நீலக்கடல் வெண்பவளம் -1 (முன் தொடர்ச்சி)
ராமேஸ்வரம் கோதண்டராமர் ஆலயம் கடலோரமாக தன்னந்தனிமையில் அமைந்திருக்கிறது. அதனருகே கடல் ஆழமே இல்லாமல் அலையுமில்லாமல் கிடந்தது. இருபக்கமும் கடலின் இறு சிறகுகள் போல பின்கடல். காலையில் அங்கே சூரிய உதயம் பார்ப்பதற்காகச் சென்று நின்றிருந்தோம். கடற்காற்றில் நீராவிமணம், காலையில்கூட குளிர் இல்லை. சற்றுநேரத்தில் கோதண்டராமர் ஆலயத்தைப் பார்க்க ஒரு பக்தர் அணி ஒரு வண்டியில் அர்ச்சகரையும் கூட்டிக்கொண்டு வந்தது.
பின்கடலில் உள்ளே முந்தையநாளே வலைகளை கட்டி விரித்திருந்தனர். சாலைகளில் நின்று அதன் கயிறிணைப்பை பிடித்து இழுத்து வலைகளைச் சுருக்கி மீன்களை எடுத்துக்கொண்டிருந்தனர். அந்தப் பகுதியில் ஃப்ளெமிங்கோ பறவைகள் வரும் பருவம் இது. தமிழில் பூநாரை அல்லது செங்கால் நாரை. ‘பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாரை’ என்று சத்திமுத்தப் புலவரின் புகழ்பெற்ற பாட்டில் வருகிறது. நீண்ட சிவந்த கால்கள் கொண்ட பறவை இது.
பின்கடலில் மிகத்தொலைவில் வெறுங்கண்களுக்கு மிகமெல்லிய ஒரு வெண்கோடு தெரிந்தது. சில ஆயிரம் செங்கால்நாரைகள் வரிசையாக அங்கே நின்றிருந்தன. கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தோம். அவ்வளவு தொலைவுக்கு கண்கள் தெளியவில்லை. ஈஸ்வரமூர்த்தி பறவை ஆர்வலர். ஆகவே நல்ல தொலைநோக்கி வைத்திருந்தார். அதில் அவற்றை நன்றாகப்பார்க்க முடிந்தது. அவை ஒரு பெரிய வலை அல்லது வேலிபோல அமைந்திருந்தன. மூன்றுநான்கு வரிசைகள். இரண்டு நாரைகளின் இடையே பின்னாலுள்ள வரிசையின் நாரை வரும்படியாக.
அவை சேற்றில் தலையை முக்கி அலகால் கோதி புழுக்களையும் சிறு சேற்றுப்பூச்சிகளையும் அள்ளி சேற்றையும் நீரையும் அலகின் பக்கம் உள்ள அரிப்பான் வழியாக வெளியே விட்டு இரைகளை உட்கொண்டன. கிட்டத்தட்ட மொத்த சேற்றுப்பரப்பையும் முழுமையாகவே அரித்தபடி அணுகி வந்துகொண்டிருந்தன. அவ்வப்போது வானில் சிறிய செங்கால்நாரைக் கூட்டம் வந்து மெல்ல இறங்கி அந்த வரிசையில் இணைந்துகொண்டது. அவை இரவு தனித்தனியாக தங்குகின்றன. இரைதேடுவதற்காக இந்த அணிவகுப்பை அமைத்துள்ளன.
ஓரளவுக்கு அவற்றை பார்க்கும்படி அவை அணுகுவது வரை அங்கேயே அமர்ந்திருந்தோம். வெயில் பளிச்சிடத் தொடங்கியது. கண்கள்கூசி நீர்ப்பரப்பைப் பார்க்கமுடியவில்லை. மீனவர்களின் மீன்களை ஒரு லோடு ஆட்டோ வந்து ஏற்றிச்சென்றது. நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே இருந்த மீனவர்கள் நான்கு கூடை மீன்களை கொடுத்தனர். நானறிந்த சந்தைவிலைப்படி ஒருகூடை இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்கப்படும். எனில் மீனவர்களுக்கு ஐநூறு ரூபாய் கிடைக்கலாம்.
இரண்டாயிரம் ரூபாயை மூன்று மீனவர்கள் பகிர்ந்துகொண்டனர் – தலா எழுநூறு ரூபாய். அதற்கான உழைப்பும் உண்டு. அத்தனை தொலைவுக்கு கடலுக்குள் சேற்றில் நடந்து சென்று வலைகளை பொருத்தவேண்டும். செங்கால்நாரைகள் வந்து அவற்றை தின்பதற்குள் வந்து சேகரிக்கவும் வேண்டும். பகலில் வேறுவகையிலும் மீன்பிடிப்பார்கள் என தோன்றியது. மீன் பிடிப்பதெல்லாம் லாபகரமாக இருந்த காலம் என்பது முன்பு, ஒருவரின் செலவு என்பது சாப்பாடு, தங்குமிடம் மட்டுமாக இருந்தபோது. இன்று உணவு தங்குமிடம் ஆடை செலவுகள் செலவினத்தில் கால்வாசிதான். கல்வி, மருத்துவம், போக்குவரத்து என செலவுகள் மிகுதி. அதற்கு இந்த மீன்பிடித்தல் எவ்வகையிலும் போதுமானது அல்ல.
ஆனால் சென்னையில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் இதைவிட ஐந்து மடங்கு சம்பாதித்தாலும்கூட அவர்களின் வாழ்க்கையின் தரம் இவர்களைவிட கீழானது. சாக்கடையோரம் குடில்களில் வாழவேண்டும். எந்தவகையிலும் ஆரோக்கியமான எச்சூழலும் இல்லை. குற்றவாளிகளின் தாக்குதல்கள். நிரந்தரமான பதற்றம். அவர்களின் பேச்சில் ஓர் அலட்சியமும் எரிச்சலும் சவால்விடும் தன்மையும் இருக்கும். இவர்களை அந்த அற்புதமான இயற்கைச்சூழல், அதிலுள்ள வாழ்க்கையின் காலமே இல்லாத நிதானம் பலவகையிலும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறதோ என்று தோன்றியது. பீடியை பிடித்தபடி நிதானமாகவும் மகிழ்ச்சியாகவும் பேசிக்கொண்டே இருந்தனர்.
அறைக்கு வந்து டீ சாப்பிட்டு சற்று ஓய்வெடுத்தபின்னர் திரும்ப ராமநாதபுரம் வந்தோம். பவளப்பாறைகளைப் பார்க்கும் பொருட்டு அடுத்த பயணம். வழியில் அந்த உணவகத்திலேயே சென்று அந்த பரிமாறுநரிடமே சாப்பிட முடிவெடுத்தோம். ஓர் இம்சையை நாம் கூர்ந்து கவனித்தால் அதை ரசிக்க ஆரம்பித்துவிடுகிறோம். என் கேரள இதழாள நண்பர் ஒருவர் காசி காலபைரவர் ஆலயம் சென்றார். அங்கே பக்தர்களை பண்டாக்கள் அடிக்கும் வழக்கம் உண்டு. அதற்கு காசு கொடுக்கவேண்டும், பாவம் போயிற்று என நம்பிக்கை. அது காலபைரவன் அளிக்கும் தண்டனை. இவர் காசு கொடுக்கவில்லை. பண்டா பளார் பளார் என அறைவிட்டார்.
நண்பர் கொதித்தார். இதை எழுதுவேன், கிழி கிழி என கிழிப்பேன் என சவால்விட்டார். உடனிருந்தவர் அழைத்துச்சென்று டிபன் வாங்கிக்கொடுத்தார். கட்டுரையை எப்படி எழுதுவது என நண்பர் சொல்லிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் ‘திரும்ப கோயிலுக்குப் போவோம்’ என்றார். ஏன் என்று உடனிருந்தவர் கேட்டார். ‘இன்னொரு அடி வேண்டும்… என் கோபம் போதவில்லை… எழுத்தில் வீறு உருவாகவில்லை’ என்றார். அந்த நினைவு வந்தது.
ஏர்வாடி அருகே பிச்சைமூப்பன் வலசு என்னும் ஊரில் பவளப்பாறைகளை காண கடலுக்குள் அழைத்துச்செல்லும் இடம் உள்ளது. மைய அரசின் குறிப்பிடத்தக்க ஒரு திட்டம் ஊரகச் சுற்றுலா. சுற்றுலா மையங்களை சிற்றூர்களில் உருவாக்கி அவற்றை கிராமசபைகள் அல்லது ஊராட்சிகளின் நிர்வாகத்திலேயே விட்டுவிடுவது. வடகிழக்கு பகுதிகளில் இவை மிகச்சிறப்பாக நடைபெறுகின்றன. ஊருக்கு மிகப்பெரிய வருமானம் வருகிறது. ஆகவே பலவகைகளில் சூழியலழிவும் தடுக்கப்படுகிறது.
வலசு என்றால் வளைவு என்று பொருள். அதாவது வேலியிடப்பட்ட இடம் அல்லது முள்வேலிக்கோட்டை. அக்காலகட்டத்தில் சிறிய சத்திரங்களும் அவ்வாறு அமைக்கப்பட்டு வலசு என அழைக்கப்பட்டன. ராமநாதபுரம் பகுதிகளில் பல ஊர்களின் பெயர்கள் வலசு என்றுதான் உள்ளன. வணிகப்பாதைகளில் அமைந்த சத்திரங்கள் அல்லது பண்டகசாலைகள் அவை. பிச்சைமூப்பன் பெரிய வணிகனாக இருந்திருக்கலாம். மூப்பன் என்பது வணிகக்குழுவின் தலைவனின் பெயர். பழைய வணிகக்குழுக்கள் சொந்தமாக தனி ராணுவம் கொண்டவை.
பிச்சைமூப்பன் வலசு பகுதியைச் சென்றடைவது வரை அங்கே எவருமே செல்ல வாய்ப்பில்லை என்னும் எண்ணமே எங்களுக்கிருந்தது. ஆனால் அங்கே சென்று சேர்ந்தால் பெருங்கூட்டம். நாங்கள் 11 மணிக்கே சென்றுவிட்டோம். 2 மணிக்குத்தான் உள்ளே கொண்டுசெல்வார்கள் என்றார்கள். இருப்பது ஒரே படகுதான். அது அடியில் அலுமினியக்கண்ணாடி பதிக்கப்பட்ட சுற்றுலாப்படகு. அதில் ஒரே சமயம் 16 பேர் செல்லமுடியும். அங்கே காத்திருக்க முடிவுசெய்தோம்.
அருகே இருக்கும் கடையில் இரண்டிரண்டு டம்ளர்களாக மோர் வாங்கி குடித்துக்கொண்டே இருந்தேன். கடலோரப்பகுதிகளில் நம் உடலில் இருந்து உப்பு வெளியேறிவிடுகிறது. ஆகவே உணவில் உப்பு நிறைய தேவைப்படுகிறது. ஒரு படபடப்பு உருவாகிறது, அதை கடும் தாகம் என நினைப்போம். அது தாகம் மட்டுமல்ல, உப்புக்கான தவிப்பும்தான். உப்பு போட்ட மோர் என்னை அற்புதமாக இலகுவாக்கியது. அச்சூழலுக்கு கோக் போன்ற இனிப்புப் பானங்கள் எந்த வகையிலும் பொருந்தாதவை. அவை உடலில் நீரை மிகையாக்கி, மிகையான வியர்வையாக வெளியேற்றி, உப்பு குறையச்செய்து மேலும் மேலும் தாகத்தையே உண்டுபண்ணும்.
அங்கேயே மதிய உணவு சாப்பிட்டோம். நல்ல மீன்கறியுடன். வெயிலில் உருகும் வெள்ளி எனக் கொதித்த கடலைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தோம். இரண்டு மணிக்கு படகில் கிளம்பினோம். ஒரு மணிநேரம் மூன்று கிலோமீட்டர் சுற்றிவந்தோம். ஒரு மணல் திட்டில் பத்துநிமிடம் இறக்கி விட்டார்கள். அதன்பின் அந்த பகுதியை மிகமெல்ல சுற்றிவந்தனர். கீழே கண்ணாடிவழியாக அலைபாயும் கடற்தாவரங்களையும் பவளப்பாறைகளையும் பார்க்க முடிந்தது. பெரிய மூளைபோல அலைமடிப்பு கொண்ட பாறைகள். தேனீக்கூடு போன்றவை. பெரிய பலாப்பழம் அல்லது அன்னாசிப்பழம் போன்றவை. முள்ளம்பன்றி போன்றவை. முள்நுனிகளில் வெண்புள்ளிகள். அவைதான் வளரும் பவளமுனைகள். சிப்பிகள் போலவும், காளான்கள் போலவும் பவளப்பாறைகள் இருந்தன
இந்தப் பவளப்பாறைகள் எல்லாமே சுண்ணத்தால் (கால்சியத்தால்) ஆனவை. பல லட்சம் ஆண்டுகளாக சிறிது சிறிதாக உருவானவை. செம்பவளம், இளஞ்சிவப்புப் பவளம் பூமத்தியரேகைக் கடற்பகுதிகளில் உண்டு. அதுவே அரிய மணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பழங்காலத்தில் அது நகை செய்ய பயன்படுத்தப்பட்டது. பவளம் என நம் மரபு சொல்வது அதை மட்டுமே. அழகிய உதடுகளுக்கு அது ஒப்பிடப்பட்டது. (பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா!) சிவனின் உடலுக்கும் ஒப்பிடப்பட்டது. (பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்…)
பவளப்பாறைகளை காலுக்கடியில் இருந்த இரண்டு கண்ணாடிப்பரப்புகள் வழியாக கூர்ந்து பார்க்க வேண்டியிருந்தது. டிவியில் இதைவிட அற்புதமாக பார்த்திருப்போம். ஆனால் இது உண்மை. நாம் மெய்யாகவே பார்க்கிறோம். அந்த உணர்வு அளிக்கும் பரவசம் அலாதியானது. ஒருவகை கனவு. இன்னொரு உலகம். நம் அருகே இருந்தாலும் முற்றிலும் நாமறியாத ஒன்று. இன்னொரு கோள் போல வேறொரு உயிர்ப்பரப்பு. “இது கனவிலே வந்தா நல்லாருக்கும்” என்று ஈஸ்வரமூர்த்தி சொன்னார்.
நம் பவளப்பாறைகள் பெரிய அளவில் அழிக்கப்படுகின்றன. எண்பதுகளில்தான் ஓரளவேனும் சூழியல் உணர்வு உருவாகி இவற்றை மதிக்க ஆரம்பித்தோம். அதுவரை படகுகளுக்கு வழி உண்டுபண்ணவே பவளப்பாறைகள் அழிக்கப்பட்டன. வெட்டி எடுத்து சுட்டு நீறாக்கி சுண்ணமாக பயன்படுத்தப்பட்டன. இன்று இவை பாதுகாக்கப்பட்டவை, அழிப்பது தண்டனைக்குரிய குற்றம். ஆனால் மிகப்பெரிய அளவில் இப்போதும் கடத்தல் நடைபெறுகிறது. நகரங்களில் அலங்காரச் சுவர்கள் கட்ட, மீன் தொட்டிகளுக்குள் போட இவற்றை வாங்குகிறார்கள்.
அரசே பவளப்பாறைகளை அழிக்கிறது. சேதுசமுத்திரத்திட்டம் அப்படி ஒரு மிகப்பெரிய அழிவுத்திட்டம். அதற்கு சில ஆண்டுகள் ஓடிய மாபெரும் இயந்திரங்களே பவளப்பாறைகளில் கால்வாசியை ஏற்கனவே அழித்துவிட்டது. மீன்பிடித்தலாலும் பவளப்பாறைகள் அழிகின்றன. சாதாரண மீன்படகுகளால் அல்ல, பெரிய இயந்திரப்படகுகளால். அவ்வாறு உடைந்த பவளப்பாறைகள்தான் நாங்கள் தீவுகளில் பார்த்தவை.
அண்மையில் இந்திய அரசு கடலடியில் எரிவாயு- எண்ணை எடுக்கும் திட்டங்களை ஊக்குவிக்கிறது. தனியார்வசம் கடலடி நிலம் ஒப்படைக்கப்படுகிறது. குருட்டுத்தனமான தற்கொலை அது என சூழியலாளர்கள் எச்சரிக்கின்றனர். பவளப்பாறைகள் மீளவும் உருவாக முடியாதபடி அழியும். மீன்களின் இனப்பெருக்கம் அழியும். அகழப்படும் எண்ணையை விட பலமடங்கு மதிப்புள்ள மீன்வளம் இல்லாமலாகும். எச்சரிக்கைகளை கேட்க அரசியல்வாதிகளும் அவர்களுடன் இணைந்துள்ள பெருமுதலீட்டாளர்களும் தயாராக இல்லை. எதிர்க்கட்சிகள் எதிர்ப்புடன் வருவார்கள், அவர்கள் ஆட்சி செய்ய முற்படும்போது அவர்களும் அதையே செய்வார்கள்.
ஈவிரக்கமில்லாமல் இயற்கை சுரண்டப்படும் மாநிலங்களில் ஒன்று இது. அதைப்பற்றிய விழிப்புணர்வை ஓர் அறிவுஜீவி வட்டத்திலேனும் சூழியலாளர் பேசிவந்தனர். இன்று அரசியல்கட்சியினர் அறிவுஜீவி வட்டத்திற்குள்ளேயே அரசியல் பேச்சாளர்களை அடியாட்களாக அனுப்பி அங்கேயே அந்த உரையாடலை அழிக்கின்றனர். பவளப்பாறை அழிவு என்று சொன்னால் ஒரு சாரார் ‘ஏழைகளின் வாழ்வாதாரம்’ என்பார்கள். இன்னொரு சாரார் ‘தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி’ என்பார்கள். உண்மையில் அவர்களின் குரல்களே இன்று ஓங்கி ஒலிக்கின்றன. எச்சரிக்கைகளை முளையிலேயே கிள்ளி விடுகிறார்கள்.
மதியம் நான்கு மணிக்கு ஏர்வாடி வழியாக மதுரை திரும்பினோம். வழியில் ஓரிடத்தில் வைகை ஆற்றில் இறங்கி ஆள்நடமாட்டம் இல்லாத விரிந்த மணல்வெளியில் அமர்ந்திருந்தோம். தமிழகத்தில் இயற்கையான மணல்வெளிகள் மிகமிக அரிதாகவே எஞ்சியுள்ளன. பறவைகளின் ஒலி, அந்தியின் ஆழ்ந்த நிறம். மெல்லமெல்ல இறந்த காலத்திற்குச் சென்றுவிட்டதுபோல் இருந்தது.
காவேரியின் கிராமியக்காட்சிகளை ஜானகிராமன் போன்றவர்கள் எழுதியதுபோல் வைகையை எவரும் எழுதியதில்லை. வைகையின் அழகிய சித்திரங்களே நவீன இலக்கியத்தில் இல்லை. பொய்யாக்குலக்கொடி என்னும் இளங்கோவின் வரி ஒன்றே இந்த அழகிய வைகையை தமிழர் மதித்துப்போற்றினர் என்பதற்கான சான்று என எஞ்சியிருக்கிறது.