பனை, கடிதம் – காட்சன் சாமுவேல்

தலையில் பனை

அன்புள்ள அண்ணன்

தலையில் பனை என்ற கட்டுரை வாசித்தேன். எனது நிலைப்பாடுகளை உள்வாங்கிய பதிவுகள் அவை. சென்னை புத்தக கண்காட்சியில் அஜிதனும் நீங்களும் என்னை கட்டியணைத்து திருமணத்திற்கு கண்டிப்பாக வரவேண்டுமென்றிருந்தாலும்,  மிகுந்த தயக்கங்களுக்குப் பின் தான் அஜிதன் தன்யா திருமண வரவேற்புக்கு சென்னை வந்தேன். காரணம் திருமணத்தன்று வரயிலவில்லை என்பதே. எனது பணியிடத்தில் விடுப்பு என்பது சிக்கலானதும் கூட. மேலும் பிரபலங்கள் வரும் நிகழ்வாகையால்ஒரு சிறு தயக்கம் இருந்தது. ஆனால் தோழர் காளிபிரசாத் அவர்கள் என்னை ஊக்குவித்தார்கள்அவர் வர இயலாதபோது எனக்கு ஷண்முகம் அவர்கள் எண்ணைக் கொடுத்து தைரியமாகப் போங்கள் என்றார்கள்.

ஷண்முகம் அவர்கள் தனது தோட்டத்திலுள்ள 40 பனைகளை,  வெட்டும் தருவாயில் எனது பனைமரச்சாலை என்ற நூலைக் கையில் எடுத்தவர் என்றும் அதன் பின்பு அப்பனைகளின் மீது சிறு கீறல் கூட படாதவகையில் அவைகளைப் பேணி காப்பவர் என்றும் அறிமுகம் செய்தார். நான் அழைக்குமுன்பே ஷண்முகம் அவர்கள் என்னை அழைத்து எப்போது வருகிறீர்கள்,  நான் பார்த்துக்கொள்ளுகிறேன் என தைரியம் கூறினார்கள். தயக்கத்தை உடைத்து என்னை உள்ளே அழைத்துவத்தது அவர்கள் தான். உள்ளே நுழையும்போது நீங்கள் இயக்குனர் ஷங்கர் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தீர்கள்.

எனது திருமண வரவேற்பு நாகர்கோவிலில் நிகழ்ந்தபோது நீங்கள் மற்றும் அக்கா இருவருமாக வந்து என்னை வாழ்த்தினீர்கள். ஆகவே எப்படியாவது திருமணத்திற்கு வரவேண்டும் என உறுதிபூண்டிருந்தேன். உள்ளே நுழைந்ததும் முதலில் பார்த்தது  அருண்மொழி அக்காவையும் சைதன்யாவையும்தான். முகமலர்ச்சியுடன் இருவரும் வரவேற்றார்கள். அஜிதனை ஐந்தாம் வகுப்பில் பார்க்கத்துவங்கியது,  பிரமிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. எப்படியோ இந்த மகிழ்ச்சியின் தருணத்தில் வந்துசேர்ந்துவிட்டேன் என்ற நிறைவு ஏற்பட்டது.

இளம்பரிதி அவர்கள் என்னிடம் வந்து தன்னை அறிமுகம் செய்தார்கள். அவர்கள் உதவியுடன்தெரிந்த முகங்களை ஒவ்வொன்றாக பார்க்கத் துவங்கினேன். சில முகங்களை அடையாளம் தெரிந்தது. சிறில் அலெக்ஸ் மற்றும் குடும்பத்தினரைப் பார்த்தேன். ப்ரியம்வதா மற்றும் அவரது கணவரைப் பார்த்து உரையாடினேன். சில நண்பர்களும் குடும்பத்தினரும் எனது தொப்பியுடன் சேர்த்து செல்ஃபி எடுத்துக்கொண்டனர். ஆம் உங்களைச் சுற்றியிருப்பவர்களிடம் இருக்கும் அன்பு என்னை சுற்றி பிணைத்துக்கொண்டது.

எனது தொப்பி குறித்து சில குறிப்புகளை நான் சொல்லியே ஆகவேண்டும். 2019ஆம் ஆண்டு மும்பையில் நான் பணியாற்றும் திருச்சபையில்  பனையோலைப் பயிற்சியினை ஒரு வாரத்திற்காக நான்  ஒழுங்குசெய்தேன். இந்த நிகழ்ச்சியை நான் ஒழுங்கு செய்யக் காரணம்கிறிஸ்மஸ் நேரங்களில் திருச்சபைகளில் செய்யப்படும் அலங்காரங்களால் ஏற்படும் மாசுகள் அளவிடமுடியாது. ஒலிஒளி மற்றும் நெகிழி போன்றவைகளே கிறிஸ்மஸ் அலங்காரம் என்றாகிவிட்டது. ஆகவே மாற்றாக பனை ஓலைகளைக் கொண்டு நட்சத்திரங்கள் மற்றும் அலங்காரங்களை ஓலைகளில் செய்யலாமே என்றுதான் திட்டம். ஒருவேளை முற்காலங்களில் குருத்தோலைகள் கொண்டு கிறிஸ்மஸ் அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் சமீபத்தில் அப்படியான ஒரு துவக்கத்தை நாங்களே முன்னெடுத்தோம். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடியைச் சேர்ந்த போதகர் ஜாண் சாமுவேல் எங்களை மிஞ்சும் பாய்ச்சலுடன் அதனை தொடர்கிறார். நாகர்கோவிலிலிருந்து சங்கர் என்ற பனையேறும் கைவினைஞர் பயிற்சியளிக்க வந்திருந்தார்கள். பயிற்சியின் மூன்றாம் நாள் தான் இளவரசி என்ற ஒரு இளம்பெண் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் கற்பதில் அனைவரையும் விட அவருக்கு பெருவிருப்பு இருந்தது. அனைவரையும் பின்தள்ளும் வேகத்தில் கற்றுக்கொண்டார்இளவரசிக்கு பனை சார்ந்த சுவை கிட்டியது இப்படித்தான்.

ஓலைப் பின்னல்கள் பெரும்பாலும் பாமரர்கள் செய்யும் ஒரு இழிந்த தொழிலாகவே பார்க்கப்படுகிறது. அது ஒரு கலை வடிவமாக மாறும் தருணங்களும் வாய்ப்புகளும் அதனுள் இருக்கிறதை எவரும் கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக பின்னல்கள் கணிதம் சார்ந்தவை. “அடி தப்பினால் முக்கு கோணும்“. முதல் கோணல் முற்றும் கோணல்தான். இளவரசி அதன் கணிதத்தை உள்வாங்கிவிட்டாள். அதன் பின்புஅவள் பின்னல்களில் நம்பமுடியாத பலவற்றைச் செய்யத் துவங்கினாள். அவளது அன்பு பரிசு தான் இந்த பனையோலைத் தொப்பி.

முதன் முதலாக அவள் எனக்கு செய்துகொடுத்தது 12 முக்கு உள்ள ஒரு தொப்பி. இதனை அவள் ருஷ்ஷிய மக்கள் செய்யும் ஒரு வடிவத்திலிருந்து பிரதி எடுத்திருக்கிறாள். ஆனால் இந்தியாவில் இப்படியான ஒரு தொப்பி செய்யப்படுவது இதுவே முதன்முறை. பொதுவாக பனையோலைப் பொருட்களுக்கு முக்கு மடக்குவதுதான் சிரமமானது. பின்னல் ஒரே சீராக செல்லும். முக்குகள் வரும்போது ஆரம்பகட்ட பின்னலாளர்களுக்கு அது ஒரு திகைப்பைக் கொடுக்கும்எங்கே முக்கு மடக்குவது“? என. இந்தியாவில் நானறிந்தவரையில் நான்கு முக்கு பெட்டிகள் தான் அதுவரை புழக்கத்தில் இருந்தவைகளில் அதிக எண்ணிக்கை கொண்டவை. இரண்டு முக்கும் அரிதாக முன்று முக்கு பெட்டிகளும் இங்கே புழக்கத்தில் இருந்திருக்கின்றன. 12 முக்குகள் எடுக்கவேண்டுமென்றால் அது சாதாரணமான ஒன்றல்ல. அவள் கருத்தூன்றி பின்னல்களின் அடிப்படைகளை கற்றிருந்ததனாலேயே அவளால் வெற்றிகரமாக இந்த தொப்பியச் செய்ய முடிந்தது. அவளது திருமணம் மற்றும் தொடர்ந்து பிறந்த இரண்டு குழந்தைகள் என பனையோலையிலிருந்து அவளை சற்று அப்புறப்படுத்திவைத்திருக்கின்றன என்றாலும்வரும்கால தமிழகத்தில்பனை சார்ந்து சிறந்த வடிவமைப்புகளைக் கொடுக்க அவளால் முடியும் என்று உறுதியாய் நம்புகிறேன். நான் முதுகில் சுமக்கும் பையும் அவளின் கொடைதான். திருமறை எடுத்துச் செல்ல ஒரு சிறு பையும் அவள் எனக்கு தயாரித்து கொடுத்திருக்கிறாள். பணம் வைக்கக்கூடிய ஓலை பர்ஸ் ஒன்றையும் எனக்கு பரிசளித்திருக்கிறாள்

பின்னல்கள் சார்ந்து எனக்கு நானே ஒரு கட்டுப்பாட்டை விதித்துக்கொண்டுள்ளேன்அது பின்னல்களைக் நான் ஒருபோதும் செய்யக்கூடாது என்பது. காரணம்அப்படி நான் செய்யத்துவங்கினால்பின்னல்களில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலான மனிதர்களை நான் மறைத்துவிட வாய்ப்பிருக்கிறது. அது நிகழக்கூடாது. எங்கோ தொலைவில் இருக்கும் பனையோலை கலைஞர்களின் மீது ஒளிபாய்ச்சும் ஒருவனாக நான் இருக்கவேண்டுமே ஒழியஒருபோதும் அவர்களின் இடத்தை பிடித்துக்கொள்ளும் சிறுமையை செய்யக்கூடாது. அப்படித்தான் என்னால் தமிழம் முழுக்க இருக்கும் பல்வேறு கலைஞர்களை பேட்டிகண்டு தி இந்து தமிழ் திசை வெளியிடும்கற்பக தருஎன்ற தொடர் வாயிலாக அறிமுகம் செய்ய முடிந்தது.

இளவரசி திருமணமான பின்பு ஒருமுறை மும்பை வந்திருந்தாள். ஜாஸ்மினிடம்  அந்த தொப்பியின் பின்னல்முறைகளை கற்றுக்கொள் என்றேன். கன்னியாகுமரி மாவட்டம் பனைக்கும் பனை சார்ந்த பொருட்களுக்கும் மூடுவிழா நடத்தி சுமார் 30 ஆண்டுகளுக்கு  மேலாகின்றது. வேண்டாவெறுப்பாகவே ஜாஸ்மின் இந்த களத்தினுள் நுழைந்தாள். மித்திரன் ஓலைப் பொருட்களை விரும்பிச் செய்வான். இளவரசிக்கு அனைத்து ஓலை சார்ந்த சேவைகளையும் செய்பவன் அவன் தான். அவனது ஊற்சாகமும் இணைந்துகொள்ள ஜாஸ்மின் ஒருவாறு இந்த பின்னல் முறையினை இளவரசியிடமிருந்து கற்றார்கள். சமீபத்தில் மும்பையிலுள்ள சுமார் 100 பள்ளிக்கூடங்கள் இணைந்து நிகழ்த்திய போட்டியில் பனை சார்ந்த பொருட்களை மாணவர்களுக்கு செய்யக் கற்றுக்கொடுத்து இரண்டாம் பரிசை ஜாஸ்மின் பள்ளிக்கூட மாணவர்கள் வென்றார்கள். ஜாஸ்மினும் மித்திரனும்  கணக்கு போடுவதில் சிறந்தவர்கள். எத்தனை ஓலைகள்எத்தனை வரிசைகள் என்று எண்ணி எண்ணி வைத்து துவங்குவார்கள். மித்திரன்அடிவைப்பான் ஜாஸ்மின்பின்னுவார்கள்”. ஒரு கட்டத்தில் பெரிய ஓலைகளுக்கு பதிலாக சிறிய ஓலைகள் வைத்து செய்தாலென்ன என்று துவங்கி தற்போது நான்காம் தலைமுறை தொப்பியில் வந்து நிற்கிறோம். 12 முக்கிலிருந்து தற்பொது 28 முக்கு எடுக்க ஜாஸ்மின் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதைவிடவும் சிறிதாக செய்வது சவாலான காரியம் ஆனால் வெகுவிரைவில் அதனையும் செய்துவிடுவோம். பின்னல் முடிந்த பிற்பாடுபொத்துவதுஎனது வேலை. எனது தொப்பியை செய்து முடிக்க ஜாஸ்மினுக்கு 4 மணிநேரம் பிடித்ததென்றால்அதனை பொத்தியெடுப்பதற்கு எனக்கு 16 மணிநேரம் பிடித்தது. இரயில் பயணம் உட்படஇரண்டு நாட்கள் கண்ணும் கருத்துமாக அந்த தொப்பியை பின்னி எடுத்து வந்தேன். ஓலையின் அளவுகள் சிறிதாகுந்தோறும் அதன் முக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால் தொப்பி வசீகரமிக்கதாக ஆகும்.

தொப்பியை மும்பையில் மட்டுமல்ல செல்லுமிடமெங்கும் வைத்தபடிதான் செல்லுகிறேன். கூடுமானால் பனையோலைப் பைகளையும் எடுத்துச் செல்லுகிறேன். குமரி மாவட்டத்திலுள்ளவர்களில் அறுபது வயதைக் கடந்தவர்களுக்கு இது ஒரு அவமானத்தின் அடையாளம். ஆகவே அவர்களின் ஏளனப் பார்வைகள் இடக்கு பேச்சுக்கள் என நான் அதிகம் கேட்டுவிட்டேன். சில நேரம் எரிச்சல்படுவதையும் பார்த்திருக்கிறேன்ஆனால் மும்பை மற்றும் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் என்னைப் பார்க்கும்போது  அவர்களுக்கு பெரும் உற்சாகம் வருவதைக் கண்டிருக்கிறேன். பொதுவாக பீகாரிகள்மேற்குவங்கத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் உத்திரபிரதேசத்தைச் சார்ந்தவர்களை அவர்களின் சிரிப்பைக் கொண்டே அடையாளம் கண்டுவிடமுடியும். ஆவர்களுக்கும் பனை நம்மைப்போலவே முக்கிய குறியீடுதான். இதுபனை இந்தியாவில் நான் பயணிக்காத குக்கிராமங்களை குறித்த தகவல்களை எனக்கு கொண்டுசேர்க்கும் கருவியாக இருக்கிறது. இஸ்லாமியர்களுக்கும் என்னை பார்த்தவுடன் ஒரு பாசம் உற்றெடுப்பதைக் கண்டிருக்கிறேன். அவ்வகையில் இந்த தொப்பி ஒரு உரையாடல் துவங்குவதற்கான புள்ளி என்றே எண்ணுகிறேன்.

இந்திய அளவிலான கிறிஸ்தவர்களின் மாநாடு ஒன்று கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்றபோதுஎன்னிடம் நான் வைத்திருப்பதுபோன்ற தொப்பிகளை இந்திய கிறிஸ்தவ மாமன்ற பொது செயலாளர் அருட்திரு. ஆசிர் அவர்கள் கேட்டார்கள். அதில் ஒன்று உலக சபைகளின் மாமன்ற தலைவரும் இந்திய வம்சாவளியினருமான தென்னாப்பிரிக்காவைச் சார்ந்த அருட்திரு டாக்டர் ஜெர்ரி பிள்ளை அவர்கள் தலையில் வைக்கப்பட்டது. அவர் மகிழ்ந்துபோனார்உலக அளவில் திருச்சபை பனைகளுக்காகவும் பனை சார்ந்து வாழும் மக்களுக்காகவும்சூழியலுக்காகவும் களமிறங்கவேண்டும் என்பது எனது நெடுநாள் விருப்பம். “பனைபஞ்சம் போக்கிஎன்ற சொல் என் காதுகளில் ரீங்காரித்துக்கொண்டே இருக்கிறது. உலகின் பசியினை பனையால் தீர்க்கவியலும் என்பது எனது நம்பிக்கை. ஆகவே  அட்சயப்பாத்திரமான  பனையை உலகமெங்கும் விதைத்துக்கொண்டே இருக்கவேண்டும். பனை சார்ந்த உணர்வுகளையும்.

எனது ஆலயத்திற்கு வருகிறவர்களுக்கும் சால்வைக்குப் பதிலாக இப்பனையோலைத் தொப்பியை வழங்கி அவர்களை கவுரவப்படுத்துவது எனது வழக்கம். ஆனால் திருச்சபை அவ்வளவு எளிதில் என்னை தொப்பியுடன் ஏற்றுக்கொள்ளாது. பல இடங்களில் நாசுக்காகவும்கடிந்துகொள்ளுதலோடும்அதட்டலோடும் என்னை அவமானப்படுத்தும் நோக்கோடும்  எனது தொப்பி கீழிறக்கப்பட்டிருக்கிறது. இந்த எளிய ஓலைத் தொப்பி ஒரு சிலுவையாக நான் சுமந்துகொண்டிருக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் அனைவரும் அறிந்திருப்பது தங்கச்சங்கிலியில் கோர்கப்பட்ட சிலுவையையே. குருத்தோலை ஞாயிறு அன்று பிடிவாதமாக பனைஓலைத் தொப்பியினை எனது தலையில் வைத்துக்கொண்டே ஆராதனையினை நிகழ்த்துவேன். வெகு சமீபத்தில் தமிபாரதி எனற கலைஞர் எனக்கு பனை நாரில் செய்த அழகிய சிலுவை ஒன்றை எனக்கு அனுப்பிவைத்தார். இவ்வித சமய குறியீடுகள் பனையைக் காப்பதில் ஓரளவு பயனளிக்கும் என்றும் நம்புகிறேன்.

இச்சூழலில் பேராசிரியர் லோகமாதேவிஎனது உற்ற தோழரின் வார்த்தைகள் எனக்கு துணை நிற்பது பெரும்பாக்கியம். அவர்களின் துறை சார் அறிவினைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். மிக எளிமையாகவும் ஆர்வத்துடனும் மாணவர்களுக்கு அவர்கள் பாடமெடுப்பதை அருகிலிருந்து கவனைத்திருக்கிறேன். பல சூழல்களில் தாவரங்கள் சார்ந்த கேள்விகள் எழும்போதெல்லாம்ஓடிச்சென்று நிற்கும் புகலிடமும் அவர்கள் தான். அவர்களது தாவரங்கள் சார்ந்த கட்டுரைகள் ஒரு கதை வாசிப்பதுபோல அத்துனை இனிதான அனுபவமாக இருக்கும். பல்வேறு வேலைகளுக்கிடையி  நீங்களும் மாபெரும் விசையோடு  என்னை தாங்கிக்கொள்ளுவது எனக்கு மிகப்பெரும் வரமே.

அன்று நான் உணவுண்ணும்போது எஸ். ராமகிருஷ்ணன் அவர்களைப் பார்த்தேன். “அலைவோம் திரிவோம்என்ற அவரது தொடர் எனது பனைமரச்சாலை பயணத்திற்கு மிகப்பெரும் தூண்டுதலாக இருந்தது என்று கூறினேன். காசே இல்லாமல் வீட்டை விட்டு வெலியேறலாம் என்ற துனைவை அவர் என்க்குள் 20 ஆன்டுகளுக்கு முன்பே உன்றியிருந்தார். சாரு அவர்களுக்கு ஹலோ சொன்னேன். மானுஷ்யபுத்திரன் அவர்களை நெருங்க தெம்பில்லை. அப்போதுதான் நண்பர் அரங்காவை நான் சந்திக்கவேயில்லை என்ற எண்ணம் ஏற்பட உள்ளே வந்து அவரைப் பார்த்தேன். 2018 ஆண்டு விஷ்ணுபுரம் விழாவிற்கு நான் வந்தபோதுகிறிஸ்மஸ் நேரமாகையால்வீடு திரும்ப இயலாதபடி பேருத்துகள் நிரம்பிவழிந்தன. அரங்கா என்ன மாயம் செய்தாரோ தெரியாது எனக்கான பயனச்சீட்டை பெற்றுக்கொடுத்தார். அவரைப் பார்த்து பேசி நான் திரும்பும்போதுதான் அங்கே அந்த சலசலப்பு கேட்டது. “விஜய் சேதுபது வருகிறார்”. எந்த ஆடம்பரமும் இன்றி அவர் வெகு அமைதியாக வந்தார். அவருக்கான அகண்ட வழி அங்கே உருவானது. மேடையில் நீங்கள் குடும்பமாக  புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்ததினால் அவர் உங்களை தொந்தரவு செய்யாமல் என்னருகில் நின்றுகொண்டார். அந்த பண்பு எனக்கு பிடித்திருந்தது. உடனே அவருக்கு நான் இருகரம் கூப்பி வணக்கம் சொன்னேன். அவர் என்னைப் பார்த்து வெகு இயல்பாகஉங்க தொப்பி நல்லயிருக்குஎன்றார். கிளப் டென் தாமரையின் பாண்டிச்சேரி தோழியான கார்த்திகா என்னை ஒருமுறை ஒரு வானொலி பேட்டியெடுத்தார்அவர்களுக்கு விஜய் சேதுபதி குடும்ப நண்பர். அப்படித்தான் உரையாடலைத் துவங்கினேன். பனை சார்ந்த எனது பணிகளைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே நீங்கள் வந்து என்னையும் எனது நெடுநாள் பனைதிருப்பணியினையும் விஜய் சேதுபதிக்கு விரிவாக அறிமுகப்படுத்தினீர்கள். தற்செயல் தான் ஆனால் தெய்வச் செயல்.

எனது பணிகள் மக்களிடம் செல்வதற்கு இவ்வித முகங்களின் உதவிகள் முக்கிய தேவை.

சமீபத்தில் நமது ஊரைச் சார்ந்த அஸ்வின் என்ற தம்பி நாட்டுபுறவியலாளர்  மற்றும் பேராசிரியர் அ க பெருமாள் அவர்களிடமிருந்து எனது எண்ணை வாங்கி என்னைத் தொடர்புகொண்டார். லண்டனில் பணியாற்றும் அவர், “பனை எழுகஎன்ற தன்னறம் நூலை இங்கிருந்து எடுத்துச் சென்று வாசிக்கிறேன் என்றார். அவர் ஏற்கனவே உங்களுடைய ஒரு கதையையும்அ கா பெருமாள் அவர்கள் கட்டுரையையும் ஒலிவடிவில் பதிவுசெய்திருக்கிறார். தற்போது தொடர்ந்து 53 நாட்களாக பனை எழுக நூலையும் வாசித்து வலையேற்றிவருகிறார். ஒருவேளை தமிழ் தெரிந்த ஆனால் வாசிக்க தெரியாதவர்களுக்கு இது பேருதவியாக இருக்கும். அல்லது வயதானவர்களுக்கோபார்வைகுறைபாடுள்ளவர்களுக்கோ இது உதவிகரமாக இருக்கும். இப்படி நேரடியாகவும் உங்கள் வாசகர் வட்டமுமாகவும் அனேகர் என்னை கவனித்து எனது பணியை ஊக்குவிக்கிறார்கள்.

விஜய் சேதுபதிக்கு ஒரு தொப்பி தயாராகிக்கொண்டிருக்கிறது என்று அவருக்குச் சொல்லுங்கள். உங்களுக்கும் லோகமாதேவிக்கும் நான் நன்றி கடன்பட்டிருக்கிறேன்.

உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் பனங்கன்றுகளைப்போலிருப்பார்கள்” – புதுமண தம்பதியினருக்கும்ஏன் அனைவருக்குமே திருமறையின் மாற்றியமைக்கப்பட்ட இவ்வாக்கியம் ஆசியளிப்பதாக என்றும் நிலைக்கட்டும்.

பேரன்புடன்

பனைதிருப்பணி. காட்சன் சாமுவேல்

முந்தைய கட்டுரைகடலின் முதல் அலை
அடுத்த கட்டுரைகேரளமும் குடியும்- கடிதம்