நண்பர்களுக்கு வணக்கம்
சென்ற 2022ம் ஆண்டு இறுதியில் கீரனூர் ஜாகிர்ராஜா அவர்கள் எழுதிய புத்தகங்களை மொத்தமாக வாங்கத் துவங்கியபோது பதினைந்து புத்தகங்கள் கிடைத்தன. அது அவருடைய மொத்தப் புத்தகங்களின் எண்ணிக்கையில் சரிபாதியாகும். அதற்கும் சில மாதங்கள் கழித்து நண்பரும் எழுத்தாளருமான இராயகிரி சங்கர், எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா அவர்களின் படைப்புகள் குறித்து “மயிர்” மின்னிதழில் ஒரு சிறப்பிதழைக் கொண்டு வந்தார். அவர் அதற்கான முஸ்தீபுகளில் இருந்தபோது எங்களிடம் கட்டுரை கேட்டிருந்தார். அப்போது நானும் சுரேஷ் பிரதீப்பும் கீரனூர் ஜாகிர்ராஜா படைப்புகள் குறித்த நற்றுணை கலந்துரையாடல் நிகழ்த்துவதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். முதலில் இணைய இதழ் வரட்டும் என எங்கள் அமர்வை டிசம்பர் மாதம் தள்ளி வைத்தோம்.
அவ்வாறாக டிசம்பர் 2023 ல் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ந்திருக்க வேண்டிய நாளுக்கு இருநாட்கள் முன்பு கனமழை பிடித்துக் கொண்டது. அதனால் தள்ளி வைத்தோம். அதற்கு அடுத்து சென்னைப் புத்தக கண்காட்சி மற்றும் மாவட்டந்தோறும் நிகழ்ந்த புத்தக விழாக்களில் இங்கு பேசவிருந்தவர்கள் பங்கு பெற்றதால் இன்னொரு முறை தள்ளிப் போனது.
இறுதியாக சென்ற சனிக்கிழமை மதியம் 02:00 மணிக்குத் துவங்கி இரவு 08:00 மணிக்கு இனிதே நிறைவுற்றது.
இதில் சுரேஷ்பி்ரதீப் பின் உரை என்பது ஒரு மணி நேரம் நீண்ட உரை. அவ்வாறே, நற்றுணையால் அவரிடம் கேட்டுக்கொள்ளப் பட்டது. அந்த நீண்ட உரை அவரது ஒட்டுமொத்த படைப்புலகம் சார்ந்த பார்வையை முன்வைத்தது.
கீரனூர் பாபுத்தா மற்றும் ஜாகிர்ராஜாவின் மனைவியான ராஜி என்னும் சல்மா ஆகியோரின் உரைகள் துவக்க உரையாக அமைந்தன.
ஜா.தீபா குறள்பிரபாகரன் நேசன் ஆகியோர் துவக்கம் முதல் கூடவே இருந்தார்கள். எழுத்தாளர் என்.ஸ்ரீராம் அவர்கள் ஜாகிர்ராஜாவின் பக்கத்து ஊர்க்காரர். சில வருடங்கள் முன்பு துருக்கித் தொப்பி குறித்துப் பேசியிருந்தார். அவர் சிறப்புரையாற்ற ஒப்புக் கொண்டது மிக்க மகிழ்ச்சியை அளித்தது. அந்த மண்ணின் நிலவியல் குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் ஒரு சிறப்பான உரையை அளித்தார். சிறப்புரையில் அடுத்தது ஜாஜாவின் உரை. அது நிகழ்விற்கு மகுடம் வைத்ததாய் அமைந்தது.
எழுத்தாளர்கள் கே.வி. ஷைலஜா, இராயகிரி சங்கர், கடலூர் சீனு, மணி எம்கே மணி, அகரமுதல்வன், சுநீல் கிருஷ்ணன் ஆகியோர் முன்பு உரையாற்ற ஒப்புக் கொண்டிருந்தார்கள். ஆனால் தேதி தள்ளிப் போனதால் வர இயலவில்லை. இந்தத் தருணத்தில் அவர்கள் முன்பு அளித்த ஒத்துழைப்புக்கும் ஆர்வத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இன்னொரு நிகழ்வில் சந்திப்போம்.
இந்த நிகழ்வின் மூலம் கீரனூர் ஜாகிர்ராஜா அவர்களின் படைப்புகளை முழுமையாக வாசித்தேன். இந்த உரைகள் அவரது படைப்புலகை வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்த்துப் பேசுகின்றன.
அவரது கதைகளின் உள்ளடக்கமும. கூறுமுறையும் தனித்துவமானவை. அவற்றை வாசகர்கள் வாசித்து அறிதலுக்கு ஏதும் ஈடாகாது. ரசனை அடிப்படையிலான இந்த உரைகள் அதற்கு பெரிதும் உதவக் கூடும்.
விழா குறித்து சுரேஷ்பிரதீப் எழுதிய பதிவு இங்கே தந்துள்ளேன். அதன் உரைகளையும் இங்கு இணைத்துள்ளேன்.
கீரனூர் ஜாகிர்ராஜா படைப்புகள் குறித்த கருத்தரங்கு
சுரேஷ்பிரதீப்
எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா படைப்புகள் குறித்த கருத்தரங்கு நற்றுணை இலக்கியவட்டத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு சிறப்பாக நடந்தேறியது. ஜாகிர்ராஜா அவர்களின் வாசகராக அறிமுகமாகி ஒரே ஊர்க்காரர்கள் என்று அறிந்து கொண்டே பின்னர் உறவுக்காரர் என்பதையும் அறிந்து கொண்ட கீரனூர் பாபுத்தா முதலில் பேசினார். நெடுநாளைய வாசகர் என்பதால் ஜாகிர்ராஜா அவர்களின் சிறுகதைகளின் நுட்பமான தருணங்களைத் தொட்டுப்பேச அவரால் முடிந்தது. நிகழ்வுக்கு சரியான தொடக்கமாக அவர் உரை அமைந்தது.
அவரைத் தொடர்ந்து ஜாகிர்ராஜா அவர்களின் மனைவி சல்மா (எ) ராஜி உரையாற்றினார். நேரில் பேசும்போது எவ்வாறு உரையாடுவாரோ அதுபோலவே அவர் மேடையுரையும் மிக இயல்பாக அமைந்தது. ஜாகிர்ராஜா அவர்களுடனான இத்தனை வருட வாழ்க்கையில் இருந்து ஒருசில தருணங்களை அவர் குறிப்பிட்டது அரங்கினை வேறொரு மனநிலைக்குக் கொண்டு சென்றதை உணர முடிந்தது. நண்பர் நேசன் ஜாகிர்ராஜா அவர்களின் கட்டுரைகள் பற்றிப் பேசினார். கட்டுரை வழியாக அவருடன் ஏற்பட்ட பழக்கம் அவர் அறிமுகம் செய்த அரிதான நூல்கள் என்று அவர் உரை அமைந்தது.
(கீரனூர் பாபுத்தா உரை)
காளிப்ரஸாத் ஜாகிர்ராஜாவின் புனைவுகளுக்கும் அபுனைவுகளுக்குமான வேறுபாட்டினை குறிப்பிட்டது முக்கியமான அவதானிப்பு. புனைவில் பல்வேறு உணர்வுத்தடங்களை அநாயசமாக எழுதிச் செல்லும் ஜாகிர்ராஜா கட்டுரைகளில் நெகிழ்வானவராக இருப்பதைக் குறிப்பிட்டார். ஜாகிர்ராஜாவின் புனைவு அபுனைவு இரண்டுக்கும் நெடுநாள் வாசகனாக அக்கூற்றினை நான் ஆமோதிக்கிறேன்.
இளம் எழுத்தாளர் குறள் பிரபாகரன் ஹலால் தொகுப்புபற்றிப் பேசினார். ஜாகிர்ராஜா அவர்கள் நடத்திய பயிற்சிப் பட்டறை ஒன்றில் ஏழெட்டு வருடங்கள் முன்பு கலந்து கொண்ட தனக்கு ஜாகிர்ராஜாவின் படைப்புகள் பற்றிப் பேசுவதே முதல் மேடையாக அமைந்தது குறித்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
(ராஜி என்கிற சல்மா உரை)
அடுத்ததாக நான் பேசினேன். தொடக்கத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை எழுதியவர் என்ற சட்டகத்துக்குள் ஜாகிர்ராஜா அடைக்கப்படுகிறார் என்று சொல்லிவிட்டு இறுதியில் அடித்தட்டு வாழ்க்கையை எழுதுவதற்கு ஜாகிர்ராஜா முன்னோடி என்று சொன்னது குழப்பமாக இருந்திருக்கும். நான் சொல்ல வந்தது ஜாகிர்ராஜா விளிம்பு நிலை வாழ்க்கையை எழுதினார் என்பதல்ல. அத்தகையை வாழ்க்கையை பிறர் எழுதுவதற்கான ஒரு கருவியாக அவர் படைப்புலகை எடுத்துக் கொள்ள முடியும்.
அடித்தட்டு மக்கள் அனைவரும் “அப்பாவிகள்“என்ற நோக்கில்தான் நம் சூழலில் பெரும்பாலான விளிம்பு நிலைக் கதையாடல்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் அதைச் சொல்ல ஒரு படைப்பாளி தேவையில்லை. அம்மக்களின் மீது “கருணை” கொண்டு எழுதுவதல்ல நல்ல எழுத்து. அவர்களின் இடத்தில் இருந்து வாழ்க்கையை அணுகுவது. ஜாகிர்ராஜாவின் புனைவுலகு செய்வது இதைத்தான். மதச் சிறுபான்மையினர், மொழிச் சிறுபான்மையினர், தலித்துகள், பால் புதுமையினர், மாற்றுத்திறனாளிகள் என எல்லோருக்குமான கதையாடல் போக்கினையும் ஜாகிர்ராஜாவின் புனைவுலகில் இருந்து கண்டெடுக்க முடியும்.
நான் பேசியதற்கு பிறகு ஜாகிர்ராஜா அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ந்தது. ஏற்புரைக்கு முன்பாக இத்தகைய கலந்துரையாடல் அமைவது பொருத்தமானதாகத் தோன்றுகிறது. படைப்புகள் பற்றி பேசிய பிறகு படைப்பாளியிடம் கேட்க வேண்டிய வினாக்கள் பலரிடமும் தோன்றிவிடும். ஆனால் ஏற்புரைக்கு பிறகு பெரும்பாலும் “நேரமின்மை“யால் கலந்துரையாடல் சுருக்கமாக அமையும். அதோடு கேள்வி கேட்கும் ஆர்வமும் வடிந்துவிட்டிருக்கும். நிகழ்வுக்கு நடுவிலேயே கலந்துரையாடல் அமைந்ததால் தொடர்ச்சியாக கேள்விகள் வந்தவண்ணமே இருந்தன.
கலந்துரையாடலைத் தொடர்ந்து ஜா. தீபா பேசினார். தன்னுடைய தோழி ஒருவரின் வாழ்க்கையை சொல்லத் தொடங்கி ஜாகிர்ராஜாவின் கதைகளில் பெண்கள் குறித்த பார்வை எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதை நுட்பமாக எடுத்துரைத்தார்.
என். ஸ்ரீராம் ஜாகிர்ராஜாவின் சகபயணி. தங்களிருவருக்கும் இடையேயான நட்பு இத்தகைய நிகழ்வுகளின் அவசியம் என்று அவருடைய உரை அமைந்தது.
இறுதியாக ஜா. ராஜகோபாலன் பேசினார். ஜாகிர்ராஜாவின் படைப்புகள் வாசகனிடம் அதீத கவனத்தை கோருவதையும் அதனாலேயே “எளிய” வாசகர்களுக்கு அவர் புனைவுலகம் பிடிபடாமல் போவதையும் சுட்டிப் பேசினார். சாதாரணமானது என்று கடந்து செல்லும் தருணங்களில் நுட்பங்களை பொதிந்து வைக்கும் ஜாகிர்ராஜாவின் எழுத்து முறையை பல்வேறு உதாரணங்களைச் சுட்டிக்காட்டி சிறப்பாக எடுத்துரைத்தார்.
ஜாகிர்ராஜாவின் ஏற்புரை சுருக்கமானதாகவும் இந்நிகழ்வு அவருக்களித்த நிறைவினை வெளிப்படுத்துவதாகவும் அமைந்தது. நிகழ்வு முடிந்த உடனேயே நண்பர் ஜெயவேலுடன் அவசரமாகக் கிளம்ப வேண்டி இருந்தது. வண்டியில் வரும்போது அவருக்கும் நிகழ்வு திருப்தி அளித்ததாகச் சொன்னார். ஜெயவேல் திருப்தி அடைந்துவிட்டாரென்றால் உண்மையில் நிகழ்வு வெற்றிதான்!
சிலமணி நேரங்களுக்கு முன் காளிப்ரஸாதிடம் பேசினேன். இந்நிகழ்வை டிசம்பரில் திட்டமிட்டு மூன்று மாதங்களாக தள்ளித்தள்ளிப் போனது குறித்த ஒரு பதற்றம் காளியிடம் இருந்தது. நேற்று எவ்வித இடையூறுகளும் இன்றி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதன் உற்சாகத்துடன் பேசினார். அடுத்தடுத்து என்னென்ன செய்யலாம் என்பது பற்றியும் பேசத் தொடங்கிவிட்டார்
அனைவருக்கும் நன்றி
காளிப்ரஸாத்
உரைகள்:-
கீரனூர் பாபுத்தா உரை
https://youtu.be/_V5FJgd7GFo?
ராஜி எனும் சல்மா உரை
https://youtu.be/t-4kSDQ3K9g?
நேசன் உரை https://youtu.be/6QGXvi-Ozvg?
காளிப்ரஸாத் உரை https://youtu.be/d7UQVBR6jiY?
ஜா.தீபா உரை https://youtu.be/nqaNj0nlYu8?
சுரேஷ் பிரதீப் உரை https://youtu.be/jSFGM6ujBM4?
பி்பாகரன் சண்முகநாதன் (குறள் பிரபாகரன் உரை)
https://youtu.be/Cnw4oiORivI?
கீரனூர் ஜாகிர்ராஜா – கலந்துரையாடல் https://youtu.be/VFTK_6V-csw?
ஜா. ராஜகோபாலன் உரை https://youtu.be/pbTW4HR64ko?
என்.ஸ்ரீராம் உரை https://youtu.be/fTypBdx-I_Q?
கீரனூர் ஜாகிர்ராஜா ஏற்புரை