உள்ளிருந்து ஊறிவரும் நஞ்சு

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

என் வசனங்கள் பற்றி ஒரு பேச்சு சினிமாவிலுண்டு- அதனால்தான் இருபதாண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். அவை நடிப்பவர்களுக்கு வசதியாக எழுதப்பட்டவை. (இன்றைய சினிமாவில் வசனம் முக்கியம் அல்ல. வசனம் சார்ந்த நடிப்பும் இல்லை. அந்தந்த தருணங்களில் இயல்பாக நிகழும் உரையாடலே இன்று தேவை). நான் வசனங்களை சொல்லி நடித்துக்கொண்டே எழுதுபவன்.

ஆனால் வெண்முரசு எழுதும்போது அப்படி அல்ல. அந்த வசனங்கள் எவற்றையும் நான் கவனிக்கவோ, அமைக்கவோ இல்லை. அவை எப்படி நிகழ்ந்தன என்றுகூட தெரியாது. பெரும்பாலான வசனங்களை நான் மீண்டுமொருமுறை வாசித்ததில்லை, இப்போது வரை.

ஆனால் அவ்வப்போது இப்படி எவரேனும் அவற்றைப் பேசி நடிக்கையில் அவற்றின் சொல்மிகை இல்லாத கச்சிதமும் உணர்ச்சிகரமும் இயல்பாக இணைந்திருப்பதைக் காண்கிறேன். ஏனென்றால் அவை ஆசிரியரால் எழுதப்பட்டவை அல்ல. ஆசிரியர் அந்தந்த கணங்களில் உருமாறி நிகழ்ந்தவை.

கர்ணன் சிலகணங்கள் தன் அகச்செலவை நிறுத்தி சொற்களை தொகுத்துக்கொண்டு “என் அகம் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. ஒருகணமும் முழுவிழிப்பு நிகழாதபடி அதை மதுவூற்றி அணைத்துக்கொண்டிருக்கிறேன்” என்றான்.

முதற்சொற்றொடர் அமைந்ததும் உள்ளம் சொல்லென்றாகி எழ, உரத்தகுரலில் “யாதவரே, உள்ளிருந்து ஊறி வளரும் நஞ்சு என்னை எரிக்கிறது. நான் கொண்ட நல்லியல்புகள், தேறியதிறன்கள், கற்றறிந்த மெய்மைகள் அனைத்தையும் அது அழித்துக்கொண்டிருக்கிறது. மீட்பென்று ஏதேனும் இருந்தால் அது உங்களிடமே என்று தோன்றியது” என்றான்.

இன்று கேட்கும்போது ‘மானுடர் எவ்வகையிலும் எங்கும் வெளிப்படுத்தியிருக்கும் எல்லா துயர்களும் பொய்யே’ என்ற வரி என் நெஞ்சை அறைகிறது. இந்த நாள் முழுக்க அந்த வரியிலிருந்து வெளிவரவே முடியவில்லை. உலகில் இதுகாறும் எழுதப்பட்ட அத்தனை இலக்கியங்களையும் ஒரே வீச்சில் மறுக்கும் வரி. வேதாந்திகளின் இலக்கிய மறுப்பு நான் அறிந்ததே. ஆனால் ஏன் அவ்வாறு சொன்னான் யாதவன்? கலையறிந்தவன், இலக்கியத்தால் நிலைகொண்டவன் அல்லவா அவன்?

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-5

முந்தைய கட்டுரைபாலைநிலவன் விருது நிகழ்வு
அடுத்த கட்டுரைபொலிவு இழந்த போர்வை