வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு
முதற்கனல்… ஒரு பெருங்காவியத்தின் முதற்கனல்… ஒரு பெருநிகழ்வின் முதற்கனல்…. ஒரு பெரும்படைப்பின் முதற்கனல்…
காலம் காலமாக இந்திய பண்பாட்டு மரபில் சொல்லப்பட்டு வரும் காவியம் மகாபாரதம்.. கதைமாந்தர்களின் உளவியலை சில புனைவுகளோடு கூடி சிறப்பாக கொணர்ந்து இருக்கும் படைப்பு… வெண்முரசு… அதன் முதல் புத்தகம் “முதற்கனல்”….
பொதுவெளியில் நவீன காலகட்டத்தில் சின்னத்திரையில் கண்டு களித்து மகாபாரதம் மேம்போக்கான கதை வடிவத்தை மட்டுமே நமக்கு அளித்து வந்தது. ஒரு பேரிலக்கியத்தை அணுக வேண்டிய முறையை நமக்கு இந்த படைப்பின் வாயிலாக ஆசிரியர் வேறு பரிணாமத்தை கண் முன் நிறுத்துகிறார்.. இப்படைப்பை வாசிக்கையில் இந்த வகை வாசிப்பும் சாத்தியம் தானோ என நம் மனதில் கேள்விகள் எழுகின்றன.
ஜெயமோகனின் வார்த்தை பிரயோகங்கள், சில சமயம் நம்மை ஒன்ற வைத்து, கதை நிகழும் இடத்திற்கே இட்டுச்செல்கின்றன. பெருமணல்பரப்பையும், அடர்கானகங்களையும், பேரிரைச்சல் கொண்டதாகவும் அதேசமயம் பெருஅமைதி கொண்டதாகவும் பிரவாகம் எடுக்கும் கங்கை, யமுனை நதிகள் என இயற்கை அன்னை அளித்த அருட்கொடைகள் அனைத்தையும் அந்தந்த இடங்களுக்கு செல்லும் போது உணரும் உணர்வினை எழுத்தின் வாயிலாகவே சாதிப்பதில், ஆசிரியர் உண்மையிலேயே எழுத்தை ஆளும் எழுத்தாளராக நிரூபணம் ஆகிறார்…
பல பயணங்கள், பலவகை வாசிப்புகள், பலகட்ட ஆராய்ச்சி என அனைத்தின் கூட்டுப்பலனாக இந்த படைப்பு வந்துள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம் பெற்றுள்ள ஓவியங்களும் படைப்போடு நம்மை நெருங்க செய்வதில் அளப்பரிய பங்கு வகிக்கிறது.
பல தத்துவார்த்த உரையாடல்கள், சில புரிந்தும் பல புரியாமலும் உள்ளன. மறுவாசிப்பின் வழியே அவற்றை கண்டடைய வழிவகை உண்டு என கருதி அடுத்த தொகுப்பிற்கு செல்கிறேன். மறுவாசிப்பிற்காக எடுத்து வைக்கவில்லை, வெண்முரசு வாசிப்பு தொடர் நிகழ்வாக அமையும் என்ற நம்பிக்கை அடிமனதில் உள்ளது.
இந்த முதற்கனல் என் மனதில் வெண்முரசு எனும் பிரமாண்ட படைப்பை அணுக ஒரு முதற்கனலாய் அமைந்துள்ளது.
ராஜ சிங்காரவேலன்