தளிர் எழுகை

 

  1. மானஸாவின் காலடியிலிருந்து…
  2. மழைப்பாடகர்கள்
  3. எஞ்சும் நிலங்கள்
  4. தெய்வத்தளிர்
  5. பெண்பேராற்றல்
  6. முகிலில் எழுதல்!
  7. எண்முக அருமணி
  8. வில்துணை வழிகள்
  9. அளித்துத் தீராதவன்
  10. களம் அமைதல்

  11. படைக்கலமேந்திய மெய்ஞானம்
  12. காட்டின் இருள்
  13. முடிவிலி விரியும் மலர்
  14. மயங்கியறியும் மெய்மை

வெண்முரசு நாவல் நிரையின் முதல் நாவல், முதற்கனல். அந்தப்பெயருடன் மிகச்சரியாக இணைந்துகொள்ளும் அடுத்த நாவலின் பெயர் எழுதழல். முதற்கனலில் இருந்து தழல் மூண்டு எழுந்து கொழுந்துவிடுவதற்கான பயணமே நடுவே வந்த நாவல்களில் நிகழ்ந்துள்ளது. தீயின் எடை இந்த தலைப்பின் அடுத்த கணம். தீ எடைகொண்டதாக ஆகும் பரிணாமம். அடுத்த நாவல் நீர்ச்சுடர். சுடும் நீர். கடனளிக்கும் நீர், கண்ணீர்.

மகாபாரதப் போர் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமானது என்பதே நம் பொதுக்கதையாடல். எனில் எல்லா போரிலும் பேரிழப்பு பெண்களுக்குத்தான். எல்லா போரிலும் முதன்மைப் பலிகள் சிறுவர்கள்தான். உப பாண்டவர்கள் ஒன்பதுபேர், உப கௌரவர்கள் ஏறத்தாழ 1000 பேர், உப யாதவர்கள் 80 பேர், கர்ணனின் மகன்கள் 10 பேர் என இளைய தலைமுறையினரின் பெருந்தொகை அப்போரில் இறங்கியது, ஒருவர் மிச்சமின்றி அழிந்தது

அப்படியென்றால் அப்போர் முழுமையாகவே முதியவர்களால் இளைஞர்கள் கொல்லப்பட்ட நிகழ்வு என வரையறை செய்யலாமா? அந்த இளைஞர்களுக்கு இடையே பகை ஏதுமில்லை. அவர்களிடையே போட்டிகளும் இல்லை. சொல்லப்போனால் மகாபாரதம் அவர்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை, அவர்களின் பெயர்கள் மட்டுமே மூலப்பெருங்காப்பியத்தில் உள்ளன. ஆளுமைச்சித்திரங்களோ, அடையாளங்களோ இல்லை.

எழுதழல் அத்தனை இளையோரையும் ஆளுமைகளாக உருவாக்கி முன்வைக்கிறது. அவர்கள் எப்படி தந்தையர் போல் இருக்கிறார்கள், எப்படி தனித்துவமும் கொண்டிருக்கிறார்கள் என்று காட்டுகிறது. மாபெரும் போர் தொடங்குவதற்கு முன்புவரை அவர்கள் ஒருவரோடொருவர் விளையாடி வளர்ந்தவர்கள்தான். அவர்கள் அறியாத ஒரு களத்தில் அவர்கள் எதிரெதிரே நிறுத்தப்பட்டனர்.

அபிமன்யூ அவன் வெளியேறும் வழி அறியாத சூழ்கைக்குள் சிக்கி அழிந்தான் என்று மகாபாரதம் சொல்கிறது. இளையோரில் சற்றேனும் ஆளுமைச்சித்திரம் அளிக்கப்பட்டிருப்பது அவனுக்கு மட்டிலுமே. ஆனால் அத்தனை இளவரசர்களும் அவ்வாறே அந்த வாழ்க்கைச்சூழ்கைக்குள் செலுத்தப்பட்டவர்கள், வெளியேற வழி அறியாதவர்கள், அச்சுழலில் சிக்கி அழிந்தவர்கள்தான்.

எழுதழல் என்பது சிதைநெருப்பே. காடு பொசுங்கும்போது முதலில் கருகிச்சுருண்டு அழிபவை தளிர்களே. தழல் அவர்களை உண்டு எழுவதை தொடங்கவிருக்கும் போர் காட்டுகிறது. இந்நாவலில் கருகவிருக்கும் மரங்களில் தளிர்கள் எழும் சித்திரம் உள்ளது. இதுவும் ஒரு துயரே. தமிழகக் காடுகளில் புங்கம், அத்தி, ஆல், புளி, மா வகை மரங்களே மிகுதி. அவை கோடையில் தளிர்விடுபவை. கோடையில்தான் காட்டுநெருப்பும் எழும். நெருப்புக்கு முன் காடு தளிர்விட்டு நெருப்பென நின்றிருப்பதை பலமுறைக் கண்டிருக்கிறேன்.

எழுதளிர் என்றும் இந்நாவலுக்குப் பெயரிட்டிருக்கலாம். தளிர் என்பது தழல்போன்றதே. ஒளி, மென்மை, குழைவு. இந்நாவலினூடாக ஒவ்வொரு முகங்களாக எழுந்து வந்ததை நினைவுகூர்கிறேன். பிரியத்திற்குரிய இளைஞர்கள். இளைஞர்களுக்கே உரிய பெருந்தன்மையும் நட்பும் கொண்டவர்கள். அது ஒருவகை கன்றுப்பருவம். ஒவ்வொரு முகங்களையாக எண்ணிக்கொள்கிறேன் ஏன் அவ்வாறு நிகழ்ந்தது என சென்ற மூவாயிரமாண்டுகளாக இந்திய மனம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஆகவேதான் மகாபாரதம் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது.

அழிவை விளக்குவது கடினம். ஆக்கத்தையும்தான். இரண்டையும் அறிந்தவன் அதை எளியோருக்குச் சொல்லப்போவதுமில்லை

ஜெ

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : [email protected] 

Phone 9080283887)

‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன் 

முந்தைய கட்டுரைமஹேஷ் குமார்
அடுத்த கட்டுரைமனிதனின் ஆழம் என்பது என்ன?