யுவன் கனடா சந்திப்புகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம்.  எங்கள் இந்தியப் பயணங்களில், குலதெய்வ கோவில்களுக்குப் போகிறோமோ இல்லையோ, எழுத்தாளர்களை சென்று சந்திப்பதை நானும் ராதாவும் கடந்த ஏழு வருடங்களாக வழமையாக கொண்டிருக்கிறோம். இந்த வருடம், எழுத்தாளர் யுவன் சந்திரசேகரை, மார்ச் 10 அன்று அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்து வந்தோம்.

இலக்கியம் , இசை, அவரது வாழ்வனுபவங்கள் என்று ஒரு ஐந்து மணி நேரம் உரையாடல். அதே சூட்டோடு, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வெளியிட்ட, ‘வேடிக்கை பார்ப்பவன்’ வாசித்தேன். எல்லோமுமாக சேர்ந்து, யுவனின் படைப்புகளை புரிந்ததுபோல ஒரு பாவனையில் இருக்கிறேன். இப்பொழுது கனடாவில் யுவன் வந்திருப்பதால், உரையாடல் மேலும் தொடர்கிறது. ‘குள்ளச் சித்தன் சரித்திரம்’ நாவலுக்காக ஒரு நாள்,’ஊர் சுற்றி’ நாவலுக்காக ஒரு நாள் என்று ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அவரை அழைத்துப் பேசமுடிகிறது. “இவ்வளவு கதை எழுதினா, எந்தக் கதையில் எந்தப் பாத்திரம் வருகிறது என்று எப்படி  ஞாபகம் வைத்துக்கொள்வது?” என்று உரிமையாக கேட்க முடிகிறது.

தங்கள் தளத்தில் வந்த அறிவிப்பைப் பார்த்து , வாசகர்களும் நண்பர்களும், அவரை அழைத்து உரையாடுவதாக அறிகிறேன். அறிவிப்பில் ஒரு மாதம்தான் இருக்கிறார் என்று இருப்பதால், நண்பர்களுக்குள் ஒரு பதட்டம். ‘அடடா, இதுவரை வந்துவிட்ட யுவன் சாரை பார்க்காமல் போய்விடுமோ’ என்று  ஆகஸ்ட் இறுதிவரை இருப்பார் என்பதை அவருடன் உரையாடியதில் அறிந்துகொள்கிறேன்.

மேலும்,  நண்பர்கள் மகேந்திரா , ஆனந்த் ஒருங்கிணைக்க வான்கூவரில் ஒரு சந்திப்பு நிகழ்த்தலாம் என உள்ளோம்.  வான் கூவரில் நடக்கும் சந்திப்புக்கு,  அமெரிக்க மேற்கு கரை நகரங்களில் வசிக்கும் நண்பர்கள் அப்படியே வடக்கு முகமாக காரை ஓட்டிக்கொண்டு சென்றுவிடலாம். இப்போதைக்கு ஏப்ரல் இறுதி வாரம் என்று முடிவு செய்துள்ளோம்.

இரண்டாவது நேர் சந்திப்பு, டொரோண்டோ-வில். ஜூலையில் இருக்கலாம். இதற்கு கிழக்கு கரையோர மக்கள் அதே வடக்குமுகமாக வரலாம். இடையில் வசிப்பவர்கள், ஏதாவது ஒரு வடக்குமுகப் பயணத்துடன் இணைந்துகொள்ளலாம்.  நண்பர்கள் மேற்கொண்டு விவரங்களுக்கு [email protected]ற்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

முந்தைய கட்டுரைநீலக்கடல், வெண்பவளம் -2
அடுத்த கட்டுரைவாசிப்பை காட்சியாக்குதல்