முதற்கனல் கூட்டுவாசிப்பு- பிரியதர்சினி கோபால்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

வெண்முரசு நாவல்களை கூட்டுவாசிப்பு செய்ய ஒரு குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. வாசிபபி நேசிப்போம் என்னும் இணையக்குழுமத்தில் ஓர் அணி. நாள்தோறும் ஓர் அத்தியாயம் அனுப்பப்படும். அதை வாசித்து கூட்டுவிவாதம் செய்யலாம். அவ்வண்ணம் வேறு சில வாட்ஸப் குழுமங்களும் உள்ளன.

இன்றைய வாழ்க்கையில் பல்வேறு திசைதிரும்பல்கள் நடுவே வாசிப்பது விடுபட்டுப்போகிறது. பெரும்பாலானவர்களின் அனுபவம் என்பது நூல்களை தொடங்கி அப்படியே விட்டுவிடுவதுதான். இந்தவகையான கூட்டுவாசிப்பு நடுவே விட்டுவிடாமல் உடன் செல்ல உந்துதல் அளிக்கிறது.

வாசிப்பு நின்றுவிடுவதற்கான காரணங்களில் இன்னொன்று அவ்வப்போது ஏற்படும் புரிதல் பிரச்சினைகள். அதைப்பற்றி யோசித்து, அதை ஐயம்தீர்த்தபின் தொடரலாம் என நினைப்போம். அப்படியே நின்றுவிடும். இந்தவகையான கூட்டு வாசிப்பில் நம்மைப்போலவே இன்னொருவர் அந்த ஐயத்தை களைவார். நாம் இன்னொருவர் ஐயத்தைக் களைய முடியும்.

ஜெ

வாசிப்பை நேசிப்போம் குழுமம்

முதற்கனல் வாசிப்பு

பிரியதர்சினி கோபால்

இப்படி ஒரு குழு வாசிப்பைத் தொடங்கலாமென்று பேசியபோது அதிகம் தயங்கியதுநான் தான். காரணம் சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஏற்கனவே செய்யவேண்டிய வேலைகள் அதிகம். கூடுதலாக ஒரு பணி அதுவும் ஆண்டாடுக்குத்தொடரும் வகையில். இதை இதற்கு முன்பு யாரேனும் நடத்தியிருக்கின்றனரா அல்லது இது தான் முதல் தொடர் வாசிப்புக்கான குழுவா என்று எதுவும் தெரியவில்லை. ஆனால் ஒரு சொத்து வாங்க வேண்டும் அல்லது ஒரு கல்யாணப்பேச்சு தொடங்க வேண்டும் என்றதும், எப்படி மள மளவென வேலைகள் தானாக நடைபெறுமோ அப்படித்தொடங்கிவிட்டோம்.

தினசரி வாசிப்பதற்க்கன லிங்க் பகிர்ந்தல் கதிரவனாகவும், வாசகர் சேர்ப்பு போன்ற பொது மேலான்மை வேலையை நானும் பிரித்து எடுத்துக்கொண்டோம். கோமதிசங்கர் சார் மற்றும் பிரச்சன்னா சார் இருவரும் அரணாக இருந்து நம் அனைவரையும் வழி நடத்துகிறார்கள். இதோ முதல் புத்தகம் வெற்றிகரமாக முடிந்து விட்டது. வாசிப்பை நேசிப்போம் குழுவில் மீண்டும் ஒரு திருவிழாவாக அனைவரின் பதிவுகளும் வந்த வண்ணம் உள்ளது.

இனி புத்தகத்துக்குள்..

மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை. முதல் 5 அத்தியாயங்களை எல்லாம் புரியாமலே வாசித்து வந்தேன். நாகர்களின் உலகத்தை புரிந்துகொள்ள சிறுது காலம் எடுத்தது. முதல் 10 அத்தியாயம் வரையும் தொடர் மீள் வாசிப்புதான். கதையில் அந்த யாகத்தில் தொடங்குகின்ற ப்ளாஷ்பேக் காட்சிகளிலிருந்து தான் உள்ளே வந்தேன். உண்மையிலேயே பல இடங்களில் கற்பனைக்கு அப்பால் அல்ல இப்படியும் கற்பனைகள் வளருமா ? என்றபடி இருந்தது. இந்த இதிகாசம் ஒரு வகையான கற்பனை என்றால் ஜெயமோகனுடைய இந்த எழுத்து அந்த கற்பனைகளுக்கெல்லாம் மணிமகுடம்.

முதல் புத்தகத்திலேயே 10 பகுதிகள், என்னறற கதாபாத்திரங்கள். கடைசி 49 & 50 வாசிக்கும்போது ‘ஆமா யாரது புதுசா மானசாதேவி’ன்னு நினைக்கிற அளவு கங்கைக்கரைகளும் அஸ்தினாபுரத்திலும், பீஷ்மர் மற்றும் கொற்றவையுடன் காடு மலைகளிலும், சிகண்டியோடு காட்டுப்பன்றிக்கூட்டத்திலும், பாலைவனத்திலும் மாறி மாறி பயணம் செய்த மாதிரி அப்படி ஒரு அலைச்சல் களைப்பு.

மூல மகாபாரதமோ, வெண்முரசோ கதாப்பாத்திரங்க்களுக்கான எடையை எப்படி இப்படி கனமானதாக அமைக்க முடிந்தது? பீஷ்மர், சாந்தன்,சத்யவதி, விசித்திரவீரியன், அம்பை, அம்பிகை, அம்பாலிகை, வியாசர், சிகண்டி என அனைவரையும் நம் மனதிலிருந்து துளியும் மறந்துவிடாத படிக்கு கனமானதொரு பாத்திரப்படைப்பு மற்றும் கதைக்களம் கொண்டு தொடங்கியிருக்கிறது இந்த முதற்கனலில்.

அம்பையின் மனதில் எழுந்ததே அது தான் முதற்கனல்.விருப்பப்பட்டவனை மணக்க முடியாது கவர்ந்து வரப்பட்டு, அங்கிருந்து பிழைத்து போனவளை காதலனும் பெற்றவரும் கைக்கழுவ மீண்டும் கவர்ந்தவனை மணக்கலாமென்றால் முடியாது. இனி அவளால் எதுவும் முடியாது காரணம் எல்லாமே இங்கு நெறி நூல்களின் படியே நடக்கிறது. பெண்களை கவர்வதும் சரி, அவனை உடல் வழு இல்லாத ஒருவனுக்கு மணக்கசெய்வதும் சரி, அவன் இறந்தபின்பு அப்பெண்களை வாரிசுக்காக கணவனல்லாத ஒருவனுடன் கூடசொல்லுவதும் சரி. எல்லாமே நெறிப்படி படக்கிறது, வாசிக்கும்போதே அம்பையின் கனல் நம்மைப்பற்றிக்கொள்ளும்.அனைத்திலும் உச்சமாய் சிகையின் பாத்திரம். சொல்வதற்கில்லை.

சிகண்டியின் உரு மாற்றம், பீஷ்மரின் வீரம், மீனவப்பெண்களின் தோற்றம், ஆயிரம் கண் நாகத்தின் காம விளையாட்டு போன்ற அத்தியாயங்கள் எல்லாம் அட்டகாசமாக எழுதப்பட்டிருகின்றது. இத்தனை அத்தியாயமும் ஒரு புத்தகம் தானே மொத்த சுவாரசியத்தையும் கொட்டவேண்டுமா என எண்ணாமல் பெரும்பாலான பகுதிகள் அடுத்தடுத்த பகுதிகளை தேடவைக்கும் விதமாக பெரிய எதிர்ப்பார்ப்புடன் முடிக்கப்பட்டிருக்கிறது.

நிச்சயம் வெறும் சாதனைக்காக அல்ல முழு ஈடுபாட்டுடன் எழுதப்பட்டிருக்கிறது இந்த வெண்முரசு. மற்றபடி கதை எப்போதும் போல் நாம் அனைவரும் அறிந்ததே.

அடுத்து மழையோடு சந்திப்போம். இல்லைப் பாடுவோம்.

முந்தைய கட்டுரைதிருவண்ணாமலையில் பேசுகிறேன்
அடுத்த கட்டுரைஓர் உரையாடல்