மையங்களால் அழித்தல்- ராமர்கோயில் பற்றி.

( ஃப்ரண்ட்லைன் இதழில் வெளிவந்த கட்டுரை Ram temple inauguration marks the start of an oppressive order)

வரலாறு முழுக்க மாபெரும் சுவரெழுத்துபோலத் தெரிவதும், ஆனால் அதேசமயம் சாமானியர்களால் புரிந்துகொள்ளவே முடியாததுமான ஒரு கருத்து உண்டு. ‘வலுவான மையம் கொண்ட அமைப்புகள் மிக எளிதில் சரிவடையும்என்பதுதான் அது. ஓர் அமைப்பு வலிமையாகவும், நீடித்ததாகவும் இருக்கவேண்டும் என்றால் அதற்கு மிக வலிமையான மையம் தேவை என சாமானியர் நம்புகிறார்கள். ஆகவே அமைப்பை உருவாக்கும்போதே மையத்தை உருவாக்குகிறார்கள். மையத்தை வலுவாக்கிக்கொண்டே செல்கிறார்கள். அந்த அமைப்பு வலுவிழக்கும் என்று தோன்றினால் அஞ்சி மையத்தை மேலும் மேலும் அழுத்தமானதாக ஆக்குகிறார்கள். அந்த அமைப்பு ஒட்டுமொத்தமாகச் சரியும் வரை மையத்தை வலுவாக்கிக் கொண்டே செல்வார்கள். மையத்தின் எடை தாளாமல்தான் பெரும்பாலான அமைப்புகள் சரிகின்றன. 

சாமானியர் என இங்கே சொல்லப்படுவதில் வாழ்க்கையின் எல்லா தரப்பினரும் உண்டு.மறு சொல்லே இல்லாமல் குடும்பத்தை கட்டியாளும் குடும்பத்தலைவரை மையமாகக் கொண்ட குடும்பங்கள் வலுவானவையாக இருக்கும் என நம்பும் கோடிக்கணக்கானவர்கள் இங்குண்டு. அதே நம்பிக்கையுடன் தேசத்தை ஆட்சி செய்பவர்களும் உண்டு. சிறு வணிக நிறுவனங்கள் முதல் பெரிய நிர்வாக அமைப்புகள் வரை, சிறிய சேவை அமைப்புகள் முதல் மதங்கள் வரை இந்த நம்பிக்கையை கொண்டிருக்கின்றன. ஆனால் அது உண்மை அல்ல என்பதை நாம் கண்கூடாக நம் குடும்பங்களிலேயே காணலாம். வலுவான குடும்பத்தலைவரால் நடத்தப்படும் குடும்பங்களில் மிக எளிதில் பூசல்கள் உருவாகின்றன.பிளவுகள் தோன்றுகின்றன. அனைவருக்கும் இடமுள்ள நெகிழ்வான குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக நீடிக்கின்றன. மிக மிக ஆற்றல் கொண்ட மையம் கொண்டிருந்த தேசங்கள் ஒரு நூற்றாண்டைக்கூட கடந்ததில்லை. அண்மைக்கால உதாரணம் சோவியத் ருஷ்யா. 

அப்படியே பின்னுக்குச் சென்றால் ஹிட்லரின் ஜெர்மனி, பிரிட்டிஷ் பேரரசு என,  ஒவ்வொரு உதாரணமும் நம்மை திகைப்பிலாழ்த்தும். அதற்கான காரணம் மிக மிக எளிதானது. அது இயற்கையின் விதி. இயற்கையிலுள்ள ஒவ்வொன்றும் பிரிந்து பிரிந்துதான் வளர்கின்றன. ஒன்றுடனொன்று போட்டியிட்டு மோதி நிலைகொள்கின்றன. மிக வலுவான ஒன்றுக்கு அதேயளவு நிகரான வலிமைகொண்ட ஒன்று உடனே உருவாகிவிடுகிறது. அந்த முரண்பாடுதான் இயற்கை இயங்கும் வழி. அதை மேலைச்சிந்தனை dialectics என்கிறது. இந்திய சிந்தனைமரபில் யோகாத்ம தரிசனம் என்பது அதுவே என நடராஜ குரு அவருடைய நூல்களில் விளக்குகிறார். 

வலுவான மையத்தை உருவகிப்பவர்கள் எதிர்ப்பே இல்லாத ஒரு புள்ளியை கற்பனை செய்கிறார்கள். அப்படியொன்றுக்கு இயற்கையில் இடமே இல்லை என்பதை அவர்கள் உணர்வதில்லை. இன்று இங்கே இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் அப்படி ஒரு மையப்புள்ளிக்கு இந்து மெய்யியலில் எந்த இடமும் இல்லை என்பதை அறிந்திருப்பதில்லை. இந்து மெய்யியலில் எல்லா சக்திக்கும் எதிர்சக்தி உருவகிக்கப்பட்டுள்ளது. புராணங்களில் எல்லா தெய்வத்திற்கும் எதிராகச் செயல்படும் நிகரான ஆற்றல்கொண்ட சக்திகள் உண்டு. முழுமுதல் (absolute) என உருவகிக்கப்படுவது வேதாந்திகள் சொல்லும் பிரம்மம் மட்டுமே. அது தொடக்கமும் முடிவும் அற்றது. அது அன்றி வேறேதும் இல்லை. ஆனால் அந்நிலையில் அதற்குச் செயல்தன்மையே கிடையாது. அது செயல்வடிவம் பெறவேண்டும் என்றால் அதற்குச் சமானமான எதிர்விசை தேவை. அந்த விசையாக மாயையை உருவகிக்கிறது வேதாந்தம். 

வேதாந்தத்தின் தொடக்கப்புள்ளி ரிக்வேதத்தில் உள்ள சிருஷ்டிகீதம். அது அனைத்தையும் இணைப்பதும், அனைத்துமாக ஆவதுமான ஒரு பிரம்மத்தையே உருவகிக்கிறது. ஒரு பதிலை முன்வைப்பதில்லை, எத்தனை விளக்கினாலும் முழுமையாக சொல்லிவிட முடியாத ஒரு கேள்வியையே முன்வைக்கிறது. மையத்தை வலியுறுத்துவதற்கு பதிலாக விரிந்து விரிந்து செல்லும் ஒரு பயணத்தை தொடங்கி வைக்கிறது. அந்தப் பயணமே உபநிடதங்களில் விரிந்தது. ஒன்றை இன்னொன்று கடுமையாக மறுக்கும் பல்வேறு ஞானவழிகளை உருவாக்கியது. தெற்கே சைவசித்தாந்தம் வரை அது வளர்ச்சி அடைந்தது. இந்து மெய்ஞானத்திற்கு அது நிலைகொள்ளும் மையம் என ஏதுமில்லை. ஏனென்றால் அது ஓர் அமைப்பு அல்ல. அது ஒரு தேடல். பலநூறு ஞானப்பயணங்கள் நிகழும் களம். எல்லா பாதையும் சென்றடைவது ஓரிடத்தையே என்று உபநிடதங்கள் கூறின.

இந்தியாவின் பிரதமர் ராமர்கோயில் கட்டுவது 130 கோடி மக்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறுகிறார். அந்த கோடிகளில் நான் ஒருவன் அல்ல. எனக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை. எனக்கு பதற்றமும் வருத்தமும்தான் உருவாகிறது. இந்த பூசல் தொடங்கிய காலம் முதலே இதைத்தான் எழுதி வருகிறேன். நான் சொல்வது அரசியல் அல்ல. ஓர் உறுதியான இந்துவாக, வேதாந்தியாக நின்று இதைச் சொல்கிறேன். இது இந்துமெய்ஞானத்திற்கு எதிரான ஒரு செயல்பாடு. நீண்டகால அளவில் இது அழிவையே உருவாக்கும். 

இந்த ஆலயத்தை இந்து மதத்தின் ஒற்றை மையமாக உருவகிக்கிறார்கள். இந்துதேசியத்தின் மிகமிக வலுவான ஒரு புள்ளியாக இதை நிறுவுகிறார்கள்.  இந்தியாவின் ஒவ்வொருவரும் அதை ஏற்றாகவேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதைத்தான் பிரதமரின் சொற்கள் காட்டுகின்றன. அந்த மனநிலையில் இருப்பது இந்தியத்தன்மை அல்ல, இந்துத்தன்மையும் அல்ல. இது பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் உருவாகிவந்த பண்பாட்டுத் தேசியவாத மனநிலை. அதை இங்கே நகல் எடுக்கிறார்கள். அதற்குரிய பண்பாட்டு அம்சத்தை மட்டும் இங்கே மதத்தில் இருந்து எடுத்துக் கொள்கிறார்கள்.அதில் முதன்மையானது ராமர் அவ்வளவுதான்.

பழைய மன்னராட்சிகள்  கூட்டு அதிகாரம் கொண்டவை. பிரபுக்கள் மற்றும் சிற்றரசர்களின் அதிகாரத்தை நிர்வகிக்கும் மையம்தான் அன்றைய மன்னரின் சபை. ஐரோப்பாவில் பதினாறாம் நூற்றாண்டில் இருந்து மன்னர் முற்றதிகாரம் கொண்டவராக ஆனார். அவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சிகள் உருவாகி நவீன அரசுகள் அமைந்தன. அந்த அரசுகள் வலுவான ஆட்சிமையத்தை உருவாக்கிக்கொண்டன. அந்த மையத்தை உருவாக்கிக்கொள்ள அவை கண்டடைந்த வழிதான் பண்பாட்டுத்தேசியம். அது சர்வாதிகாரிகளை உருவாக்கியது. உலக வரலாற்றில் மதஅரசுகளும் மன்னர் அரசுகளும் உருவாக்கியதை விடப்பெரிய அழிவை அவைதான் உருவாக்கின. 

அந்த அழிவைக் கண்டபின்னர்தான் ஐரோப்பா நெகிழ்வான மையம் கொண்ட சமூகங்களையும் அரசையும் நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. அரசியல் என்பது முழுக்க முழுக்க பொருளியல் சார்ந்தது என்றும் அதில் மதம், இனம், மொழி போன்ற பண்பாட்டுக்கூறுகளுக்கு இடமில்லை என்றும் வகுத்துக்கொண்டது. இந்தியாவில் நாம் 1947ல் தொடங்கியபோதே ஐரோப்பாவில் நிகழ்ந்த அழிவுகளில் இருந்தும் இங்கே நிகழ்ந்த மதக்கலவரங்களில் இருந்தும் பாடம் கற்றுக்கொண்டு நெகிழ்வான, அனைத்தையும் உள்ளடக்கக்கூடிய தேசியத்தையும் அரசையும் உருவாக்கிக்கொண்டோம். இன்று மூர்க்கமாக திரும்பிச்சென்று பழைய ஐரோப்பிய பண்பாட்டுத்தேசியவாதத்தை ஏற்றுக்கொள்ள முயல்கிறோம்/ 

உறுதியான அதிகார மையங்களை உருவாக்க பண்பாட்டை பயன்படுத்தும் வழி என்பது பண்பாட்டுக்கூறுகளை அதிகாரத்தின் குறியீடுகளாக ஆக்குவது. கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதங்களை அதன்மேல் ஏற்றுவது. பண்பாட்டு தேசியவாதிகள் சென்ற நூற்றாண்டில் ஐரோப்பாவில்  அவற்றுக்கு மாபெரும் சிலைகள், கட்டிடங்கள் போன்ற வடிவங்களை உருவாக்கினர். உச்சகட்ட பிரச்சாரங்கள் வழியாக மிகையுணர்ச்சிகளை பரப்பினர். அந்த உணர்ச்சிவேகத்தை பயன்படுத்தி அதிகாரங்களை அடைந்தனர். அந்த அதிகாரத்தின் முகங்களாக தனிமனிதர்கள் தங்களை முன்வைத்தனர். பிஸ்மார்க், முஸோலினி, ஹிட்லர், ஸ்டாலின் அனைவரும் ஒரே வார்ப்புகள் கொண்டவர்களே. அனைவருமே மாபெரும் கட்டிடங்களையும் சிலைகளையும் நிறுவியவர்கள் என்பதை நாம் கவனிக்கவேண்டும். 

ஏன் சர்வாதிகார மனநிலைகொண்டவர்கள் மிகப்பெரிய கட்டுமானங்களை உருவாக்குகிறார்கள்? ஏனென்றால் சர்வாதிகாரிகள் அஞ்சுவது காலம் என்னும் மாபெரும் ஓட்டத்தைத்தான். அது எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு செல்கிறதென அவர்களுக்கு உள்ளூரத்தெரியும். அவர்கள் நிலைத்து நிற்க ஆசைப்படுகிறார்கள். தற்காலிகத்தன்மையை அஞ்சுகிறார்கள். ஆகவே நிலையான எதையவாது உருவாக்க துடிக்கிறார்கள். பட்டேல் சிலை, ராமர் கோயில் எல்லாம் அதன் வெளிப்பாடுகள்தான். அவை உடனடியாக பயனளிக்கும். மக்களின் உணர்வுகளைத் தூண்டி, அவர்களை கும்பல்களாக ஆக்கி, அதிகாரத்தை ஈட்டித்தரும். ஆனால் நீண்டகால அளவில் அவை இணையான எதிர்விசைகளை உருவாக்கி அழிவையே அளிக்கும்.  

அதிகாரம் என்பது கண்ணுக்குத்தெரியாத ஒரு புரிந்துணர்வு. ஒவ்வொரு கணமும் நிகழும் பலநூறு ஒப்பந்தங்களின் வழியாக நிகழ்வது. சர்வாதிகாரிகள் அதை கண்கூடான ஓர் அமைப்பாக நிறுவ நினைக்கிறார்கள். சாமானியர் அதை வியந்து பார்க்கவேண்டும், அஞ்சவேண்டும். ஆகவே மாபெரும் கட்டுமானங்களை உருவாக்குகிறார்கள். சொற்கள் அழியும் ஆனால் கல் அழியாமல் நின்றிருக்கும் என கற்பனை செய்துகொள்கிறார்கள். கல் நின்றிருக்கும் என்பது உண்மை. ஆனால் அதிகாரம் அழிந்தபின், அதிகாரம் என்பது அழியும் என்பதற்கான நினைவுச்சின்னமாகவே அந்த கல்லமைப்பு நிலைகொள்ளும். அதையே வரலாறு காட்டுகிறது. 

இந்த விவாதத்தில் எப்போதும் கேட்கப்படும் வினா, பழைய மன்னராட்சியில் ஆலயங்கள் கட்டப்படவில்லையா என்பது. மன்னராட்சிக்காலம் என்பது தீராத போர்களும் அழிவுகளும் நிகழ்ந்த யுகம். ஒரு மன்னர் உருவாக்கும் ஆலயம் இன்னொரு மன்னரால் அழிக்கப்படும். இருவருமே ஒரே மதத்தினராக இருப்பார்கள். அந்த மதச்சார்பு உருவாக்கிய அழிவைக் கண்டபின்னர்தான் உலகமெங்கும் ஜனநாயகம் உருவாகியது. ஜனநாயகத்திற்கு முதல் எதிரி பெரும்பான்மைவாதம்தான். பெரும்பான்மையினரின் பண்பாட்டை வலியுறுத்துவது நீண்டகால அளவில் அழிவைநோக்கிச் செல்வது.

கண்கூடான உதாரணம் ஸ்ரீலங்கா. எழுபது ஆண்டுகளுக்கு முன்பே அங்கே அரசியல் மதஅடிப்படை கொண்டதாக ஆகியது. அதற்கு வித்திட்டவர் ஐரோப்பியர்களிடமிருந்து பௌத்தத்தை கற்றுக்கொண்டவரான அநகாரிக தம்மபாலா என்பவர். அவர் முன்வைத்தது மதத்தை அல்ல, ஐரோப்பிய பாணியில் மதத்தை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டு தேசியவாதத்தை. பௌத்தம் அரசுமதமாகவே முன்வைக்கப்பட்டது. மதகுருக்களை பணிந்து ஜனநாயகரீதியாக தேர்வுசெய்யப்பட்ட ஆட்சியாளர்கள் பதவியேற்றுக்கொண்டனர். ஒரு கட்டத்தில் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் கொண்டவர்களாக மதகுருக்கள் மாறினர். அதன் விளைவுகள் முப்பதாண்டுகள் நீடித்த உள்நாட்டுப்போர். உயிரழிவு, பொருளியல் பேரழிவு. 

அந்த மனநிலை மெய்ஞானத்தின் களத்திற்குள் வரும்போது மேலும் அழிவை உருவாக்குவதாக ஆகிவிடுகிறது. ஏனென்றால் இங்கே சிதைக்கப்படுவது சில மனிதர்களால் ஒரு காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட நாடு, அரசு போன்ற புறவயமான அமைப்புகள் அல்ல. அவை அழிந்தால் இன்னொருவகையில் உருவாக்கிக்கொள்ள முடியும். இங்கே சிதைவுறுவது நுண்மையான அகவய அமைப்பு. அது பல்லாயிரம் ஆண்டுகளாக தன்னியல்பாக உருவாகி வந்தது. ஞானிகள், கலைஞர்கள், தத்துவசிந்தனையாளர்களால் திரட்டப்பட்டது. நம்மையறியாமலேயே நமக்குள் உருவாகியிருப்பது. அதை இழந்தால் நாம் திரும்ப அடைய முடியாது. 

வேதாந்தத்தின் அணுகுமுறையில். ராமன் வைணவ மதத்தின் ஒரு தெய்வ உருவகம். வைணவம் இந்து மதப்பிரிவுகளில் ஒன்று மட்டுமே. அந்த தெய்வ உருவகத்திற்கு அதற்குரிய தனித்தன்மைகள் உண்டு. ‘அறத்தின் உருவமான அரசன்என சுருக்கமாக வலியுறுத்தலாம். தொன்றுதொட்டு இருந்துவரும் தந்தைவழிபாடு, அரசன் வழிபாடு ஆகியவை அந்த உருவகத்தில் இணைகின்றன. அந்த உருவகத்தை இந்துமெய்ஞான மரபுகள் அனைத்துக்கும் தலைமையான ஒரு தெய்வவடிவமாக வலியுறுத்துவது என்பது மெய்ஞானத்தேடலின் மற்ற வழிகள் அனைத்தின்மீதுமான ஒடுக்குமுறையாகவே ஆகும். சிவலிங்கம் போன்ற உருவமற்ற உருவம் (அருவுரு) வழிபடப்படும் மதப்பிரிவுகள் இந்து மதத்திற்குள் உண்டு. உருவவழிபாட்டை ஏற்காத வேதாந்தப்பிரிவுகள் உண்டு. அவர்களெல்லாம் ராமனை ஏற்றுக்கொண்டாகவேண்டிய இடத்திற்கு தள்ளப்படுகிறார்கள். 

காலப்போக்கில் ராமனை மறுப்பதென்பது தண்டனைக்குரிய இறைநிந்தனையாக இங்கே மாற்றப்படலாம். அது மதத்தை ஓர் உறுதியான நிறுவனமாக ஆக்குவதில் கொண்டுசென்று நிறுத்தும். எங்கே அப்படி ஓர் உறுதியான மதமையம் உருவாக்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் அதற்கு எதிரான உறுதியான குரல்கள் உருவாவதை வரலாறு காட்டுகிறது. அந்த எதிர்க்குரல்களை மதநிந்தனை என்னும் குற்றம்சுமத்தி மையமரபு வேட்டையாடுகிறது. ரத்தம் தோய்ந்த போராக அது உருமாறிவிடுகிறது. அவ்வாறான ஒரு நிலைநோக்கி இன்றைய மையப்படுத்துதல் எதிர்காலத்தில் இந்து மதத்தை கொண்டுசெல்லக்கூடும். 

வைணவர்கள் தங்கள் தெய்வத்திற்கு என ஓர் ஆலயம் அமைத்துக்கொண்டால் அதில் எந்தச் சிக்கலும் இல்லை. அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சரி. அவர்கள் ராமனே முழுமுதல்வ்தெய்வம் என்று சொன்னாலும் அதில் பிழையில்லை, அது அவர்களின் நம்பிக்கை. ஆனால் அரசு அந்த ஆலயத்தை அதிகாரபூர்வமாக அமைத்து, இந்திய தேசத்தின் அனைவரின் வாக்குகளையும் பெற்ற ஆட்சியாளர்களால் அது திறந்து வைக்கப்படும் போதுதான் மையப்படுத்தல் நிகழத்தொடங்குகிறது. 

ஏனென்றால் இந்து மதத்தின் செயல்பாட்டு முறை என்பது மையப்படுத்துதலுக்கு எதிரானதாகவும், பன்மைத்தன்மை கொண்டதாகவும், உள்விவாதம் கொண்டதாகவும்தான் எப்போதும் இருந்து வந்துள்ளது. சைவம், வைணவம், சாக்தம் ஆகிய மூன்று பெருமதங்கள் இன்று அதற்குள் உள்ளன. வேதாந்தம் என்னும் தூய தத்துவப்பார்வை உள்ளது. இதைத்தவிர பலநூறு சிறுவழிபாட்டு முறைகள் உள்ளன. பலநூறு புதிய புதிய தத்துவப்பார்வைகள் முளைத்து வளர்ந்துகொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் இன்னொன்றை மறுப்பதும் விமர்சிப்பதுமாகும். மையம் என ஒன்று திரண்டுவந்தாலே ஒடுக்குமுறை தொடங்கும். 

மிகச்சிறந்த உதாரண நிகழ்வு  ஒன்றுண்டு. இந்தியாவில் ராமன் ஒரே வகையாக எங்கும் சித்தரிக்கப்படவில்லை. வட இந்திய ராமன் அங்கே புகழ்பெற்றிருக்கும் வைணவ பக்தி மரபான புஷ்டிமார்க்கத்தால் உருவாக்கப்பட்ட உருவகம். தென்னிந்தியாவில் அப்படி அல்ல. கேரளத்தின் பெருங்கவிஞரும், நாராயண குருவின் வேதாந்த மரபில் வந்தவருமான குமாரன் ஆசான்  எழுதியசிந்தனையில் ஆழ்ந்த சீதைஎன்னும் குறுகாவியம் மிகப்புகழ்பெற்றது. பல ஆண்டுகளாக கல்விநிலையங்களில் பயிலப்படுவது. அதில் சீதை ராமனை அரசனாக மட்டுமே நிலைகொண்டு கணவனாகவும் தந்தையாகவும் கடமையை மறந்தவன் என விமர்சிக்கிறாள். செப்டம்பர் 2015ல் மாத்ருபூமி நாளிதழில் அந்தக் கவிதையை பற்றி எம்.எம்.பஷீர் என்னும் புகழ்பெற்ற கல்வியாளர் ஒரு கட்டுரை எழுதியபோது கேரளத்தில் இந்துத்துவ ஆதரவாளர்களால் அவர் வேட்டையாடப்பட்டார். அந்த இதழ் அக்கட்டுரையை திரும்பப்பெற்றுக்கொண்டு மன்னிப்பு கோரியது. (நான் அந்நிகழ்வில் கடுமையாக எதிர்வினையாற்றி பஷீருக்கு ஆதரவாக எழுதினேன்

அது உண்மையில் வேதாந்தத்தின்மேல், நாராயண குருவைப்போன்ற ஞானிகள்மேல் நிகழ்த்தப்பட்ட நேரடித்தாக்குதல். இன்றைய அரசுமதம் என்னும் போக்கு சென்று சேரக்கூடிய இடம் அதுதான். இந்து மெய்ஞானத்தின் உச்சகாகவும் இந்து மதத்தை ஒருங்கிணைக்கும் சக்தியாகவும் திகழும் வேதாந்தத்தை எதிரியாக்கி அழிக்க முயல்வது. அது இந்துமதத்தையே அழிப்பது. ஆகவே ஒவ்வொரு இந்துவும் எதிர்க்கவேண்டிய ஒரு செயல் இவர்கள் செய்துகொண்டிருப்பது.

முந்தைய கட்டுரைகன்னிக்கோவில் இராஜா 
அடுத்த கட்டுரைநற்றுணை கலந்துரையாடல், சென்னை,கீரனூர் ஜாகீர்ராஜா