்கிய ஆக்கத்தை உருத்து எழுந்து விரியும் வன்மை கொண்டது. எது நாடகத்தின் மீதான பிரியத்தை உருவாக்கியது என சொல்லத் தெரியவில்லை. என் தலைமுறையினர் பள்ளியில் அனைவரும்ஏழை படும் பாட்டின்ஒரு கதை வடிவத்தை அறிந்திருப்போம். ஆனால் கல்லூரியில் கண்ட Les Miserables (musical) திரைப்படம் முதன்முறை பார்க்கையில் ஏதோ புதிதென்ற விசித்திர உணர்வை அளித்தபிறகுமேலும் பன்முறை அதைப் பார்க்கத் தூண்டியது. அங்கிருந்து அதன் மேடை வடிவத்துக்கும் சென்றேன். இப்போதும் நல்ல நடிப்பின் மீதானஇசைநாடகம் மீதான பிரியத்துக்கு இது காரணம்  என நினைக்கிறேன். பிள்ளைக்காக தன் அணியை பற்களை கூந்தலை விற்று பரத்தையாக மாறிய Fantine இரவின் தனிமையில் தான் கனவுகண்ட வாழ்க்கையிலிருந்து மிக விலகி வேறு ஏதோ ஒன்றாக இருப்பதைச் சொல்லி கண்ணீர் உகுக்கும் தன்னுரைஒவ்வொருமுறையும் தப்பி ஓடி சகஜ வாழ்க்கைக்கு மீளமுயலும் Valjeanஐ கைது செய்ய கற்பாறை போன்ற Javert துரத்தி வரும் இடங்கள்முகச்சுளிப்பும் அங்கதமும் கலந்த Thenardier குடும்பம் என, (கணிணித்திரையில்தான் என்றாலும்) பிரம்மாண்டமான அரங்கில் அத்தனை இசைக்கலைஞர்களும் வாத்தியங்களும் சூழ அது நிகழ்ந்து முடிகையில் உண்கண் கொண்ட மையிழிய அனைவரும் எழுந்து கைதட்டினர். இலக்கியம் என்னவாக எல்லாம் ஆக இயலும் என நான் உணர்ந்துகொண்ட நாட்கள்.

பின் கம்பன் வாசிப்பு தொடங்கியபோது மனம் செவ்வியல் இசை, பண்ணிசை என கதகளி வரை வந்தது. கதகளி நாடகத்தில் முழு அருவமாக்கல் நோக்கிய ஒரு உலகை திறந்து வைத்துள்ளது எனத் தோன்றுகிறது. களிநிகழ்கையில் நடிக்கப்படுகையில் அந்த சிறிய அரங்கிலும் முத்திரைகள் வழியாக அது உருவாக்கும் வேறொரு பெரிய அரங்கிலும் இருக்கிறேன் என நினைத்துக்கொள்வேன். சடாயு வதம் கூடியாட்டத்தின்போது அரங்கில் முகம் மறைத்து மெல்ல வந்து நின்ற இராவணன் முகம் காட்டி அணுகும் ஒன்றின்  தூரத்து ஒலியை கேட்கும் எண்ணத்துடன் சுட்டுவிரல் பொறுத்து செவிகூர்ந்து நின்றார். பார்க்க பார்க்க மனம் நிரம்பவில்லை. இராவணனை நேரில் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பது. என்னதான் இருந்தாலும் ஒரு கதாப்பாத்திரம் நேரில் தோன்றமுடியும் என்பது சாதாரண விஷயமல்ல. இராவணனை நேரில் பார்த்துவிட்டேன் என்று சொல்லிக்கொண்டேன். அதன்பிறகு உல்பவ இராவணன்தோரணயுத்தத்தில் சீதையிடம் மன்றாடும் இராவணன் ஆகியோரைப் பார்த்தேன். காவியத்திலும் அவன் அறிமுகமாகி மேலும் வளர்ந்திருக்கிறான்.

காவியத்தின் சந்தத்துடன் கூடிய நாடகத்தன்மை வெளிப்பட இப்போது எங்கும் அது நடிக்கப்படுவதில்லை. உங்களிடம் உரையாடலில் ஒருமுறை கேட்கையில் கம்பன் பாடி நடிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என கூறினீர்கள். விருத்தமாக தனிப்பாடல்களை எடுத்துப் பாடும் வழக்கம் அவ்வப்போது நிகழ்கிறது. அரிமளம் பத்மநாபன் போன்றவர்கள் இதற்கென்றே வண்ணம் போன்றவற்றின் தனிஇயல்புகளை விளக்கி பாடியும் காட்டியுள்ளனர். எனினும் இசையும் மெய்ப்பாடும் அறிந்தோர் முழுநீள நாடகமாக, குறைந்தபட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட முழுத்தனிக்காட்சிகளாக சந்த மாறுபாடுகளும், உரையாடலின் ஒழுக்கும் வெளிப்பட அவற்றை நிகழ்த்துகையிலேயே அவற்றின் வீச்சை ஆழத்தை கொணர இயலும். ஆனால் அப்படியொன்றை நிகழ்த்த அதற்கான அமைப்புகள் இங்கில்லை. பல்துறை அறிஞர்கள் ஒருவரோடுருவர் உரையாடுதல் குறைவென்றும் தோன்றுகிறது. அல்லது இப்படியொரு இன்மையை யாரும் உணர்வதில்லை போல.

*

இமைக்கண வடிவத்தின்படி முதலில் கர்ணன் தன் முதல் துயர் உணர்வுகளைச் சொல்வது மட்டுமே இதில் உள்ளது. அடுத்தடுத்த அத்தியாயங்களில் சொற்கள் சொன்னபிறகு இவற்றில் சொல்லவியலாத அடுத்தகட்ட தெளிவின்மைக்கு, அவனின் ஆழுலகிற்கு யாதவன் அவனை அழைத்துச் செல்கிறான். வெண்முரசின் பிற நாவல்களில் இத்தகைய தன்னுரைகள் வரும்பகுதி இருக்குமென்றாலும் ஒருவன் தன் அதுவரையிலான வாழ்வை சாராம்சத்தை முழுவதுமாக சொல்ல முயலும் பகுதிகள் குறைவாகவே இருக்கும். இமைக்கணம் இந்த தத்துவப்படுத்தலின் மொழியில் நிகழ்கிறது. வழக்கமாக monologue, soliloquy ஆகியவற்றை தனித்து எடுத்து செய்பவர்கள் சுருக்கமான பகுதியையே கையாள்வர்.

ஆனால் அத்தியாயத்தில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தேர்ந்து எங்கேனும் நிறுத்துவது குறைவுபட்டதாகவே தோன்றியது. பத்திக்கு பத்தி துயர்அவற்றின் வகைகள்மீட்புஆற்றல்வெற்றிஅதற்கெதிரான வாதங்கள் என விஷயங்கள் தத்துவப்படுத்தப்படுவதும், மறுபுறம் நுட்பமாக அவை அனைத்தும் சேர்ந்து முழுதாக ஒன்றென ஆகவிடாத உணர்வுகளின் ஊடாட்டமும், தருக்கத்திற்கு அப்பாற்பட்ட ஒழுக்கும் கொண்டது இது. முழு அத்தியாயத்தையும் தேர்ந்தெடுத்ததற்கும் அதுவே முக்கிய காரணம் என நினைக்கிறேன். அந்த விரிவுதரு ஒழுக்குதான் உரைநடையின் வித்தாரமும் செய்யுளின் செறிவும் கூடிவரும் இந்நாவலின் நாடகீயத்தையும் ஆள்கிறது.

இப்பகுதியில் கர்ணனின் கேள்விகள் ஏறத்தாழ அனைத்துமே இங்கு இவ்வுலகில் அமைந்துள்ளது. அல்லது அவன் அப்படி நினைக்கிறான். அவை அனைத்தும் தொகுத்து உணர்வெழ சொல்லிமுடித்தப்பின்பும் மீண்டும் நிறைவின்மையும் கசப்பும் தவிப்பும் சூழவே அமர்ந்திருக்கிறான். அவமதிப்புகளை நிகர்செய்யாமல்வன்முறையை திருப்பி அளிக்காமல் அவற்றுக்கு மேலெழும் வாழ்க்கை நோக்கிச் சென்றவன். கல்வியும் கொடைவிரிவும் நிமிர்வும் அவனை வழிப்படுத்தினாலும் ஒருபோதும் தாண்ட இயலாது என்று உணரத்தக்க தடைகள் வந்துசேர்கின்றன. கீழ்மைகளும் மனதில் தேங்கிற்று. அவனுக்கு நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும், அத்தனை தனிமை கொண்டவன் யாதவன் முன்னால் வரத் தீர்மானித்ததும் சொற்களை முன்வைத்ததும் எல்லாம் ஒருவகை ஆசியின் தருணங்களே. இயல்வது அவ்வளவு மட்டுமே என்றாலும்கூட ஒருவகை விடுதலையே.

ஆனால் எதிரிலிருக்கும் அவன் கேட்கும் செவி மட்டுமல்ல. அந்த தருக்கங்களின் துயர்களின் நனவு மனத்தைக் கடந்து கர்ணனை அவன் அனுப்பி வைக்கிறான். அடுத்தடுத்த அத்தியாயங்கள் அவற்றை காட்டுகின்றன. கிடைக்காது ஏங்கிய, வாழ விரும்பிய, இப்படி இருந்திருக்கும் என நினைத்திருந்த தருணங்களின் வழியாக சென்று உசாவி ஏறத்தாழ தனது ஊழின் மையத்தை தொட்டு மீளும்போது மீண்டும் இங்கிருந்து அழைத்தும் கொள்கிறான் யாதவன். மிகப்பெரிய வலைப்பின்னல் ஒன்றை கண்டிருக்கக்கூடும் கர்ணன்.

உங்கள் குறிப்பில் நீங்கள் யாதவன் துயர்களின் பொய்த்தன்மை குறித்துச் சொல்வது பற்றிச் சொல்லியிருந்தீர்கள். இப்பகுதியில் என்னை ஈர்த்த பல முதன்மை வரிகளில் கணங்களில் ஒன்று அது. கீழிறக்குகிறேனா என தெரியவில்லை. மொத்த யாதவனையும் தொகுத்துக் கொள்ளும் பாதையில் அதன் பொருளென்ன எனத் தெரியவில்லை. தன் உணர்வுகளை தானே கவனிக்கும் எவரும் இயல்பாக உணர்வதே அது. ஆனால் போருக்குமுன் மொத்த வாழ்வையும் அன்றாடத்தில் தனக்குத்தானே நிராகரித்துக்கொண்டிருக்கும் மீட்புக்கு ஏங்கிக்கொண்டிருக்கும் கதாப்பாத்திர நிரை வருகைகளின் தொடக்கத்தில் அது சொல்லப்படுகிறது. கருணையின்மை என்றும், உன்னிடம் இதற்குமேல் என்ன சொல்ல இயலுமென்ற இறுக்கமும்இதைச் சொல்லும் நீ எங்கிருக்கிறாய் என்னும் எண்ணத்தையும் உருவாக்கும் வரி. ஆனால் அதைச் சொன்னபின்பு தொடர்கிறாய் என்பதனால் என்னிடம் சொல்ல மேலும் சில வைத்துள்ளாய் என்ற எதிர்நோக்கையும் உருவாக்குவது. அதனாலேயே நிராகரிப்பும் முழு அடைக்கலமும் எனவே இதை பேச இயலும் போல.

இப்பகுதியின் மேலும் சில வரிகள் இப்போது முக்கியத்துவம் கொண்டதாக மாறியுள்ளன. எட்டுப்புறமும் திறந்து விரிந்த இருண்ட கடுவெளியில் எவரும் காணும் முன்னர் காய்ந்து அழியும் விடுக்கப்பட்ட விழிநீர் என்ற காட்சி மேலும் பின்தொடர்வதாக ஆகியுள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் கொரோனாவின்போது செய்தது இது. மனனம் செய்ய நான்கு அல்லது ஐந்து நாட்கள் ஆகியது. தொடர்ந்து வாழ்வை சாராம்சபடுத்துவதன் மிகைநாடகமும் வீச்சும், நடையொழுக்கில் நிகழும் என்றும் நம்பத்தக்க மடுத்த உணர்ச்சிவேகத்தின் கூர்மையும் செறிவும் ஆன நாடகத்தின் புதிய உலகொன்று இதில் உள்ளது.

இப்போது பார்க்கையில் குறைகளும் போதாமைகளும் தெரிகின்றன. குறிப்பாக தொடக்கத்தில் இருந்து அத்தியாயம் நிறைவு வரை கர்ணன் முகத்தசைகளின் நெளிவு, சட்டென்ற உத்வேகம்அடங்கல்கண்ணீர் ஆகியவை அனைத்தும் மாறி மாறி வர்ணிக்கப்படும். என்னுடைய திறன் போதாமைகள் தயக்கம் காரணமாக அவை இதில் இல்லை. வசனங்களின் வேகமும் சற்றே கூடுதலாயிருந்திருக்கலாம். நீண்ட உரைநடையை நினைவு வைத்துக்கொள்வதன் பயிற்சி போதாமைகளின் குறைபாடு. இப்போது இதை இன்னும் சற்று நன்றாகச் செய்ய முடியும் என்று தோன்றுகிறது. இன்னுமொரு நல்ல பயிற்சியும் ரசனையும் கொண்ட நடிகர் கதாப்பாத்திரத்தை இன்னும் துலக்கமாக கொண்டு வர முடியும். வரவேண்டும்.

இதைச் செய்கையில் மிக மகிழ்ச்சியாக இருந்தேன். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று பெரிதாக எண்ணாமல்எதற்காக என்றும் எண்ணாமல் வெறும் ஒரு எண்ணமாகத் தோன்றி செய்துபார்த்து ஒருவகையில் என்னை நானே தெரிந்துகொண்டேன். இப்போது மேலும் சில காட்சிகள் செய்வது குறித்து திட்டமுள்ளது. செய்வேன் என நினைக்கிறேன்.

ஸ்ரீநிவாஸ்

முந்தைய கட்டுரைதொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு
அடுத்த கட்டுரைசோனம் வாங்சுக்- ஒரு மாபெரும் போராட்டம்- கடிதம்