அண்ணா ஹசாரே- காந்திய போராட்டமா?

பலவருடங்களுக்கு முன்னர் காந்தியைக் கண்டடையும் தேடலில் இருந்த நாட்களில் அண்ணா ஹசாரேவின் ராலேகான் சித்தி கிராமத்திற்குச் சென்றிருக்கிறேன். அவரது சாதனைகளைப்பற்றி எழுதியிருக்கிறேன். அவர் அந்த கிராமநிர்மாணத் திட்டங்களில் இருந்து இயல்பாகக் கிராமத்து ஊழல்களை ஒழிப்பதற்கான போராட்டத்துக்கு வந்தார். இயல்பாகவே அந்தப்போராட்டம் மகாராஷ்டிர அரசியலில் இருந்த ஊழல்களுக்கு எதிரான போராட்டமாக மலர்ந்து இன்று இந்திய அளவிலான போராட்டமாக மலர்ந்திருக்கிறது.

Anna Hazare
எல்லாவகையிலும் இது ஒரு காந்தியப்போராட்டம் என்பதற்கு அது வந்திருக்கும் வழியே சான்றாகும். காந்தியப்போராட்டத்தின் இயல்புகள் என ஆறு விஷயங்களைச் சொல்லலாம்.

1. அது கோட்பாடுகள் மற்றும் சித்தாந்தங்களில் இருந்து பிறக்காது. நடைமுறையில் இருந்தே பிறந்து வரும். காந்தி அவரது கண்ணெதிரே கண்ட தென்னாப்ரிக்க நிறவெறிக்கொள்கைக்கு எதிராக நடைமுறையில் இயல்பாகச் செய்து பார்த்த போராட்டங்களில் இருந்து மெல்ல மெல்ல விரிவாக்கம் செய்துதான் சத்தியாக்கிரகப் போராட்டத்தை உருவாக்கினார். எந்த நூல்களிலும் இருந்தல்ல.

அண்ணா ஹசாரேயின் போர் ராலேகான் சித்தியில் அவர் கிராம நிர்மாணச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது எதிர்கொள்ள நேர்ந்த அதிகாரவர்க்க ஊழல் என்ற சமகால யதார்த்தத்தை அவர் எதிர்கொண்டதில் இருந்து ஆரம்பிக்கிறது. ஆம், புத்தகங்களில் இருந்து அல்ல.

2. அது எப்போதும் மேலிருந்து கீழே செலுத்தப்படாது. கீழிருந்து, கிராமத்தில் வாழும் எளிய மக்களின் அன்றாட யதார்த்தங்களில் இருந்துதான் ஆரம்பிக்கும். அங்கிருந்துதான் வளர்ந்து தேசிய அளவுக்குச் செல்லும். இந்தியாவில் காந்தியப்போராட்டம் சம்பாரன் என்ற சிறு ஊரின் அவுரி விவசாயிகளின் கூலிப்போராட்டத்தில் இருந்துதான் தொடங்கியது.

ராலேகான் சித்தி என்ற மகாராஷ்டிர கிராமத்தில் இருந்துதான் அண்ணா ஹசாரேயின் போராட்டம் ஆரம்பித்திருக்கிறது. டெல்லியில் இருந்து அல்ல

3. காந்தியப்போராட்டம் எப்போதுமே உடனடியாக சாத்தியமான இலக்குகளை முன்வைத்துப் பெருந்திரளான மக்களைப் பங்கெடுக்கச்செய்துதான் நிகழும். படிப்படியாக , வென்றெடுத்தவற்றைத் தக்கவைத்துக்கொண்டு புதியவற்றைக் கோரியபடி அது மேலே செல்லும். தொடர்ந்து பலகாலம் பிடிவாதமாக முன்னேறிச்செல்வதே காந்திய வழிமுறை. முதலில் ரௌலட் சட்டத்துக்கு எதிராகவே காந்தி போரிட்டிருக்கிறார். உடனடியாக வெள்ளையர் வெளியேற வேண்டும் என அதிரடியாக ஆரம்பிக்கவில்லை.

அண்ணா ஹசாரேயின் போராட்டம் ராலேகான் சித்தியின் வனத்துறை ஊழலுக்கு எதிராக ஆரம்பித்துத் தகவலறியும் சட்டம் வழியாக இன்று லோக்பால் வரை வந்துள்ளது. அது இன்னும் முன்னேறிச்செல்லும்

4. காந்திய போராட்டம் என்றுமே குறியீட்டுச்செயல்பாடுகளையே முன்னிறுத்தும். காந்தியின் அன்னியத் துணி எரிப்பும் சரி, உப்புக் காய்ச்சுவதும் சரி நேரடியாக பார்த்தால் உடனடியாக சுதந்திரத்தை வாங்கித்தரக்கூடிய செயல்களே அல்ல. ஆனால் அவை குறியீடுகள். எனக்கு வேண்டியதை நானே செய்வேன் என்றும் என்னை சுரண்ட உன்னை அனுமதிக்க மாட்டேன் என்றும் வெள்ளைய அரசுக்குச் சொல்பவை அவை. போராட்டம் மூலம் அந்தக் குறியீடுகளின் அர்த்தம் வெளிப்படையாக ஆகி வளர்ந்து செல்கிறது. இந்தியாவின் பொருளியல் விடுதலைதான் அந்த அர்த்தம். அவற்றின் அந்த உண்மையான அர்த்தம் பிரிட்டிஷ் அரசுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.

அண்ணா ஹசாரேயின் போராட்டங்கள் தகவலறியும் சட்டம், லோக்பால் மசோதா போன்றவற்றுக்கானவை மட்டும் அல்ல. அவை குறியீடுகளே. சுருக்கமாகச் சொன்னால் அவை ஊழல் மிகுந்த அரசு மேல் மக்களுக்கு வரவேண்டிய நேரடி அதிகாரத்தைப்பற்றிப் பேசுகின்றன. அரசை மக்களே கண்காணிக்க வகைசெய்கின்றன. அந்த உள் அர்த்தம் அரசுக்கு நன்றாகவே தெரியும்.

5. காந்தியப்போராட்டம் என்பது அனைத்து மக்களையும் கலந்துகொள்ளச் செய்வது. ஆகவே அது தன் எல்லையைச் சுருக்கிக் கொள்ளாது. கோரிக்கைகளில் ஆர்வம் கொண்ட அனைவருமே பங்குபெறலாம் என்றே அது சொல்லும். காந்தியின் போராட்டங்களில் வெறும்மதவாதிகளான முகமது அலி, சௌகத் அலி போன்றவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இந்து மதவாதிகளும் சாதியவாதிகளும் கலந்துகொண்டிருக்கிறார்கள். அவர் அனைவரையுமே இணைத்துக்கொண்டு ஒட்டுமொத்த மக்கள் பலத்தை உருவாக்க முயன்றார்.

அண்ணா ஹசாரேயின் போராட்டம் இடதுசாரிகள் மிதவாதிகள் தீவிரப்போக்குள்ளவர்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு ஊழலுக்கு எதிரான மக்கள் அதிகாரம் என்ற மையத்தை வலியுறுத்துகிறது

6. காந்தியப்போராட்டத்தின் உண்மையான வெற்றி என்பது அது ஒட்டுமொத்தமாக மக்களிடையே உருவாக்கும் மனமாற்றத்தில்தான் உள்ளது. தொடர்ச்சியான போராட்டங்கள் வழியாக ஒரு கருத்து அத்தனை மக்களாலும் ஏதோ வகையில் ஏற்கப்படுகிறது. அது ஓர் அரசியல் சக்தியாக ஆகிறது. காந்தியப் போராட்டம் உண்மையில் அதற்காகவே நிகழ்கிறது. அதாவது காந்தியப் போராட்டம் எவரையும் தோற்கடிப்பதற்கானது அல்ல. போராடுபவர்கள் தங்களைத் தகுதிப்படுத்திக்கொள்வதற்கானது.

பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் பெரிய அரசுகள் எல்லாம் சிதைந்து சிறு ஆட்சியாளர்கள் மனம்போனபடி ஆண்டும் முடிவிலாது போர்செய்தும் அராஜகத்தை உருவாக்கிய இடைவேளையில் இங்கே வந்தனர் பிரிட்டிஷார். அவர்கள் சட்டத்தின் ஆட்சியை அளித்தனர். கொலை கொள்ளைகளில் நேரடியாக ஈடுபடவில்லை. ஆகவே இந்திய சாமானிய மக்கள் அவர்களை ரட்சகர்களாக நினைத்தார்கள். அவர்களுக்கு ஆட்சிசெய்ய அங்கீகாரத்தை அளித்தனர். மிகச்சிலரான பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டது அவ்வாறுதான். எந்த ஒரு அரசும் பொதுமக்கள் அளிக்கும் அங்கீகாரத்தாலேயே நிலைநிற்கிறது.

ஆனால் மறைமுகமான பொருளாதாரச் சுரண்டல் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் சேர்ந்திருந்த மொத்தச் செல்வத்தையும் பிரிட்டிஷார் உறிஞ்சிக் கொண்டு சென்றார்கள். இந்தியவரலாற்றில் முதல்முறையாக லட்சக்கணக்கான மக்கள் செத்து அழிந்த பெரும் பஞ்சங்கள் நிகழ்ந்தது அவர்களின் சுரண்டலாட்சி காரணமாகவே. இந்திய மக்கள் பஞ்சம் பிழைக்கக் கிழக்கே நியூசிலாந்து முதல் பர்மா, இலங்கை, ஆப்ரிக்கநாடுகள் வழியாக மேற்கே மேற்கிந்தியதீவுகள் வரை உலகம் முழுக்க அகதிகளாகச் செல்ல நேரிட்டதும் அவர்களாலேயே. வெளியே நியாயம் பேசியபடி இந்தியாவை அவர்கள் அழித்துக்கொண்டிருந்தார்கள்.

அந்த உண்மையை வெள்ளையன் மேல் கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டிருந்த படிப்பறிவில்லாத பாமர மக்களுக்கு எடுத்துச் சொல்வதென்பது சாதாரணமான விஷயமே அல்ல. கிட்டத்தட்ட முப்பதாண்டுகாலம் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நிகழ்த்தி காந்தி அந்த உண்மையை இந்திய ஏழைமக்களே புரிந்துகொள்ளும்படி செய்தார். அவரது போராட்டங்களின் நிகர விளைவு அதுதான். இந்திய மக்களின் பெரும்பான்மை பிரிட்டிஷ் அரசுக்கு அளித்துவந்த ஆதரவு இல்லாமலானதும் அந்த ஆட்சி நீடிக்க முடியாமலானது. அது எப்படி எப்போது விலகும் என்பதே பிறகுள்ள வினாவாக ஆனது.

அண்ணா ஹசாரேயின் போராட்டத்தின் வெற்றி என்பது அது இந்திய சமூகத்தில் உருவாக்கும் மனமாற்றம்தான். இந்தியாவின் மிகப்பெரிய சவாலாக இன்று இருப்பது பொதுவாழ்க்கையின் ஊழல். அந்த ஊழலுக்கு நம் சாமானிய மக்கள் அளிக்கும் அங்கீகாரம் மூலமே அது நிலைநிற்கிறது என்பதே உண்மை. அண்ணா ஹசாரே போராடுவது அந்த அங்கீகாரத்தைப் படிப்படியாக இல்லாமலாக்குவதற்காகவே. அதற்கு நம் மக்களுக்கு ஊழல் உருவாக்கும் ஒட்டுமொத்த அழிவைப்பற்றிய சித்திரத்தை அளித்தாகவேண்டும். ஊழலை ஒரு முக்கியமான பிரச்சினையாக நம் நாடே பேசவைக்கவேண்டும். அவர் செய்வது அதைத்தான்

இந்தப்போர் பலமுனைகளில், ஒன்றில் இருந்து ஒன்றாகத் தொடர்ந்து பல வருடங்கள் நீடிக்கும்போது பொதுவாழ்க்கையில் ஊழல் என்பதற்கு நம் இந்திய சமூகம் அளித்துள்ள அங்கீகாரம் என்பது இல்லாமலாகும். இன்று ஐரோப்பிய நாடுகளில் அந்த மக்கள் பொது ஊழலுக்கு எதிராகக் கொண்டுள்ள அதே நிராகரிப்பு இங்கும் உருவாகும். அதுவே நம் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக ஒரு மாபெரும் சமூக நோயாக எழுந்து நிற்கும் ஊழலுக்கு எதிராக நாம் கொள்ளும் வெற்றி.

 

 

காந்தியப்போராட்டத்தை எப்போதுமே அதிகாரம் ஒரேவகையில்தான் எதிர்கொண்டிருக்கிறது. அது பிரம்மாண்டமான மக்களியக்கமாகையால் ஒருபோதும் ஆயுதம் உதவாது. ஆகவே இரு கருத்தியல் ஆயுதங்களைக் கையாள்கிறார்கள். காந்தியப்போராளிகளான மார்ட்டின் லூதர்கிங் ஜூனியர், நெல்சன் மண்டேலா, ஆங்க் சான் சூகி, தலாய் லாமா என எல்லா சமகால நாயகர்கள் மேலும் அந்த ஆயுதம்தான் பயன்படுத்தப்பட்டது. ஒன்று அவதூறு,இன்னொன்று அவநம்பிக்கை. அதன்மூலம் அந்த இலக்கு நோக்கிப் போராடும் மக்கள் திரளைச் சோர்வடையச்செய்யமுடியும். அவர்களப் பிளவுபடுத்தமுடியும்.

காந்தியின் மேல் தொடர்ந்து அவதூறுகளைச் சுமத்தியது பிரிட்டிஷ் அரசு. அதை முப்பதாண்டுக்காலம் உரக்கப்பேசின இந்திய ஊடகங்கள். அவர் மேல் அன்று பிரிட்டிஷ் அரசு சுமத்திய அவதூறுகள் பலரால் இன்றும் நீட்டிக்கப்படுகின்றன. காந்தியப்போராட்டத்தை அபத்தமான கோமாளிக்கூத்து எனத் தொடர்ந்து சித்தரித்தனர். நாடே பிரிட்டிஷார் கையில் இருக்கையில் ரௌலட் சட்டத்தை மட்டும் எதிர்த்துப் போராடுவது முட்டாள்தனம் என விவரமறிந்தோர் என நாம் நினைப்பவர்களே பேசியிருக்கிறார்கள். காந்தியை வட இந்தியர் என்றும் இந்து என்றும் குஜராத்தி என்றும் முத்திரை குத்தினர். பிரிட்டிஷ் அரசு அவரை அப்படி முத்திரை குத்தும் ஆட்களை உருவாக்கிக்கொண்டே இருந்தது.

இன்றும் நிகழ்வது அதுவே. ஊழலில் மூழ்கித்திளைத்த நம் ஆட்சியாளர்கள், அரசியலாளர்கள் பெரும் ஊடகங்களைக் கையில் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கெதிராகத் தன்னந்தனியாக நிற்கிறார் அண்ணா. அவரது போராட்டம் வழியாக அவர் அடைவது ஒன்றுமே இல்லை, இழப்பதே அதிகம் என்ற அப்பட்டமான உண்மை மட்டுமே அரசியல்வாதிகளின் வாயை அடைப்பதாக நிற்கிறது.

காந்தி வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடவில்லை. இந்திய மக்களின் அச்சத்துக்கு எதிராகவே போராடினார். இரு நூற்றாண்டுக்கால அராஜகங்களால், பஞ்சங்களால் அஞ்சி ஒடுங்கிக்கிடந்த சாமானிய இந்திய மக்கள் எந்தப் போராட்டத்துக்கும் தயாராக இருக்கவில்லை. இந்தியாவில் வெள்ளையர்களுக்கு எதிரான எல்லாப் போராட்டங்களையும் சாமானிய மக்கள் மிகச்சில நாட்களிலேயே கைவிட்டிருக்கிறார்கள். மருதுபாண்டியர், பழசிராஜா முதல் சிப்பாய்க்கலகம் வரை இதைக் காணலாம். பல போர்களில் பத்தோ பதினைந்தோ வெள்ளைக்கார சிப்பாய்கள்தான் சென்றிருக்கிறார்கள். அவர்களை பார்த்ததுமே நம்மவர் அஞ்சி விழுந்திருக்கிறார்கள் என்பதே வரலாற்று உண்மை

அந்த அச்சத்தைக் களைந்ததே காந்தியின் சாதனை. சிறிய சிறிய வெற்றிகளை அவர் ஈட்டிக்கொடுத்தார். வெள்ளைய ஆட்சியின் ராணுவத்தை எதிர்ப்பதை முழுக்கவே தவிர்த்தார். அதற்கு பதிலாக வன்முறையற்ற பெருந்திரள் போராட்டம் மூலம் அவர்களின் சிவில் அரசை எதிர்கொள்ளச் செய்தார். அவர்களின் அச்சத்தை விரட்ட அவருக்குப் பதினைந்து ஆண்டுகளாயின. அதன் பின்னரே காங்கிரஸுக்கு உண்மையான மக்களாதரவு வந்தது. அதன் போராட்டங்கள் மக்கள் போராட்டங்களாயின. அவரது வெற்றி அப்படித்தான் நிகழ்ந்தது.

அண்ணா ஹசாரே போராடிக்கொண்டிருப்பது இந்தியாவைப் பீடித்துள்ள அவநம்பிக்கையுடன். இலட்சியவாதத்தில் நம்பிக்கை இழந்து வெறும் நடைமுறைவாதிகளாக, அப்பட்டமான சுயநலவாதிகளாக ஆகிவிட்டிருக்கும் நம் மக்களை நோக்கி அவர் பேசுகிறார். அவரது போராட்டங்கள் இன்றைய அவநம்பிக்கையை அழிக்க முடிந்தால் அவர் வென்றார் என்றே பொருள்.

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2

அண்ணா ஹசாரே கடிதங்கள்..

அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…

அண்ணா ஹசாரே,வசைகள்

அண்ணா ஹசாரே-2

அண்ணா ஹசாரே-1

முந்தைய கட்டுரைஅண்ணா ஹசாரேவும் ஆர்.எஸ்.எஸ்ஸும்
அடுத்த கட்டுரைதூக்கிலிரு​ந்து மன்னிப்பு