குருகு இதழ்

அன்புள்ள நண்பர்களுக்கு,

குருகு பனிரெண்டாவது இதழ் வெளிவந்துள்ளது. பறவையியலாளர் ரவீந்திரன் நடராஜன் நேர்காணல் இந்த இதழில் இடம்பெறுகின்றது. தமிழகத்தின் முக்கியமான பறவையியலாளரான ரவீந்திரன், பறவையியல் ஆய்வுகள் மட்டுமல்லாது பல்லுயிர் இயக்கம் தொடர்பாகவும், பல்லுயிர் சரணாலயங்கள் தொடர்பாகவும் தொடர்ந்து களப்பணியாற்றுபவர்.

தமிழின் சூழலியல் முன்னோடியான மா. கிருஷ்ணனின் கானுயிர் அனுபவங்களைக் குறித்த கட்டுரையின் மொழிபெயர்ப்பு இதழில் இடம்பெறுகின்றது. உலகப்போர் காலத்தில் கலைஞர்கள் கிருஸ்துவின் உருவத்தை வெளிப்படுத்திய விதம் குறித்து இந்த இதழின் கிறிஸ்துவின் சித்திரங்கள் தொடர் பேசுகின்றது. ஆய்வாளர் அ.கா. பெருமாள் எழுதிய நாட்டார் மரபுடனான வைணவத்தொடர்பு குறித்த கட்டுரை வெளியாகின்றது. அறிவியல் தொடர் இயற்பியல் சார்ந்த தத்துவ சிக்கல்களை ஆராயும் விதமாக அமைந்துள்ளது. ஆடல் தொடர் இலங்கை மட்டக்களப்புப்பகுதியில் நிகழ்ந்த சூரன் போர் கூத்தை விவரிக்கின்றது.

சென்ற இதழில் வெளியான யட்சகானம் நேர்காணல் மற்றும் யட்சகான அறிமுக கட்டுரை குறித்து நண்பர்கள் தொடர்ந்து தங்களது வாசிப்பனுபவங்களை தெரிவித்தபடி இருக்கின்றனர். அவர்களுக்கு நன்றி.

புதுவையை சேர்ந்த பனை இலக்கிய அமைப்பு குருகு இதழுக்காக ஒரு உரையாடல் அமர்வை 02.03.2024 அன்று வில்லியனுர் யாழ் அரங்கில் ஏற்பாடு செய்திருந்தது. புதுவை மற்றும் சென்னையை சேர்ந்த நண்பர்கள் கலந்து கொண்டனர். இரு முனைகளில் இருந்து எழுத்து வாசிப்பு இவற்றோடு பிணைந்திருக்கின்ற மனங்கள் முகங்களாகி சந்தித்துக்கொள்வது தனித்த அனுபவம்தான். குருகு இதழ் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் விதமாகவும், படைப்புகள் குறித்து விவாதிக்கும்படியாகவும் அமர்வு அமைந்தது. பல புதிய வாசகர்கள் தங்களது வாசிப்பனுபவங்களை தெளிவாக முன்வைத்தனர். இந்த அமர்வை முன்னெடுத்த, கலந்து கொண்ட நண்பர்களுக்கு எங்களது நன்றி

http://www.kurugu.in

https://twitter.com/KuruguTeam – குருகு இதழின் டிவிட்டர் இணைப்பு. வாசகர்கள் இணைந்து கொள்ளலாம்.

அன்புடன்
குருகு

முந்தைய கட்டுரைகதைத்தொடக்கம்
அடுத்த கட்டுரைசைவத்திருமுறை வகுப்புகள், கடிதம்