வெண்முரசு வாசிப்பு நிறைவு – விஜய் ரங்கநாதன்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

அன்புள்ள ஜெ,

2023 கடைசியில் என் வெண்முரசு வாசிப்பு முடிந்ததும் இந்தக் கடிதத்தை எழுத ஆரம்பித்தேன். ஆனால் வெண்முரசு முடிந்ததும் உணர்ந்த வெறுமையை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. கடிதத்தை எழுதி முடிக்கவில்லை. வேறு வாசிப்புக்குச் செல்லவுமில்லை. சில மாதங்கள் ஆனது. இப்பொழுது எழுதி முடித்து அனுப்புகிறேன். வெண்முரசு வாசகர்கள் அவரவருக்கும் வெண்முரசு சார்ந்து ஒரு சொந்தக்கதை இருக்கும். ஜோசப் காம்பெலின் ஒரு வரி உண்டு – The adventure that the hero is ready for is the one that he gets. என் வெண்முரசுக்கதை அப்படியானது.

என் நான்கு வயதில் மகாபாரதம் காமிக் வடிவில் வெளிவர ஆரம்பித்தது.  அமர் சித்திர கதா அதை 1985 முதல் 1988 வரை நாற்பத்து இரண்டு பாகங்களாக வெளியிட்டது. வங்கியில் வேலை செய்துகொண்டிருந்த என் அம்மா ஒவ்வொரு பாகம் வந்ததும் மயிலாப்பூர் நேரு நியூஸ் மார்ட்டிலிருந்து அதை வாங்கிக்கொண்டு வருவார். பாரதத்தை, அதன் மூலக்கதையை நான் அப்படியே அறிந்தேன். தொடர்கதை போல் வாசித்ததால் கதை எங்கே செல்லப்போகிறதென்று தெரியாது. புத்தகம் வந்தவுடன் பத்து நிமிடங்களில் படித்து முடித்த பிறகு மீண்டும் சில வாரங்கள் காத்திருப்பு. என் வீட்டினருக்கும் கதை அவ்வளவு தெரியாது. அவர்கள் அறிந்ததெல்லாம் பாண்டவர்கள் கிருஷ்ணனின் தயவால் கடைசியில் வென்றார்கள் என்று மட்டும் தான்.

நீல நிறத்தில் வரையப்பட்டிருந்தாலும் ஒரு சராசரி மனிதன் போலவே தோற்றம் அளித்த, இரண்டு கைகளே கொண்டிருந்த கிருஷ்ணன். அவருக்கும் என் வீட்டு வரவேற்பறையில் மாட்டியிருக்கும் படத்தில் சயனித்திருக்கும் ஸ்ரீரங்கப் பெருமாளுக்கும் உள்ள இணைப்பை நான் அறிந்திராத வயது. கிருஷ்ணகடாக்ஷம் என்ற அழகியல் கூற்றில் தீவிர பிடிப்புள்ள என் பாட்டிக்கு காமிக் கிருஷ்ணர் சற்றும் பிடிக்கவில்லை. ஏன் இவ்வளவு சராசரியாக வரைந்து வைத்திருக்கிறார்கள் என்று கோவித்துக்கொண்டார். அதிலிருந்து அவரிடம் என் மகாபாரதப் புத்தகங்களைக் காண்பிப்பதை தவிர்த்தேன்.

சிறுபிள்ளையாக என்னை மிகவும் கவர்ந்தது அதில் வரும் சாகசக்காட்சிகள் தான். அர்ஜுனன், பீமன், கடோத்கஜன், அபிமன்யு. அதனாலேயே போருக்குப் பின் வரும் பகுதிகளை என்னால் சற்றும் புரிந்துகொள்ள முடியவில்லை. பாண்டவர்கள் வெல்வது தானே முறை? ஆனால் அவர்கள் தரப்பில் ஐவரைத்தவிர அனைவரும் மடிகிறார்கள். பாண்டு இறந்ததும் அஸ்தினபுரிக்கு அன்னையுடன் எப்படி வந்தார்களோ, அப்படியே கடைசியிலும் நிர்க்கதியாக நிற்கிறார்கள். இதில் எங்கிருக்கிறது வெற்றி? பாகங்கள் 38-42 வரை என் பத்து வயது மனதுக்கு மிகுந்த கசப்பை அளித்தன. அவைகளை ஒரு தரவைக்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை. துரியோதனனின் தொடை நொறுங்குவது வரை பத்துப் பதினைந்து முறை படித்திருப்பேன்.

அவ்வளவு நடந்த பிறகும் சாத்யகி ஏன் கிருதவர்மனுடன் யாதவ விருந்தில் கலந்து கொண்டான்? கிருஷ்ணன் வேடனின் கையால் சாவதா? காண்டீபம் சாதாரணக் கொள்ளைக்கூட்டத்திடம் போரிடும்போது செயலிழப்பதா? சஞ்சயன் பைத்தியம் பிடித்து காட்டுக்குள் ஓடிப்போய் சிரித்துக்கொண்டே சாகும் காட்சி ஒரு பேய்ப் படத்தைப் பார்த்த திடுக்கிடலை அளித்தது.  சொர்க்கத்தில் பாண்டவர்களுக்கு இடம் கிடையாதா? அச்சிறுவயதில் எனக்கு இது எதுவும் சற்றும் பிடிக்கவில்லை. இக்கேள்விகள் அனைத்தும் வந்து அறைந்தன. ஆனால் பதில்கள் எதுவும் இல்லை. இருப்பினும் மகாபாரதக்கதை என் மனதில் மிக ஆழமாக பதிந்தது. சாகசம் அல்லாத பாகங்கள் சிலவும் என்னை கவர்ந்திருந்தன. யக்ஷப்பிரஷ்ணம் போன்றவை. பல நுண் தகவல்களை மனப்பாடம் செய்து என் வீட்டினரை கேள்விகள் கேட்டு துன்புறுத்தியிருக்கிறேன். துரோணர் அர்ஜுனனுக்கு அளித்தது பிரம்மாஸ்திரமா பிரம்மசிரஸ்ஸா? உலூகனை கொன்றது யார்? நாராயண அஸ்திரத்தை எப்படி எதிர்கொண்டார்கள் பாண்டவர்கள், போன்றவை.

அதே சமயத்தில் தான் ஹிந்தியில் மகாபாரதத் தொலைக்காட்சித்தொடர் துவங்கியது. அதில் இயல்பாகவே சாகசக்காட்சிகளும் நாடகீயம் ஓங்கியிருந்த சந்தர்ப்பங்களும் தான் முதன்மை பெற்றன. என் வீட்டு வேப்ப மரக் கிளைகள் விற்களாயின. பேப்பர் முக்கோணங்கள் பொருத்தப்பட்ட தென்னை ஈர்க்குச்சிகள் அம்புகளாயின. காலம் சென்றது. தொடர் முடிந்தது. விற்தொழிலை கைவிட்டு நான் வளர்ந்தேன். படிப்புக்கும் வேலைக்கும் வீட்டை விட்டுச்சென்றேன். அதன் பிறகு என் வாசிப்பு நவீன ஆங்கில எழுத்தை சார்ந்தே பல வருடங்கள் இருந்தது. மகாபாரதம் ஒரு கற்பனைக்கதையாகவே, சிறுவயதில் படித்த, விளக்கமுடியாத சில முடிவுகளும் ஏற்ற இறக்கங்களும் கொண்ட ஒரு சாகசக்கதையாகவே என் மனதில் எஞ்சியது.

பதினெட்டு வருடங்கள் கழித்து, 2010இல் நான் ஒரு முதலீட்டு வங்கியில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். எந்த அவசர மனநிலையில் அதுவரை வந்துசேர்ந்திருந்தேன் என்று வியந்து கொண்டிருந்த காலம். முப்பது அகவையிலும் நான் யார் என்ற கேள்விக்கு திருப்தி அளிக்கும் பதில் எதுவும் இல்லாததை நினைத்து வருந்திக்கொண்டிருந்த காலம். வேலையில் மனம் ஒன்றவில்லை. என்னதான் செய்யலாம்? சினிமாவை ஆராய்வது பிடிக்கும். புகைப்படம் எடுப்பேன். இசை ரசனை உண்டு. ஆனால் எதிலும் நிபுணத்துவம் கிடையாது. எழுத்து? சில காலம் முதிரா இளமையில் எழுதியது எல்லாமே ஆங்கிலத்தில். தமிழன் தான், ஆனால் தமிழ் தெரியாது. பேருந்து பலகையை எழுத்துக்கூட்டிப் படிப்பதுடன் சரி. அப்பொழுது நான் பின்சென்று கண்டடைந்தது நான் சினிமாவை காட்சி-எழுத்து-இசை என்ற மூன்றின் கலவையாகத்தான் என்றுமே ரசித்திருக்கிறேன் என்று. அந்தக் கலவை உருவாக்கும் ரசாயன மாற்றம் என் மனதை எப்பவுமே கிளரச்செய்திருக்கிறது என்று உணர்ந்தேன். அதை நிகழ்த்தவேண்டும் என்ற ஆசையும் எப்பவுமே இருந்திருந்தது. மானசீகமாக திரைக்கலையை நோக்கி என் பயணத்தை நான் துவங்கினேன்.

அப்பொழுதும் இப்பொழுதும் பாலு மகேந்திரா என் ஆதர்சம். வாசிப்பை பற்றி அவர் பேசாத நேர்காணலே இல்லை. அதனால் தமிழை பயிலவேண்டும் என்றும், முக்கியமாக தமிழ் இலக்கியத்தை வாசிக்கவேண்டும் என்றும் நான் முடிவு செய்தேன். தமிழ் அகராதியின் துணையுடன் நான் வாசிக்க தெரிவு செய்த முதல் தமிழ் புத்தகம், நான் கடவுளின் மூலம் என்று அறிந்திருந்த ஏழாம் உலகம். அப்படித்தான் நான் உங்களிடம் வந்து சேர்ந்தேன். அதற்குப் பிறகு அறம் படித்தேன். புறப்பாடு, வெள்ளை யானை. கூடவே நீங்கள் பரிந்துரைத்த எழுத்தாளர்களையும் படித்து வந்தேன். புதுமைப்பித்தன், சு. ரா., அசோகமித்திரன் என்று சென்றுகொண்டிருந்தேன். என் ஆளுமையை நான் பல வருடங்கள் தாமதமாக வாயினும் கண்டுகொள்ளத் துவங்கியிருந்தேன். அப்பொழுது திரும்பவும் நான் பின்சென்று கண்டடைந்தது என் சிறு வயது காமிக்ஸ் பித்து. காமிக்ஸின் ஒவ்வொரு சட்டகமும் ஒரு ஷாட் தான் என்று மிஷ்கின் சொன்னதனால் என்று நினைக்கிறேன். நான் படித்த மகாபாரத காமிக்ஸ் நினைவுக்கு வந்தது. அதைத் திரும்பப் படித்தேன். ஆனால் இலக்கிய வாசகனான எனக்கு அது போதவே இல்லை. அது ஏதோ புராணக்கதை போலத் தான் பட்டது. ஆனால் அந்தப் பிரதியுடன் என் கடந்த கால நினைவுகள் பின்னி இருந்ததால் அதை என்னால் முற்றாக நிராகரிக்க முடியவில்லை.

அப்பொழுது ஒரு நண்பன் எம்.டி.வாசுதேவன் நாயரின் ரெண்டாம் ஊழம் பற்றிக்குறிப்பிட, அதன் ஆங்கில மொழியாக்கம், Bhima, the lone warrior-ஐ வாசித்தேன். அந்தத்தொல்கதையை இப்படியும் பார்க்கலாம் என்றதும் பாரதம் வேறாகத் தெரிய ஆரம்பித்தது. தளபதி (திரைப்படம்) போன்ற adaptation-ஆக இல்லாமல், மூலக்கதைக்கு புதிய பரிமாணத்தை அளித்தது. அதனால் பாரதத்தின் இலக்கிய மறுஆக்கங்களை படிப்பது என்று முடிவு செய்தேன். சித்ரா பானர்ஜி திவாகருணியின் Palace of Illusions படித்தேன். அ.க.பெருமாள் எழுதிய அர்ஜுனனின் தமிழ் காதலிகள்-இல் மகாபாரதம் நாட்டார் வழக்கில் எப்படி உருமாற்றம் அடைந்திருந்தது என்று கண்டேன். எஸ்.ரா-வின் உபபாண்டவம் படிக்க ஆரம்பித்தேன். அத்துடன் அவ்வளவு ஒன்ற முடியவில்லை என்று அதை பாதியில் கைவிட்டிருந்தாலும், அதில் காண்டவதகனம் பற்றிய அத்தியாயம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. நவீன காலகட்டத்தில் பழங்குடி மக்களின் போராட்டத்துடன் காண்டவதகனத்தை அவர் இணைத்தது எனக்கு பெரிய திறப்பாக அமைந்தது. நான் அறிந்திருந்த, கட்டமைப்பு எதுவும் இல்லாதது என்று நினைத்திருந்த, விளக்கமுடியாத திருப்பங்கள் கொண்ட தொல்கதையை இலக்கிய ஆளுமைகளின் தரிசன வார்ப்புகளின் வழியே புதிய கோணத்தில் படித்ததும் மகாபாரதம் ஒரு செவ்வியல் படைப்பாகத் தென்பட ஆரம்பித்தது.

ஆனாலும் கேள்விகள் இன்னும் இருந்தன. இவை எதுவும் ஒரு முழுமைப்பார்வையை அளிக்கவில்லை என்றும் தோன்றியது. மகாபாரதம் ஒரு கதையா, அல்லது மாந்தர்களும் சந்தர்ப்பங்களும் நிரம்பிய கதைக்களஞ்சியமா? அது நிச்சயமாக தொன்மம் தான், வரலாறல்ல என்று அப்பொழுது நம்பினேன். ஆனால் தொன்மங்களுக்கு இருக்கும் கதைக்கச்சிதம் அதில் இல்லாதது போல் தான் இருந்தது. வியாசன் என்ற ஒற்றை ஆசிரியன் இருந்ததாகத்தான் நினைத்திருந்தேன். ஆனால் வியாசமனம் என் கண்ணுக்கு இன்னும் பட்டிருக்கவில்லை. அப்பொழுது 2013 இறுதி. ஒரு நீண்ட சுற்று வழிப்பாதை வழியாகவே அந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருந்தேன்.

2013-இல் நீங்கள் ஒரு காஷ்மீர் லே பயணம் சென்றிருந்தீர்கள். அதற்கு சற்று முன்பே நானும் லதாக்கில் ஒரு மலை நடை சென்றுவிட்டு பெங்களூருக்கு திரும்பியிருந்தேன். சில நாட்கள் கழித்து நீங்களும் பெங்களூர் வந்தீர்கள். அப்பொழுது என் அலுவலகத்தோழியாக இருந்த ப்ரியம்வதா விடம் எனக்கும் உங்களுக்கும் ஏதோ மர்மத்தொடர்ச்சி இருக்கிறது என்று விளையாட்டாகச் சொன்னது நினைவில் இருக்கிறது. உங்கள் வாசகர்கள் பலருக்கு அந்த எண்ணம் அவ்வப்பொழுது வந்திருக்கும், நீங்கள் சென்ற பிறகும் உங்கள் எழுத்துக்கள் வழியாக வரும். 2014 ஜனவரி 1 அன்று நீங்கள் வெண்முரசு எழுதப்போவதாக அறிவித்தீர்கள். ஒரு வாசகனாக மறக்கமுடியாத நாள் என்று ஒன்றை சொல்லவேண்டும் என்றால் அந்த நாளைச்சொல்வேன். அன்றிலிருந்து வெண்முரசு என் வாழ்க்கையின் இன்றியமையாத பாகமாக ஆனது.

அந்த முதல் அத்தியாயங்களை படித்த நினைவுகளை அசைபோடுகையில் அப்பொழுது அனுபவித்த மெய்சிலிர்ப்பு இப்பொழுதும் நிகழ்கிறது. ஒரு பிரம்மாண்டமான தரிசனத்தை நோக்கி நீங்கள் செல்கிறீர்கள் என்று உணர்ந்த தருணங்கள். முதலில் என்னை ஆட்கொண்டது நுண்தகவல்கள் வழியாக நீங்கள் அந்த யுகத்தை கண்முன்னே கட்டி எழுப்பியது. செறிவாக விரிந்துகொண்டே சென்ற உலகம். அந்த தொல்நிலத்தை வடிவமைத்த கலைநோக்கத்தை காணும்போது பிரமிப்பாக இருந்தது. எது வரலாற்றுச் சாத்தியம் எது பிரம்மாண்ட கற்பனை என்று சொல்லமுடியவில்லை. அப்பொழுது நிகழ ஆரம்பித்திருந்த புதிய வாசகர் சந்திப்புகளில் அந்த வகை கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது நினைவில் இருக்கிறது. சிலது உங்கள் கற்பனை என்றீர்கள். மற்றதுக்கு வரலாற்றுப் பின்புலத்தை அளிப்பீர்கள். ஆனால் என் கற்பனைக்கு அது எல்லாமே நிஜம் என்று தான் பட்டது.

அந்த முதல் அறிவிப்பில் ‘வாசகர்களின் வாழ்க்கையை மேலும் சிலவருடங்கள் வியாசனின் மானுடநாடகம் ஒளியேற்றுவதாக!’ என்று சொல்லியிருந்தீர்கள். இந்த பத்து வருட வாசிப்பின் போது என் தனிவாழ்க்கையில் பல அத்தியாயங்களை கடந்திருக்கிறேன். வெண்முரசு ஆரம்பித்த நாட்கள் என் தனிவாழ்க்கையில் பெரும் சோர்வும் அமைதியின்மையும் நிரம்பியிருந்த காலம். பல வருடங்களாக கிடப்பில் கிடந்த என் முதல் திருமணம் வாடி உலர்ந்து வலி மிகுந்த கடைசி நாட்களுக்கு பிறகு மறைந்தது. என் வேலையின் பளு அதிகமாகி ஏற்கனவே இருந்த பொருத்தமின்மை மேலும் அதிகரித்து கடும் மன அழுத்தத்தை தந்தது. ஆனால் அப்போது வேலையிலிருந்து விலகவும் முடியாத நிலைமை. இதில் அனைத்திலும் எனக்கு உடனிருந்தது உடற்பயிற்சியும் வெண்முரசு வாசிப்பும் தான். அன்றைக்கு படித்த அத்தியாயங்கள் அடியூற்று போல மனதில் நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும். வேறு எதுவும் பிடித்தபடி நடக்காவிட்டாலும் வெண்முரசு படித்துவிட்டால் அந்த நாள் வீணாகவில்லை என்ற நிறைவுடன் உறங்க முடியும்.

கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொண்டேன். 2017 முடிவில் வேலையை விட்டு வெளியே வந்தேன். சென்னைக்கு திரும்பி ஒரு திரைக்கல்லூரியில் சேர்ந்தேன்.எண்ணம்போல் வாழ்க்கையை அமைத்தக்கொண்டேன். 2018-இல் சினிமா-வில் ஆரம்ப நிலையில் தடுமாறிக்கொண்டிருந்த சமயம். புதிய வாழ்க்கை எப்படிப் போகிறது என்று நண்பன் கேட்டான். வெண்முரசு வாசிப்பது, உடற்பயிற்சி செய்வது, என் திரைக்கதையின் பத்து பக்கங்களை எழுதுவது மற்றும் ஒரு நல்ல படம் பார்ப்பது. இந்த நான்கு விஷ்யங்களை செய்தால் போதும், நாள் நன்றாக சென்றதென்று கொள்வேன், என்று பதில் சொன்னேன். 2020-இல் ப்ரியம்வதாவுடன் திருமணம் நடந்தது. அவ்வருடங்களில் ஒவ்வொரு நாளும் வியாசனின் மானுடநாடகம் என் வாழ்க்கையை ஒளியேற்றிக்கொண்டுதான் இருந்தது. இன்று திரையுலகில் எனக்கு பிடித்த வேலைகளை செய்கிறேன். எழுதும், படம்பிடிக்கும் முனைப்புடன் இருக்கிறேன். சோர்வுகள், சோகங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் முன்பு செய்த வேலை போல் அல்லாமல், ஒவ்வொரு ஏற்றயிறக்கமும் என்னை பாதிக்கிறதென்பதே புத்துணர்வை அளிக்கிறது.

முதல் மூன்று நாவல்கள் வரைக்கும் நீங்கள் எழுத எழுத தளத்தில் படித்தேன். நீலம் வந்துகொண்டிருந்தபோது ஒரு மலைப்பயணத்தில் சென்றிருந்தேன். அப்போது இணையதொடர்பு இல்லாததால் தளத்தில் வாசிக்க முடியாமல் போக, திரும்பியதும் புத்தக வாசிப்புக்கு மாறினேன். அப்போதிலிருந்து புத்தக வடிவில் வாசிப்பது தான் இன்பம் அளித்தது. என் கண் முன்னே தளத்தில் நாவல்கள் ஒவ்வொன்றும் சீறிப்பரந்து செல்ல, ஒவ்வொரு பதிப்புக்காகவும் காற்றிருந்து படித்தேன். கடைசி சில நாவல்களின் பதிப்பு பிந்திப்போகவே இப்பொழுது தான் வாசித்து முடிக்க நேர்ந்தது. இன்று நான் ஒரு வெண்முரசு வாசகன். என் வாழ்நாள் பெருமைகளில் ஒன்று அதை படித்து முடித்தது. வாழ்வின் சவால்களை சந்திக்கும்போதும் என் மேன்மையை கோரும் சந்தர்ப்பங்களை நேரிடும் போதும் நான் என்னிடம் கேட்டுக்கொள்வது, ஒரு வெண்முரசு வாசகன் இந்த இடத்தில் என்ன செய்வான் என்று தான். அதையே செய்ய முயல்கிறேன். அதுவே இவ்வாசிப்பு எனக்களித்த முதற்பெருங்கொடை.

அன்பும் அபிமானமும்.

விஜய் ரங்கநாதன்

முந்தைய கட்டுரைவல்லினம் இளம் எழுத்தாளர் விருது – 2024
அடுத்த கட்டுரைஆங்கிலச் சிறுகதைகள்- ஒரு பேட்டி