முதல் நெருப்பு

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

(வாசிப்பை நேசிப்போம் 

வெண்முரசு என்றொரு நாவல் துவங்கப்படுகிறது. நான் தினம் ஒன்றாக வாசிக்கிறேன். இது குறித்து உங்கள் கருத்து என்று பத்தாண்டுகளுக்கு முன்பு என் நண்பர் கேட்ட பொழுது நான் ஒரு கேள்வியெழுப்பி அதை மறுத்தேன்.

உன்னால் இதையும் வாசித்துக் கொண்டு மற்றவைகளையும் வாசிக்க முடியுமா?

முடியாது.

அதுதான் ஜெமோவின் வீச்சு. அவரை வாசிப்பவர்களை வேறு எங்கும் நகர விடமாட்டார். அது ஆரோக்கியமானதல்ல.

அடுத்து இன்னொரு நண்பர் முகநூலுக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு வாசித்தார். கொஞ்ச நாட்களுக்கு பிறகு விசாரிக்கையில் வாழ்க்கையில் கஷ்டம் தீர கர்ணன் பாத்திரம் வரும் வெண்முரசு பகுதிகளை வாசித்தால் போதும் என ஆருடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

என்னுடைய திட்டம் என்னவாக இருந்தது என்றால் எஸ்.ரா வின் மகாபாரதம் வாசிப்பது எப்படி? கட்டுரையின்படி, மற்ற பாரத நாவல்களை வாசித்துவிட்டு, மூலத்தை துவங்குவதற்கு முன்பு கங்கைக்கரை நகரங்களை சுற்றி விட்டு, இறுதியாக வெண்முரசினை வாசிக்கலாம் என்றுதான்.

சமீபத்தில் வெண்முரசு முன்பதிவுத் திட்டம் வெளியானதும் மனம் மாறியது. எத்தனை நாட்களுக்கு தள்ளிப்போடுவது? முழுக்க இதிலேயே ஆழ்ந்து வாசிக்கத்தானே பிரச்சனை. மற்றவைகளுடன் இதையும் சேர்த்து தினம் ஓர் அத்தியாயமாக வாசிக்கலாமே. என் திட்டத்தை பிரியாவிடம் பேசினேன். இம்முறை குழு வாசிப்பை வடிவமைத்தது அவர்தான். அவர் சொன்னது என்னவென்றால் நீ தொடர்ந்து வாசி, மற்றவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று. அதனால்தான் நானே அவருக்கு 100₹ அனுப்பி ஆரம்பித்தேன். இம்முறை இரண்டாவது குழுமம் துவங்குவதற்கு வடிகட்டும் யோசனையும் அவருடையதே. அது நல்லபடியாகத்தான் வேலை செய்கிறது.

என்ன ஒரு வருத்தம், நான் கொஞ்சம் நேரமொதுக்கி அவ்வப்போது கலந்துரையாடல்களை நடத்தியிருக்க வேண்டும். வேலைப்பளு. முடியவில்லை.

சரி முதற்கனலுக்கு செல்வோம்.

மகாபாரதம், ஆரியவர்த்தம் உருவான பின்பு, பூர்வகுடிகளான நாகர்கள் எங்ஙனம் ஒடுக்கப்பட்டார்கள், எப்படி அவர்கள் ஆரியர்களுடன் கலந்தார்கள்? புதிதாய் ஒரு கலாச்சாரம் எப்படி தோன்றியது? அதற்கான புராணங்கள் எப்படி உருவாக்கப்பட்டன? என்பதை அழகுற சொல்லும் காவியமாகத்தான் நான் பார்ப்பேன்.

ஆரியர்களின் பார்வையிலான பாரதம், அவர்களால் துன்புறும் சூத்திர மற்றும் பெண்களின் பார்வையில் வைக்கப்படும் எதிர்கதையாடல்களாகத்தான் இதுவரை வாசித்திருக்கிறேன்.

முழுக்க நாக தரிசனமாக பாரதத்தை எழுதுவார் என்று கொஞ்சமும் யூகிக்கவில்லை. அதிலும் பாரதத்தின் தனிச்சிறப்பே அதன் கிளைக்கதைகள்தான். அத்தனையையும் பயன்படுத்தி எழுதுவதை வியந்து பார்க்கிறேன்.

நம்மில் பலருக்கு அக்கதைகள் தெரியும். ஆனால் அது மகாபாரதக் கதை என்பது தெரியாது. உதாரணத்திற்கு சிபிச் சக்கரவர்த்தி புறாவுக்காக தன் சதையை வெட்டித்தரும் கதை.

நாகர்களின் கிராமத்தில் துவங்கும் கதை ஹஸ்தினாபுரத்தை நெருங்குவதற்கு முன்பே சூடுபிடித்து விட்டது. ஆஸ்திகனின் பின்னனியை இப்படி யாருமே சொல்லியதில்லை. உண்மையில் மானசாதேவியின் பின்னனியை நான் பலநாட்கள் மனதில் வெவ்வேறு கோணத்தில் அணுகியிருந்தேன். ரிஷியை மாயையில் ஆழ்த்தி காதலித்து கர்ப்பமுற்று விலகி சாபம் பெறும் இடம். எனக்கு இன்னமும் அந்த காட்சி மனதில் ஓடுகிறது. பக்கத்தில் படுத்திருக்கும் பெண் பாம்பாக மாறிக்கிடப்பதை பார்க்கையில் அவன் மனம் எப்படியிருந்திருக்கும்?

ஹஸ்தினாபுரம் – அதன் பெயர் பின்னனியோடு வரும் கதையும் அருமை. யானைகளின் தேசம். கதையறிந்தவர்களுக்கு யாகம் நிறுத்தப்பட போவது தெரிந்த விசயம்தான். அதற்கான காரணமாக எடுத்துரைக்கப்படுவதுதான் வெண்முரசின் சிறப்பு. மனிதனுக்குள் நாகங்களின் உயிர்ப்பு ஏன் அவசியம் என்பதன் விளக்கம். அட டா. எவைஎவையெல்லாம் நாகத்தின் அம்சங்கள் என்ற பட்டியலில் தொடர்ந்து வளரும் நகங்களையும் கண்ட பிறகு, என் கை விரல்களை ஐந்து தலை நாகமாக கண்டதுண்டு.

வியாசரின் முதிர்ந்த குழந்தைத்தன்மையை காட்டி அறிமுகப்படுத்தியது அழகு. பாரதம் இங்குதான் இப்படித்தான் உரைக்கப்படப் போகிறது என நன்கு தெரிந்திருந்தாலும் அந்த ஆரம்பப்புள்ளியில் ஒலிக்கப்படும் சங்கொலிக்காக காத்திருந்தேன். மகாஆஆஆஆபாரதம். போர் துவக்கத்துக்கான சங்கொலி.

பாரதத்தின் அடையாளம், ஆணிவேர் அனைத்தும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளே. ஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொரு ஆணும் பெண்ணுக்கு செய்யும் தீங்கினால் அடுத்தடுத்த தலைமுறைகள் எங்ஙனம் பாதித்திருக்கும் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். கதை கேட்கும் நமக்கு மட்டுமே புரியும். ஒவ்வொரு அரசனின் ஆட்சியிலும் இது ஹஸ்தினாபுரத்தில் நிகழும் துயரமென்றாலும் ஆகப்பெரும் தீச்சொல் விழுவது பீஷ்மரின் காலத்தில்.

பீஷ்மனை காங்கேயனாக யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். கங்கையின் மைந்தனாகவே சூதர்களின் பாடல்வழி பரப்பப்பட்டுள்ள கதையைத்தான் இன்று நெடுந்தொடர்வழி மகாபாரதக் கதையறிபவர்களும் அறிந்திருப்பார்கள்.

ஆரிய மன்னனுக்கும் பூர்வக்குடி காங்கேய பெண்ணுக்கும் பிறக்கும் மகன் பீஷ்மன். அவனுக்கு அரசுரிமை ஹஸ்தினாபுரத்திலுமில்லை. காங்கேயத்திலும் இல்லை. இது எத்தகைய முரண்?

காசி தேசத்து சுயம்வர படலத்தில் நாயகியின் அறிமுகம். பீஷ்மர் போன்றதொரு மாவீரனுக்கு இணையாக உருவாக்கப்பட்ட ஆளுமையாக அம்பை. வாசித்த அனைவரும் இவர்கள் இருவரும் சேர்ந்திருக்க கூடாதா என்று எங்கும் வகையில் இருவருக்கிடையான காட்சிகளை, உரையாடல்களை உருவாக்கியிருப்பார்.

யாரால் உயிருக்குயிராய் விரும்ப்பபடுகிறாயோ அவர்களாலே உயிரெடுக்குமளவு வெறுக்கப்படுவாய் – என்ற விதிக்கு பீஷ்மரும் விலக்கல்ல. அவரை நேசித்த அம்பையே அவருக்கு காலனாக மாறுவாள்.

சிகண்டி உருவாக்கப்படும் விதம், மூலத்தையெல்லாம் கடந்து செதுக்கியிருப்பார். பீஷ்மர் எப்படி தந்தைக்காக வாழ்க்கையை தியாகம் செய்கிறாரோ அப்படியே தாய்க்காக சிகண்டி. இவர்கள் இருவருக்கும் ஒரே போல் வரும் கனவு காட்சி இருக்கிறதே, அதிலும் குறுக்கே புகுந்து தடுப்பவளாக அம்பை வருவதெல்லாம் அட அட அட.

யாரும் பெரிதும் அறிந்திருக்காத கதாபாத்திரமான விசித்திர வீரியனை அனைவரும் விரும்பும்படி மாற்றி முடித்து வைத்திருக்கிறார். உண்மையில் வாசிக்கும் பெண்களின் மனதை அம்பிகையை போல் மாற்றிவிட்டார்.

இறுதியாக தட்சகனும் அவன் மனைவியும் கூடும் அத்தியாயம். அக்மார்க் ஜெயமோகனம்.

ஒரு எழுத்தாளனின் உச்சமென்பது அவன் எழுத்தை கற்பனை செய்வதற்கே பெரும்பிரயத்தனப்பட வைப்பது. ஆயிரம் தலைகளுடன் இரு நாகங்கள் கூடும் காட்சியை இந்த மனிதன் எப்படி சிந்தித்திருப்பார்?

வாசிப்பின் உச்சமென்பது வாசிப்பாளன் எழுத்தாளன் எழுதிய தருணத்தில் அடைந்த மனநிலையை அடைவது, அதையும் கடப்பது. முடிந்தால் நெருங்குங்கள் பார்க்கலாம் என விஷ்வரூபம் எடுத்திருக்கிறார் ஜெயமோகன் இந்த அத்தியாயத்தில்.

விஷ்ணுபுரத்தில் இறுதியாக ஊழிப்பெருவெள்ளம் காட்சியில் இப்படி வியந்தேன். மீண்டும் இப்போது இந்த அத்தியாயத்தில்.

ஓவியர் ஷண்முகவேல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஜெமோவின் எழுத்திற்கு ஈடு கொடுத்து படம் வரைய முயன்றிருக்கிறார். அவரே 50 வது அத்தியாயத்தில் என்னால் இயலாது என சரண்டைந்திருப்பதாக உணர்கிறேன்.

உண்மையில் வெண்முரசின் சிறப்பாக இவரது ஓவியங்களை சொல்வேன். செவ்வியல் பதிப்பிற்கு வைக்கும் அதீத விலைக்கு சமாதானம் சொல்ல இவரது ஓவியங்கள்தான் முன்வரிசையில் நிற்கும்.

ஒவ்வொரு கிளைக்கதையையும் கதையின் போக்கில் சூதர்களின் பாடல்களாக கொண்டு வந்திருப்பது மிகச்சிறந்த உத்தி. மிகவும் இரசிக்கும்படி இருக்கிறது. அதிலும் பீஷ்மர் குறித்து இட்டுக்கட்டி அவரிடமே அவர் யாரென தெரியாமல் பாடி பரிசு பெறுவான் ஒருவன்.

அடுத்து மொழி. வெண்முரசு ஒரு தனி களஞ்சியம். எத்தனை எத்தனை வார்த்தைகள். ஒவ்வொரு அத்தியாயத்திலும் எதையாவது ஒன்றை கற்றுக்கொடுத்துக் கொண்டே வருகிறார்.

கோமதி சார் சொல்வது போல தமிழ் & சமஸ்கிருதத்தின் அழகியலை இவ்வளவு சிறப்பாக சமீபத்தில் கையாள எவருமில்லை.

 

கதிரவன் ரத்னவேல்

வாசிப்பை நேசிப்போம் 

முந்தைய கட்டுரையுவன் கனடாவில்…
அடுத்த கட்டுரைஓவியம்,கடிதம்