கல்வி, ஆசிரியர்- விவாதம்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்,

கல்விச் சூறையாடல் கட்டுரை மிக முக்கியமான நேரத்தில் வெளியாகி இருக்கிறது. தலைப்பே இப்போது  என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை மொத்தமாக சொல்லிவிடுகிறது. 20 ஆண்டுகளுக்கு மேலாக உயர்கல்வித்துறையில் அர்ப்பணிப்புடன் பணி செய்துவரும் ஒரு ஆசிரியராக என் மனக்குமுறல்களை இந்த கட்டுரையும் சொல்லி விட்டிருக்கிறது.

ஆரம்பக் கல்வி மட்டுமல்ல உயர்கல்வியும், ஆசிரியர்களின் நிலைமையும், ஆசிரியர்கள் மீதான மாணவர்களின் அபிப்பிராயமும்  சீர் கெட்டுத்தானிருக்கிறது.

தனியார் பள்ளிகளில் மட்டுமல்ல அரசு உதவி பெறும்  பல கல்லூரிகளில்  Phd என்கிற ’Academic excellence’ தகுதியை கொண்டிருக்கும்  பேராசிரியர்களுக்கு துவக்க சம்பளமே 8000, பின்னர் அது படிப்படியாக நொண்டியடித்து 15 ஆயிரத்தை தொடுவதற்குள் அவர்களுக்கு 10 ஆண்டு பணி அனுபவம் ஆகியிருக்கும்

என் கார் ஓட்டுநருக்கு நான் கொடுக்கும் சம்பளத்தை காட்டிலும்  நான் கல்லூரிக்கு காரில் வந்து இறங்குகையில் எனக்கு வணக்கம் சொல்லும் இளம் ஆசிரியர்களின் சம்பளம் குறைவு என்பதை மிக குற்றவுணர்வுடன் சொல்ல வேண்டி இருக்கிறது.

நான் இளங்கலை படித்துக்கொண்டிருக்கையில்  மாலை கல்லூரி  நேரம் முடிந்த பின்னர் மைதானத்தில் பேராசிரியர்கள் பூப்பந்து விளையாடுவார்கள். எங்களையும்  சமயங்களில் உடனழைத்துச்சென்று பொதுவான பல விஷயங்களை பேசிக்கொண்டு வளாகத்தில் நடப்பார்கள்

அவர்களுடன் அப்படி நடந்து செல்ல போட்டிபோடுவோம். ஆசிரியர்களை அப்படி கம்பீரமாக பார்த்தது பெரும் கிளர்ச்சியை அளிக்கும் எங்களுக்குஅவர்களைப் போலவே ஒரு  ஆளுமையாகபேராசிரியராக எதிர்காலத்தில் இருக்கவேண்டும் என்னும் கொதியும் அன்று எங்களுக்கு இருந்தது. அப்படி ஒரு நிமிண்டல் என்னை செலுத்தியதால் தான் இன்று நான் ஒரு நல்லாசிரியை என்று தன்னம்பிக்கையுடன் சொல்லிக்கொள்ளும் இப்பணியில் இருக்கிறேன்

ஆனால் இப்போது மிக குறைந்த சம்பளம் வாங்கும், மிக கீழ்த்தரமாக நடத்தப்படும், தங்களது சம்பளத்துக்கும் பணி மேம்பாட்டின் பலன்களுக்கும் கூட தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கும் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு என்ன மரியாதை இருக்கும்

தெருவோரக்கடைகளில் சில்லி சிக்கன் போடுபவர், பேக்கரிகளில் கேக் செய்பவர்கள் நாளொன்றுக்கு 1000 ரூபாய் சம்பளம் வாங்குகையில்  முனைவர் பட்டம் வைத்திருக்கும் பேராசிரியர்கள் மாதம் 10 ஆயிரத்திற்கும் குறைவான சம்பளம் வாங்குவது எத்தனை கீழ்மை

அந்த சம்பளம் வாங்குபவர்களின் பணி  நேரமும் பணிச்சுமையும்  வாங்கும் சம்பளத்துக்கு சற்றும் தொடர்பில்லாமல் இருக்கையில்  அவர்கள் அளிக்கும் கல்வியிலும் அதே  அதிருப்தியும் தரமின்மையும்தான் இருக்கிறது

எனக்கு தெரிந்த ஒரு கல்லூரியில் பேராசிரியர்கள் சம்பளம் மிக  மிக குறைவு. அங்கு பலரின் குடும்ப வாழ்க்கையும் இதனால் குலைந்து போய்க்கொண்டிருக்கிறது. 13 ஆயிரம் சம்பளம்இனி மெல்ல மெல்ல அதிகமாகும் என்று சொல்லி கடந்த ஜனவரியில் திருமணம் செய்துகொண்ட ஒரு இளைஞனின் திருமண விடுப்புக்கு சம்பள பிடித்தம் செய்து வெறும் 8 ஆயிரம் கொடுக்கப்பட்டது. அந்த புதுமணப்பெண் கணவருடன் பேசுவதை நிறுத்திவிட்டாள். இன்னொரு இளைஞரின் மனைவி 2 வருடங்கள் பொறுத்துப்பொறுத்து பார்த்துவிட்டு விவாகரத்து செய்துவிட்டாள்.

 இந்த சம்பளத்தால் இன்னும் திருமணம் நடக்காதவர்கள், ’’இந்த சம்பளத்துக்கா இந்த பெரியபடிப்பு படிச்சே?’’என்று அன்றாடம் புகுந்த வீட்டிலும் கணவனாலும் சிறுமைப்படுத்தப்படும் பெண்களும் இதில் இருக்கின்றனர்

ஆனால் சில கல்லூரிகளில்  கண்ணியமான சம்பளம் கொடுக்கப்படுகின்றது. சமீபத்தில் திருச்சியில் ஒரு புகழ்பெற்ற கல்லூரிக்கு சென்றிருந்தேன். அங்கு சுயநிதிப்பிரிவில் பணிபுரியும் அனைவருக்கும் அரசு உதவி பெறும் பேராசிரியர்களின் சம்பளத்தில் 50 சதவீதம் படிநிலைக்கேற்ப வழங்கபடுகிறது.

கல்லூரி சிறப்பாக நடக்கிறது பணிபுரிபவர்கள் அனைவரும் கண்களில் ஒளியும் உடல்மொழியில் கம்பீரமுமாக இருக்கிறார்கள். மாணவர்களும் மகிழ்ச்சியும் ஒழுங்குமாக இருக்கிறார்கள். தேசிய தர அந்தஸ்திலும் அக்கல்லூரி முதலிடத்தில் இருக்கிறது.சட்டியில் இருப்பது அகப்பையில் வருகிறது.

இதை எல்லா கல்லூரிகளிலும் நடைமுறைப்படுத்த முடியும்

கல்வியின் தரக்குறைபாடுகளை களைவதன் பொருட்டு  அமைக்கப்பட்ட குழுவின் வழிமுறைகளை பின்பற்றி  வழங்கப்பட்டு வரும் தேசிய தர அந்தஸ்தின் சான்று என்னும் NAAC அந்தஸ்து கட்டாயமாக்கப் பட்ட பின்னர் ஆசிரியர்களின் நிலை மேலும் சிக்கலாகி இருக்கிறது

இந்த அந்தஸ்துக்கான நெறிகள் சென்னைப் பெருநகரங்களில், கோவைபோன்ற நகரங்களில் இயங்கும் கல்லூரிகளுக்கும் பொள்ளாச்சிபோன்ற கிராமங்களால் சூழப்பட்டிருக்கும் கல்லூரிகளுக்கும் ஒரே மாதிரிதான் என்பதும் வியப்புக்குரியது.

அந்த தரச்சான்று பெரும்பொருட்டு பேராசிரியர்களுக்கு மேலும் பணிச்சுமை உண்டாகி இருக்கிறது. வெறும் கூடுதல் பணிச்சுமை என்றால் பிரச்சனையில்லை கற்பித்தலுக்கே போக முடியாத அளவுக்கு பணிச்சுமை.

கற்பித்தல் என்னும் பணியில் இருக்கும்அப்பணியின் பொருட்டே சம்பளம் வாங்கும் நாங்கள் எந்நேரமும் தரசான்றுக்கான ஆவணங்களை தயார் செய்கிறோம், உருவாக்குகிறோம், பத்திரப்படுத்துகிறோம். இதை எப்போதாவது அல்ல, வருடம் முழுக்க தொடர்ந்து பெரும் அழுத்தத்தின் பேரில் செய்துகொண்டே இருக்கிறோம்

கல்வி கற்பித்தல்கல்லூரி  நிர்வாகம் இவை இரண்டும் தனித்தனியானவை. அவை இரண்டும் ஒன்றாக சேர்க்கப்படுகையில் கல்வி  நிறுவனங்களின்  முதன்மை நோக்கமான கற்பித்தல் அடிபட்டுப்போகிறது

எங்களுடையதை போன்ற கிராமப்புறத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகள் படிக்கும் கல்லூரிகளில் எங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்துக்கான நியாயம் செய்யமுடியாவிட்டாலும் அநியாயம் செய்யாமலாவது இருக்கவேண்டும்.

கல்வி கற்பித்தலை ஆவணங்கள் தயாரிக்கும் வேலைகளுக்கு நடுவில் தான் செய்ய வேண்டி இருக்கிறது. தரச்சான்றின் பொருட்டு தரமற்றுப்போகும் கல்வி மற்றும், அக்கல்வியை கற்பவர்களின் எதிர்காலம் பெரும் சவாலாக மாறி இருக்கிறது.

எங்களை மாணவர்கள் கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள் ஆசிரியப்பணியின் மீதும் ஆசிரியர்கள் மீதும் மாணவர்களுக்கு பெரும் இளக்காரம் உருவாகி இருக்கிறது

கல்வி, தேர்வுகள், பட்டம், கல்வியினால் கிடைக்க பெறுவதாக சொல்லப்படும் நல்ல எதிர்காலம், வேலைவாய்ப்பு போன்ற எதிலும் மாணவர்களுக்கு  நம்பிக்கை உண்டாகும்படியான  சூழல் இப்போது இல்லை.

ஒரு குறிப்பிட்ட பாடத்தில் உச்சபட்சம்  பெற முடிந்த பட்டத்தை பெற்று அதன் பேரில் கிடைத்திருக்கும் ஒரு வேலையில் கிடைக்கும் சம்பளம் அந்த ஆசிரியரின் குடும்ப நிர்வாகத்துக்கே போதவில்லை. அரசுப்பணி என்னும் எட்டாக்கொம்பை பிடித்த ஆசிரியர்களும் பல வருடங்களாக அவர்களுக்கு கிடைக்கவேண்டிய பலன்களுக்காக தெருவில் நின்று போராடுகிறார்கள், போராட்டத்தில் சிறை செல்கிறார்கள் என்னும் விஷயம் தெரிந்த மாணவர்களுக்கு அந்தக் கல்வியை நாங்கள் என்னவென்று, எத்தனை முக்கியமென்று சொல்லி  கற்பிக்க முடியும்?

ஆசிரியர்களான நாங்கள் அவர்களின் முன்மாதிரிகளாக இருக்கவும் வழியில்லை. அரசால், நிர்வாகத்தால் வஞ்சிக்கப்பட்ட பாவப்பட்ட ஆளுமைகளாக நாங்கள் இருக்கும் நாங்கள் மாணவர்களிடம் என்ன தாக்கத்தை உண்டாக்க முடியும்

எங்களுக்கு பல வருடங்களாக வழங்கப்பட்டிருக்காத பணி மேம்பாட்டு நிதிக்கான போராட்டம் ஒன்றில் முன் வரிசையில் நிற்கும் என் புகைப்படம் தினசரிகளில் சமீபத்தில் வெளிவந்திருந்ததுஅது எனக்கு பெரும் சங்கடமளித்தது. ஒரு நல்லாசிரியை, தாவரவியலில் பெரும் ஆர்வமும் மதிப்பும் கொண்டிருப்பவள் கனிவும் கண்டிப்பும் ஒருங்கே கொண்டு துறையை நடத்துபவள்  என்னும் என் பிம்பம்  அந்த புகைப்படத்தை பார்த்த பல மாணவர்கள் மனதில் சிதைந்திருக்க கூடும்

நாங்கள் மாதா மாதம் சலுகைப் பணம் கேட்கவில்லை ஊதிய உயர்வும் கேட்கவில்லை எங்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பெருந்தொகையாக சேர்ந்து விட்டிருப்பதை கேட்கிறோம் பல வருடங்களாக.

’’கால் காசானாலும் கவர்மெண்ட் காசு அரை காசானாலும் அரசாங்க காசு’’ போன்ற  பெருமிதங்களெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன. போராடாமல் இருக்க முடியவில்லை போராடியும் பயனில்லை.

என் வழிகாட்டுதலில் முனைவர் பட்ட ஆய்வில் இருக்கும் மாணவி ’’ஒருபோதும் நான் ஆசிரியர் பணிக்கு வரமாட்டேன், வீட்டில் சும்மா இருந்தாலும் சரி’’ என்று என்னிடம் சொல்லுகையில் எனக்கு அவளுக்கு நம்பிக்கை தரும் படி சொல்ல ஏதுமில்லை. கேவலமாக உணர்ந்தேன். .

ஊழலும் மலிந்துதான் கிடக்கிறது பல கல்லூரிகளில். ’பணமில்லையேல் பணியில்லைஎன்னும் காலச்சுவடின் இந்த மாத தலையங்கக் கட்டுரை முழுக்க உண்மை.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் போதைப்பொருள் புழக்கமும் மறுத்துசொல்லமுடியாமல் நான் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.

மிக தாராளமாக, மிக மிக சாதாரணமாக  போதைப்பொருட்கள் புழக்கத்தில் இருக்கிறது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும்.

ஆசிரியர்கள் அத்தனை பேருமே பெரும் மன உளைச்சலிலும் அழுத்தத்திலும் இருக்கிறோம். பணிச்சுமை மென்னியை முறித்து, கழுத்தை திருகுகிறது. வரவேண்டிய  தொகைக்கு போராடிகொண்டு கூடுதலாக நேரம்காலம் பாராமல் பணிசெய்துகொண்டு குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் குடும்பத்தை குலைக்கும் பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு காணமுடியாமல், இருக்கும் வேலையையும் விட்டுவிட முடியமால் மருகி கொண்டு ஆயிரக்கணக்கானோர் பணியிலிருக்கிறார்கள்

வெறும் சான்றிதழில்  மட்டும் பட்டம் அளிக்கப்படுகிறது அதில் எந்த தரமும் இல்லை, தரமற்ற கல்வியில் பட்டம் பெறும் மாணவர்கள் educated illiterates என்னும் புதிய வகையை உருவாக்கிவிடுவார்கள். பல கல்லூரிகளில் ஆசிரியர்களும் தகுதியானவர்களாக இல்லை. முதுகலை பட்டம் வைத்திருக்கும் ஒரு மாணவருக்கு ஒரு விடுப்புக் கடிதம் கூட ஆங்கிலத்தில் எழுதத் தெரியாது ஆனால் ஷெல்லியும் கீட்சும் ஷேக்ஸ்பியரும் பாடத்திட்டத்தில் இருக்கும்

இப்படி ஆதங்கங்களும் மனக்குறைகளும் குமுறல்களுமாக எங்களுக்குள் கொட்டிக்கிடக்கிறது. தலை வெடிக்கும் அளவுக்கு அழுத்தம் எங்கள் அனைவருக்கும் இருக்கிறது. அதிலிருந்து தப்பித்துக்கொள்ளத்தான் நான் கிடைக்குகும்  ஓய்வு நேரங்களிலும் வார இறுதிகளிலும் வாசிப்பு எழுத்து இலக்கிய கூட்டங்கள் என்று அலைகிறேன். அந்த விடுதலையுமில்லாவிட்டால் மூளையில் ஏதேனும் ஒரு ரத்தக்குழாய் எப்போது வேண்டுமானாலும் வெடித்து விடும்

நான் மிகைப்படுத்தவில்லை சொல்லப்போனால் பொதுவெளியில் பல விஷயங்களை  சொல்ல முடியாமல் தவிர்த்திருக்கிறேன்.

எந்தp பொருளுமில்லாமல் கல்விக்கூடங்கள் இயங்கிக்கொண்டிருகின்றன. புதிய கல்விக்கொள்கைகள் கல்வி சீர்திருத்தங்கள் என்று எங்கோ ஏதோ நடக்கையில் களத்தில், கல்விகூடங்களில் அவற்றிற்கு எந்த தொடர்பும் பொருளுமில்லாமல் வேறென்னவோ நடக்கிறது.

22 வருடங்களாக தினமும் கல்லூரி நேரத்துக்கு அரைமணி நேரம் முன்பாக செல்பவள், ஒரு நாள் கூடதாமதமாக கல்லூரிக்கு செல்லாதவள், ஈடுபட்டிருக்கும் துறையில் பெருமதிப்பும் ஆர்வமும் கொண்டவள்  என்னும் பெருமையும் நிமிர்வும் தவிடுபொடியாகி விட்டிருக்கிறது.

எதன் பொருட்டு இப்படி நான் மீதமிருக்கும் வருடங்களிலும் இருக்கவேண்டும்? படிப்பு வாசனை இல்லாத  பல பெற்றோர்கள் என் அறைக்கு வருகையில், கதவுக்கு வெளியே செருப்புகளை விட்டுவிட்டு வரும் தகுதி எனக்கு, எங்களுக்கு இருக்கிறதா என்றெல்லாம் நானே என்னை கேள்வி கேட்டுக்கொள்கிறேன்.

பல கல்விக்கூடங்கள் எதன்பொருட்டு நிறுவப்பட்டனவோ அதன்பொருட்டு இப்போது செயல்படுவதில்லை. வெற்றுச் சடங்குகளாக ஆவணங்களை தயாரித்து தரச்சான்று பெறும்  முயற்சிகள் மட்டுமே நடக்கிறது

பள்ளிக்கல்வித்துறையில் நான் இல்லை என்றலும் வீட்டில் மகன்கள் மருமகள்கள் படிப்பதால் அங்கு நடப்பதைத்தான் நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது

மருத்துவ, பொறியியல் படிப்புகளுக்கான வணிக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அவர்களிடம் பெருந்தொகை பெற்றுக்கொண்டு மாணவர்களை அதில் சேரும்படி பல பள்ளிகள் கட்டயாப்படுத்துகின்றன. எங்கள் வீட்டில் சாம்பவிக்கு மருத்துவம் பொறியியல் படிக்க எண்ணமேயில்லை. ஆனால் எத்தனை சொன்னாலும் அதற்கான பயிற்சி வகுப்புகளில் பல்லாயிரக்கணக்கில் கட்டணம் கொடுத்து சேரச்சொல்லி  பெரும் அழுத்தம் கொடுக்கிறார்கள் 

 ஒரு கல்வி நிறுவனம் பெற்றோர் கட்டும் கட்டணத்துக்கு கல்வியை மட்டும் அளிக்கவேண்டும் அந்த மாணவன்/ மாணவி பள்ளிக்கல்விக்கு பிறகு  என்னபடிக்கவேண்டும் எதிர்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்பதை  அந்நிறுவனம் எப்படி முடிவு செய்யலாம்

சாம்பவியை அதுபோன்று பயிற்சிகளுக்கு அனுப்ப முடியாது என்பதை பெரும் போராட்டதுக்கு பின்னரே எங்களால் சாத்தியமாக்க முடிந்தது.   பெரும் கொடுமையான இது எல்லா ஊர்களில் நடந்துகொண்டு இருக்கிறது. சில பெற்றோர்களுக்கு மருத்துவ பொறியியல் பேராசை பிடித்திருக்கிறது ஆனால் அனைவருக்கும் அல்ல. ஆனால் அனைவருமே கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

கல்விக்கூடங்கள் இத்தனை நெறிகள் சட்டதிட்டங்களை எல்லாம் கடுமையாக பின்பற்றி ஆசிரியர்களை சித்ரவதை செய்தும் கல்வி   தரம் கெட்டுப்போய்க்கொண்டிருக்கிறது..

பேராசிரியர் என்ற எங்கள்  பணி நியமனங்களை மாற்றி ஆவணக்காப்பாளர்கள் என்று கூட மாற்றிவிடலாம்

இப்போதுபோல ஒருபோதும் ஆசிரியர்கள் அதிருப்தியில் இருந்ததே இல்லை. இப்போதுபோல கல்வியின் தரம் இத்தனை கீழிறங்கியதும் இல்லை.

இப்படியான கல்விக்கூடங்களிலிருந்து படம் பெற்று வெளியே வரும் இளைஞர்களாலான ஒரு சமுதாயத்தை எண்ணி எண்ணி வேதனைப் படப்போகிறோம் என்பது மட்டும் உறுதி.  

உமா மகேஸ்வரி தமிழ்நாட்டு கல்வி மரத்தை அனைவரும் சேர்ந்து காப்பாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்அம்மரத்தின் வேர் இற்றுப்போய் இருக்கிறது என்பதை வேதனையுடன் சொல்லிக்கொள்கிறேன். . 

ஒரு கல்லூரிப் பேராசிரியை என்று சொல்ல நான் வெட்கும் காலம் இதுதான். கல்விச் சூறையாடல் கட்டுரை எழுதியமைக்கு பல ஆசிரியர்கள் சார்பாக நன்றியை  தெரிவித்து கொள்கிறேன்.

அன்புடன் லோகமாதேவி

அன்புள்ள லோகமாதேவி,

இதையே நானும் எழுதியுள்ளேன். நான் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில் என் ஆசிரியர் மனோகரன் பிரிமியர் பத்மினி காரை அவரே ஓட்டி வருவார். கோட் அணிந்திருப்பார். அன்றைய சமூகத்தில் ஓர் உயர்ந்த நிலையில் இருந்தவர் அவர். அவர் எங்களுக்கெல்லாம் முன்னுதாரணம். இன்று கல்லூரி ஆசிரியர் என்றாலே கூலிவேலை செய்பவர்களுக்குரிய சம்பளம்கூட வாங்காதவர் என பொருள். தொகுப்பூதியம் பெறும் ஆசிரியர்கள் ஆசிரியர்களே அல்லநம் கல்வித்துறையின் கொத்தடிமைகள்.

வறுமை நிமிர்வை இல்லாமலாக்குகிறது. நிரந்தரமான உளச்சோர்வில் ஒருவரை ஆழ்த்துகிறது. கல்வி கற்பிப்பதற்கு இரண்டு அடிப்படை நம்பிக்கைகள் ஆசிரியருக்குத் தேவை. தன் பணிக்கு நீடித்த மதிப்புள்ளது என்னும் நம்பிக்கை. தான் மதிக்கப்படுகிறோம் என்னும் எண்ணம். அந்நம்பிக்கை இருந்தால்தான் ஊக்கத்துடன் கற்பிக்க முடியும். கற்பித்தல் பணி மிக எளிதில் ஆசிரியரின் ஊக்கத்தை இல்லாமலாக்கி விடுவது.  சற்று ஊக்கம் தளர்ந்தால்கூட நம்மால் எதையும் மெய்யாகவே கற்பிக்க முடியாது. இயந்திரத்தனமான உழைப்பையே அளிக்க முடியும். இயந்திரத்தனமான உழைப்பு கல்வியில் செல்லுபடி ஆகாது. மாணவர்களுக்கு அது பெரும் சலிப்பூட்டும். கல்வி மேலேயே நம்பிக்கையிழப்பை உருவாக்கும். கொத்தடிமைகள் இயந்திரங்களாகவே செயல்பட முடியும். உழைக்கமுடியும், ஆசிரியர் எனும் ஆளுமையாக திகழமுடியாது.

நமக்குத்தேவை ஆசிரியர் என்னும் ஆளுமைகள். அந்த ஆளுமைகள் மேல் மாணவர்களுக்கு வழிபாட்டுணர்வு வரவேண்டும்.  மாணவர்கள் அவர்களை கொண்டாடவேண்டும். அந்த வழிபாட்டுணர்வே ஆசிரியரை மாணவர்கள் அணுகச் செய்கிறது. அதுவே மெய்யான கல்வி நிகழும் வழி. ஆசிரியரை காலில் சங்கிலி போட்டு கட்டி, பட்டினிபோட்டு கூச்சலிட வைத்தால் ஆசிரியர் என்னும் நிலைமேலேயே மாணவர்களுக்கு அவமரியாதையும் ஏளனமும் உருவாகிறது. இன்றைய அரசுகள் அதை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. தனியார்த்துறைகளும் அதையே செய்கின்றன.

30 ஆண்டுகளுக்கு முன் நான் தர்மபுரியில் குடியிருந்த வீட்டுக்கு எதிரில் கவிஞர் பிரம்மராஜன் குடியிருந்தார் . தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் ஆங்கில ஆசிரியர் அவர். மிகமிக ஸ்டைலான மனிதர். அவருடைய ஆடைகள், அவருடைய பைக் எல்லாமே அன்றிருந்த மாணவர்களுக்கு ஆதர்சம் (அவருக்கும் எனக்கும் சண்டை. நான் அவருடைய செயற்கையான கவிதையை நிராகரிப்பவன். ஆகவே பேச்சுவார்த்தை இல்லை) பிரம்மராஜனைச் சுற்றி எப்போதுமே மாணவர் திரள் இருக்கும். அதிகாலையில் அவர்கள் இணைந்து அப்பகுதிகளில் மரம் நடச் செல்வார்கள்.நள்ளிரவில்தான் மாணவர்கள் அவர் இல்லத்தில் இருந்து திரும்பிச் செல்வார்கள்.

இருபதாண்டுகளுக்குப் பின் பிரம்மராஜனின் மாணவர்கள் பலர் அவரில் இருந்து பெற்ற ஊக்கத்தால் இதழாளர்களாக, நிர்வாகிகளாக ஆகியிருப்பதைச் சந்தித்திருக்கிறேன். அவர் அளித்தது ஆங்கிலக் கல்வியை அல்ல. கல்வி அளிக்கும் நிமிர்வின் உதாரணமாக அவர் திகழ்ந்தார். ஆகவே கல்விமேல் நம்பிக்கையை உருவாக்கினார். அதுதான் ஆசிரியர்களின் பணி.

ஜெ 

முந்தைய கட்டுரைகாவியத்தின் காலடியில்
அடுத்த கட்டுரைஒரு வருகை -கடிதம்