நீலக்கடல் வெண்பவளம்

கோடைவெயிலில் உச்சகட்ட வெயில் தகிக்கும் ஓர் ஊருக்குச் செல்லலாம் என்று முடிவெடுக்க நீங்கள் ஒருகிரிமினல் வக்கீல்ஆக இருக்கவேண்டும். கிருஷ்ணன் சொன்னார்மார்ச் 17, 18 தேதிகளிலே ராமேஸ்வரம் போனா என்ன சார்? அங்கே கண்ணாடி போட்டிலே கூட்டிட்டுப்போயி பவளப்பாறைகளை காட்டுறாங்களாம்

கிரிமினல்கிளையண்ட் அதை உடனே ஏற்றுக்கொள்ளாமலிருக்க முடியாது. ஆகவே அவர் 16 ஆம் தேதி சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு டிக்கெட் போட்டார். சுந்தர பாண்டியன் என்னும் நண்பரும் பயணத்தில் பங்கெடுக்க சென்னையில் இருந்து வந்தார். அவர் தேனி மாவட்டத்துக்காரர், அவருடைய மாமியார் இல்லம் ராமநாதபுரத்தில். ஆகவே அவர்தான் உள்ளூர் ஒருங்கிணைப்பாளர்.

ராமேஸ்வரம் ரயிலில் நன்றாகவே தூங்கிவிட்டேன். நடுவே ரயில்வே அட்டூழியங்கள். ஒரு வட இந்தியக் குடும்பம் சென்னைக்கு ஏதோ கல்யாண விஷயமாக வந்தது ராமேஸ்வரம் செல்லவேண்டும். ஒரு டிராவல் ஏஜென்ஸியில் டிக்கெட் போட்டிருக்கிறார்கள். கணவன் மனைவி, 12 வயதான ஒரு பெண். 10 வயதான இன்னொரு பெண். இரண்டும் அரை டிக்கெட்டுகள். இரண்டுக்கும் பெர்த் இல்லை என மின்னஞ்சல் வந்துள்ளது. ஆகவே நான்குபேருக்கு இரண்டு பெர்த் மட்டுமே. 

இரண்டுபேருக்கும் சேர்த்து ஒரு பெர்த்துக்கான பணம் எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் அவர்கள் பெற்றோருடன் ஒண்டிக்கொண்டோ தரையில் படுத்தபடியோ பயணம் செய்யவேண்டும். முழுப்பயணத்திலும் அந்த கணவர் நின்றுகொண்டிருந்தார், என் கால்மாட்டில் அமர்ந்துகொண்டிருந்தார். முதல்வகுப்பு கூபேயில் டிக்கெட் போட்டு இப்படி ஒரு பயணம். உலகின் எந்த நாட்டிலும் இப்படி ஒரு சட்டபூர்வக் கொள்ளை நிகழாது. நுகர்வோர் நலன் என்பது அறவே இல்லாத ஒரு தேசம். நுகர்வோருக்கான எந்த அமைப்பும், எந்தச் சட்டப்பாதுகாப்பும் இங்கில்லை.

ராநாதபுரம் நெருங்குவதற்கு முன்னரே காலையொளி வந்துவிட்டிருந்தது. அப்பகுதியின் நில அமைப்பே விந்தையானது. ஆங்காங்கே ஈரமான அரை உப்புச்சதுப்புகள். சட்டென்று பொட்டல். திடீரென்று பசுமையான நெல்வயல்கள். தமிழகத்தில் எங்கும் நிறைந்திருக்கும் குப்பை மலைகள். குப்பைகளுக்குமேல் செஞ்சூரியன் எழுந்து ஒளிர்ந்தது. மூடுபனிபோல ஒரு போர்வை காலையை மூடியிருந்தது. கடலில் இருந்து வந்து குளிர்ந்த நீராவி அது. அதற்குள் கடற்கரைப்பறவைகள் சிறகடித்து எழுந்தமைந்தன.

இந்தக் கடலோர உப்புச்சதுப்புகள் estuary  எனப்படுகின்றன. இவை சூழியலுக்கு மிகமிக முக்கியமானவை. பலநூறு வகை பறவைகள் கூடுகட்டி குஞ்சுபொரித்து வளரும் தாய்வீடுகள் இவை. இவற்றை குப்பைகொட்டி மூடும் செயலை சென்னை போன்ற நகரங்களை ஒட்டி செய்து கிட்டத்தட்ட முடித்துவிட்டனர். எஞ்சிய கடற்சதுப்புகளை பேணும் உணர்வு அண்மைக்காலத்தில் உருவாகியுள்ளது. 

இந்தியாவில் நுகர்வு பெருகுகிறது. ஆகவே குப்பைகள் குவிகின்றன. ஆனால்  இங்கே குப்பைகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனவே ஒழிய எவ்வகையிலும் அவற்றை நாம் உருமாற்றுவதில்லை. சாலைகளில் இருந்து அள்ளி நீர்நிலைகளிலோ காலியிடங்களிலோ குவிக்கிறோம். இன்று இந்தியாவில் எங்கு பயணம் செய்தாலும் இந்த தேசமே மாபெரும் குப்பைமேடு என்னும் எண்ணமே வரும். மாநகர்களில்கூட குப்பைகளை மறுசுழற்சி செய்யும் அமைப்புகள் இல்லை. அதற்கான அடிப்படை முதலீடே இல்லை. ஒருமுறையேனும் இந்தியாவை விட்டு வெளியே செல்லாதவர்களுக்கு அந்தக் குப்பைகள் கண்ணுக்குப்படுவதுமில்லை

இந்தியா சுற்றுலாத்துறையில் மிகப்பெரிய கனவுகள் கொண்டுள்ளது. அண்மையில் பிரதமர் லட்சத்தீவை முன்வைத்தபோது மாலத்தீவு அவரை பகடி செய்தது. உண்மையில் உலகச்சுற்றுலா மையங்களுக்குச் சென்றவர்கள் அறிவார்கள் அவர்கள் சொன்னது உண்மை என. இந்தியாவில் எந்த சுற்றுலா மையமும் குறைந்தபட்ச தூய்மை கொண்டது அல்ல. குப்பைகள், சாக்கடைகள் கொசுக்கள், பொதுவெளியில் மலம். இந்தியர்களால் தூய்மையைப் பேணமுடியாது என மாலத்தீவு பெண் அமைச்சர் சொன்னது இதுவரை ஓர் உண்மைதான்.

ராமநாதபுரத்தில் ஆனந்த்குமார், ஈரோடு கிருஷ்ணன், ஈஸ்வரமூர்த்தி, சபரீஷ்குமார் என்னும் புதிய நண்பர் ஆகியோர் முந்தையநாள் இரவே வந்திருந்தனர். எங்களை ரயில் நிலையத்தில் வரவேற்று அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கே குளித்து உடைமாற்றிவிட்டு ராமேஸ்வரம் கிளம்பினோம். பயணங்களுக்கே உரிய எளிய வேடிக்கைகள். வழியில் ஓர் உணவகத்தில் சிற்றுண்டி. உத்தரவு எடுத்துக்கொண்டவர் ஒரு சாதா ஊத்தப்பம், ரெண்டு வெங்காய ஊத்தப்பம், ஒரு சாதா தோசை, ஒரு ரோஸ்ட், ஒரு பூரி என ஆளுக்காள் கொடுத்த ஆணைகளை சலனமே இல்லாமல் பெற்றுக்கொண்டார். குறித்துக்கொள்ளவே இல்லை.

அபாரமான நினைவாற்றல் என வியந்தேன். ஆனால் அடுத்த ஐந்து நிமிடங்களில் ஏழெட்டுமுறை கேட்டார். பலவகை குளறுபடிகள். அதில் எனக்கான ஊத்தப்பம் சமையலறைக்குச் சொல்லப்படவே இல்லை. ஆணை பெற்றுக்கொண்டவருக்கு அதைப்பற்றிய கவலையும் இல்லை. ஆனால் உணவு நன்றாக இருந்தது. கலப்படங்கள் இல்லை. உணவகத்தந்திரங்களும் இல்லை. ராமநாதபுரத்தில் சாப்பிட்ட எல்லா உணவுமே நன்றாகத்தான் இருந்தன.   பொதுவாக தமிழகத்தில் மோசமான உணவு என்பது கொங்கு வட்டாரம்தான் போலிருக்கிறது. தேன்வரந்தை குகை ஓவியங்கள் பார்க்கசென்று உடுமலை, பல்லடம் பகுதிகளில் சாப்பிட்ட உணவை இப்போது எண்ணினாலும் அச்சம் கவ்வுகிறது. அங்கெல்லாம் சமையற்கலையே இன்னும் அறிமுகமாகவில்லை.

இரண்டு பகல்கள் ராமேஸ்வரம் என்பது திட்டம். முதல்நாள் படகில் கடலுக்குள் இருக்கும் குருசடை என்னும் தீவுக்குச் சென்றோம். இந்தியத் தீபகற்ப முனையில் கிழக்குக்கடற்கரையை ஒட்டி இதைப்போன்ற தீவுத்தொடர்கள் தூத்துக்குடி வரை இருக்கின்றன. அவற்றில் 21 தீவுகள் முக்கியமானவை என்றும் இவை ஒரு சூழியல் வட்டம் என்றும் சொல்லப்படுகின்றன. பவளப்பாறைகள் உலக கடற்கரைப்பரப்பில் 3 முதல் 5 சதவீத நிலப்பகுதியிலே உள்ளன. ஆனால் 25 சதவீதம் மீன்கள் பவளப்பாறைகளிலேயே குஞ்சுபோட்டு வளர்கின்றன.

சேதுசமுத்திரத் திட்டத்தை பல்வேறு சூழியல் அமைப்புகள் எதிர்த்தது, அதனால் இந்த பவளப்பாறைகள் முழுமையாகவே அழியநேரிடும் என்பதனால்தான். அப்போது திமுக பேச்சாளர்கள் அந்த சூழியல் ஆர்வலர்களை முழுமையாகவே சிறுமை செய்தனர். ஆனால் பல்வேறு சர்வதேச நிபுணர்களின் பரிந்துரை மற்றும் உலகளாவிய அழுத்தம் காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. (பல ஆண்டுகள் அத்திட்டம் நடைமுறைப்படுத்தபட்டதாகவும் பலலட்சம் டன் மணல் அள்ளப்பட்டதாகவும் கணக்கு காட்டப்பட்டது. அள்ளிய மணல் எங்கே என்பது மாபெரும் மர்மமாக நீடிக்கிறது)

இத்தீவுகளில் பெரும்பாலானவை பவளப் பாறைகள் மேல் மணல் சேர்ந்து உருவானவை. கடல்சார் சூழியல் ஒன்று அங்கே உருவாகியுள்ளது.  எவற்றிலும் மக்கள் வாழ்க்கை இல்லை. சிலவற்றில் சில கிறிஸ்தவ வழிபாட்டிடங்கள் உள்ளன. சில  மீனவர்கள் வலைகளை சீரமைக்கும் மையங்கள். அவற்றிலொன்றே கச்சத்தீவு

இவற்றை தீவு என்பதைவிட குறுந்தீவு (Lagoon)அல்லது கடல்மணல்திட்டு (Dune) என்றுதான் சொல்லவேண்டும். சில ஏக்கர்களே பரப்பு கொண்டவை இவை. தீவின் இருபக்கமும் கடல் அலைகள் வந்து அறைவதை ஒரே காட்சியாகக் காணலாம். அவற்றை தீவு என எண்ணுவதை நம் உள்ளம் மறுத்துக்கொண்டே இருக்கும். நாம் ஒரு மிதக்கும் கப்பலில் இருப்பதாகவே எண்ணுவோம். இத்தனைக்கும் குருசடை என்பது மரங்கள் அடர்ந்த ஒரு சிறு காடு. உள்ளே கட்டிடங்களும் உள்ளன. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கடல் ஆய்வகங்கள் அவை. அறிவியலாளர் அங்கே தங்கி கடலுயிர், கடல்தாவர வகைமைகளை சேகரித்துள்ளனர். இப்போது கட்டிடங்கள் இடிந்து கைவிடப்பட்டு கிடக்கின்றன.

அக்கட்டிடங்கள் மேல் மரங்களும் செடிகளும் அடர்ந்து மூடி ஒரு நல்ல பேய்ப்படத்துக்கான ‘லொக்கேஷன்’ போல தோற்றமளிக்கின்றன. ஓர் ஆய்வகம் மூடிக்கிடந்தது. உடைந்த சன்னல்கள் வழியாக உள்ளே அப்படியே கைவிடப்பட்ட உயிரிச்சேகரிப்பு புட்டிகளும் ஜாடிகளும் இருப்பது தெரிந்தது. இன்னொரு கட்டிடத்தை பழுதுபார்த்துக் கொண்டிருந்தார்கள். பாதிவேலை அப்படியே விடப்பட்டிருந்தது. 

குருசடைத்தீவின் சூழியலும் விந்தையானது. நல்ல காடு. ஆனால் மரங்கள் மணல்மேல் வளரும் உயரமில்லாத வகை. அவை கிளைபரப்பி தரைமேலேயே வளைந்து விரிந்திருந்தன. பூவரசம் போன்ற இலை கொண்ட ஒரு மரம். ஈச்சை மரங்கள். சிறு இலைகொண்ட ஈஞ்சை முள் போன்ற செடிகள். கொடிகளில் சிவந்த மணிகள் போல பதங்கங்கள் செறிந்திருந்தன. அத்தனை பூச்சிகள் இருந்தும் பறவைகள் அனேகமாக இல்லை. காகங்கள் கடல்கடந்து வருவதில்லை. கடற்பறவைகள் மீன்களை உண்பவை. ஆகவே விந்தையான ஓர் அமைதி அந்த தீவில் இருந்தது.

கடலில் இருந்து கிடைத்த திமிங்கல எலும்புகள், வெவ்வேறு மீன்களின் தலையோடுகள், பவளப்பாறை மாதிரிகள் ஆகியவற்றை அங்கே பார்வைக்கு வைத்திருந்தார்கள். ராமேஸ்வரத்தின் சிறப்பு ஆன மிதக்கும் பாறை என்பது நுரைபோன்ற கால்சியம் அமைப்பு. பவளப்பாறைகளின் ஒரு வகை. பவளப்பாறைகளும் கடற்புற்களும் செறிந்த ஆழமில்லாத கடல். கண்களை நிறைக்கும் அதிநீலம். உள்ளே கடற்தாவரங்கள் தவித்து தவித்து அலைபாய்ந்தன. ஏதோ சொல்லவரும் நாக்குகள் போல. பவளப்பாறைகள் சிறிய மழுங்கிய முட்கள் போல, மொட்டுகள் போல, வலைச்சுருள் போல விதவிதமாக உருவாகிக்கொண்டிருந்தன. ஆண்டுக்கு இரண்டு செண்டிமீட்டர் என்னும் விரைவில் அவை தங்களை திரட்டின.

கடலில் இறங்கிச் சென்று பவளப்பாறைத் துண்டுகளை கையில் எடுத்துப் பார்த்தோம். பவளப்பாறைகளை உருவாக்கும் சிறிய பூச்சிகள் தீவிரமாக கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்தன. எடுத்துப்பார்த்துவிட்டு உடனே திரும்ப நீருக்குள் விட்டுவிடவேண்டும். அவற்றின் வாழ்க்கையை அப்படி ஒரு பார்வை கவனித்திருப்பதை, வானுக்கு சென்று மீண்டதை அறியாமல் அவை தங்கள் பவளச்செண்டில் அதையே உலகமென நினைத்து சுறுசுறுப்பாக வாழ்ந்துகொண்டிருந்தன. ஜெல்லி மீன்கள் உடலே கண்ணாக மெல்ல மிதந்தன

குருசடை தீவுக்குச் செல்லும் படகுத்துறை அருகே ஒரு விவேகானந்தர் நினைவுமண்டபம் உள்ளது. அங்குதான் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்து படகில் இறங்கினார். அங்கே ஒரு சிறு மண்டபம் இருந்தது. அது புயலில் அழிந்தபின் சுவாமி சித்பவானந்தர் கட்டியது இன்றுள்ள பெரிய மண்டபம். விவேகானந்தர் வரலாற்றைச் சொல்லும் படங்களும் ஒரு தியானமண்டபமும் அங்குள்ளன. புயலுக்குப்பின் அப்பகுதி கடல் மிக ஆழமற்றதாக ஆகிவிட்டதனால் இப்போது சப்பையான அடிப்பகுதி கொண்ட சிறிய படகுகளே அங்கே பயணம் செய்யமுடியும்.

மதியம் திரும்பி வந்து சாப்பிட்டுவிட்டு விடுதியில் சற்றுநேரம் ஓய்வெடுத்தோம். மாலை தனுஷ்கோடி வரை சென்றோம். புகழ்பெற்ற பாம்பன் பாலம் வழியாக. பாம்பன் மேல் நான் பலமுறை சென்றிருக்கிறேன். அதைப்போன்ற பல கடற்பாலங்களில் பயணம் செய்துள்ளேன். ஆனால் ஒவ்வொரு முறையும் இருபக்கமும் விரிந்திருக்கும் நீலக்கடல் ஒரு பெரும் உளஎழுச்சியை உருவாக்கவே செய்கிறது.

தனுஷ்கோடியின் எல்லையில், கோடிமுனை வரைச் சென்றோம். அங்கே சுற்றுலாப்பயணிகள் செறிந்திருந்தனர். சூரியன் கடலை ஒளிபெறச் செய்துகொண்டிருந்தது. அதிகமும் வட இந்திய சுற்றுலாப்பயணிகள். மதநோக்கு கொண்டவர்கள். ஆகவே பெரிய அளவில் சூழியலழிவு இல்லை. அங்கே சிறுவணிகர்கள் இரவு தங்க தடை இருப்பது அந்த தூய்மைக்குக் காரணமாக இருக்கலாம். ஆனாலும் அங்கே பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டுசெல்லப்படுவது கறாராக தடுக்கப்படவேண்டும். அங்குள்ள கடைகளில் பிளாஸ்டிக் உறை கொண்ட பொருட்கள் விற்பனைச் செய்யப்படுவது நிறுத்தப்படவேண்டும். அரசு அதற்கு காவல் தடுப்புகளை உருவாக்கியே ஆகவேண்டும்.

தனுஷ்கோடியில் முகங்களை பார்த்துக்கொண்டிருந்தபோது ஒன்று தோன்றியது. அவ்வெண்ணம் கன்யாகுமரி கடற்கரையிலும் தோன்றுவதுண்டு. அங்கு வரும் வட இந்தியர்களில் பலர் முதல்முறையாக அப்போதுதான் கடலைப் பார்க்கிறார்கள் என. கடல் அவர்களுடன் விளையாடுகிறது. அவர்கள் கூச்சலிடுகிறார்கள். நாம் வடக்கே சென்று பனிமலைகளை, பனிப்படுகைகளை பார்ப்பதுபோல அவர்களுக்கு ஒரு விந்தையனுபவம். ஆனால் சட்டென்று தோன்றியது, இயற்கை இருப்புகளில் நம்முடன் விளையாட வருவது கடல்மட்டும்தானே என.

குருசடை தீவு

அந்தி எழத்தொடங்கியபின் திரும்பினோம். வரும் வழியில் முற்றிலும் ஆளோய்ந்துகிடந்த தனுஷ்கோடி பழைய நகரை கண்டோம். 1964 வரை தனுஷ்கோடி ஒரு துறைமுகம் போலவே இருந்துள்ளது. அங்கிருந்து இலங்கைக்குப் படகுப்போக்குவரத்து இருந்தது. ஐம்பது கிலோமீட்டர் தொலைவுதான். இரண்டு மணிநேரப் பயணம். ஆனால் 1964ல் வீசிய பெரும்புயலில் தனுஷ்கோடி கிட்டத்தட்ட அழிந்தது. 1800 பேர் அங்கே உயிரிழந்தனர் என கணக்கிடப்படுகிறது.

(அந்த சித்திரம் ஆழிசூழ் உலகு நாவலில் உள்ளது.  அந்தப் புயலில் ராமநாதபுரத்திற்கு படப்பிடிப்புக்கு வந்திருந்த ஜெமினிகணேஷ் – சாவித்ரி ஜோடி காணாமல் போனார்கள். அதுதான் அன்றைய இதழ்களுக்கும் மக்களுக்கும் பெரிய செய்தியாக இருந்தது. பின்னர் அவர்கள் சேதமின்றி மதுரைக்கு வந்து சேர்ந்தபோது தமிழகம் நிம்மதி ஆயிற்று.)

புயலில் அங்கிருந்த கட்டிடங்கள் அழிந்தன. அனைத்தையும் விட அங்கே மீட்புப்பணிக்கு எவரும் செல்லமுடியாத நிலை உருவானது. ஆகவே தனுஷ்கோடி மக்கள் வாழமுடியாத இடம் என அறிவிக்கப்பட்டது. எவரும் மீள்குடியமர்த்தப்படவில்லை. இழப்பீடு வழக்கப்பட்டு அவர்கள் குடிபெயரச்செய்யப்பட்டனர். இன்று அங்கே ஏராளமான தற்காலிகக் கடைகள் உள்ளன. சுற்றுலாப்பயணிகளுக்கான பொருட்கள் விற்பவர்கள். இரவு அங்கே அவர்கள் தங்கலாகாது என சட்டம் உள்ளது. ஆகவே கடைகள் பெரும்பாலும் மூடப்பட்டிருந்தன.

உடைந்த நகரைப் பார்க்க பயணிகள் எவருமே இல்லை. நாங்கள் அறுவர் மட்டுமே அங்கே சுற்றிவந்தோம். ஒரே ஒரு கடை மட்டும் நாங்கள் வரக்கூடும் என்பதற்காகக் காத்திருந்தது. பறவைகள் கூடணைந்துவிட்டன. அவ்வப்போது ஒரு சில கூவலோசைகள். நாய்கள் மட்டும் வெயில்தாழ்ந்த உற்சாகத்தில் விளையாடிக்கொண்டிருந்தன.

கடல் இடியோசை போல முழக்கமிட்டுக்கொண்டிருந்தது. ஏனென்றால் கரையில் இருந்து ஆறடி ஆழத்தில் கடல் இருந்தது. அலைகள்  கரைமேல் அறைந்துகொண்டிருந்தன. இருண்ட வானம் எஞ்சவிட்ட ஒளி. அதில் உடைந்த செங்கல் கட்டிடங்களின் மிச்சங்கள். செங்கல் கரைந்து வெற்றுச்சுவர்களாக ஒரு தேவாலயம். மிகப்பழைய ஒரு செங்கல்வளைவுக் கட்டுமானம். ஒரு நகரின் எலும்புக்கூடு. சில கட்டிடங்கள் பாதிவரை மணலுக்குள் புதைந்திருந்தன.

பாதி அழிந்த நகரங்கள் பஷீரின் கதைகளில் வந்துகொண்டிருக்கும். பஷீர் பாலைநிலத்தில் அப்படிப்பட்ட பல ஊர்களை கண்டிருக்கிறார். தனுஷ்கோடி கோணங்கிக்கு பிடித்தமான ஊர். அவர் அடிக்கடி வருவதுண்டு. அவருடைய நண்பர்களையும் அழைத்து வருவார். கோணங்கி படைப்புகளில் தனுஷ்கோடி ஒரு அவலச்சித்திரமாக வந்துகொண்டிருக்கும். அந்தியில் தனுஷ்கோடியைப் பார்க்கையில் கோணங்கியின் அந்த பதைப்பை புரிந்துகொள்ள முடிந்தது.

(மேலும்)

முந்தைய கட்டுரைதிருவுந்தியார்
அடுத்த கட்டுரைமுதற்காட்டாளனும் காட்டாளத்தியும்