- மானஸாவின் காலடியிலிருந்து…
- மழைப்பாடகர்கள்
- எஞ்சும் நிலங்கள்
- தெய்வத்தளிர்
- பெண்பேராற்றல்
- முகிலில் எழுதல்!
- எண்முக அருமணி
- வில்துணை வழிகள்
- அளித்துத் தீராதவன்
- படைக்கலமேந்திய மெய்ஞானம்
- காட்டின் இருள்
- முடிவிலி விரியும் மலர்
- மயங்கியறியும் மெய்மை
- தளிர் எழுகை
- அன்னைவிழிநீர்
- அறிகணம்
- ஊழ்நிகழ் நிலம்
- எங்குமுளப் பெருங்களம்
- மைவெளி
2012 மே மாதம் நான் என் இயக்குநர் நண்பர் மாதவன்குட்டியுடன் நமீபியாவுக்கு ஒரு பயணம் மேற்கொண்டேன். வழிகாட்டி டேவிட் கெம்பித்தாவுடன் நமீபியாவின் தலைநகர் விண்டூக்கில் இருந்த ஒரு சேரிப்பகுதிக்குச் சென்றேன். தகரக்கொட்டகைகள் கொண்ட மாபெரும் குடியிருப்புப் பகுதி. எங்களைக் கண்டதும் வந்து சூழ்ந்துகொண்டு வேடிக்கை பார்த்தனர்.
மாதவன்குட்டி நல்ல வெண்ணிறம். கருகரு மீசை வைத்திருந்தார். நமீபியாவில் அக்குழந்தைகள் மீசையை மிக அரிதாகவே பார்க்கும் வாய்ப்பு. அவர்களின் முடி நுரைபோல சுருண்டு மொட்டுகளாக நிற்பது. ஆகவே மீசை வைக்க முடியாது. அங்கு வரும் பயணிகள் பெரும்பாலும் ஜெர்மானியர். நமீபியா ஜெர்மனியின் காலனியாக இருந்தது. அவர்களும் மீசை வைப்பதில்லை. ஆகவே மாதவன்குட்டியின் மீசையைக் கண்டு பெருங்கூட்டமே வியந்து பின்னால் வந்தது.. மாதவன்குட்டி மேலுதட்டால் எதையோ பற்றிப்பிடித்திருப்பதாக எண்ணினர். அதை எடுத்து தரும்படி சில சிறுவர்கள் ஆர்வமாகக் கேட்டனர்.
நான் அந்த குழந்தைகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். காராமணிப் பயறு போல கரிய ஒளிகொண்டவை. கண்கள் இரண்டு கரிய வைரமணிகள். “எங்களூரில் குழந்தைகளை கொஞ்சலாம். அமெரிக்காவில் அனுமதிக்க மாட்டார்கள். இங்கே கொஞ்சலாமா?” என்று கேட்டேன். “தாராளமாகக் கொஞ்சலாம். இங்கே அதை பெரியவர்களின் ஆசி என எடுத்துக்கொள்வார்கள்” என்றார் டேவிட் கெம்பித்தா. நான் ஒரு குழந்தையை கையில் வாங்கினேன். அவ்வளவு எடை இருக்குமென நினைக்கவே இல்லை. திடுக்கிட்டேன். அதை அணைத்து முத்தமிட்டு கையில் இரண்டு அமெரிக்க டாலர்கள் அளித்தேன்.
சற்றுநேரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் எங்களைச் சுற்றி வந்துவிட்டன. எல்லா அன்னையரும் கைக்குழந்தைகளுடன் வந்தனர். “அவர்கள் பணம் எதிர்பார்த்து வரவில்லை. பணம் அளிக்கவேண்டியதுமில்லை. அன்னியரின் வாழ்த்து தங்கள் குழந்தைகளை நீண்டநாள் வாழச்செய்யும் என நினைப்பவர்கள் இவர்கள். இங்கே குழந்தைச்சாவு மிக அதிகம்….வாழ்த்த மட்டும் செய்தால்போதும்” என்று டேவிட் கெம்பித்தா சொன்னார்.
“இல்லை, நான் அனைவருக்கும் இரண்டு டாலர் அளிக்கிறேன்…மாதவன்குட்டி உங்களிடம் பணம் இருக்கிறதல்லவா?” என்றேன். அவரிடம் இருந்தது. அத்தனை குழந்தைகளையும் வாழ்த்தினேன். அன்பளிப்பும் அளித்தேன். எங்கள் தயாரிப்பாளரிடம் பின்னர் அந்த செலவை என் கணக்கில் எழுதிக்கொள்ளச் சொன்னேன். ஆனால் அவர் அதை தன் கௌரவம் என எடுத்துக்கொண்டார்.
2019ல் இருட்கனி எழுதும்போது கர்ணனை நினைத்தேன், குறிப்பாக குழந்தைக் கர்ணனை. அப்போது கர்ணன் வளர்ந்து, ஆண்மகனாகி, அரசனாகி, சாவின் மேடையில் ஏறிவிட்டிருந்தான். ஆனால் மூலமகாபாரதத்தில் கர்ணபர்வம் என்ற பேரில் கர்ணனின் கதை அப்போது மீண்டும் முழுமையாகவே சொல்லப்பட்டிருக்கும். குழந்தைக் கர்ணன் ஒரு கரிய வைரம்போல இருப்பான் என நினைத்தேன். கம்பராமாயாணத்தில் இருந்த சொல்லாட்சி என் நினைவிலெழுந்தது. இருட்கனி. கம்பன் ராமனைச் சொல்ல பயன்படுத்திய சொல்.
இருளின் கனி. கருமையை கொண்டாடியவர்கள் நாம். மகாபாரதம் கரிய வண்ணத்தை போற்றிப்போற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. அதை இயற்றியவனும் கிருஷ்ணன், அதன் நாயகனும் கிருஷ்ணன், அதன் ஒளிமிக்க கதைநாயகர்களான அர்ஜுனனும் கர்ணனும் கிருஷ்ணவண்ணம் (கருமை) கொண்டவர்கள். இருட்கனி என்னும் சொல்லில் இருந்தே அந்நாவலை விரித்து விரித்து எடுத்துக் கொண்டேன்
இந்நாவல் மகாபாரதபோரின் உச்சகட்டத்தில் நிகழ்கிறது. கர்ணனில் குவிகிறது. கர்ணன் விளிம்புகளினூடாகவே நகரும் ஆளுமை. ஒருபக்கம் பெருநட்புக் கடன். மறுபக்கம் அறம். ஒருபக்கம் காதல். மறுபக்கம் கடமை. அனைத்து தகுதிகளுடன் பிறந்தும் எந்தத் தகுதியும் வந்தடையாதபடி ஊழ் அமைந்தது. எல்லா கல்வியும் கிடைத்தும் எக்கல்வியும் உதவாதபடி தீச்சொல்லும் அமைந்தது. அது அப்படித்தான். ஏமாற்றம், சிறுமை ஆகியவற்றினூடாக அவன் சென்றடைந்த இடம் வஞ்சம். அது திரௌபதி சிறுமைசெய்யப்பட்ட அவையில் அவன் அறம் மறந்து அமர்ந்திருக்கச் செய்தது. அங்கேயே அவனுடைய அறச்சாவு நிகழ்ந்துவிட்டது. அவன் புறச்சாவு நோக்கிச் செல்லும் பயணம் இது.
வெண்முரசின் நூல்கள் மறுபதிப்பாகிக்கொண்டிருக்கின்றன. இத்தனை பெரிய நாவல்தொடர் மீண்டும் மீண்டும் பதிப்பிக்கப்படுவதே திகைப்பூட்டும் ஒரு விஷயம்தான். இதை மறுபதிப்பு செய்யும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கு நன்றி
ஜெ
(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : [email protected]
Phone 9080283887)
பின் தொடரும் நிழலின் குரலும் இருட்கனியும்
இருட்கனி, வாசிப்பு- முனைவர் ப.சரவணன்