மஞ்ஞும்மல் பாய்ஸ்- கடிதம்

மஞ்ஞும்மல் பாய்ஸ்- குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம்

அன்புள்ள ஜெ,

தங்களுடைய மஞ்ஞும்மல் பாய்ஸ் குறித்த விமர்சனம் நூற்றுக்கு நூறு உண்மை. எனக்கு வெகு ஜன மலையாளிகளின் சினிமா ரசினை மீதான நம்பிக்கையிழப்பு நிகழ்ந்தது அவர்களின் முதல் நூறு கோடி திரைப்படம் என்ற பெருமை  வன மிருக அழிப்பை நியாயப்படுத்தும் “புலி முருகன்” படத்துக்கு கிடைத்த போது தான். வெகு ஜன கேரளத்தின் வனங்களின் மீதான வன்மத்தை மிக விரிவாகவே தாங்கள் கேரளத்தின் காலனி என்ற கட்டுரையில் அலசியிருந்தீர்கள். 2018 ஆம் ஆண்டில் மது என்ற ஆதிவாசி இளைஞரை அடித்தே கொன்ற ஒரு கேரள கும்பல் பற்றிய கட்டுரை அது. வெகு ஜன கேரளத்தின் காட்டின் மீதான எதிர்ப்புணர்வு என்பது அவர்கள் நம்மை அடிமை செய்த காலனியாதிக்கவாதிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டது. அக்கட்டுரையில் நீங்கள் ஊகித்திருந்ததைப் போன்றே அவ்வழக்கு 2022 ஆம் ஆண்டில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 2023 ஆம் ஆண்டில் முடித்து வைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பாகியது. ஒட்டுமொத்தமாக 14 பேர் இணைந்து சில பல அடிகள் போட்டதால் மது மரணமடைந்திருக்கிறார் என நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. மரணம் ஒன்று என்றாலும் காரணம் 14 ஆக அமைந்ததாலும்ஒவ்வொரு காரணமும் தனித்தனியே தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டியிருந்ததாலும் அக்காரணங்கள் கொலை செய்யும் நோக்கமின்றி மரணத்தை விளைவிக்கக் கூடிய செயல்களை புரிந்ததாக நீதிமன்றம் முடிவு செய்துஇந்திய தண்டனை சட்டம் பிரிவு 304 – கொலை குற்றம் அல்லாத‌ மரணத்தை விளைவிக்கும் குற்றம் என்ற வகையில் அதிக பட்சம் ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. தங்களின் அந்த கேரளத்தின் காலனி கட்டுரை இவ்வாறாக முடிந்திருக்கும் – “இவ்வழக்கில் இனி பெரும்பாலும் விழிச்சான்றுகள் இருக்காது. சூழல்சான்றுகள் குழப்பப்படும். நீதிமன்றமே பழங்குடியினருக்கு எதிரான உளநிலையில்தான் இருக்கும். இப்போது உருவாகும் இந்த எதிர்ப்பு அலை சிலமாதங்கள் கடந்ததும் இல்லாமலாகும்பல ஆண்டுகள் விசாரணை நடக்கும். அதன்பின் அனைவரும் அனைத்தையும் மறந்தபின் அத்தனை குற்றவாளிகளும் சட்டபூர்வமாகவே விடுதலைசெய்யப்படுவார்கள்.சிலதருணங்களில் போதியஇடைவெளிவிடப்பட்டு கீழ்நீதிமன்றத்தில் கடும்தண்டனை அளிக்கப்படும். உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பை ரத்துசெய்து அவர்களை விடுவிக்கும். இதுதான் எப்போதும் நிகழ்கிறது.

ஏனென்றால் அவர்கள் கேரளத்தின் பிரதிநிதிகள்அவர்களை அவர்களைப்போன்ற பிறர் எப்படித் தண்டிப்பார்கள்?

நூற்றுக்கு நூறு சாத்தியமான வார்த்தைகள். இந்த வழக்கில் வழமை போல் அனைத்து விழிச்சான்றுகளும் பிறழ் சான்றுகள் ஆயின. சாதாரணமான வழக்காக இருந்தால் போதிய சாட்சிகள் இன்மையால் அனைத்து குற்றவாளிகளும் விடுதலை செய்யப்படவே வாய்ப்புகள் இருந்தன. இந்த வழக்கின் ஒரே பாதகமான நிகழ்வுகுற்றவாளிகளே தங்கள் ‘சாதனையை‘ மிக விரிவாக படம் பிடித்துதாங்களும் அந்த குற்றச் சூழலில் இருந்ததையும்குற்றத்தில் பங்கெடுத்ததையும் ஐயம் திரிபற நிறுவி இருந்தமையும்ஒன்றுக்கு மேற்பட்ட அசல் திரைக்காட்சிகள் பல சமூக ஊடகங்களிலும் அழிக்க முடியாத வகையில் பரவி இருந்தமையும் தான். எனவே  மேற்குறித்த குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்டு அதிக பட்ச தண்டனையாக ஏழு வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. உண்மையில் குற்றவாளிகள் மீது குற்றம் உறுதிப்படுத்தப்பட்ட இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304 (கொலை குற்றம் அல்லாத‌ மரணத்தை விளைவிக்கும் குற்றம்), 326 (ஆபத்தான ஆயுதங்கள் அல்லது இணையான வழிகள் மூலம் தன்னிச்சையாக துன்பமேற்படுத்தும் காயங்களை உருவாக்குதல்மற்றும் 367 (அடிமையாக்கும் நோக்கத்துடன் மற்றும் துன்பமேற்படுத்தும் காயங்களை உருவாக்கும் நோக்கத்துடன் ஒருவரை கடத்துதல்ஆகியவை ஒவ்வொன்றும் தனித்தனியாக முழு ஆயுள் தண்டனை வழங்கப்படச் சாத்தியம் கொண்டிருந்த போதும்ஒட்டு மொத்தமாக ஏழு வருட கடுங்காவல் தண்டனை மட்டுமே வழங்கப்படும் வகையில் தான் இவ்வழக்கு கையாளப்பட்டது.

இவ்வழக்கு கடந்து வந்த பாதையைப் பார்த்தால் இதுவே மிகப் பெரிய சாதனை தான். வரிசையாக அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர்கள் பலர் வழக்கை நீர்த்துப் போகச் செய்தனர். ஒரு கட்டத்தில் மதுவின் தாயார் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து கடைசியாக வாதிட்ட வழக்கறிஞர்களை வாதிட வைக்க வேண்டி இருந்தது. நீதிமன்றம் தன் தீர்ப்பில் சாட்சிகள் பிறழ் சாட்சிகள் ஆகியதை வன்மையாகக் கண்டித்தும் இருந்தது. ஏனெனில் குற்றவாளிகள் தரப்பு சாட்சிகளை கவிழ்க்க முயற்சி செய்ததை காவல்துறை ஆதாரப் பூர்வமாக நீதிமன்றத்தில் நிரூபித்து இருந்தது. வழக்கம் போல தீர்ப்பு வந்த பிறகு குற்றவாளிகள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதில் முதல் குற்றவாளியாக  குற்றம் சாட்டப்பட்டவர் பிறரைப் போல மதுவை அவரது இடத்தில் இருந்து கடத்திஆடையின்றி நடக்கச் செய்துஅந்த சமயத்தில் மதுவை பலவாறாக அடித்து துன்புறுத்தல்கள் போன்றவற்றைச் செய்யாமல் நேரடியாக அடிக்க மட்டுமே செய்ததால் அவருக்கு மட்டும் பிணை சாத்தியமாகியுள்ளது. பிற பன்னிருவரும் அடித்தல் தவிர்த்து மேற்குறித்த குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பதை கீழமை நீதிமன்றம் உறுதி செய்திருப்பதை உயர் நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டதால் அவர்களுக்கு பிணை இன்னும் வழங்கப்படவில்லை.

இதெல்லாம் இன்று மஞ்ஞும்மல் பாய்ஸ் க்காகப் பொங்குபவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த ஜாபர் சாதிக் விஷயத்தை மடைமாற்ற இவர்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு என்ற அளவிலும்இவ்வாறு மலையாள திரைப்படங்களை அதன் இயக்குநர்களுக்கே கூடத் தெரியாத நுணுக்கங்கள்நுண்ணரசியல்கள்கதாபாத்திரங்களின் இருத்தலியல்ஆன்மிகச் சிக்கல்களை எல்லாம் எடுத்து இயம்பும் இந்த அறிவுஜீவிகளின் தரத்தை உரசியதாலும் வழக்கம் போல் பொங்கித் தள்ளுகிறார்கள்.

அந்த கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் இரு முக்கிய பிரச்சனைகள்.

1. பொது ஜனத்தின் காட்டின் மீதானஇயற்கையின் மீதான உதாசீனம் மற்றும் அனைத்தும் தங்களுக்கானவை என்ற தருக்கு

2. பொது ஜனத்தின் மனத்தில் தொடர் குடிஅதைத் தொடர்ந்த உடல் உபாதைகள்அதனால் விளையும் சமூகத் தீமைகள் பற்றிய குற்ற உணர்வை இல்லாமலாக்குதல்

இவ்விரண்டும் மிகத் தீவிரமானவை. திரைப்படம் என்பது சமூகத்தின் கண்ணாடி என்ற வகையில் அது சமூகத்தின் பொது மனநிலையை பிரதிபலிக்கிறது என்ற சால்ஜாப்பெல்லாம் இங்கு தேவை இல்லை. குடிபுகைத்தல்சீட்டாடுதல்பந்தயம் வைத்து இழத்தல் போன்றவை தவறு என்ற எண்ணம் மிக  ஆழமாக வேரூன்றப்பட்ட சமுகமாகத் தான் நாம் இருந்தோம். எந்த சமூகத்திலும் இவை சரியென இருந்தால் என்னஇவை ஒரு தனிமனிதரின் தெரிவுகள் தானே என்ற சிந்தனை இருந்து கொண்டே தான் இருக்கும். மெல்ல மெல்ல அந்த சிந்தனை வலுப்பெறும் போது அதன் ஒரு பகுதி இந்த தவறுகளில் துணிந்து ஈடுபடத் துவங்கும். இந்த ஒரு பகுதியைத் தான் திரைப்படம் சமூகத்தில் சாதாரணமாக நடப்பது தான் என அதற்கு ஒரு ஏற்பை வழங்கும் வண்ணம் காட்சிகளை அமைக்கிறது. அதன் வழியாக பொது சமூகத்தில் இவற்றிற்கான ஏற்பு உறுதிப்படுத்தப் படுகிறது. இன்று பெண்களும் குடியடிமைகள் ஆக மாறுவதை பெண்ணுரிமையின் ஒரு பகுதியாக மாற்றிய பெருமை இத்தகைய படங்களுக்கும்அவற்றைக் கொண்டாடும் இந்த அரைவேக்காடு அறிவுஜீவிகளுக்குமே சென்றுசேரும்.   

 கலை என்பதற்கு கட்டுப்பாடுகள், தணிக்கைகள் இருத்தல் கூடாது என்பதை நீங்கள் எழுத வந்த காலத்தில் இருந்து வாய் வலிக்க, கை வலிக்க சொல்லியும், எழுதியும் வருகிறீர்கள். கலை முதன்மையாக கட்டின்மைகளை, மீறல்களை முன்வைத்தே படைப்பை உருவாக்கும். ஆனால் அவையெல்லாம் இந்த நுட்பங்களை எல்லாம் புரிந்து கொள்ளும் பயிற்சி உடைய ஒரு சிறு வட்டத்திற்கு தான். கலையின் இந்த கோணம் பற்றிய புரிதல் இல்லாத வெகு ஜனங்களின் முன் கட்டின்மைகளை நியாயப் படுத்தினால் அதன் விளைவுகள் மிக மிக மோசமாக இருக்கும். உங்களது விமர்சனம் கலைப்படைப்பு என்ற பெயரில் இத்தகைய நியாயப்படுத்தல்களை பொது சமூகத்திற்கு செய்வதைக் குறித்தே. இது பலவகையிலும் ஆபத்தான போக்கு தான். ஆனால் இது நிகழ்ந்து கொண்டே தான்‌ இருக்கும்

எண்ணிப்பாருங்கள். எம்.ஜி.ஆர் காலத்தில் புகையிலையே நல்ல போதை ஏற்றுவதாக இருந்தது. ரஜினி காலத்தில் மெல்ல சாராயம் அந்த இடத்தை பிடித்தது. இருந்தும் அவை தவறு என்பதும், நாயகன் கூட வேறு வழியே இல்லாததால் தான் ஒரே ஒரு முறை குடிக்க நேரிட்டது போலத் தான் காட்சியமைந்திருக்கும். எனவே பீர் போதையேற்றும்‌ ஒன்றாக இருந்து வந்தது. அதன் பின்பான இப்போதைய காலங்களில் எப்போது வேண்டுமானாலும், எதற்கு வேண்டுமானாலும் குடிக்கலாம் என்ற நிலை வந்த பிறகு சாராயம் கூட போதுமான‌ போதையை நல்குவதில்லை.‌ அடுத்த வகை போதை மாத்திரைகள் மற்றும் பொடிகள் தேவைப்படுகின்றன. விரைவில்நல்லபோதைப் பொருள் கையாளும் ஒரு சாகச நாயகனை நாம் காணக்கூடும்.‌ மெல்ல மெல்ல ஒவ்வோர் போதையூட்டிக்கான சமூக ஏற்பு நிகழ நிகழ அதை விட மோசமான மற்றொன்று சமூகத்திற்குள் நுழைகிறது. இந்த பின்னணியில் பார்த்தால் தான் ஏன் கட்டின்மைகள்‌அவற்றைக் கையாளக் தெரியாத பொது ஜனத்தின் முன் வைக்கப்படலாகாது என்பது விளங்கும். இனியாவது நம் அ.ஜீவிகள் திருந்துவார்களா?

அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்

முந்தைய கட்டுரைபெருங்கதையின் வாசல்
அடுத்த கட்டுரைகொற்றவை, தமிழ்நேயம்- ஒரு பதிவு