- மானஸாவின் காலடியிலிருந்து…
- மழைப்பாடகர்கள்
- எஞ்சும் நிலங்கள்
- தெய்வத்தளிர்
- பெண்பேராற்றல்
- முகிலில் எழுதல்!
- எண்முக அருமணி
- வில்துணை வழிகள்
- அளித்துத் தீராதவன்
- படைக்கலமேந்திய மெய்ஞானம்
- காட்டின் இருள்
- முடிவிலி விரியும் மலர்
- மயங்கியறியும் மெய்மை
- தளிர் எழுகை
எனக்கு 21 வயது நடக்கும் காலம், ஓர் அரசியலமைப்பின் ஊழியனாக அன்று நடந்த மதக்கலவரத்தின் வழக்குகளை ஒருங்கிணைக்க அவ்வப்போது நீதிமன்றம் செல்லவேண்டியிருந்தது. அப்போது நாகர்கோயிலில் இரு பெரும் குற்றவாளிக்கும்பல்கள் நடுவே கொலைகள் மாறி மாறி நிகழ்ந்துகொண்டிருந்தன. ஒருநாள் காலையில் நீதிமன்ற முகப்பில், ஒரு வண்டியருகே நின்றிருந்த பெண்மணியைச் சுட்டி ஒருவர் சொன்னார், ‘புகழ்பெற்ற அந்த குற்றவாளியின் மனைவி இவர்’
அந்தப்பெண்மணி பரிதாபமாக இருந்தார். பார்க்கிறவர்களிடமெல்லாம் கல்லடி வாங்கும் தெருநாய்க்கு ஒரு உடல்மொழி உண்டு அல்லவா, அது இருந்தது அவரிடம். எத்தனை துயரங்கள், அவமதிப்புகளை கண்டிருப்பார். எத்தனை தூக்கமற்ற இரவுகள். ஆண்களுக்கு வன்முறை என்பது போர்வெறியும் களியாட்டும். அவர்கள் விழைவது வெற்றி, அதிகாரம். ஆனால் பெண்களுக்கு அது வெறும் ஆணவம், அழிவு மட்டும்தான். அவர்களுக்கு எஞ்சுவது துயர், அவமதிப்பு மட்டும்தான்.
குருதிச்சாரல் எழுதும்போது என்னுள் அந்த பெண்மணியின் முகம் அவ்வப்போது வந்து சென்றது. மகாபாரதப் பெருங்காவியத்தில் இல்லாதது இல்லை என்பார்கள் – அன்னையரின் கண்ணீர் தவிர என நான் சேர்த்துக்கொள்வேன். எத்தனை இளைஞர்கள் களத்தில் மறைந்தனர். அவர்களின் அன்னையர் என்னவானார்கள்? அந்த பெரும் விடுபடலே பின்னாளில் ஸ்த்ரீபர்வம் என்னும் ஒரு பிற்சேர்க்கை மகாபாரதத்திற்கு உருவாக வழிவகுத்தது.
ஸ்திரீபர்வம் என்பது ஒரு பெரும் துயரவிவரிப்பு. காந்தாரியின் புலம்பல் மட்டும்தான் அது. ஏன் அது உருவானது என்பதற்கும் காரணம் உண்டு, பின்னாளைய இந்திய வரலாறு என்பது போர்வெறியாட்டுதான். அந்த அழிவில் பெருகிய அன்னையரின் கண்ணீரின் வெளிப்பாடே காந்தாரி வழியாக ஸ்த்ரீபர்வத்தில் உள்ளது.
நான் அந்தக் கண்ணீர் வழியாக அவ்வன்னையரை காட்ட விரும்பவில்லை. அந்த ஒற்றைப்படைத்தன்மையுடன் அவர்கள் சித்தரிக்கப்படலாகாது என நினைத்தேன். அவர்கள் வெறும் விதவைகளோ மகன்களை இழந்த அன்னையரோ அல்ல. அரசிகள், ஆளுமை கொண்டவர்கள். அவர்களை வெண்முரசில் நிறைக்க நினைத்தேன். ஆகவே போர் மூண்டெழும் காலகட்டத்தை அவர்கள் வழியாகச் சித்தரித்தேன்.
அந்தப் பெரும்போரை தடுக்க அன்னையர் முயல்கின்றனர். அவர்களை மீறி அது நிகழ்கிறது. அவர்களே இறுதி அணைக்கட்டுகள், அவை உடைந்ததும் பெருகுவது குருதிவெள்ளம். ஆகவே இது குருதிச்சாரல் மட்டும்தான். மழை வருவதற்கு முந்தைய துளிப்பிசிர்கள்.
மகாபாரதத்தை ஒட்டி நான் எழுதிய வடக்குமுகம் நாடகத்தில் ஒரு வசனம். “குறிதவறிய எல்லா அம்புகளும் பூமியையே தாக்குகின்றன”. எல்லா போர்களும் அன்னையருக்கு எதிரானவைதான் என்று குருதிச்சாரல் சொல்கிறது
இந்நவாலை முன்பு வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்துக்கும், இப்போது இந்நாவலை மறுபதிப்பு செய்யும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் நன்றி.
ஜெ
(விஷ்ணுபுரம் வெளியீடாக வரவிருக்கும் குருதிச்சாரல் நாவலுக்கு எழுதிய முன்னுரை)
(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : [email protected]
Phone 9080283887)