(வாசிப்பை நேசிப்போம் குழுமத்தில் வெண்முரசு முதற்கனல் கூட்டுவாசிப்பு முடிவடைந்ததை ஒட்டி எழுதப்பட்ட குறிப்பு)
ஓரளவுக்குத் தெரிந்ததுதான் மகாபாரதக் கதை.மகாபாரதத்தைத்தழுவி எழுதப்பட்ட சில புத்தகங்களையும் வாசித்திருக்கிறேன்.எண்ணற்றகிளைக்கதைகளும்,மூலக் கதையின் பிரம்மாண்டமும் மகாபாரதத்தின் மேல் ஆர்வத்தைத் தூண்டிக் கொண்டேயிருக்கும்.ஜெயமோகன் அவர்களின் வெண்முரசை எப்படியாவது வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளூர இருந்து கொண்டேயிருந்தது.புத்தகத்தின் பக்கங்கள்,தற்போது மறுபதிப்பில்
அனைத்து புத்தகங்களின் விலை என ஒரு தயக்கமும் இருந்தது.அந்த சமயத்தில்தான் நம் அட்மின் குழு வாசிப்பைத் தொடங்கலாம் என்ற யோசனையை முன் வைத்தார்.நாள் தவறாமல் வாசிக்க முடியுமா என்ற தயக்கம் சிறிதாக இருந்தாலும்,ஒருஅத்தியாயம்தானே வாசிப்பதில் பிரச்சனை இருக்காது என்ற தைரியத்தில் இணைந்து கொண்டேன்.இதோ இப்போது முதல் புத்தகத்தை முடித்தாயிற்று.வாசிக்கத் தொடங்கியவுடன் மாயாஜாலம் நிறைந்த எழுத்தும்,
வார்த்தை பிரயோகங்களும் அப்படியே ஈர்த்துக் கொண்டது.வேறு எதையும் வாசிக்கப் பிடிக்காது வெண்முரசில் மூழ்கிக் கிடக்க வைத்தது.சில அத்தியாயங்கள் நிறைவு பெற்றதும்,மனம் மெல்ல சமன்பட்டு,ஒரு நாவல்..இது முழுவதும் இப்படித்தான் இருக்கப் போகிறது என்பதைப் புரிந்து கொண்டு,வெண்முரசின் கூடவே எப்போதும்போல் மற்ற புத்தகங்களையும் வாசிக்கத் தொடங்கினேன்.
மகாபாரதக்கதை எழுதப்பட்ட மற்ற புத்தகங்களை விட,வெண்முரசு கொஞ்சம் வித்தியாசமானது.நாவல் போல சொல்லிச் செல்லாமல்,அந்த சூழ்நிலையை,காலத்தை,அந்த இடத்தைப் பற்றி ஆசிரியர் வர்ணிப்பதை அப்படியே வாசித்துக் கடந்து விட முடியாது.அந்த இடத்தில் நாமும் இருப்பது போன்ற,உண்மையாக நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வைப் போன்ற ஒரு தோற்றமயக்கத்தை நமக்குத் தந்து விடுகிறார்.இருளைப் பற்றி,ஒரு மர நிழலைப் பற்றி இன்னும் பல சின்ன சின்ன விஷயங்களும் ஆசிரியரின் எழுத்தில் நம் முன் பிரம்மாண்டமாகஇருக்கிறது.முதல் பகுதி வேள்வி முகத்தில் நாக வம்சத்தைச் சார்ந்த மானசா தேவி,அவளுக்கும் ஜரத்காரு ரிஷிக்கும் பிறந்த மகன் ஆஸ்திகனுடன் இருளில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறாள்.அந்த இருளைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.தொடர்ந்து நாகர்குலத்தின் வரலாற்றையும். இனி அவன் செய்ய வேண்டிய வேலை என்ன என்பதையும் சொல்கிறாள்.பாண்டுவின் வழிவந்த ஜனமேஜயன் நாகங்களை அழிக்க நடத்தும் ஒரு வேள்வியைத்
தடுப்பதற்காக தன் மகனை அனுப்புகிறாள் மானசாதேவி.வேசர தேசத்திலிருந்து கிளம்புகிறான் ஆறு வயதான அந்தப் பிள்ளை,திரும்பிப் பார்க்காமல் தனியே அவன் செல்வதைப் பார்க்கும் போதே இனம் புரியாத ஒரு துக்கம் மனதில் தோன்றும்.270 நாட்கள் நடந்து நடந்து இறுதியில் அஸ்தினபுரியை அடைகிறான்.இந்த இடத்தில் ஜனமேஜயனின் கடந்த கால நிகழ்வுகள் பற்றி வரும்.பழைய நினைவுகள் அவனுள் எழும். கண்ணிழந்த நாய்க்குட்டியைப் போல என்ற உவமையை குறிப்பிடுவார் ஆசிரியர்.வாழ்நாள் முழுவதும் பதட்டத்தோடு இருக்க வேண்டிய விதி அவனுக்கு.அந்த நாய்க்குட்டியின் தவிப்பை,நம்மாலும் உணர்ந்து கொள்ள முடியும்.அடுத்து,
ஜனமேஜயன் நடத்தும் வேள்வி.அனைத்து நாகங்களும் வேள்வித் தீயில் தங்களை அழித்துக் கொள்ள வரும்காட்சியின் விவரிப்பெல்லாம்வாசித்தால் மட்டுமே உணரக்கூடியபிரம்மாண்டம்.அனைத்து நாகங்களும் அழிந்ததும்,அரச நாகம்தட்சன் மட்டும் வரவில்லை.தட்சனை வர வைக்கும் முயற்சியில்,இந்திரனையே ஜெயித்து,வெற்றி பெறுகின்ற இறுதித் தருவாயில் ஆஸ்திகன்,தனக்கான காணிக்கையாக தட்சனின் உயிரை வேண்டுவான்.இந்தப் பிரச்சினையை தீர்க்க வியாசரின் வருகை.வியாசரின் அறிமுகத்திற்குப் பிறகு அவரின் சீடர் மூலம் மகாபாரதக் கதை நமக்கு சொல்லப்படுகிறது.இதுவரை விநாயகர் தன் ஒரு தந்தத்தை உடைத்துக் கதையை எழுதத் தொடங்கினார் என்று நாம் அறிந்ததிலிருந்து சற்றே மாறுபட்டுக் கதை தொடங்குகிறது.இனி நமக்கு ஏற்கனவே அறிமுகமான புகழ்பெற்ற கதாபாத்திரங்கள் ஒவ்வொருவராக அறிமுகமாகிறார்கள்.பல காட்சிகள், பல கதாபாத்திரங்கள் மறுபடி மறுபடி நம்மை வாசிக்க வைக்கும் அளவிற்கு
நம் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது.அனைத்தையும் சொல்ல வேண்டும் என்றால் ஒரு பதிவு போதாது.எனக்கு மிகவும் பிடித்த சில நிகழ்வுகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.முதலில் விசித்திரவீரியன்,நோயாளியான ஒரு மன்னனாக அறிமுகமாகிறான். இறுதியில் பெரிய சிம்மாசனமிட்டு நம் மனதில் அமரப் போகிறான் என்பது அப்போது நமக்குத் தெரியாது.பீஷ்மர்,எப்போதும் தனிமையில் இருக்கும் இவர் நேரிடுகிற அவமானங்களும் அன்பு கிடைக்காத ஒரு வாழ்வும் அவர் மீது பெரும் நேசத்தை உண்டாக்கும்.விசித்திர வீரியன் அம்பிகைக்கும் இடையேயான சொல்லப்பட்ட காதலும், பீஷ்மர் அம்பைக்கும் இடையே சொல்லப்படாத,ஆனால் உணரப்பட்ட காதலும் காட்டப்படும் அந்த இரண்டு இடங்கள்,நெகிழ்வும் நிறைவுமாக வாசித்த பக்கங்கள்.நிராகரிக்கப்பட்ட காதலில் தவிக்கும் அம்பை,அவளின் அந்த கோபமும் மனக் கொந்தளிப்புமே முதற்கனலாகி கதையைக் கொண்டு செல்லப் போகிறது.
இதில் பீஷ்மரின் அறத்தை பற்றிச் சொல்ல வேண்டும்.காசி நாட்டு இளவரசிகளை தம்பிக்காக கவர்ந்து கொண்டு வர வேண்டும் என்பதைக் கேட்டதிலிருந்து,அதைச் செய்ய முடியாமல் தவிப்பதாகட்டும்,ஆலோசனைக்காக வியாசரை அணுகுகிற சமயத்திலும்,அறத்தை மீறி எதையும் செய்யக்கூடாதுஎன்பதில் உறுதியாக இருப்பார். ஆனால்,பீஷ்மரின் முன் கதை ஒன்றைச் சொல்லி பீஷ்மர் செய்யப்போவது சத்திரிய தர்மம் என்று சொல்லுவார் வியாசர்.பீஷ்மரின் மனக்குழப்பத்தை, வேதனையை உணர்த்துவதற்கு உதாரணமாக ஆசிரியர் சொல்லியிருக்கும் விஷயங்கள்தான்ஆசிரியரின் கற்பனைக்கு மகுடம் சேர்க்கிறது.
சால்வ மன்னனை நேசிக்கும் அம்பை,பீஷ்மரால் சுயம்வர மண்டபத்திலிருந்து சகோதரிகளோடு சிறை எடுக்கப்படுகிறாள்.ஆனாலும் தன் விருப்பத்தை வெளிப்படையாக தெரிவிக்கும் தைரியமும் இருக்கிறது அவளிடம்.தன் விருப்பம் நிறைவேறாமல் அங்கும் இங்குமாக அவள் பந்தாடப்படும் போது அவள் மீதான பரிதாபமே அன்பாக மாறிவிடுகிறது நமக்கு.நிராகரிக்கப்பட்ட அவளின் கோபம்,அடுத்து வரப்போகும் ஒவ்வொரு இடத்திலும் பெருகுகிறது.பீஷ்மரின்புறக்கணிப்பு,சால்வ மன்னனிடம் கிடைக்கும் அவமதிப்பு என அம்பை அலைக்கழிக்கப்படுகிறாள்.பீஷ்மரின் மீதான பயத்தில் அடைக்கலம் கொடுக்க யாருமே தயாராகாததில் கிடைத்த அவமானம்,வேதனை அவளின் பெரும் கோபம் பழிவாங்கும் வெறியைத் தூண்டி விடுகிறது.
வெறி கொண்டு உழன்று கொண்டிருப்பவளின் கைகளில்,ஒரு பெண் குழந்தை கிடைக்கிறது.அந்தக் குழந்தை அவளின் பின்னாலேயே சுற்றுகிறது.தன் பழி வாங்கும் உணர்ச்சியை அப்படியே அந்த குழந்தைக்குக் கடத்துகிறாள் அம்பை.நெருப்பில் அம்பை பாய்ந்ததும்,அந்தக் குழந்தையின் தன்மையே மாறி சிகண்டியாக உருவெடுக்கிறது.அவனின் கோபமும் பீஷ்மரை பழிவாங்க வேண்டும் என்ற குறிக்கோளும் பன்மடங்காகப் பெருகுகிறது சிகண்டிக்கு.பீஷ்மருடன் மோதி வெற்றிபெற அனைத்தையும் கற்றுத் தேற வேண்டும் என்ற ஆவேசத்தில்,யார் என்று தெரியாமலேயே பீஷ்மரிடம் மாணவனாகச் சேர அவரையே வேண்டுகிறான்.வனம் புகுந்துவிட்டேன் இனி சீடர்களை ஏற்கக்கூடாது என்று சொல்லியும், தன் சாதுர்ய பேச்சால் பீஷ்மரை சம்மதிக்க வைக்கிறான்.”வீரனே நீ உன் இலக்கை அடைவாய். அடைந்தபின் ஒருகணமும் வருந்தமாட்டாய். வீரர்களுக்குரிய விண்ணுலகையும் அடைவாய்” என்ற பீஷ்மரின் வாழ்த்தும் கிடைக்கிறது.
ஆயிற்று ஒரு வருடம்….தாயைப் பிரிந்து சென்ற ஆஸ்திகன்,சர்ப்பசத்ரவேள்வி முடிந்து வீடு திரும்புகிறான்.மகன் இப்போதும் நாகனாகத்தான் இருக்கிறானா என்பதைச் சோதிக்க ஒரு சோதனையையும் வைத்து உள்ளே அழைக்கிறாள் மானச தேவி.வெற்றியுடன் ஆஸ்திகன் திரும்பிய அந்த நாள் நாகபஞ்சமி எனக் கொண்டாடத் தீர்மானமாகிறது.நாகர் குலம் பெருக வேண்டி பூசை நடக்கிறது.அடுத்ததாக,எல்லா உலகமும் நாகர்களே நிறைந்திருக்க வேண்டும் என்ற மானசாதேவியின் விருப்பம் நிறைவேற தட்சனும் தட்சகியும் தயாராகிற முதற்கனலின் இறுதி அத்தியாயம் “வாழிருள்”
இந்தப் பகுதியின் வாசிப்பனுபவத்தைப் பற்றி சொல்லில் அடக்கி விட முடியாது.தட்சனும்,தட்சகியும் இணையும் படிநிலையை பகுதி பகுதியாக விவரித்திருப்பார்,அதுவும் அத்தனை அழகழகான பெயர்களோடு.பல்கிப் பெருகிய நாகங்கள் உலகில் அனைத்து இடங்களிலும் தங்களை சேர்த்துக் கொள்கின்றன என்பதாக முதற்கனல் முற்றுப்பெற்றிருக்கிறது.ஒவ்வொரு இடத்தையும் ஆசிரியர்வர்ணித்திருக்கும் விதமும், உவமைகளாகச் சொல்லியிருக்கும் விஷயங்களுமே புத்தகத்தை பிரம்மாண்டமாக்கியிருக்கிறது.முக்கியமாக பாலை நிலத்தைப் பற்றி.
சூழலுக்குத் தகுந்தாற்போல் மனிதர்கள் மனதை மாற்றிக் கொள்வதும்,அரச குலத்தினர் தங்கள் சுயநலத்திற்காக யாரையும் பலியிடத் தயங்காததும் நாடு,பதவி போன்ற ஆசைகள் தான் செய்வது சரி என்றே நம்ப வைத்து விடுகிறது அவர்களை. இதற்கு உதாரணமாக பல கதாபாத்திரங்களைப் பார்ப்போம்.நாகர்களே புத்தகம் முழுவதும் நிறைந்திருக்கிறார்கள்.முக்கியமாக ஒவொரு அத்தியாயத்திற்கும் ஆசிரியர் வைத்திருக்கும் தலைப்புகள்.அதுவே கவிதை போல அத்தனை அழகாக இருக்கிறது.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் இருக்கும் மிக அழகிய படங்களைப் பற்றியும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.அந்த அத்தியாயத்தின் உணர்வுகளைக் கூட்டுவதில் அந்த ஓவியங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.குழு வாசிப்பினால் மட்டுமே சாத்தியப்பட்ட வெண்முரசு வாசிப்பு,முதற் பகுதியை முடித்த பெரும் திருப்பதியை தருகிறது. இனி வரப்போகும் பகுதிகள் எப்படி இருக்கப் போகிறது என்ற ஆர்வத்தோடு காத்திருக்கிறேன். அவசியம் வாசித்திருக்க வேண்டிய படைப்பு .
சுமி ஹரி